உரைநடை எழுத்தாளர் ஆவது எப்படி - பாராவின் உரையை முன்வைத்து...

காலை ஏழு மணிக்கு எனது இன்றைய நாளை ஆரம்பித்தேன். நேற்று முன்தினம் இரவு மூன்று மணித்தியாலமே உறங்கக் கிடைத்தது. நேற்று அதிகாலை 03.30 க்கு வேலைக்காக எழுந்து சென்று மீண்டும் வீடு திரும்பியபோது மாலை நான்கு மணி. ஒரு மணிநேரம் மட்டும் கண்களுக்கு ஓய்வு கொடுக்க நேரம் கிடைத்தது. மீண்டும் ஆசான் பாராவின் மிருது வாட்ஸ்அப் நாவல் தொடரை வாசித்துவிட்டு உறங்கும் போது நள்ளிரவு 12.30. அதிகாலை நான்கு மணியளவில் பாரிய சத்தம் கேட்டது. கொஞ்ச நேரம் கூர்ந்து அவதானித்ததில் இடியும் மின்னலும் தன் லீலைகளை காட்டிக் கொண்டிருந்தன. மீண்டும் கஷ்டப்பட்டு உறங்கி ஏழு மணியளவில் விழித்துக் கொண்டு தேநீரை அருந்தினேன். சரி, இப்போதே வாசிக்க வேண்டாம், எதையாவது கேட்கலாம் என்று யூடியூபை Scroll செய்த போது 'காலத்தை வென்று நிற்கும் சிறுகதைகள்' என்ற தலைப்பில் ஆசான் பாரா ஆற்றிய உரையொன்று கண்ணில் பட்டது. ஏற்கனவே கேட்ட ஞாபகம். சரி மீண்டும் கேட்கலாம் என்று காணொளியை Play செய்து கேட்க ஆரம்பித்தேன். நேற்று பாரதி சித்தர்களை சந்தித்ததை பற்றி ஆசான் பாரா எழுதியிருந்தார். இன்று இந்த உரையில் யேசுவின் வாழ்க்கை வரலாற்றை ஓவியமாக வரைந்த கதையில், ...