சவூதி அதிகாரிகளிடம் பணம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டுக்கு கஷோக்கி குடும்பத்தினர் மறுப்பு
நீதிமன்றத்திற்கு வெளியில் சவூதி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், மகன்மார் பணம் பெற்றுக் கொண்டதாகவும் வெளியான குற்றச்சாட்டுகளை, படுகொலை செய்யப்பட்ட சவூதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் குடும்gத்தினர் நிராகரித்துள்ளனர்.
“இப்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. யாருடனும் எந்தக் கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவில்லை” என சாலாஹ் கஷோக்கி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் நேற்று (10) தெரிவித்தார்.
![]() |
Photo Credit: Google / Washington Post |
சாலாஹ் உள்ளிட்ட கஷோக்கியின் பிள்ளைகள் பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வீடுகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் ஆயிரக்கணக்கான டொலர்கள் அதிகாரிகளினால் வழங்கப்படுவதாகவும் அமெரிக்காவின் வொஷிங்டன் போஸ்ட் நாளிதழ் கடந்த முதலாம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது.
சவூதி அரேபிய அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி, கடந்த வருடம் அக்டோபர் மாதம் துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்தில் வைத்து, சவூதியினால் அனுப்பப்பட்ட 15 பேர் கொண்ட முகவர் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார். அவரது உடல் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கஷோக்கி கொல்லப்பட்டமைக்கு எதிராக சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் முகம்மது பின் சல்மான் குற்றஞ்சாட்டப்பட்டார். எனினும், உள்ளூர் விசாரணைகள் அவர் குற்றமற்றவர் என குறிப்பிட்டன.
ஆரம்பத்தில் கஷோக்கிக்கு என்ன நடந்தது என்பது குறித்து எமக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்து வந்த சவூதி, பின்னர் நாசகாரக் முகவர் குழுவொன்று இக் கொலையைச் செய்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியது.
இக் கொலையில் 11 பேர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து அவர்களுக்கு சவூதி அரேபியா சிறைத் தண்டனை விதித்துள்ளது.
பொது அறிக்கைகளில் தமது கட்டுப்பாட்டை வெளிப்படுத்திக் கொள்ளும் சவூதி அரேபியாவின் முயற்சியின் ஒரு பகுதியாக, கஷோக்கியின் இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருடன், நீண்ட கால உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள சவூதி அரேபியா முயற்சித்து வருகிறது என வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சவூதி அதிகாரிகளிடம் பணம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டுக்கு கஷோக்கி குடும்பத்தினர் மறுப்பு
https://newsigaram.blogspot.com/2019/04/khashoggi-family-members-received-money-from-saudi.html
#Khashoggi #Jamal_Kashoggi #Saudi #Saudi_arabia #Compensation #Turkey #Istanbul #Columnist #Washington_Post #Crown_Prince #Bin_Salman #News #World_News
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்