என் சமையல் அனுபவ குறிப்பு - 01
என் சமையல் அனுபவ குறிப்பு
பாகம் 01 - சாப்பிட முன்
பேஸ்புக்கை நோண்டிக் கொண்டிருக்கும் போது அடிக்கடி சமையல் குறிப்புகள் தென்படும். எல்லாம் பார்க்க இலகுவான குறிப்புகள் தான். காணொளியாக பார்க்க அழகாகவும் இருக்கும். அவற்றில் செய்ய முடியும் என்று தோன்றுவதை மனைவிக்கு அனுப்பி வைப்பேன். சிலவற்றை எனது வாட்ஸப் செய்தியில் சேமித்தும் வைத்துள்ளேன். அப்படி இன்று சில சமையல் காணொளிகளை பார்க்க நேர்ந்தது. எல்லாம் பார்க்க ஒரே மாதிரியான பொருட்களை வைத்து செய்யக்கூடியவை. அவற்றில் இரண்டை தெரிவு செய்திருந்தேன். ஒன்று தோசை போன்றது. மற்றையது நூடில்ஸ் பக்கோடாவோ எதுவோ. நூடில்ஸ் பக்கோடா செய்ய நினைத்தாலும் தேநீர் அருந்தும் நேரம் கடந்துவிட்டதால் அந்த யோசனையை கைவிட்டேன்.
அடுத்தது மாவு தோசை என்று வைத்துக் கொள்ளுங்கள். காணொளியில் சொல்லப்பட்ட அளவு இரவு உணவுக்கு போதாது என்று கருதியமையால் காணொளியில் வழங்கப்பட்ட பாவனை அறிவுறுத்தல்களை மும்மடங்காக்க நினைத்து அதற்கேற்றாற்போலவே பொருட்களை தயார் செய்தேன். ஆனால் பாலுடன் கோதுமை மாவை கலக்கும் சந்தர்ப்பம் வந்தபோது இரண்டு மடங்கு கோதுமை மாவை மாத்திரமே சேர்க்க முடிந்தது. சரி மாவு தானே என்று இரண்டு மடங்கு உணவு போதுமென தீர்மானம் செய்துவிட்டேன். வேற வழி தெரியல ஆத்தா.
இதைப் படிக்கும் நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். நான் தினமும் சமைக்கும் ஒருவன் அல்ல. நான் சமைக்கப் போனால் இரண்டு மடங்கு பொருட்கள் பாவனையாகும். அதனாலேயே சமையல் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. ஆனால் முயன்றால் எதுவும் முடியும் என்று காலையில் ஒரு சுயமுன்னேற்ற கட்டுரை சொன்னதை நம்பி இரவில் சமையலில் களமிறங்கிவிட்டேன்.
பாலை சூடாக்கி அதில் முட்டை, ஈஸ்ட், சீனி கலந்து கொள்ள வேண்டும். பின்னர் மாவை கலந்து கலக்க வேண்டும். பின்பு கேரட் சீவல், கிழங்கு சீவல், பயிற்றங்காய், தக்காளி, பச்சைக் கொச்சிக்காய் சேர்த்து கலக்க வேண்டும். பின்பு அரைமணி நேரம் மூடி வைக்க வேண்டும். நான் ஒருமணிநேரம் மூடி வைத்தேன்.
நான் ரொட்டி சுட்டாலே எப்போதும் கருகி விடும். ஆகவே இந்த மாவு தோசையையும் கருக விடுவதற்கு நான் விரும்பவில்லை. மனைவி வேலை முடிந்து வீடு திரும்ப பத்துப் பதினைந்து நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் சமையல் குறிப்பின் பிரகாரம் கொஞ்சம் பாலையும் உப்பையும் சேர்த்து கிண்டிவிட்டேன். அதை மூடி வைத்து பத்து நிமிடங்களில் சுமார் பாதி வீடு வந்து சேர்ந்தார்.
அந்த காணொளியில் இருந்து பெற்ற மாவு தோசையின் படம் |
பாகம் 02 - சாப்பிட்ட பின்
முதலாவது மாவு தோசையை மனைவியை வைத்து சுட்ட போது உப்பு போதாமல் இருந்தது தெரியவந்தது. பின்பு உப்பு சேர்த்து இரண்டாவது தோசை ஊற்றிய போதும் உப்பு போதவில்லை. மீண்டும் உப்பு சேர்த்து சுவை பார்த்த போது சரியாக வந்ததாக சுமார் பாதி சொன்னார். பரவாயில்லை. நமக்கும் கொஞ்சம் சமையல் கலை தெரிந்திருக்கிறது என்பதை தோசையைப் பார்த்து உணர்ந்து கொண்டேன். ஆனால் இனிவரும் நாட்களிலும் இவ்வாறு பல உணவு வகைகளை தயாரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் பட்சி மனதுக்குள் எச்சரிக்கத் தவறவில்லை.
பகுதி 03 - வரலாறு
கடந்த வருடம் சித்திரை விடுமுறைக்கு நான் மட்டும் கொழும்பில் வீட்டில் இருந்தேன். எனக்கு விடுமுறை கிடைக்கவில்லை. மனைவி, மகள், மாமியார் எல்லாம் ஊருக்கு சென்றுவிட நான் தனித்துவிடப்பட்டேன். ரொட்டி சுடப் போனால் காலை உணவு சாப்பிட பதினோரு மணியாகும். இரவு உணவை எட்டு மணிநேர ஆரம்பித்தால் சாப்பிட பத்து மணி ஆகும். இந்த வம்பே வேண்டாம் என ஐந்தாம் நாளில் இருந்து கடையில் வாங்கிக் கொண்டேன்.
உணவு தயாரிப்பு என்பது அனுபவமற்ற நிலையில் தனித்து செய்யும் போது சிரமமானதாக இருக்கிறது. நான் எப்போதும் வேலைப்பளுவுடனேயே இருப்பதால் சமையல் மற்றும் இதர வேலைகளை செய்வதில் சிரமம் உள்ளது. ஊடகவியலாளர் என்றால் இருபத்து நான்கு மணிநேரமும் வேலைதான் இல்லையா? ஆனால் மாமியார் இல்லாமல் மனைவி மட்டும் இருந்தால் பாத்திரம் கழுவுவது உட்பட சில வேலைகளில் உதவியாக இருப்பேன். களைப்பாக வீடு வரும் மனைவிக்கும் மூச்சு விட ஒரு இடைவெளி தேவைதான் இல்லையா?
பகுதி 04 - முடிவுரை
பேஸ்புக், யூடியூப் போன்றவற்றில் புதிது புதிதாக முயற்சித்து பார்க்க ஒவ்வொரு வகையான உணவுகள் இருக்கின்றன. அடிப்படையில் பார்க்கும்போது எல்லாமே ஏதோ ஒரு பொது வகைக்கு உட்பட்டதாகத்தான் இருக்கும். ஆனால் அதை முயற்சித்து பார்ப்பதால் மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியாக இருக்கும். தினமும் ஒரே வகையான உணவையே சாப்பிடுகிறோம் என்ற சலிப்பு இதன்போது இருக்காது.
பகுதி 05 - பின் குறிப்பு
நாளை நூடுல்ஸ் பக்கோடா செய்வதாக இருக்கிறேன். மேகி நூடுல்ஸ், முட்டை, கொத்தமல்லி இருந்தால் போதுமாம். செய்து பார்க்கலாம். நன்றாக இருந்தால் நொறுக்குத் தீனி. இல்லாவிட்டால் நொறுங்கும் நம் தீனி. அவ்வளவுதான். நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா... எது எப்படியோ நமக்கு சோறு முக்கியம். அதற்கு ஆப்பு வராத அளவுக்கு நெஞ்சமும் நேர்மையும் ஓட்டமும் இருந்தால் சரிதான். என்ன நாஞ் சொல்றது?
கலைச் சொற்கள் - சுமார் பாதி - Better Half அதாகப்பட்டது மனைவி.
சிகரம் பாரதி
2024.11.23
இரவு 10.47
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்