ஆசான் பாராவுக்கு சிகரம் பாரதி எழுதும் ஒரு கடிதம்

ஆசான் என்று பலராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய பாரா எனப்படும் எழுத்தாளர் பா ராகவனுக்கு ஒரு கடிதம் எழுதுவது என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதுவும் உங்கள் 75 ஆவது புத்தகம் வெளியாகும் இந்த தருணத்தில் கடிதம் எழுதுவது இரட்டிப்பு மகிழ்ச்சி. உலக அரசியலைத் தமிழில் தெரிந்து கொள்ள விரும்பும் எவரும் பா ராகவனின் புத்தகங்களை தேடாமல் இருந்ததில்லை என்ற நிலைமையே தற்போது காணப்படுகிறது. அந்த வகையில் வட கொரியா பிரைவேட் லிமிடெட் என்ற சர்வதேச அரசியலைப் பேசும் புத்தகமே உங்கள் 75 ஆவது புத்தகமாக வருவதில் மகிழ்ச்சி. 

நீங்கள் என் கடிதத்திற்கு பதில் எழுதுவீர்களா என்று தெரியாது. ஆனால் சர்வ நிச்சயமாக அந்த எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் வாசிப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த ஆண்டில் உங்கள் 09 புத்தகங்களை வாசித்து முடித்திருக்கிறேன். இப்போது கணை ஏவு காலம், எழுதுதல் பற்றிய குறிப்புகள், மணிப்பூர் கலவரம் ஆகியவை இந்த ஆண்டில் வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியலில் உள்ளன. 

நிலமெல்லாம் ரத்தம் புத்தகம் கடந்த ஆண்டு வாங்கினேன். ஆனால் கடந்த மாதம் தான் வாசித்தேன். இஸ்ரேல் - பலஸ்தீன் யுத்தம் ஆரம்பித்த போது வாங்கியதை யுத்தத்தின் ஓராண்டு பூர்த்தியில் தான் வாசிக்க கிடைத்தது. அதுவும் நல்லதிற்கு தான். ஏனெனில் தேவையான நேரத்தில் இரு நாடுகளினதும் வரலாற்றை தெரிந்து கொண்டிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக கணை ஏவு காலத்தையும் வாசிக்க ஆரம்பித்திருப்பது மிகவும் பொருத்தமானதே. 

செய்யும் எதிலும் உன்னதம் புத்தகத்தை பற்றி சொல்ல வேண்டும். அற்புதம். முதல் தடவை ஆரம்பம் முதல் இறுதி வரை ஒழுங்கில் வாசித்து முடித்தேன். பின்னர், இது வரை பல தடவைகள் ஏதாவது ஒரு அத்தியாயத்தை எழுமாற்றாக தெரிவு செய்து வாசித்திருக்கிறேன். இப்போதும் இந்த கடிதத்தை எழுதிவிட்டு அதை எடுத்து படிக்க போகிறேன். மனதுக்கு ஒரு உத்வேகத்தை தரும் ஒரு புத்தகம் என்றால் அது செய்யும் எதிலும் உன்னதம் புத்தகம் தான்.

எழுதுதல் பற்றிய குறிப்புகள் புத்தகமும் கூட ஒரு வகையில் ஒரு சுயமுன்னேற்ற நூல்தான். எழுத விரும்புவோர் அவசியம் படிக்க வேண்டும். இதில் எழுதுதல் என்பதற்கு பதிலாக வேறு துறை சார்ந்தவர்கள் தமது துறைக்கான வார்த்தையை பதிலீடு செய்தால் அந்த துறைசார் நூலாக மாறிவிடும். ஆகவே எந்த துறையில் உள்ளவர்களும் இந்த நூலையும் அவசியம் படிக்க வேண்டும். 

மெட்ராஸ் பேப்பர் இணையத்தில் நீங்கள் கற்றுக்கொடுத்தவர்கள் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்கள். உங்களிடம் கற்றவர்கள் வெளியிடும் புத்தகங்களையும் உங்கள் புத்தகங்களை போன்றே கண்ணை மூடிக்கொண்டு வாங்க முடிகிறது. உங்கள் மீதான நம்பிக்கையை அவர்கள் மீதும் தைரியமாக வைக்க முடிகிறது. அதை அவர்களும் சிறப்பாகக் காப்பாற்றுகிறார்கள். இது உங்கள் மீதான நன்மதிப்பை இன்னும் அதிகரிக்கிறது. 




எனக்கும் உங்கள் எழுத்துப் பயிற்சி வகுப்பில் சேர வேண்டும் என்று நீண்டநாள் விருப்பம் உள்ளது. நான் எனது 12 ஆவது வயதில் இருந்து எழுதி வருகிறேன். என்றாலும் அண்மையில் சில வருடங்கள் இடைவெளி ஏற்பட்டு விட்டது. எழுதுதல் பற்றிய குறிப்புகள் நூலில் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் இடைவெளி விட்டாலும் எழுதலாம் என்பது எவ்வளவு சிரமம் என்பது புரிகிறது. ஆனால் காலம் கடந்துவிட்டது. வருந்திக் கொண்டிருப்பதிலும் பயணில்லை. எழுத்தில் என் பெயர் நிலைக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆழ்மன விருப்பம் மட்டும் தொடர்ச்சியாக எப்போதும் இருந்து வருகிறது. அந்த விருப்பம் உங்கள் மூலமாக நிறைவேறுமானால் அதை விட என் வாழ்க்கையில் அடைவதற்கென்று ஏதும் எஞ்சியிராது. 

எழுதுவது ஒரு கலை. அந்த கலை உங்களுக்கு நன்றாகவே வாய்த்திருக்கிறது. அந்த கலையை மதிக்கும் ஒரு குடும்பம் அமைவதும் அரிது. உங்களை ஒரு ஆசீர்வதிக்கப்பட்டவராகவே நான் பார்க்கிறேன். எழுத்தில் மட்டுமாவது நான் விரும்புவதை அடைந்துவிட வேண்டும் என்பதே என் எண்ணம். எதையும் சலிப்புத் தட்டாத வகையில் சொல்லும் உங்கள் திறமையைக் கண்டு வியக்கிறேன். நிலமெல்லாம் ரத்தம் புத்தகம் 700 பக்கங்கள் கொண்டது. ஆனால் அத்தனை பக்கங்களையும் வாசித்து முடிக்கும் வரை அதன் மீதான ஈர்ப்பு ஒருபோதும் இல்லாமல் போகவே இல்லை. கதையாக இருந்தாலும், கட்டுரையாக இருந்தாலும் செய்யும் எதையும் உன்னதமாக செய்கிறீர்கள். அதுவே உங்கள் மீதான வாசகர்களின் ஈர்ப்பை தக்க வைக்க போதுமானதாக இருக்கிறது. 

உங்கள் வாட்ஸப் சேனலில் என் பெயரை சில சமயங்களில் குறிப்பிட்டுள்ளீர்கள். பேஸ்புக்கில் சில சமயம் என் பெயரை கண்டிருப்பீர்கள். இதுவே எனக்கு மகிழ்ச்சியளிக்க போதுமானதாக இருக்கிறது. ஆனாலும் உங்களை நேரில் பார்த்து உரையாட வேண்டும் என்ற பெரு விருப்பமும் இருக்கத்தான் செய்கிறது. லெட்சுமணன் என்ற இயற்பெயர் கொண்ட நான், இலங்கையில் ஒரு ஊடகவியலாளராக பணிபுரிகிறேன். நான் அடிப்படையில் ஒரு எழுத்தாளராக இருப்பதே ஊடகவியலாளராக பணிபுரியவும் எனக்கு உதவியாக அமைந்திருக்கிறது என நம்புகிறேன். என்றேனும் ஒருநாள் என் பெயரிலும் புத்தகம் வெளிவரும் என்ற நம்பிக்கையில் தான் நான் என்னையும் ஒரு எழுத்தாளனாக சொல்லிக் கொண்டு இருக்கிறேன். 

உங்கள் ஒவ்வொரு புத்தகத்திற்கும் இடையில் காணப்படும் வித்தியாசம். அதுதான் உங்கள் எழுத்தின் வலிமை என்று நினைக்கிறேன். ஒரு நாவலுக்கும் அரசியல் நூலுக்கும் இடையில் உள்ள வேறுபாடு. இரண்டையும் சலிப்புத் தட்டாத விதத்தில் சொல்லும் தன்மை. இடையறாத தொடர்ச்சி. எழுத்தை ஒரு தவமாகக் கருதும் உங்களுக்கு இவை வரங்கள் என்றே கூற வேண்டும். உங்களை வாசிக்கும் எவரும் இன்னொருவருக்கு பரிந்துரைக்காமல் இருந்ததே இல்லை எனலாம். அவ்வாறு இருக்கவும் முடியாது. செய்யும் எதிலும் உன்னதம் என்பீர்களே, இது அதன் விளைவு அல்லவா? 

ஒரு கடிதம் எழுதப்பட வேண்டிய விதத்தில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளதா என்று எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு சொல்ல வேண்டியவற்றை சரியாகவும் முறையாகவும் சொன்னேனா என்றும் தெரியவில்லை. எழுத வேண்டும் என்று தோன்றியது. எழுதிவிட்டேன். இது உங்கள் பார்வையில் பட்டாலே பெரும் பாக்கியம். நான் உங்களிடம் பல தளங்களிலும் பல கேள்விகளை முன்வைத்திருக்கிறேன். 10 கேள்வி கேட்டால் 03 க்கு தான் பதில் சொல்வீர்கள். ஆனால் யோசித்து பார்க்கும் போது அந்த மூன்று கேள்விகளினதும் முக்கியத்துவம் புரியும். அதேபோல் இந்த கடிதம் உங்கள் முக்கியத்துவத்தை பெறுமா என்று தெரியவில்லை. பெற்றால் அதைவிட இன்றைய நாளை மகிழ்ச்சிப்படுத்தும் இன்னொன்று இருக்கவே முடியாது. அதேபோல் 75 என்பது உங்களுக்கு வெறும் இலக்கம் மாத்திரமே. ஆனால் வாசகர்கள் ஆகிய எங்களுக்கு அப்படி இல்லை. 100 என்ற இலக்கத்தையும் நீங்கள் கடக்க வேண்டும். உங்கள் ஒவ்வொரு எழுத்தையும் நாம் கொண்டாட வேண்டும். அந்த வரத்தை இந்த வாழ்க்கை எமக்கு அளிப்பதாக. நூறாண்டு காலம் நலமோடு வாழ பிரார்த்திக்கிறேன் ஆசானே! 

இப்படிக்கு 
உங்கள் வாசகன் 
சிகரம் பாரதி 

================== 

இந்த கடிதத்திற்கு ஆசான் பா ராகவன் எனக்கு பதில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். ஆனால் அதை இந்த வலைத்தளத்தில் பிரசுரிக்கப்போவதில்லை. 

பின்ன? 

அடுத்த ஆண்டில் அவர் எனக்களித்த சவால்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருந்தால் அந்த கடிதத்தை வெளியிடுவேன். அல்லது என்றேனும் சாதிப்பேன். அன்று ஆசானின் கடிதத்தையும் வெளியிடுவேன். அதுவரை நீங்கள் பொறுத்திருக்க வேண்டும்! 

Comments

  1. நல்லதொரு கடிதம். பாராட்டுக்கள். பாரா அவர்களிடமிருந்து உங்களுக்கு பதிலும் வந்திருப்பது அறிந்து மகிழ்ச்சி.

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!