வாசிப்பும் பகிர்வும் - 03 | அக்னிச் சிறகுகள் - அப்துல் கலாம் | வாசிப்பு அனுபவக் குறிப்புகள்
அப்துல் கலாம் இன்றளவும் நம்மால் வியந்து பார்க்கப்படும் ஒருவர். பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் என்றாலும் தன்னடக்கம் மிக்கவர். இனிமையாக பழகும் ஒருவர். கரையோரக் கிராமமொன்றில் பிறந்து ஏவுகணை நாயகனாகி நாட்டையும் ஆண்ட ஒருவர். இத்தனை வெற்றிகளைக் குவித்த ஒருவர் வியந்து பார்க்கப்படுவதில் தவறேதுமில்லை.
அப்துல் கலாமின் அக்னிச் சிறகுகள். இந்த நூல் பற்றித்தான் இன்று பேச வேண்டும். உண்மையில் இது ஒரு சுயசரிதை. ஆனால் அந்த வகைக்குள் மாத்திரம் இதனை அடக்கிவிட முடியாது. விஞ்ஞானிகள் வாசிக்க வேண்டிய நூல் இது. மனிதர்களை அறிந்து கொள்ள விரும்பும் மக்கள் வாசிக்க வேண்டிய நூல் இது. சுயமுன்னேற்றம் வேண்டுவோர் வாசிக்க வேண்டிய நூல் இது. சாதிக்கத் துடிப்பவர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது. இப்படி அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற, அனைவரும் தமது வாழ்வில் ஒருமுறையேனும் கட்டாயம் வாசித்துவிட வேண்டிய நூல் இது.
மத நல்லிணக்கம் தொடர்பில் நாம் இன்று அதிகம் பேசுகிறோம். அப்துல் கலாம் தனது புத்தகத்தில் இப்படி கூறுகிறார். "கோயிலை சுற்றிலும் பெருந்திரளாக வந்து கொண்டிருக்கும் பக்தர்களையும் கடலில் அவர்கள் புனித நீராடுதலையும் வைதிக சடங்குகள் செய்வதையும் கண்ணுக்குத் தெரியாத சக்தியிடம் பயபக்தியோடு பிரார்த்தனை செய்வதையும் கவனித்துப் பார்ப்பேன். அதே சக்தியைத் தான் நாங்கள் வடிவம் இல்லாத இறைவனாகப் பாவிக்கிறோம். கோயிலில் நடக்கும் பிரார்த்தனையும் மசூதியில் நடக்கும் தொழுகையும் ஒரே இடத்தில் தான் போய் சேர்கிறது என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் வந்ததே கிடையாது."
இதை விட மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்ட வேறு சிறந்த வார்த்தைகள் உண்டா? இதைச் சொல்வதற்கு எத்தனை அனுபவம், எத்தனை முதிர்ச்சி, எத்தனை புரிதல் வேண்டும்? குடும்பத்தினரின் வழிகாட்டல் துளியுமின்றி இத்தகைய புரிதல் சாத்தியமில்லை அல்லவா? ஆனால் அத்தகைய புரிதல் மிக்க குடும்பம் ஒன்று அப்துல் கலாமுக்கு வாய்த்தது. அதுவே அவரது வெற்றிகரமான வாழ்க்கைக்கும் அடித்தளமிட்டது.
நூலின் ஆரம்பத்திலேயே தனது தாயைப் பற்றி எழுதியுள்ள கவிதையில் கலாம் இப்படி கூறுகிறார்.
"மணல் குன்றுகள் ஏறி இறங்கி
புகைவண்டி நிலையச் சாலைக்குச் சென்று
நாளிதழ் கட்டு எடுத்து வந்து
அந்தக் கோயில் நகரத்து மக்களுக்கு
விநியோகிக்க வேண்டும்
அப்புறம் தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும்
இரவு படிக்கச் செல்லும் முன்
மாலையில் அப்பாவுடன் வியாபாரம்"
இதுவே அவரது ஆரம்ப வாழ்க்கையை விளக்கப் போதுமானது. ஆரம்பத்தில் அவரிடம் எந்த அளவு எளிமை காணப்பட்டதோ அதே எளிமை அவரது இறுதிக்காலம் வரையுமே தொடர்ந்தது. அதுவே அவரை உறுதியான வெற்றியை நோக்கியும் அழைத்துச் சென்றது.
விமானப்படை விமானியாக வேண்டுமென கலாம் ஆசைப்பட்டார். அவர் கலெக்டராக வேண்டுமென அவரது தந்தை ஆசைப்பட்டார். ஆனால் காலம் அவரை ராக்கெட் என்ஜினியராக்கி அழகுபார்த்தது.
அவருக்கு வாழ்க்கையில் எதிர்கொண்ட அனைவருமே ஏதோ ஒரு வகையில் அவருக்கு உதவி புரிந்துள்ளனர். அவருக்குள் இருந்த சாதனையாளரை அடையாளம் கண்டு அவரை வெளிக்கொணர உறுதுணையாக இருந்துள்ளனர். இவ்வாறான நபர்கள் வாழ்க்கையில் கிடைப்பதை விட வேறு என்ன பேறு கிடைத்துவிட முடியும்?
விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் ஒன்றே என்பது கலாமின் கருத்து. விஞ்ஞானத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் அவர் மெய்ஞ்ஞானத்தை, தன் உள்ளொளியை கண்டடைந்தார். விளைவு அவர் மாபெரும் வெற்றியாளர் ஆனார்.
"மற்றவர்களை அறிந்தவன் பண்டிதன், தன்னை அறிந்தவன் தான் உண்மையான கல்விமான், விவேகம் தராத கல்வி பயனற்றது" என்ற அவரது தந்தையின் வார்த்தைகளே தனக்கு உத்வேகம் தந்ததாக கலாம் குறிப்பிடுகிறார். எத்தனை நிதர்சனமான வார்த்தைகள் அவை?
விமானத்தை ஓட்ட ஆசைப்பட்ட கலாம், விமானத்தை உருவாக்குபவராக தனது வாழ்வில் அடியெடுத்து வைத்தார். வாழ்க்கை நாம் என்னவாக வேண்டுமென்று ஒரு கணக்கு வைத்திருக்கும். அந்த கணக்கை மாற்றும் சக்தி நம்மிடம் இல்லை என்பதை அவரது வாழ்விலிருந்து நாம் கண்டுகொள்ளலாம்.
"வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான எல்லா ஆதாரங்களும் மனசுக்குள் மறைந்துள்ளன. உணர்வு நிலையில் உறைந்து கிடக்கும் சிந்தனைகள் வெளிக்கிளர்ந்து நிஜமாவதற்கான வாய்ப்பு கிடைத்தால் வெற்றி மீது வெற்றி வந்து சேரும்." என்கிறார் கலாம். உண்மைதானே?
கூட்டு முயற்சி, அதன் சாதகங்கள், அதில் கிடைக்கக்கூடிய விளைவுகள் என, ஒன்றாக சேர்ந்து செயல்படுவதனால் தனக்கு கிடைத்த வெற்றிகளைக் கொண்டு அவற்றை நமக்கு விளக்கி, அதனை பின்பற்றுமாறு கலாம் வலியுறுத்துகிறார்.
ஒரு இடத்தில் கலாம் இப்படி கூறுகிறார்: "கற்றலில் ஒரு அங்கமாக தவறுகளை அனுமதிக்க வேண்டும் என்பது எனது மாறாத கருத்து. தப்பே செய்யக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம். எனது அணியினர் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அவர்களது ஒவ்வொரு முயற்சியையும் கவனமாகக் கண்காணித்து, அவர்களைக் கற்றுக் கொள்ள வைப்பதில் நான் எப்போதும் உறுதுணையாக இருந்தேன்" - எத்தனை ஆழமான வார்த்தைகள்?
இப்படி ஒரு ஆசிரியர், இப்படி ஒரு நண்பர், இப்படி ஒரு மேலதிகாரி, இப்படி ஒரு சக ஊழியர், இப்படி ஒரு குடும்பம், இப்படி ஒரு வாழ்க்கைத்துணை அமைந்துவிட்டால் வாழ்க்கை எத்துணை அழகாக இருக்கும்? கலாமின் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் இது வாய்த்திருக்கிறது. அதனை அக்னிச் சிறகுகள் நூல் மூலமாக முழுவதும் உணர முடியும். அவர் தான் தனது உள்ளூர அமைந்துள்ள சக்தியை நம்பினார். அந்த சக்தி வழிநடத்தும் பாதையில் நடந்தார். அதனாலேயே வெற்றி பெற்று ஏவுகணை நாயகன் ஆனார்!
கலாமுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகிவிடவில்லை. அவர் தனது திட்டங்களில் பல தடவைகள் தோல்வியடைந்திருக்கிறார். அதனால் பல தடவைகள் துவண்டு போயிருக்கிறார். ஆனால் அதிலேயே முடங்கிவிடவில்லை. வேலையை விட்டுவிட்டு ஓடிவிடவில்லை. பீனிக்ஸ் பறவை போல் அவர் தோல்விகளில் இருந்தும் துன்பங்களில் இருந்தும் தன் குடும்ப உறவுகளை இழந்த சோகத்தில் இருந்தும் மீண்டு வந்துள்ளார். இதுவே அவரது வெற்றிக்கு காரணம்.
DRDL அமைப்பின் இயக்குனராக அப்துல் கலாம் நியமிக்கப்பட்ட பின்னர் அவர் தனது அணியினரின் உனைத் திறனை மேம்படுத்துவதற்காக இப்படி ஒரு உத்தியை கையாளுகிறார். "நீங்கள் ஒரு பணி மையத்துக்கு கடிதம் அனுப்ப வேண்டி இருந்தால் ஃபேக்ஸ் அனுப்புங்கள், ஃபேக்ஸ் அல்லது டெலக்ஸ் அனுப்ப வேண்டி இருந்தால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள், தொலைபேசி மூலமாக ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக செல்லுங்கள்"
எவ்வளவு அழகான நடைமுறை இது? நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை எதுவாக இருந்தாலும் அதன் அடுத்த கட்டத்தை நோக்கி எப்போதும் சிந்திப்பது அவசியமாகும். உங்கள் வேலையை விரைவுபடுத்தவும், அதனை துரிதமாக முடிக்கவும் இந்த நடைமுறை மிகவும் உதவியாக இருக்கும்.
குழு மனப்பான்மை, பதவி நிலைகளில் தங்கியிருக்காமல் பணிபுரிதல், ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டாமல் இணைந்து செயற்படுதல், பழைய மனோபாவங்களில் தங்கியிருக்காமல் புதிதாக சிந்தித்தல் என பல விடயங்களை கலாம் விரும்பினார். தான் மட்டுமல்லாது அனைவரையும் அதனை பின்பற்றச் செய்தார். பட்டம், பதவி, பாராட்டு, வைபவங்கள், பணம், கௌரவம், தனது வாழ்க்கைக்கு மற்றவர்கள் அங்கீகாரம், எல்லாவிதமான அந்தஸ்து அடையாளங்கள் போன்ற அனைத்தையும் அவர் அடியோடு வெறுத்தார்.
அக்னி சிறகுகளின் இறுதியில் கலாம் இவ்வாறு கூறுகிறார்: "மற்றவர்கள் என்னை உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்பவில்லை. இருந்தாலும் ஒரு சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என்றும், ஆன்மீக உணர்வு நிறைந்த வாழ்க்கையில் தான் முழுமையான திருப்தி காண முடியும் என்ற சூழ்நிலைக்கு வரக்கூடும் என்றும் நம்புகின்றேன்"
இதுவே கலாம். இந்த எளிமை தான் கலாம். புதிய சிந்தனைகளின் வடிவம் தான் கலாம். தூரநோக்கின் ஓர் வடிவம் தான் கலாம். தனது சிந்தனைகளின் சிறகுகளை ஒடித்துப் போடாதவர் கலாம். கிடைக்கும் வாய்ப்பு எதுவாக இருந்தாலும் அதில் ஏதேனும் சாதிக்கத் துடித்த ஒருவர் கலாம். இளைஞர்களின் சக்தியை நம்பியவர் கலாம்.
ஆகவே கட்டமைக்கப்பட்ட சுயமுன்னேற்ற நூல்களை விடவும் இந்த நூல் பல அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும். நூறு ஆலோசனைகளை விடவும் அவர் தோல்வியில் இருந்து மீண்ட ஒரு கதை புதிய பாடங்களை உங்களுக்கு சொல்லித் தரும். நம் ஒவ்வொருவரின் கைகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு நூல் தான் 'அக்னிச் சிறகுகள்!'.
சிகரம் பாரதி
10.02.2024
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்