அரசியல் | தமிழ் தேசியம் என்றால் என்ன? அது சாத்தியமா? | ராஜசங்கீதன் ஜான்

கேள்வி : தமிழ் தேசியம் என்றால் என்ன?
அது சாத்தியமா?
அனைத்து சித்தாந்தம் பேசும் தலைவர்களும் தமிழ் தேசியம் பேச வேண்டும் என எதிர்பார்க்கப்படுவது எதனால்? சரியா?
தமிழ் தேசியம், சாதி தேசியமா? தமிழ் தேசிய அரசியல் இன்றை தலைமுறை இளைஞர்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?, தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக இருக்குமா?



பதில் :
தமிழ் தேசியம் சாத்தியமா என கேட்டால் நிகழ்சூழலை கவனிப்பவர்களுக்கு சாத்தியமில்லை என்றுதான் தோன்றும். இந்திய அரசின் அதிகாரம், பன்னாடுகளுடனான இந்தியாவின் உறவு, உலக மூலதனத்துக்கான பெருஞ்சந்தையாக இந்தியா இருத்தல் போன்ற விஷயங்களை அவதானித்தால் தமிழ்தேசியம் சாத்தியமில்லை என்றே படும்.

உண்மை என்னவெனில், இந்தியா போன்ற ஒரு பெரும் அசாத்தியமே சாத்தியப்பட்டிருக்கையில், இங்கு எதுவுமே சாத்தியம் என்பதுதான். தமிழ்தேசியம் என்னும் அசாத்தியம் மட்டும் சாத்தியப்படாதா என்ன?

தமிழ்தேசியத்துக்கான பலவகை கருத்தியல்கள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. எந்த கருத்தியலை போலவும் தமிழ்தேசியத்துக்கும் இடது, வலது உண்டு. 

இடது தமிழ்தேசியத்தை கூர்மையாக்கியவர் பெரியார். அவரிடமிருந்து அண்ணா வரை வெளிப்படையாகவே வளர்ந்து வந்தது. திமுகவின் தாய் கொள்கைகளில் தனி நாடும் ஒன்று. தனி நாடு கோரிக்கையை கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் இருக்கவே செய்கின்றன என்றார் அண்ணா. 

திராவிட நாடுதானே அண்ணா கேட்டார் என வாதிடலாம். வரலாற்றுப் பூர்வமாக நேர்ந்த பூகோள ஒழுங்கமைவுகளை கருத்தில் கொள்ளாமல் அரசியல் பேசுவோருக்கு அது சரியான வாதமாக படலாம். எனக்கு அப்படி படவில்லை. 

அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கைக்கும் தமிழ்தேசிய கோரிக்கைக்கும் எத்தனை வித்தியாசம் பேசினாலும் முக்கியமான ஒற்றுமை ஒன்று இருக்கிறது. யார் எதிரி என்பதில் அந்த ஒற்றுமை இருக்கிறது. 

இந்தியம்!

அந்த காரணத்தைதான் 'மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி' என்ற வடிவத்தில் திமுக மீட்டெடுக்க முயன்றது. அம்முயற்சிக்கு அடிநாதமாக தனி நாடு, தமிழ் தேசியம் போன்ற அரசியல் கூறுகள் இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. திமுக உருவான காலத்திலிருந்து இருக்கும் திமுககாரன், மத்திய அரசு நமக்கு எதிராக சின்ன சலம்பல் செய்தாலும் 'தனியா பிரிஞ்சுடலாம்' என உச்சக்குரலில் குரல் எழுப்பவதை பார்க்க முடியும்.

'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்ற முழக்கத்துக்கு இந்தியச் சூழலை பொறுத்தவரை வயதே ஆகவில்லை என்பதுதான் யதார்த்தம்.

எதிரி ஒன்று என்பதில் இருந்து அரசியல் கிளைத்து வருவதால் வெவ்வேறு தமிழ்தேசிய மற்றும் தனிநாடு கோரிக்கை வடிவங்களை ஒன்றின் பல கிளைகளாகத்தான் நான் பார்க்கிறேன். 

பெரியார் விட்ட இடத்திலிருந்து திருமுருகன் பேசுகிறார். அண்ணா விட்ட இடத்திலிருந்து திமுக இயங்குகிறது. தமிழ் தேசியத்தின் வலதாக இருந்து சீமான் பேசுகிறார்.

உலக நாடுகளில் தேசிய இனங்களின் விடுதலை முக்கியமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காலம் இது. எல்லா விடயங்களிலும் தமிழனின் அரசியல் முன்னே நிற்பதுபோலவே, இன்றைய உலகச்சூழலுக்கும் relevant-ஆக தமிழ்தேசியம் நிற்கிறது. 

தமிழ்தேசியம் சாதி தேசியமா என்றால் நான் பெரியார் வழியினன் என்பதால் இல்லை என்பேன். சீமான் பேசுவது சாதி தேசியம்தானே என கேட்டால், முன்சொன்னாற்போல், எல்லா சித்தாந்தத்திலும் வலது, இடது உண்டு. சீமானுடையது வலது தமிழ்தேசியம். ஆனால் அது மட்டுமே தமிழ்தேசியம் அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இளைஞர்கள் இந்தியாவின் அட்டூழியத்தை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஈழம் தொடங்கி, நீட் வரை கோபப்படும் இளைஞன்தான் தமிழ்தேசியத்தால் ஈர்க்கப்படுகிறான். இன்றைய இளைஞன் global-ஆக இருப்பதால் உலகச்சூழலுக்கு பொருந்தி சிந்திக்கிறான். வல்லாண்மைகளின் ஆதிக்கத்துக்குள் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என நினைக்கிறான். அது இயல்பே.

தேர்தல் வெற்றியை நிர்ணயிக்குமா என கேட்டால், இந்தியாவை நிராகரிக்கும் தமிழ்தேசியம், அது நிர்ப்பந்திக்கும் தேர்தலையும் நிராகரிக்கவே செய்யும். 

ஆனால் ஒன்று. இத்தனை சாதிகள் இருந்தும் தமிழ்நாட்டை பாஜக பிடிகொள்ளாமல் இருப்பதற்கான அடிப்படை காரணம், இந்தியாவுக்கு எதிரான பொதுவான கருத்து இருப்பதாலேயே. மத்தியில் ஆளும்/ஆளப்போகும் கட்சிகளின் தலைகளுக்கு மேல் தொங்கும் கத்தி, தமிழன் பேசும் தேசிய இன விடுதலையான தமிழ்தேசியம் தான். 

தமிழ்நாடு, இந்தியச்சிவனுக்கு எக்காலத்திலும் ஆலகாலமே. விழுங்கவும் முடியாது. துப்பவும் முடியாது. என்றாகினும் இந்தியாவுக்கு முடிவு தமிழகத்தில் இருந்தே தொடங்கும்.

குறிப்பு:
இப்பதிவு நண்பர் ராஜசங்கீதன் ஜான் அவர்களின் பேஸ்புக் பதிவாகும். Stulish என்னும் செயலி மூலம் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் வழங்கிய பதிலை மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்கிற நோக்கில் இங்கே பகிர்ந்திருக்கிறோம். பதிவருக்கு நன்றி. நீங்களும் அவரிடம் இவ்வாறான பயனுள்ள கேள்விகளை முன்வைக்கலாம்.
இணைப்பு: http:/stulish.com/rajasangeethan

பேஸ்புக் பதிவு சுட்டி : https://m.facebook.com/story.php?story_fbid=10219256357906706&id=1442016305 

Comments

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!