மலையகக் கல்வி நிலை பின்னடைவுக்கு (ஆசிரியர்களே) பொறுப்புக் கூற வேண்டும்
மலையகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி கல்வியறிவு மேம்படுத்தப்பட வேண்டும். உரிய தரப்பினர் அக்கறை செலுத்தாமையினால் எமது கல்வி நிலை முன்னேறுவதற்குப் பதிலாக பின்னடைவையே எதிர்நோக்குகிறது. மலையகக் கல்வியின் பின்னடைவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல்வாதிகள், சமூகம் என சகல தரப்பினருக்கும் பங்குண்டு. ஆனால், பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு ஆசிரியர்களுக்கே உண்டு. ஏனெனில் இதில் அவர்கள் தான் நேரடியாக சம்பந்தப்படுகின்றனர். அரசியல் காரணங்கள், வளங்கள் இன்மை என எத்தனை சவால்கள் இருந்தாலும் அதையும் தாண்டி மலையகக் கல்வி அபிவிருத்தி, மாணவனின் முன்னேற்றம் என்பதை நோக்காகக் கொண்டு உழைப்பவரே உண்மையான ஆசிரியர்.
ஆசிரியர் தொழில் என்பது பலருக்கு ஒரு வருமான மார்க்கமாக மட்டுமே இருக்கிறது. தமது குடும்ப சூழ்நிலைகளின் பிரதிபலிப்புகளை அவர்கள் பாடசாலைக்குள் வெளிக்காட்டுகின்றனர். இது தவறாகும். ஆசிரியர்களிடையே கையடக்கத் தொலைபேசியின் பாவனை அதிகரித்து வருகின்றது. பாடங்களை நடத்தும்போது அழைப்புகள் வந்தால் பேசியே பாடத்தை முடித்து விடுகின்றனர்.
![]() |
Image Credit: Google |
மாணவர்களை முழுமையாக கல்வி நடவடிக்கையில் உள்வாங்க ஆசிரியர்கள் முயற்சிப்பதில்லை. அதாவது 8 பாட வேளைகளும் பூரணமாக நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதில் ஆசிரியர்கள் கவனம் செலுத்துவதில்லை. இது பெறுபேறுகளில் வீழ்ச்சி ஏற்பட ஏதுவாகிறது.
திறன் குறைந்த மாணவர்கள் மட்டந்தட்டப்படுதல் என்பது முக்கியமானதொரு காரணி. கற்கும் திறன் கூடியவர்களுக்கே வகுப்பில் அதிகளவில் முக்கியத்துவமளிக்கப்படுகிறது. ஏனையோர் பார்வையாளர்களாகவே கருதப்படுகின்றனர். இது மாணவர்களை மனதளவில் பாதிப்பதுடன் அவர்களது எதிர்காலத்தையும் பாதிப்படையச் செய்கிறது.
அக்கறையின்றி கற்பித்தல் கூட கல்வி நிலை பின்னடைய காரணமாகிறது. ஐந்தாம் தரத்தை கடந்த பின்னரும் சில பிள்ளைகள் தமிழ் எழுத்துக்களை அடையாளம் காணும் திறனற்றவர்களாகவும் உயர் தரத்திலும் எழுத்துப் பிழையின்றி எழுத முடியாதவர்களாகவும் பல மாணவர்கள் காணப்படுகின்றனர். இவ்வாறான மாணவர்கள் தோட்டப்புற மாணவர்களாகவே காணப்படுகின்றனர்.
பல ஆசிரியர்கள் 'தோட்டப்புற மாணவர்களால் படிக்க முடியாது' என்ற முடிவுடனேயே கற்பிக்க ஆரம்பிக்கின்றனர். ஆரம்ப வகுப்புகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் விடும் தவறுகளை அன்புடனும் பண்புடனும் சொல்லிப் புரிய வைத்திருக்க வேண்டும்.
சில ஆசிரியர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றனர். 'நீ எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்ன' என்ற வார்த்தைப் பிரயோகம் பல ஆசிரியர்களால் பயன்படுத்தப்படுவதை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன். அவர்களின் வீட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கான கோபத்தை மாணவர்கள் மீது காட்டுகின்றனர்.
ஆசிரியர்கள் என்றாலே தவறானவர்கள் என்ற கருத்தை நான் முன்வைக்க வரவில்லை. மாறாக அவர்களின் தரப்பில் காணப்படும் குறைகளை சுட்டிக் காட்டியிருக்கிறேன், அவ்வளவுதான். இன்றைக்கு மலையகத்தில் ஓரளவுக்கேனும் ஒரு சிறப்பான கல்வி நிலை காணப்படுகிறதென்றால் உண்மையான அக்கறையுள்ள ஆசிரியர்களின் கடின உழைப்புதான் என்பதையும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.
நாம் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். ஆனால், இருக்கின்ற குறைகளை ஒப்புக் கொண்டு திருத்த முயல்வது தானே சிறந்த பண்பு.
மாணவர்கள் தரப்பிலும் குறைகள் இருப்பதை சுட்டிக் காட்டியாக வேண்டும். திரைப்படத்தோடும் மது பாவனை, காதல் வயப்படுதல், கல்வி மீது அக்கறையின்றி செயற்படல் என்பன மாணவர் தரப்புக் குறைபாடுகள். எனினும், சிறு வயதில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வழிகாட்டலைப் பொறுத்தே அவர்கள் பிற்காலத்தில் செயற்படும் விதம் அமையும். எனவே மலையகக் கல்வி பின்னடைவுக்கு ஆசிரிய சமூகமே பொறுப்பு என்பது நிதர்சனமான உண்மை.
தோட்டப்புற, நகர்ப்புற பிரிப்புகளும் ஆசிரியர்களாலேயே ஏற்படுகின்றன. தோட்டப்புற பாடசாலைகளில் பணிபுரிய பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புவதில்லை. அவர்கள் வசதி வாய்ப்புகளுடன் நகரத்தில் வாழவே விரும்புகின்றனர்.
என்னதான் யுத்தம் நடந்தாலும் வடக்கு கிழக்கு பிரதேச மாணவர்கள் கல்வியை கைவிடவில்லை. நாம் வறுமை என்னும் போலிக் காரணத்தைக் கூறி பின்வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
அரசியலில் நாம் நம்மவர்களாலேயே ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே நமக்குத் தேவையானது அசுர வளர்ச்சி, விரைவாக கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழும் சாதனைகள், அதனைக் கண்டு வியக்கும் உலகம். உலகத்துக்கொரு முன்மாதிரியான, முன்னேற்றகரமான மலையகம் உருவாக வேண்டுமென்பதே என் அவா. எனவே உரிய தரப்பினர் தமது குறைகளைத் திருத்திக் கொண்டு இனிமேலாவது மலையக அபிவிருத்திக்காக பாடுபட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பு: இக்கட்டுரை இலங்கையின் பிரபல மலையக வார இதழ் 'சூரிய காந்தி'யில் 22.07.2009ஆம் ஆண்டு 'தமிழமுதன்' என்னும் புனை பெயரில் என்னால் எழுதப்பட்டது. (பக்கம் 06)
மலையகக் கல்வி நிலை பின்னடைவுக்கு (ஆசிரியர்களே) பொறுப்புக் கூற வேண்டும்
https://newsigaram.blogspot.com/2019/04/teachers-are-responsible-for-upcountry-education-status-down.html
#மலையகம் #கல்வி #ஆசிரியர்கள் #மாணவர்கள் #பாடசாலை #சூரியகாந்தி #கட்டுரை #தமிழ் #தமிழமுதன் #சிகரம்பாரதி #வலைத்தளம்
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்