'அந்திமழை' இணைய இதழில் வெளியான 'இனிப்பில் வாழ்பவன்' கட்டுரையை முன்வைத்து...
'அந்திமழை' இணைய இதழில் வெளியான 'இனிப்பில் வாழ்பவன்' கட்டுரையை முன்வைத்து...
கட்டுரையின் ஆரம்பத்திலேயே ஒரு படம். அதற்கு 'கேப்சன்' என்று சொல்லக்கூடிய ஒரு விளக்கம். ரவி பேலட் வரைந்திருந்த அந்த படத்திற்கு 'இனிப்புத் தீவிரவாதி' என்று விளக்கம் தரப்பட்டிருந்தது. ஆம். தீவிரவாதிதான். பாரா ஒரு தீவிரவாதி. எதில்? தான் நம்பும் அனைத்திலும். எழுத்தில் ஒரு தீவிரவாதி. எதையும் எழுதக்கூடிய தீவிரவாதி. கூட்டம், பாராட்டு என்று எதன் பின்னாலும் போகாத ஒரு தீவிரவாதி. வாசகர்களை மட்டுமே நம்பும் தீவிரவாதி. இறுதியாக உலகமே தேடக்கூடிய இனிப்புத் தீவிரவாதி.
ஒரு பக்கம் அட இந்த மனிதர் எப்படி இவ்வளவு இனிப்பை உண்கிறார் என்ற ஆச்சரியம். மறுபுறம் இத்தனை வகை இனிப்பும் இந்த மனிதருக்கு எப்படி கிடைக்கிறது என்ற ஆச்சரியம். அதிலும் ஆச்சரியம், அதை எப்படி ருசிக்க வேண்டும் என நாலு பக்கம் நீளமாக ரசித்து எழுதும் பதிவு. அந்த பதிவை வாசித்துவிட்டு நாமும் ஒரு இனிப்பை சுவைக்கலாம் என்று போனால் நமது முகத்திற்காகவே தயாரிக்கப்பட்டதுபோல ஒன்றைத் தருவார்கள். தண்டச்செலவு அல்ல, அதற்கும் கீழேதான் அதைப் பட்டியல் படுத்த வேண்டிவரும்.
இப்படியாக நமது வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கும் நிலையில் தான் இந்த 'இனிப்பில் வாழ்பவன்' கட்டுரையையும் வாசிக்கும் அனுபவம் நமக்கு கிட்டியது. சர்வ ஜாக்கிரதையாக இந்த பதிவை வாசித்துவிட்டு இனிப்புக் கடையைத் தேடிப் போவதைத் தவிர்த்துக் கொண்டேன். பாரா எப்போதும் ஒன்றைச் சொல்வார். அதைச் சொல்ல முடிந்தால் எதையும் செய்யும் வல்லமை நமக்குக் கிடைத்துவிடும். இனிப்பை சுவைக்க மட்டுமல்ல, எதையும் சாதிக்கவும் இதனால் முடியுமாக இருக்கும். அவர் இறுதியாகவே அதனை சொன்னார். ஆகவே நானும் அவ்வண்ணமே...
![]() |
இனிப்புத் தீவிரவாதி!ஓவியம்: ரவி பேலட் Image Credit to: andhimazhai.com |
இந்த இனிப்புத் தீவிரவாதி போகிற போக்கில் சில தத்துவ முத்துக்களை உதிர்த்துச் சென்றார். அதன் தொகுப்பு கீழே:
* ஒரு விஷயம் ஏன் நமக்குப் பிடிக்கிறது என்பதற்குக் காரணங்கள் கிடையாது. பிடிக்காமல் போவதற்குத்தான் அதெல்லாம் இருக்கும்.
* என் இனிப்பு வெறியின் ஊற்றுக்கண் திருப்பதி லட்டுதான் என்று தோன்றுகிறது. அரசியல் கொழுப்புகள் கலக்காத தூய்மைக் காலத்து லட்டு.
* நின்றவாக்கில், நகர்ந்தவாக்கில் மென்று விழுங்குவதெல்லாம் இனிப்புக்குச் செய்யும் துரோகம். ஒரு கலைஞன் அதைச் செய்ய மாட்டான்.
* மழையைப் போல, ஒளியைப் போல, காற்றைப் போல இனிப்புக்கு என்னிடம் பாகுபாடில்லை. எதையும் நிராகரிக்கும் கெட்ட காரியத்தை என்றுமே செய்ததில்லை.
* மது ஒரு போதை என்றால், அல்வா இன்னொரு போதை. இரண்டும் எப்படிச் சேரும்? எனக்குப் புரிந்ததேயில்லை.
* மோத்தி லட்டுக்கொரு இலக்கணம், பால்கோவாவுக்கொரு இலக்கணம், ரசமலாய்க்கொரு இலக்கணம், தேங்காய் போளிக்கொரு இலக்கணம் என்று தொல்காப்பிய கனபரிமாணத்தில் இலக்கணக் கையேடு ஒன்று என்னிடம் உள்ளது. நானே உருவாக்கியதுதான்.
* கலை மனம் ஐம்பதடி தொலைவை நடந்து கடக்கச் சோம்பாது.
இப்படி ரசிக்க பல வரிகள் உள்ளன. ருசிக்க அவர் உண்ட இனிப்பு வகைகளும் அவை கிடைக்கும் இடங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மாற்று இடங்களில் உள்ளவர்கள் பொருத்தமான மாற்றுத் தெரிவைக் கண்டறிய வேண்டும். ஒவ்வொரு இனிப்பையும் எவ்வாறு சுவைக்க வேண்டும் என சுவைபட விளக்கியுள்ளார். எழுதுதல் பற்றிய குறிப்புகள் புத்தகத்தில் ஆசான் சொல்வார். நுட்பங்களைக் கற்றுத்தர முடியும். கலையைக் கற்றுத் தர முடியாது. அதேதான் இங்கும். இந்த இனிப்பு இப்படி என்று சொல்லலாம். சுவைப்பது உங்கள் வேலை.
இனிப்பில் வாழ்பவன் கட்டுரையின் இறுதியில் பாரா ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார். அதை இந்த இடத்தில் பார்த்துவிட்டு வந்துவிடுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
// * இன்றில்லை. ஒருவேளை நாளை எனக்கும் சர்க்கரை வியாதி வரலாம். ஆனால் அது பற்றிய அச்சமோ கவலையோ எனக்கில்லை. எப்போது வந்தாலும் அக்கணமே இனிப்பை முற்றிலும் நிறுத்திவிட என்னால் முடியும்.
இனிப்பு மட்டுமல்ல. எதுவுமே வேண்டுமென்றால் வேண்டும், வேண்டாமென்றால் வேண்டாம் என்றிருக்க முடிந்தவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்.
நான் செய்வேன். //
சிலர் நோயாளி ஆவதற்கும், ஏன் சில விடயங்களில் சிக்குண்டு தவிப்பதற்கும் இதுதான் காரணம். வேண்டாம் என்று முடிவெடுத்தால் அதனை கைவிட யாராலும் முடிவதில்லை. வேண்டும் என்று அலைபாயும் மனதிற்கு அடிமையாகி தம்மையே இழந்துவிடுபவர்களைத்தான் இதுவரை பார்த்திருக்கிறோம். இனிப்பை தேடித் தேடி சென்று உண்ணக்கூடிய இந்த 'இனிப்புத் தீவிரவாதி' பாரா அது வேண்டாம் என்றால் அதற்கு எதிரான பயங்கரவாதியாக மாறவும் தயங்க மாட்டார். இந்த உறுதி உங்களிடம் இருக்கும் என்றால் நீங்கள் எவ்வளவு இனிப்பையும் உண்ணலாம். சுவைக்கலாம். அணு அணுவாக ரசித்து ருசிக்கலாம்.
எவ்வளவோ அனுபவக் கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். ஆனால் உணவுக்கு, குறிப்பாக இனிப்புக்கா இவ்வளவு பெரிய கட்டுரையை எழுத முடியும் என்று இன்றுதான் அறிந்துகொண்டேன். போகிற போக்கில் சாப்பிட இது ஒன்றும் வழக்கமாக உண்ணும் மூன்று நேர உணவு அல்ல. இனிப்பு. அதை உண்ணத் தயாராவதும், இடத்தை தேர்வு செய்வதும், அதைக் கையில் எடுப்பதும், அதை வாயிலிட்டு சுவையை உணர்வதும், அந்த சுவையை அனுபவிப்பதும், அந்த சுவை உடனே காணாமல் போய்விடாமல் தக்க வைப்பதும் என்று இனிப்பை சுவைக்கும் ஒவ்வொரு படிமுறையும் ஒரு கலை. ஆனால் நம்மில் பலர் அவசரத்தில் அந்த கலையைக் கொலை செய்துவிட்டு தான் இனிப்பின் பக்கமே தலை வைத்துப் படுக்கிறோம். இங்கேதான் நாம் தவறு செய்கிறோம். வாரத்திற்கு சில மணி நேரமாவது கிடைக்காதா இனிப்புப் பிரியர்களாகிய உங்களுக்கு? இனிப்பு வேண்டுமென்றால் அதற்கு தவம் செய்ய வேண்டும் அல்லவா? என்ன, நீங்கள் தயாரா?
இன்னும் இந்த கட்டுரையை வாசிக்காதவர்கள் இதனை ஒருமுறை சென்று வாசித்துவிடுவது சாலச்சிறந்தது. ஒரு விடயத்தை அனுபவித்து ருசித்து விவரித்து எழுதுவது ஒரு கலை. அது எல்லோருக்கும் இயல்பில் வாய்த்து விடுவதில்லை. உணவோ இனிப்போ அதுவும் ஒரு தனிக்கலை. எழுத்துடன் இன்னுமொரு கலை வாய்க்கப் பெற்றவர்கள் உண்மையிலேயே கடவுளுக்குச் சமம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் எழுத்து எதையும் வெளிப்படுத்தக் கூடிய அருமையான ஊடகம். எந்தவொரு உணர்வையும் எழுத்தில் கொண்டுவரும் போது அது மற்றுமொரு பரிமாணத்தை அடைந்துவிடும். எழுதுபவருக்கே புது அனுபவத்தை எழுத்து வழங்கிவிடும். கலையை அறிந்தவர்களுக்கு அதை காப்பாற்றவும் தெரியும். இனிப்பின் சுவையை முற்றிலும் அறிந்தவர்களுக்கு அதை எப்போதும் இழந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ளவும் தெரியும். பாராவுக்கு அனைத்தும் தெரியும்.
ஆச்சரியத்தை ஏற்படுத்தும் உண்மையான அனுபவங்கள் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுபவை. அந்த வகையில் அந்தி மழை இணைய இதழில் வெளியான 'இனிப்பில் வாழ்பவன்'கட்டுரையை மீண்டும் ஒருமுறை வாசித்து மகிழ்ந்தேன். நீங்களும் ஒருமுறை தவறாமல் வாசித்துவிடுங்கள். இனிப்பு பற்றிய சில எண்ணங்களை இந்தக் கட்டுரை மாற்றியமைக்கக் கூடும். சில புதிய வழிகளை உங்களுக்கு காண்பிக்கவும் கூடும். இனிப்பையும் இந்தக் கட்டுரையையும் ரசிக்க, ருசிக்க நீங்கள் தயாரா? வாங்க போகலாம்...!
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்