மலையகம் வளர்த்த எழுத்தாளர் 'சாரல் நாடன்' உடன் ஒரு நேர்காணல்! - பகுதி 01

மலையக இலக்கிய ஆளுமைகள் குறித்துப் பேசும்போது 'சாரல் நாடன்' தவிர்க்கப்பட முடியாதவர். 'சாரல் நாடன்' இலங்கை, நுவரெலியா மாவட்டம், சாமிமலை, சிங்காரவத்தை தோட்டத்தில் கருப்பையா வீரம்மா தம்பதிகளுக்கு 1944 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி பிறந்தார். தேயிலைத் தொழிற்சாலைகளில் மேலதிகாரியாகப் பணியாற்றிய இவர், சிறுகதை, புதினம் மற்றும் ஆய்விலக்கியங்களை எழுதியதனூடாக மலையக இலக்கியத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளார். 'சாரல் நாடன்' 31.07.2014 அன்று காலமானார். 'சாரல் நாடன்' அவர்களை பாடசாலைக் காலத்தில் 2005 ஆம் ஆண்டு நேர்காணல் செய்திருந்தேன். இந்த நேர்காணல் செப்டெம்பர் 2008 ஆம் ஆண்டு 'செங்கதிர்' கலை இலக்கிய சஞ்சிகையில் வெளியானது. அதனை 'சிகரம்' வாசகர்களுக்காக இங்கே பதிவு செய்கிறோம். 'சாரல் நாடன்' - சில முக்கிய குறிப்புகள்: * இவர் மலையகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களுள் சிறந்தவர் என்ற வகையில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். * இலங்கை சமாதான நீதிவானாகப் பதவிப் பிரமாணம் செய்துள்ளார். * 'சாரல் வெளியீட்டகம்' இன் உரிமையாளரான இவர...