அன்னைத் தமிழ்
வணக்கம் அன்பு ரசிகர்களே. முகநூலில் "எழுத்தோலை பக்கம்" நடாத்தும் புத்தாண்டுக் கவிதைப் போட்டி - 2013 க்காக எழுதப்பட்ட கவிதை இது. அவர்கள் வழங்கியுள்ள மூன்று தலைப்புகளில் "அன்னைத் தமிழின் இன்றைய நிலை" என்ற தலைப்புக்காக இக்கவிதை எழுதப்பட்டுள்ளது. தரப்பட்ட மூன்று தலைப்புகளிலும் எழுதுதல் கட்டாயமாகும். இக்கவிதைப் போட்டியில் பங்குபற்ற விரும்புவோர் முகநூல் வாயிலாக "எழுத்தோலை பக்கம்" இனை அணுகவும். இதோ கவிதை.
அன்னைத் தமிழின் இன்றைய நிலை
[அன்னைத் தமிழ் - நான் இட்ட தலைப்பு]
மம்மியென்பார் டாடியென்பார்
மரியாதை அதில்தான் என்பார்
அன்னைக்குக் கிழிந்த ஓலைப் பாயும்
அந்நிய மொழிக்கு அரியணையும் தருவார்.
சொல்லுக்குச் சொல் சுகமென்பார்
செந்தமிழின் சுவையறியார்
அக்கரைக்கு இக்கரைப் பச்சை
அந்நிய மொழியில் ஏன் இத்தனை இச்சை?
ஷேக்ஸ்பியரும் ஷெல்லியும்
செய்ததுதான் சாதனை என்பார்
தொல்காப்பியமும் புறநானூறும்
தொலையட்டும் என்பார்
தாய்ப்பாலுடன் சேர்த்து
தமிழறிவும் புகட்டிடுவீர் தாய்மாரே
அன்னைக்குப் புரியாதோ அன்னையின் வேதனை
அன்னைத்தமிழுக்கு ஏன் இத்தனை சோதனை
கம்பனும் பாரதியும் கவிசொன்ன தமிழ்
கல்லையும் கரைக்கும் திருவாசகம் தந்த தமிழ்
வாழ்வற்ற வாழ்வு இங்கு வாழ்வதும் ஏனோ
வள்ளுவன் வளர்த்த தமிழ் வழக்கொழிந்து போயிடுமோ
அபயக்குரல் எழுப்புகிறாள் தமிழன்னை
அவள்துயர் துடைக்க எழுச்சிகொள் தமிழா
இருளே கதியென்று இருந்தது போதும் தமிழுக்கு
இதுதான் விடிவென்று உணர்ந்தே எழுந்திடுவோம்!
அன்புடன்,
சிகரம்பாரதி.
கவிதைகள் அனைத்தும் இன்றையத் தமிழின் நிலைமையையும் நிலையாமையையும் அழகாக உரைக்கிறது.
ReplyDeleteவாழ்த்துக்கள் பாரதி.
ஆமாம்.... ஏன் நீங்கள் என் தளத்திற்குள் வருவதில்லை. ஒரு முறை வந்து பாருங்களேன்.
http://arouna-selvame.blogspot.com
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. பதிவிடுவதில் மூழ்கியிருந்த படியால் தான் வரவில்லை. இதோ இப்போதே வருகிறேன்.
Deleteதேவையான தருணம் தான் தேடி தலைப்பிடும் வானுயர்ந்து எழும்பி நிற்கும் இமயமலை
ReplyDeleteசிகரம்போல் தான் வளர வாழ்த்துகிறேன் தமிழுக்கிந்த தலைப்பு வேண்டும் ஐயா தரநியூரும் மகிழ்ச்சிகொள்ள தூண்டுமையா
வித்தியாசமாக கவிதை நடையில் வாழ்த்தியமைக்கு நன்றிகள். நிச்சயமாய் தமிழுக்காய் இன்னும் உழைப்பேன்.
Deleteஅருமை
ReplyDeleteநன்றி நண்பரே.
Deleteமிக அருமையானது. முதலில் உள்ள எழுத்துகள் தெரியவில்லை ஐயா. அதை மாற்றம் செய்யவும்.
ReplyDeleteநன்றி நண்பரே. சரிபார்க்கிறேன்.
Deleteஇன்றைய தமிழின் நிலை அறியத்தந்த சிகரமான பகிர்வுகள்
ReplyDeleteவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..
http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_12.html