சோறுடைக்கும் சோழநாட்டின் குடிமகள் 'அபிராமி பாஸ்கரன்' உடனான சிகரம் வழங்கும் நேர்காணல்!

சிகரம்: வணக்கம் அபிராமி! சிகரம் இணையத்தளம் சார்பாக உங்களை வரவேற்கிறோம்!


அபிராமி பாஸ்கரன்: வணக்கம்


சிகரம்: எமது வாசகர்களுக்கு உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.


அபிராமி பாஸ்கரன்: வணக்கம். நான் அபிராமி பாஸ்கரன். எனது ஊர் மன்னார்குடி. சோறுடைக்கும் சோழ நாட்டின் குடிமகள். MBA., M.Phil., பட்டதாரி. நான் வெற்றிக்களிறு என்ற சரித்திர நாவலின் ஆசிரியர். வரலாற்றின் மீது அதீத ஆர்வம் உண்டு. சோழமண்டல வரலாற்றுத்தேடல் குழுவின் துணைத்தலைவராக உள்ளேன். முகநூலில் இயங்கும் பொன்னியின் செல்வன் குழுவின் நிர்வாகிகளில் ஒருத்தி. சிகரம் இணையத்தளத்துடன் இணைந்து பயணிப்பத்தில் மகிழ்ச்சி.


சிகரம்: தங்களின் எழுத்துப் பயணம் பற்றிக் குறிப்பிடுங்களேன்?


அபிராமி பாஸ்கரன்: எனது முதல் நாவல் வெற்றிக்களிறு. தற்பொழுது அடுத்த நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். சில சிறுகதைகளும் எழுதியுள்ளேன். எனக்கு வரலாற்று நாவல் ஒன்று எழுதுவதற்கும், வரலாற்றின் மீதான ஆர்வத்திற்கும் தூண்டுக்கோலாக அமைந்தது அமரர் திரு. கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் தான். Abirami's Articles about Ponniyin Selvan என்ற எனது முகநூல் பக்கத்தில் பொன்னியின் செலவன் குறித்த கட்டுரைகளையும் அவ்வப்பொழுது எழுதி வருகிறேன். 


சிகரம்: தமிழ் வாழுமா, வீழுமா?


அபிராமி பாஸ்கரன்: நம்மை வாழ வைக்கும் தமிழ் மொழிக்கு என்றுமே வீழ்ச்சி இல்லை. தமிழ் வீழாது, நம்மையும் வீழ விடாது. தான் வாழ்ந்து நம்மையும் வாழ வைக்கும்.


சிகரம்: வரலாற்றுப் புதினங்களை கடந்த கால வரலாற்றுக்கான ஆதாரமாகக் கொள்ளலாமா?


அபிராமி பாஸ்கரன்: வரலாற்று ஆய்வு நூல்களை கால வரலாற்றிற்கான ஆதாரமாக கொள்வது போன்று, வரலாற்று புதினங்களை கால வரலாற்றிற்கான ஆதராமாக கொள்ள இயலாது. ஏனெனில், சரித்திர சம்பவங்களுடன் நிறைய கற்பனைகளும் கலந்து புனையப்படுபவையே வரலாற்று புதினங்கள். அவற்றை கால வரலாற்றிற்கான ஆதாரமாக கொள்ள இயலாதே தவிர, வரலாற்று புதினங்கள் மூலம் மக்களிடையே வரலாறு குறித்த விழிப்புணர்வையும், வரலாற்று தேடலுக்கான ஆர்வத்தையும் நிச்சயம் உண்டாக்க இயலும். இன்றைக்கு வரலாற்றின் மீது அதீத ஆர்வம் கொண்டு தேடல்களில் ஈடுபட்டுள்ள நிறைய வரலாற்று ஆர்வலர்கள் பொன்னியின் செல்வன் படித்த தாக்கத்தினால் தான் என்பது மறுக்க இயலா உண்மை. இதற்கு நானும் ஓர் உதாரணம் தான். நான் பொன்னியின் செல்வன் படிக்கவில்லை எனில் தற்பொழுது ஓர் சரித்திர நாவல் ஆசிரியராக  நேர்க்காணல் கொடுத்திருக்க இயலாது. 





சிகரம்: வரலாற்றுப் புதினங்கள் பெரும்பாலும் சோழர்களைப் பற்றிய புதினங்களாகவே அமைகின்றனவே?


அபிராமி பாஸ்கரன்: அதற்கு காரணம் பொன்னியின் செல்வனாக கூட இருக்கலாம். எனக்கு தெரிந்த நிறைய வரலாற்று புதின எழுத்தாளர்கள் பொன்னியின் செல்வன் படித்த பிறகு அதன் தாக்கத்தால் நாவல் எழுத தொடங்கியவர்கள் தான். சேரர்கள் மற்றும் பாண்டியர்களை விட சோழர்கள் குறித்த வரலாற்று தரவுகள் அதிகமாக கிடைக்கின்றன. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அது மட்டுமின்றி சோழர்கள் மீது ஏனோ அனைவருக்குமே அதிக ஆர்வம். சோழர்களின் வரலாறு குறித்த தேடல்கள் தான் வரலாற்று ஆர்வலர்களிடத்தில் அதிகமாக உள்ளது.


சிகரம்: 'வெற்றிக்களிறு' புதினத்தின் கதைக்களம்?


அபிராமி பாஸ்கரன்: பிற்கால சோழர் வரலாற்றில் முக்கிய போரான கொப்பத்து போர் தான் எனது வெற்றிக்களிறு நாவலின் கதைக்களம்.


சிகரம்: 'பொன்னியின் செல்வன்' புதினம் குறித்த தங்கள் பார்வை?


அபிராமி பாஸ்கரன்: வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட பிரம்மாண்ட படைப்பு.


சிகரம்: 'வெற்றிக் களிறு' நாவலுக்காக கள ஆய்வு செய்திருக்கிறீர்களா? அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.


அபிராமி பாஸ்கரன்: நான் வெற்றிக்களிறு நாவலுக்காக எந்த வித கள ஆய்வினையும் மேற்கொள்ளவில்லை. முழுக்க முழுக்க சோழர்கள் குறித்த வரலாற்று ஆய்வு நூல்களையும், இலக்கியங்களில் உள்ள குறிப்புகளையும் அடிப்படையாக கொண்டே எழுதினேன். 


சிகரம்: எழுத்தாளர் வெற்றிவேல் அவர்களுடனான நட்பு குறித்து சில வார்த்தைகள்?


அபிராமி பாஸ்கரன்: எனது சிறந்த நண்பர் அவர். நான் வரலாறு மற்றும் இலக்கியத்தில்  எப்பொழுது எந்த சந்தேகம் வினவினாலும், என் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் நல்ல உள்ளம். என் நலன் விரும்பி. 


சிகரம்: வெற்றிவேலின் 'வானவல்லி' புதினம் குறித்த தங்கள் பார்வை?


அபிராமி பாஸ்கரன்: எனக்கு இன்னும் அந்த நாவல் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரது வென்வேல்சென்னி படித்துள்ளேன். மிகவும் அருமையான நாவல். நிறைய ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளார். அனைவரும் படிக்க வேண்டிய நாவல். 


சிகரம்: உங்களைக் கவர்ந்த நூல்கள் யாவை?


அபிராமி பாஸ்கரன்: பொன்னியின் செல்வன், கடல் புறா, சிவகாமியின் சபதம், யவன ராணி, பார்த்திபன் கனவு, வேங்கையின் மைந்தன், குறிஞ்சி மலர்...


சிகரம்: தமிழ் மொழி எதிர்நோக்கிவரும் சவால்கள் என்ன?


அபிராமி பாஸ்கரன்: கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய நம் தமிழ் குடி மக்களின் உயிருக்கும் மேலான நம் தாய் தமிழ்மொழி தற்காலத்தில் நிறையவே சவால்களை சந்தித்து வருகின்றது. மேலைநாட்டு மொழி மீது கொண்ட மோகத்தினால் தமிழர்கள் சிலரே நம் தாய்மொழி தமிழை பொதுவெளியில் பேசுவதை அநாகரிகமாக கருதுகின்றனர். இது கண்டனத்துக்குரிய ஒன்று. தற்கால குழந்தைகளுக்கும் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர். இவை தான் எனக்கு தமிழ் மொழி சந்தித்து வரும் சவால்களாக தோன்றுகிறது. இவை எல்லாவற்றையும் மீறி தமிழ் மொழியின் மீது பற்றுக் கொண்ட மக்களே அதிகம் நம் தமிழ்நாட்டில். ஆகையால் இந்த சவால்களையும் தாண்டி தமிழன்னை உலகரங்கில் ஜொலிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.


சிகரம்: தமிழக இலக்கியங்களுக்கும் ஏனைய தமிழ் இலக்கியங்களுக்குமிடையிலான வேறுபாடு என்ன?


அபிராமி பாஸ்கரன்: தமிழக இலக்கியம்? மன்னிக்கவும். கேள்வி புரியவில்லை. 


சிகரம்: தமிழ் இலக்கியம் என்று ஒன்றாகக் குறிப்பிட்டாலும் பிரதேச வாரியாகப் பார்க்கும் போது தமிழகம், இலங்கை, மலேசியா என ஒவ்வொரு பிரதேசங்களில் உள்ள இலக்கியங்களுக்கிடையே அவரவர் வாழ்க்கை முறைக்கேற்ப வேறுபாடுகள் காணப்படுகின்றன. அந்த வேறுபாட்டை தாங்கள் எவ்வாறு அடையாளம் காண்கிறீர்கள்?


அபிராமி பாஸ்கரன்: எனக்கு இதுவரை பிற பிரதேசங்களில் தோன்றிய தமிழ் இலக்கியங்களை படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 


சிகரம்: கவிதை எழுதுவதில் ஆர்வமுண்டா?


அபிராமி பாஸ்கரன்: உண்டு. ஆர்வம் மட்டுமே. ஆனால் எனக்கு அவ்வளவு நன்றாக கவிதை எழுத வராது. 


சிகரம்: உங்கள் அடுத்த புதினம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?


அபிராமி பாஸ்கரன்: சங்க கால பெண் புலவர் காக்கைப்பாடினியார் மற்றும் ஆடுகோட்பாட்டு சேரலாதன் ஆகியோரின் காதல் குறித்த நாவல். 





சிகரம்: நமது சங்ககால வரலாற்றுத் தேடலில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எவ்வாறு?


அபிராமி பாஸ்கரன்: எனக்கு நம் சங்க தமிழ் இலக்கியங்கள் மீது ஆர்வம் அதிகம். கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்ற பொழுது பல்கலைக்கழக தமிழ் இலக்கிய வரலாறு புத்தகம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அது முதல் சங்க கால வரலாற்றிலும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. 


சிகரம்: தமிழர்கள் சங்ககால வரலாற்றை ஏன் அறிந்து கொள்ள வேண்டும்?


அபிராமி பாஸ்கரன்: நம் பாரம்பரியத்தையும்,  வீரத்தையும், பழக்க வழக்கங்களையும், நம் தொன்மையான வரலாற்றையும், அதற்கும் மேல் நம் தீந்தமிழ் இலக்கியங்களின் சுவையினையும் அறிந்துக்கொள்ள சங்ககால வரலாற்றினை படிப்பது அவசியமாகிறது. 


சிகரம்: பொன்னியின் செல்வன் பேஸ்புக் குழுவைப் பற்றிக் குறிப்பிடுங்கள்


அபிராமி பாஸ்கரன்: பொன்னியின் செல்வன் குழுக்களின் நிறுவனர் திரு. சிவபாதசேகரன் (சுந்தர் பரத்வாஜ்) அவர்களின் பொன்னியின் செல்வன் யாஹூ குழு தான் பொன்னியின் செல்வன் முகநூல் குழுவிற்கும் வழிகாட்டி. பொன்னியின் செல்வன் முகநூல் குழுவில் நான் 2014ம் ஆண்டு இணைந்தேன். பொன்னியின் செல்வன் நாவல் குறித்த எனது சந்தேகங்கள் பலவற்றிற்கும் அங்கு நடந்த விவாதங்கள் தான் தீர்வளித்தன. ஒத்த சிந்தனையுள்ள பல நண்பர்களை எனக்கு அளித்தத்தும் பொன்னியின் செல்வன் குழு தான். நான் நாவல் எழுத என்னை ஊக்குவித்த என் நலன்விரும்பிகள் அனைவரையும் எனக்கு நண்பர்களாக தந்தது பொன்னியின் செல்வன் குழு தான். அக்குழுவின் நிர்வாகி எழுத்தாளர் திரு.அனுஷா வெங்கடேஷ் (வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்) அவர்கள் தான் எனக்கு ஆசான் போன்று இருந்து வழிக்காட்டுபவர்.  எனது நலன்விரும்பி. எனது வெற்றிக்களிறு நாவல் பதிப்பில் வரவும் அவரே முக்கிய காரணம்.  தற்போது 16,000 உறுப்பினர்களை கொண்ட மாபெரும் முகநூல் குழுவாக இயங்கி வருகிறது. பொன்னியின் செல்வன் குழு சார்பில் சென்னையில் ஆகஸ்ட் மாதத்தில் 'ஆடிப்பெருக்கு சந்திப்பும்', தஞ்சை பெரிய கோவிலில் செப்டம்பர் கடைசி ஞாயிறு அன்று 'பொன்னியின் செல்வன் குழு சந்திப்பும்' குழு நிர்வாகிகளால் நடத்தப்படுகிறது.


சிகரம்: புத்தக வாசிப்பு குறைந்து வருவது மொழியின் வீழ்ச்சியா அல்லது தொழிநுட்ப வளர்ச்சியா?


அபிராமி பாஸ்கரன்: தொழில்நுட்ப வளர்ச்சி தான். இதை மொழியின் வீழ்ச்சி என்று கொள்ள இயலாது. 


சிகரம்: இது ஆரோக்கியமான சூழல்தானா?


அபிராமி பாஸ்கரன்: நிச்சயம் இல்லை. புத்தக வாசிப்பு மக்களிடையே அதிகரிப்பது மிகவும் அவசியமாகிறது. 


சிகரம்: சமூக வலைத்தளங்கள் எனப்படும் பேஸ்புக், வாட்ஸப் போன்றவை வரமா, சாபமா?


அபிராமி பாஸ்கரன்: என்னைப் பொறுத்தவரை வரம் தான். இலக்கிய உலகில் பலரை எனக்கு அறிமுகப்படுத்தியது முகநூல் தான். சரியான வழியில் முகநூலையும் இன்னும் பிற சமூக வலைத்தளங்களையும் உபயோகித்தால் அது நிச்சயம் வரம் தான். 


சிகரம்: தமிழக அரசியல் சூழல் குறித்து தங்கள் கருத்து?


அபிராமி பாஸ்கரன்: நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது. இப்பொழுது தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல் ஆரோக்கியமானதாக இல்லை. 


சிகரம்: தமிழக அரசியல் சூழல் தமிழ் மொழி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துமா?


அபிராமி பாஸ்கரன்: நிச்சயமாக இல்லை. 


சிகரம்: தனித்தமிழில் பேசுவது கடினமானதா?


அபிராமி பாஸ்கரன்: கடினமானது இல்லை. ஆனால் நமது பேச்சு வழக்கில் நிறைய வேற்றுமொழி சொற்கள் கலந்து விட்டதால் தனித்தமிழில் பேசுவது முதலில் சிரமமாக தோன்றும். தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால் விரைவில் தனித்தமிழில் தங்குத்தடையின்றி பேச இயலும். 


சிகரம்: உங்கள் படைப்புகளுக்கான விமர்சனங்கள் எவ்வாறு அமைந்திருக்கின்றன?


அபிராமி பாஸ்கரன்: நல்ல விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. நாவல் நன்றாக இருப்பதாக படித்தவர்கள் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். 


சிகரம்: உங்கள் சிறுகதை அனுபவம் எவ்வாறு இருக்கிறது?


அபிராமி பாஸ்கரன்: நான் சில சிறுகதைகளை மட்டுமே எழுதியுள்ளேன். எழுதிய உடன் முகநூலில் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வேன். சிறுகதை எழுதுவது ஓர் சிறந்த அனுபவம். 4 அல்லது 5 பக்கங்களில் நமது கற்பனையை வெளிப்படுத்த இயலும். நிறைய சிறுகதைகள் எழுத வேண்டும் என்று ஆசை. எதிர்காலத்தில் நிறைய எழுதுவேன்.


சிகரம்: உங்களைக் கவர்ந்த சிறுகதை எழுத்தாளர்கள் யார்?


அபிராமி பாஸ்கரன்: கல்கி, புதுமைப்பித்தன் மற்றும் ஜெயகாந்தன்


சிகரம்: புதினம் எழுதுவதெல்லாம் உங்கள் வயதுக்கு மீறிய முயற்சி என்று சொன்னால்?


அபிராமி பாஸ்கரன்: அவ்வாறு யாரேனும் கேட்டால், 'புதினம் எழுத ஆர்வமும், திறமையும் இருந்தால் போதுமே; வயது எதற்கு', என்று கூறிவிட்டு கடந்து செல்வேன்


சிகரம்: 'வெற்றிக் களிறு' புதினத்தை எழுத உறுதுணையாய் இருந்தவர்கள் யார்?


அபிராமி பாஸ்கரன்: மிக பெரிய பட்டியலே உள்ளது. எனது பெற்றோர் திரு. பாஸ்கரன் - திருமதி.உஷா, எனது அண்ணன் திரு. ராம்குமார் மற்றும் எனது முகநூல் நண்பர்கள் ஆகியோர் நான் நாவல் எழுத முழுக்க முழுக்க உறுதுணையாக இருந்தவர்கள். நான் இந்த நாவல் எழுத தூண்டுக்கோலாக இருந்தது எனது நண்பர் திரு.உதயசங்கர் பொன்னியின் செல்வன் குழுவில் பதிந்த கொப்பத்து போர் பற்றிய பதிவு தான். எனக்கு தேவையான வரலாற்று செய்திகளை தேடிக் கொடுத்து உதவியவர்கள் திரு.ராகவேந்தர் மற்றும் திரு.பொன் கார்த்திகேயன். எனக்கு வரலாற்று ஆய்வு நூல்களை கொடுத்து உதவியவர்கள் திரு. ஆண்டவர் கனி மற்றும் திரு. ஜவஹர். எனது நூல் எழுத தொடங்கியது முதல் பதிப்பில் வரும் வரை எனக்கு துணையாக இருந்து வழிக்காட்டியவர் எழுத்தாளர் திரு. அனுஷா வெங்கடேஷ். நாவல் பதிப்பில் வருவதற்கு தொடக்கம் முதல் உதவியவர் திரு. சுந்தர் கிருஷ்ணன். எனது நாவலை படித்துவிட்டு திருத்தம் கூறி உதவியர்கள் எழுத்தாளர் திரு. வெற்றிவேல், திரு. சதாசிவம், திரு. சுந்தர் பரத்வாஜ், திரு. சிவசங்கர் பாபு, திருமதி.பர்வதவர்த்தினி மற்றும் திருமதி. ஸ்வேதா ஜீவன். நான் நாவல் எழுத ஊக்கப்படுத்தியவர்கள் திரு. கார்த்திகேயன், கவிஞர் திரு. குகன், திரு. ராஜா மற்றும் திருமதி. பௌசியா இக்பால். எனது முதல் நாவலை தனது மிகப்பெரிய பதிப்பகமான வானதியில் வெளியிட்டு எனக்கு உறுதுணையாய் இருந்தவர் வானதி திரு.ராமநாதன். 10/06/2018, 22:35 - அபிராமி பாஸ்கரன்: இவர்கள் அனைவரும் இல்லையெனில் நான் நிச்சயம் 'வெற்றிக்களிறு' என்ற நாவலை எழுதியிருக்க முடியாது.


சிகரம்: ஒரு நல்ல படைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்?


அபிராமி பாஸ்கரன்: மக்களுக்கு எளிதில் புரியும் வகையில், நிதர்சனத்தை உணர்த்தும் வகையில் இருக்க வேண்டும். 


சிகரம்: அறுபது ஆண்டுகளுக்கு பிறகு ராஜராஜன் மற்றும் உலோகமாதேவி ஆகியோரின் சிலைகள் குஜராத்தில் இருந்து தமிழகத்துக்கு மீட்டு வந்தமை குறித்த தங்கள் கருத்து?


அபிராமி பாஸ்கரன்: மிக்க மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயம். எங்கள் சோழ நாட்டின் மாமன்னர் 60 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தன் பட்டதரசியுடன் தஞ்சை தரணிக்கு திரும்பியிருப்பது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. எங்கள் சோழமண்டல வரலாற்று தேடல் குழு சார்பில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி தஞ்சை பெரிய கோவிலில் மரபுநடை நடைபெற்றது. அன்று சிறப்பு விருந்தினராக வந்திருந்த வரலாற்று ஆய்வாளர் திரு. தெய்வநாயகம் அவர்களுடன் மரபுநடையில் கலந்துக்கொண்ட அனைவரும் இந்த சிலைகளை குறித்து தான் பேசிக்கொண்டிருந்தோம் (எங்கள் குழுவின் இலச்சினையும் இந்த சிலை தான்). அதன் பின் மூன்று மாதங்களுக்குள்ளாக அந்த சிலைகள் மீட்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சிலையை மீட்டுக்கொணர்ந்த திரு.பொன் மாணிக்கவேல் ஐயா மற்றும் அவரது குழுவினருக்கும், இதில் பாடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் எத்தனை நன்றி கூறினாலும் ஈடாகாது.


சிகரம்: பேஸ்புக், வாட்ஸப் போன்ற சொற்கள் வணிகப் பெயர்ச் சொற்கள். இவற்றை முகநூல், புலனம் என்று மொழியாக்கம் செய்வது தவறல்லவா?


அபிராமி பாஸ்கரன்: தமிழில் அந்த சொற்களை பயன்படுத்துவது தவறாக தோன்றவில்லை.


சிகரம்: பெயர்ச்சொற்களை மொழியாக்கம் செய்யலாமா?


அபிராமி பாஸ்கரன்: செய்யலாம். அதில் தவறு ஏதேனும் உள்ளதா?!


சிகரம்: தவறு தானே? அபிராமி என்னும் உங்கள் பெயரை ஸ்டெலா என்று மொழி பெயர்த்தால் தவறு தானே?


அபிராமி பாஸ்கரன்: தவறு தான். ஆயினும் பேஸ்புக் என்பதை மொழியாக்கம் செய்ததில் பொருள் ஏதும் மாறுப்படவில்லையே


சிகரம்: பொருள் மாறுபடாவிட்டாலும் வணிகப் பெயர் உரிமை குறித்த வணிகத்துக்கு மட்டுமேயுரியதல்லவா?


அபிராமி பாஸ்கரன்: மொழியாக்கம் செய்தது தவறென்றென்றோ, உரிமை மீறல் என்றோ கருதியிருந்தால் குறிப்பிட்ட அந்த நிறுவனமே நடவடிக்கை ஏதும் எடுத்திருக்குமே. 


சிகரம்: தமிழ் மொழியை வளப்படுத்த நாம் எதிர்காலத்தில் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?


அபிராமி பாஸ்கரன்: எதிர்கால தலைமுறையினருக்கு தமிழை சிறு வயதில் இருந்தே கற்பிக்க வேண்டும். நமது தாய் மொழியின் அவசியத்தை எதிர்கால சந்ததியினர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் இலக்கியங்கள் மீது நிறைய ஆய்வுகள் வேண்டும். 


சிகரம்: உயர் கல்வியை தமிழ் மொழியிலேயே கற்பதில் பல சிக்கல்கள் உள்ளன. அவற்றுள் முதன்மையானது ஆங்கில மொழிச் சொற்களுக்கு உடனடியாக தமிழ் கலைச்சொல்லாக்கம் மேற்கொள்ளப்படாமை. இதை எவ்வாறு நிவர்த்தி செய்வது?


அபிராமி பாஸ்கரன்: உண்மையே. தமிழ் கலைச்சொல்லக்கம் உடனடியாக மேற்க்கொள்ளப்பட்டாலும் கூட, உடனே இந்நிலை மாறிவிடும் என்று தோன்றவில்லை. இப்பொழுது ஆங்கில மொழி சொற்களுக்கு உடனடியாக கலைச்சொற்களை கண்டறிந்தால் கூட இந்நிலை மாற குறைந்தது 10 முதல் 15 வருடங்களாவது ஆகும். 


சிகரம்: அரசியல் இலக்கியம் இரண்டிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?


அபிராமி பாஸ்கரன்: அரசியல் குறித்து இலக்கியத்தில் நிறைய குறிப்புகள் உள்ளனவே. சங்க கால அரசியலும் சங்க இலக்கியமும் ஒன்றொடொன்று பின்னி பினைந்தவை தான். 


சிகரம்: உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன?


அபிராமி பாஸ்கரன்: தமிழ் துறையில் முனைவர் பட்டம் பெற வேண்டும்


சிகரம்: நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா?


அபிராமி பாஸ்கரன்: எதிர்காலத்தை பற்றி சிந்திப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ அவ்வளவிற்கு கடந்த கால வரலாற்றை பாதுகாப்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். சிந்தித்து கடந்த கால வரலாற்றை பாதுகாத்து நம் அடுத்த தலைமுறைகளுக்கு அளிக்க வேண்டும்


சிகரம்: இன்றைய தமிழ் ஊடகங்களின் போக்கு ஆரோக்கியமானதா?


அபிராமி பாஸ்கரன்: நிச்சயமாக இல்லை என்பது என் கருத்து


சிகரம்: புதுக்கவிதை சிறந்ததா? மரபுக்கவிதை சிறந்ததா?


அபிராமி பாஸ்கரன்: எனக்கு இரு வகை கவிதைகளுமே பிடிக்கும். ஆகையால் என் பார்வையில் இரு வகை கவிதைகளுமே சிறந்தவை தான்.


சிகரம்: பேனா பிடித்தவரெல்லாம் கவிஞர் என்கிற நிலைமையை புதுக்கவிதை உருவாக்கியுள்ளதே?


அபிராமி பாஸ்கரன்: அனைவருக்கும் தங்கள் கற்பனா சக்தியை வெளிப்படுத்த உரிமை உள்ளது. பாமர மக்களுக்கும் புரியும்படியான கவிதைகள் எழுத புதுக்கவிதை எழுதுவோரால் மட்டுமே முடியும். 


சிகரம்: வேறு எந்தப் புதினங்களை விடவும்  பொன்னியின் செல்வன் புதினம் செல்வாக்கு மிக்கதாகத் திகழ்வது ஏன்?


அபிராமி பாஸ்கரன்: அது ஒரு பிரம்மாண்டம். எந்த வித விரசமான கற்பனைகளும் இன்றி, சிறுவர்கள் கூட படிக்கும் படியான கதை ஓட்டம். கல்கியின் எழுத்து நடை. திகில் திருப்பங்கள். தேவையற்ற வர்ணனைகள் இன்றி கதையுடன் நம்மை பயணிக்க வைக்கும் கதை. நகைச்சுவை, நட்பு, காதல், வீரம், துரோகம், விஸ்வாசம் என்று அனைத்தும் கலந்த உயிரோட்டமான காவியம் அது. அதனால் தான் இன்றளவும் பொன்னியின் செல்வன் செல்வாக்கு மிக்கதாக திகழ்கிறது. 


சிகரம்: பொன்னியின் செல்வன் எழுதப்பட்டிருக்காவிட்டால்?


அபிராமி பாஸ்கரன்: இன்று நீங்கள் என்னை நேர்காணல் செய்து கொண்டிருக்க மாட்டீர்கள். ஏனெனில், பொன்னியின் செல்வன் படித்திராவிட்டால் நான் எழுத்துத் துறைக்கு வந்திருக்க மாட்டேன். இன்று உள்ள பல வரலாற்று ஆர்வலர்களுக்கு தமிழ் வரலாற்றின் மீது ஆர்வம் வர காரணமாக இருந்ததே பொன்னியின் செல்வன் தான். பொன்னியின் செல்வன் எழுத்தப்பட்டிருக்காவிடில் அது சாத்தியமில்லாமல் போயிருக்கும். 


சிகரம்: கல்கி, ஆனந்த விகடன் போன்றவை பல எழுத்தாளர்களை வளர்த்து விட்டிருக்கின்றன. அவை தமிழுக்கு நல்கிய பங்களிப்பு அளப்பரியது. ஆனால் இன்று அந்த நிலை இல்லாததன் காரணம் என்ன?


அபிராமி பாஸ்கரன்: எனக்கு தெரிந்த வரை அப்படி இல்லை என்று தான் நினைக்கிறேன். அன்று எழுத்தாளர்களுக்கு பதிப்பகத்திலும், வார மற்றும் மாத இதழ்களில் மட்டுமே தங்களது படைப்புகளை வெளியிடும் வசதி இருந்தது. ஆனால் இன்று அப்படி அல்ல. தங்கள் படைப்புகளை எழுத்தாளர்கள் பல வழிகளிலும், குறிப்பாக சமூக வலைத்தளங்களிலேயே வெளியிட்டு வருகின்றனர். அப்படி இருந்தும் கூட பத்திரிகைகள் எழுத்தாளர்களை வளர்த்து விட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. வெங்கடேசன், ராஜு முருகன் போன்றோர் இதற்கு நல்ல உதாரணம்.


சிகரம்: மரபு நடை என்றால் என்ன?


அபிராமி பாஸ்கரன்: வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடத்தப்படுவது மரபுநடை. இந்த மரபுநடையில் அந்த அந்த இடங்கள் குறித்த வரலாற்று சிறப்புகளை மக்களுக்கு எடுத்துக் கூறி, அந்த தொன்மை வாய்ந்த இடங்களை பாதுகாப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.


சிகரம்: இதுவரை சென்ற மரபு நடைகள் பற்றி?


அபிராமி பாஸ்கரன்: நான் இதுவரை எங்கள் சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு ஏற்பாடு செய்த மரபுநடைகளில் மட்டுமே கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அனைத்துமே மிகவும் பயனுள்ள மரபுநடைகள். வரலாற்றை அறிந்துக் கொள்ள ஒவ்வொரு மரபுநடையும் எனக்கு பெரும் அளவில் உதவியுள்ளன. மூத்த வரலாற்று ஆய்வாளர்கள் சிறப்பான முறையில் வரலாற்றை விளக்கி கூறி ஒவ்வொரு மரபுநடையையும் பயனுள்ளதாக மாற்றினர்.


சிகரம்: மக்களிடம் மரபு நடை குறித்த தெளிவு காணப்படுகிறதா?


அபிராமி பாஸ்கரன்: ஆம். மரபுநடையின் பொழுது, மரபுநடை நடத்தப்படும் ஊர்களின் மக்கள் சிலரும் ஆர்வத்தோடு அவர்களது ஊர் வரலாற்றை கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர். 


சிகரம்: தமிழர்கள் அனைவரும் இலக்கண, இலக்கியங்களை அறிந்திருப்பது அவசியமா? 


அபிராமி பாஸ்கரன்: மிக்க அவசியம். நம் தாயைப் பற்றி அறிந்து வைத்திருப்பது எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு நம் தாய்மொழியின் இலக்கண, இலக்கியங்களை அறிந்து கொள்வது அவசியமாகும்.


சிகரம்: ஆரியம், திரிவிடம், தமிழர் இந்த பாகுபாடுகள் தேவைதானா?


அபிராமி பாஸ்கரன்: மொழியின் அடிப்படையில் பார்த்தால் தேவை என்றே தோன்றுகிறது. 


சிகரம்: இவற்றுக்கிடையில் என்ன ஒற்றுமை, வேற்றுமை?


அபிராமி பாஸ்கரன்: திராவிடம் என்பதே தமிழினை அடிப்படையாக கொண்டது தான். தமிழில் இருந்து பிரிந்து உருவானவை தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம். ஆரியம் என்பது சம்ஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்டது. திராவிடமும் தமிழும் ஒன்றுக்கொன்று பிரித்தறிய முடியாதவை. ஆனால் ஆரியமும் திராவிடமும் மொழி அரசியலில் தொடங்கி, பண்பாடு, பழக்க வழக்கங்கள் என அனைத்திலும் வேறுபட்டு தான் இருக்கின்றன.இக்கால அரசியல் சூழலும் இதில் பெரும்பங்கு வகிப்பது மறுக்க இயலா உண்மை.


சிகரம்: இக் காலகட்டத்தில் நாம் திராவிடரா, தமிழரா?


அபிராமி பாஸ்கரன்: மத்தியில், மாநிலத்தில் என்று திராவிட அரசியல் செய்பவர்கள் பார்வையில் நாம் திராவிடர்கள். தமிழர்களின் பார்வையில் நாம் அனைவரும் தமிழர்கள் மட்டுமே. 


சிகரம்: தமிழ்நாடு தனி நாடாக வேண்டுமா?


அபிராமி பாஸ்கரன்: இந்தியன் எனும்பொழுது பெருமை கொள்ளும் நம் மனது, சில வேளைகளில் தனி நாடாக வேண்டும் என்றும் சிந்திக்கிறது. தமிழர்களுக்கான உரிமைகள் மத்திய அரசினால் மறுக்கப்படும் பொழுது நம்மில் நிறைய பேருக்கு தோன்றும் கருத்து தான் இது. எனக்கும் தோன்றியிருக்கிறது. ஆனால் இது நடைமுறையில் சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியே. 


சிகரம்: தமிழ்நாடு ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு தனி நாடாகத் தானே இருந்தது? பின் ஒன்றிணைந்த இந்தியாவை ஏற்றுக் கொண்டது ஏன்?


அபிராமி பாஸ்கரன்: அப்பொழுது இருந்த அரசியல் சூழல். அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்த இந்தியாவை ஏற்றுக் கொண்டது. 


சிகரம்: தமிழர்கள் எந்த மதம்?


அபிராமி பாஸ்கரன்: தமிழர்களின் ஆதி மதம் சைவம் தான் என்று படித்துள்ளேன். சைவமும் வைணவமும் தமிழர்களின் மதங்கள். 


சிகரம்: பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுப்பது வாசகர்களின் மனநிலையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?


அபிராமி பாஸ்கரன்: பொன்னியின் செல்வன் படித்தவர்களில் பெரும்பாலானோர் இதை நிச்சயம் விரும்ப மாட்டார்கள். அவர்கள் கற்பனையில் விரிந்த பொன்னியின் செல்வனுக்கு வெள்ளித்திரை நட்சத்திரங்கள் உயிர் கொடுக்க இயலாது. ஆதலால் பொன்னியின் செல்வன் திரைப்படமாக வருவதை பொன்னியின் செல்வனை நேசிக்கும் யாரும் விரும்ப மாட்டார்கள். 


சிகரம்: வெள்ளித்திரை வரமா, சாபமா?


அபிராமி பாஸ்கரன்: வரம் தான். ஆனால் மிகச் சில சந்தர்ப்பங்களில் சாபமாகவும் பரிணமிக்கிறது. எடுத்துக்காட்டுக்கு பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் எடுக்கப்படும் பாடல்களை கூறலாம். அதெல்லாம் வெள்ளித்திரையின் சாபமே. 


சிகரம்: உங்களைக் கவர்ந்த வெள்ளித்திரை படைப்புகள் எவை?


அபிராமி பாஸ்கரன்: காதலிக்க நேரமில்லை, எனக்கு மிகவும் பிடித்த வெள்ளித்திரை படைப்பு. நான் பழைய படங்களை தான் விரும்பி பார்ப்பேன். இப்போது உள்ள படங்களை விட பழைய படங்கள் தான் உயிரோட்டம் மிக்கவையாக எனக்கு தோன்றும்


சிகரம்: உங்களைக் கவர்ந்த சில பாடல்களைப் பட்டியலிடுங்களேன்?


அபிராமி பாஸ்கரன்: 1. காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்

2. அவளுக்கென்ன அழகிய முகம்

3. நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்

4. உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே

5. நீ காற்று நான் மரம்

6. உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு

7. கண்ணாலே பேசி பேசி கொல்லாதே

8. செந்தமிழ் தேன் மொழியாள்

9. பூவே செம்பூவே உன் வாசம் வரும்

10. வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை


சிகரம்: தங்கள் அடுத்த படைப்பு என்ன?


அபிராமி பாஸ்கரன்: பாண்டியர்கள் குறித்த நாவல். 


சிகரம்: தமிழ்ச் சமூகத்துக்கு தங்கள் அறிவுரை?


அபிராமி பாஸ்கரன்: அறிவுரை கூறும் அளவிற்கு நான் பெரியவள் இல்லை. ஒரே ஒரு வேண்டுகோள் உள்ளது. தமிழையும், தமிழ் வரலாற்றையும் நம் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். தற்பொழுது உள்ள பெரும்பாலான தமிழ் குழந்தைகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரியவில்லை. இது மிகவும் வேதனையை அளிக்கிறது. முடிந்த வரை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழனை கற்பிக்க வேண்டும். தமிழ் இலக்கியங்களையும், வரலாற்றையும் கூறி வளர்க்க வேண்டும். 


சிகரம்: 2050ஆம் ஆண்டில் தமிழ்ச் சமூகத்தின் நிலை என்னவாக இருக்கும்?


அபிராமி பாஸ்கரன்: இப்பொழுது உள்ள நிலை தொடர்ந்தால், 2050ல் தமிழ் பேச எழுத படிக்க தெரிந்த தமிழ் மக்களின் விகிதாசாரம் மிகவும் குறைந்துவிடும். அப்படி ஏதும் நடக்காமல் இருக்க இந்த தலைமுறையினரும், இனி வரும் தலைமுறையினரும் தன் பிள்ளைகளுக்கு கட்டாயம் தமிழ் படிப்பிக்க வேண்டியது அவசியம். 


சிகரம்: சின்னத்திரை நாடகங்களைப் பற்றிய தங்கள் கருத்து?


அபிராமி பாஸ்கரன்: குடும்பங்களை எப்படி எல்லாம் கெடுக்கலாம் என்று சொல்லி தரும் பல்கலைக்கழகங்கள். சொல்வதற்கு ஒன்றும் இல்லை. 


சிகரம்: காமிக்ஸ் எனப்படும் சித்திரக்கதைகளைப் படித்திருக்கிறீர்களா?


அபிராமி பாஸ்கரன்: சிறுவயதில் படித்திருக்கிறேன்


சிகரம்: சித்திரக்கதைகளைப் பற்றிய தங்கள் அபிப்பிராயம் என்ன?


அபிராமி பாஸ்கரன்: குழந்தைகள் மனதில் எளிதில் கருத்துக்களை பதிய வைக்கக்கூடிய கதைகள். பார்த்து படிப்பதை விட, குழந்தைகள் ஓவியங்கள் வழியாக கதைகளை உணர்ந்து கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்துவர். 


குறிப்பு: இந்த நேர்காணல் வாட்ஸப் ஊடாக கடந்த 2018 ஜூன் 6 ஆம் திகதி முதல் 2019 ஜூலை 23 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டது. எனது நேரமின்மை மற்றும் அவரது வேலைப்பழு ஆகியவற்றுக்கு இடையே நேர்காணலை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியவில்லை. இந்த நிலையில் 16 ஒக்டோபர் 2019 அன்று அவர் இந்த உலகை விட்டு பிரிந்த செய்தி கிடைத்தது. மனம் உடைந்தது. உள்ளம் கலங்கியது. ஆனால் மனமிரங்கவில்லை காலன். அவரைத் தன்னுடனேயே அழைத்துச்சென்று விட்டான். இந்த நேர்காணலை அவரது பிறந்த நாளான இன்று (செப்டம்பர் 20) வெளியிடுகிறேன். தவறுகள் இருந்தால் திருத்தி மீண்டும் வெளியிடுவோம். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!