பா. ராகவனின் புதிய வெளியீடுகள் பற்றிய சில குறிப்புகள்: ஜென் கொலை வழக்கு + ஜந்து

ஜென் கொலை வழக்கு + ஜந்து 



பா. ராகவனின் புதிய வெளியீடுகள் பற்றிய சில குறிப்புகள்: 


(புத்தக முன்னட்டை வெளியீட்டு திட்டத்தை முன்னிட்டு பா ராகவன் வழங்கிய குறிப்புகளுடன் வெளியாகும் கட்டுரை) 


---


01. ஜென் கொலை வழக்கு

நவீன நாசகார ஜென் கதைகள்

சில குறிப்புகள்

நுண் கதைகள், குறுங்கதைகள், மைக்ரோ கதைகள் என்று பலவாறாக இன்றைக்குக் குறிப்பிடப்படும் மிகச் சிறிய கதை வடிவங்களின் தொடக்கம் ஜென் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், ராமகிருஷ்ணரின் குட்டிக்கதைகள் இயற்றப்பட்ட காலத்திலேயே நிகழ்ந்துவிட்டது.

பா. ராகவனின் இந்த ஜென் கொலை வழக்கு என்னும் நவீன நாசகார ஜென் கதைகள், ஜென் கதை வடிவத்தைப் புறத் தோற்றமாகக் கொண்டு எழுதப்பட்ட நுண் கதைகளே.

மேலோட்டமான பார்வையில் இவை நாம் இதுவரை வாசிக்காமல் இருந்துவிட்ட ஜென் கதைகளைப் போலவே தோற்றமளிக்கும். ஏனெனில் இக்கதைகளில் நிஜமான ஜென் குருமார்கள் வருகிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலம், அன்றைய மன்னர் வம்சங்கள், அக்கால வாழ்க்கை முறை, அரசியல், அவற்றின்மீது மதங்களும் சித்தாந்தங்களும் செலுத்திய செல்வாக்கு எல்லாம் அப்படி அப்படியே பதிவாகும். இதில் எந்த இடத்தில் புனைவு ஒரு பூனையைப் போலப் புகுந்து இன்றைய நவீன வாழ்வையும் அதில் நாம் காணும் மனிதர்களையும் கொண்டு நிறைக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதுதான் இதில் உள்ள சுவாரசியமான விளையாட்டு.

அதிகபட்சம் முந்நூறு சொற்களுக்கு மிகாத இக்கதைகள் கட்டியெழுப்பும் உலகில் நமக்குத் தெரிந்த பலபேர் மாறுவேடத்தில் நடமாடுகிறார்கள். சில கதைகளில் நாமே வாழ்கிறோம். சிலவற்றில் நம்மோடு பாராவும் உடன் வருகிறார். யார், எங்கே, எந்தக் கட்டங்களில் நிரம்பிப் புதிர்களை உருவாக்குகிறார்கள் என்று கட்டவிழ்க்கும் பணியை ஆசிரியர் நம்மிடம் தந்துவிட்டு விலகிவிடுகிறார்.

அவ்வகையில் இத்தொகுப்பு ஒரு கதை வடிவ crossword puzzle ஆகிவிடுகிறது.

இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளுக்கும் டேவி. சாம் ஆசீர் செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு கோட்டுச் சித்திரங்கள் தீட்டியிருக்கிறார். அவை பா. ராகவன் சித்திரிக்கும் கதையுலகின் இன்னொரு பரிமாணத்தைத் துலக்கிக் காட்டுகின்றன.

ஜென் கொலை வழக்கு

நவீன நாசகார ஜென் கதைகள்

ஆசிரியர்: பா. ராகவன்

முகப்பு வடிவமைப்பு: விஜயன்

AI கோட்டோவியங்கள்: டேவி. சாம் ஆசீர்

வெளியீடு: எழுத்து பிரசுரம்

ஆகஸ்ட் 2024 வெளியீடு

புத்தக விலை விவரம் இன்னும் ஒன்றிரண்டு நாள்களில் தெரிவிக்கப்படும்.


--- 


02. ஜந்து

பா. ராகவனின் புதிய நாவல்

சில குறிப்புகள்

பத்திரிகை உலகம் - பத்திரிகையாளர்களின் வீர சாகசங்கள் அல்லது துயர வாழ்க்கை சார்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ் வார இதழ் உலகையே கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் முதல் நாவல் ஜந்துதான்.

ஆனால் இந்நாவலின் தனித்துவம் அதுவல்ல. இதன் களம் ஒரு தமிழ்ப் பத்திரிகை அலுவலகமாகச் சித்திரிக்கப்பட்டிருந்தாலும், இது பேசும் உண்மைகள் உலகப் பொதுவானவை. எத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும், எக்காலத்துக்கும் பொதுவானவை.

இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் தொடங்கி, இந்நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் வரையிலான காலக்கட்டம், தமிழ்ப் பத்திரிகை உலகுக்கு மிக முக்கியமான தருணம். அசைக்க முடியாத பெரும் சக்தியாகத் திகழ்ந்ததொரு கட்டமைப்பு, தனது அனைத்து ஆற்றல்களையும் பெருமைகளையும் ஆளுமையையும் உதிர்த்துவிட்டு முற்றிலும் வேறொரு தோற்றம் கொள்ளத் தொடங்கியதன் அடிப்படைகளை இந்நாவல் ஆராய்கிறது.

ஜந்துவில் நூற்றுக்கணக்கான மனிதர்கள் அத்தியாயம்தோறும் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கிறார்கள். யாருக்குமே உருவம் கிடையாது. குணமோ, குணமற்ற தன்மையோ கிடையாது. பிறப்பு, வாழ்க்கை, இறப்பு என்ற மூன்றுமே நிகழும்போதே இல்லாமலும் போய்விடுகின்றன. நல்லது-கெட்டது என்ற இருமைக்கு வெளியேதான் அவர்கள் அத்தனை பேருமே உலவுகிறார்கள். பிரளயத்தில் படைப்பனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்ட பின்பு புதையுண்ட நாகரிகத்தின் உயிருள்ள எச்சங்களாக அவர்களேதான் மீண்டெழுந்தும் வருகிறார்கள். எனவே ஒரு தோற்றத்தில் பிரம்மமாகவும் இன்னொரு தோற்றத்தில் கரப்பான்பூச்சியாகவும் காட்சியளிக்கிறார்கள்.

ஜந்துவின் ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு தனிச் சிறுகதை போலவும் மொத்தமாகப் படித்து முடிக்கும்போது ஒரு நாவலாகவும் தோற்றமளிக்கிறது. வாசிக்கும்போது எதற்குச் சிரிக்கிறோம் என்றே தெரியாமல் அத்தியாயம்தோறும் சிரித்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால் ஜந்து ஒரு நகைச்சுவை நாவலல்ல. குரூரங்களின் மீது மேற்கொள்ளப்படும் அறுவைச் சிகிச்சைக்கு அங்கதமே பொருத்தமான ஆயுதம் என்று மௌனமாக இது உணர்த்திக்கொண்டே இருக்கிறது.

பின்னுரையில் சி. சரவண கார்த்திகேயன்

‘ஜந்து’ என்ற இந்தத் தலைப்பு இது ஒரு விஞ்ஞானப் புதினம் அல்லது மிகு புனைவு என்ற எண்ணத்தைத்தான் எனக்கு அளித்தது. அறிவிற் குறைந்த மனிதர்களின் கதை இது. யோசித்துப் பார்த்தால் இந்த நாவலே அபத்தங்களின் அபிநயம் எனலாம். மனிதர்கள் தர்க்கத்துக்குப் புறம்பாகவும் நியாயத்துக்கு எதிராகவும் தொடர்ந்து மிக விரும்பிச் செயல்படுவது இக்கதையில் ரசிக்க ரசிக்கப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இத்தனை மிகைச் சம்பவங்களை, மீஆசாமிகளை நம்பகமாகச் சொன்னது ஒரு சாதனைதான்!

ஜந்து - ஒரு நாவல்

ஆசிரியர்: பா. ராகவன்

முகப்பு வடிவமைப்பு: ராஜன் பி.ஆர் / விஜயன்

வெளியீடு: எழுத்து பிரசுரம்

ஆகஸ்ட் 2024 வெளியீடு

புத்தக விலை விவரம் இன்னும் ஒன்றிரண்டு நாள்களில் தெரிவிக்கப்படும்.

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!