நண்பர் கதிரவனுக்கு ஓர் கடிதம் - 01

நண்பர் கதிரவனுக்கு, 

நலம் நலமறிய ஆவல். மிக நீண்ட காலத்திற்குப் பின் நண்பரொருவருக்கு கடிதம் எழுதுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நாம் 2018 முதல் வாட்ஸப்பில் உரையாடி வருவதாக பதிவுகள் உள்ளன. பேஸ்புக்கில் எப்போது நட்பானோம் என்று தெரியவில்லை. நாம் பெரும்பாலும் உங்கள் கதைகள் பற்றியே பேசியிருக்கிறோம். உங்கள் கதை சொல்லும் ஆர்வம் புத்தக வெளியீடாக, கனவு நனவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

எனது வலைத்தளத்தில் உங்கள் சில கதைகளை பிரசுரித்து உள்ளேன். நான் வாசித்தாலும் வாசிக்காவிட்டாலும் வாட்ஸப்பில் பல கதைகளை எனக்கு அனுப்பி உள்ளீர்கள். நான் சொன்ன சில கருத்துக்களை ஏற்று அதற்கேற்ற மாற்றங்களை உங்கள் அடுத்தடுத்த படைப்புகளிலும் நிகழ்த்தியுள்ளீர்கள். என் கருத்துக்களுக்கும் நீங்கள் மதிப்பளித்தமை நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையின் ஒரு வெளிப்பாடே என்று நான் நம்புகிறேன். 




நீங்கள் பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் உங்களை என்னுடன் நெருக்கமாக்கிய ஒன்றாக '2601 - வெளிநாட்டு வேலைக்காரனின் வாழ்வு அனுபவங்கள்' தொடரை பார்க்கிறேன். பேஸ்புக்கில் நான் தவறாது தொடர்ந்து வாசித்து வந்தேன். சில கதைகளை வாசித்து உள்ளூர அழுதிருக்கிறேன். அவ்வப்போது எனது சில கருத்துக்களையும் தொடரின்  போது பேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறேன். 

அவ்வாறு நான் பகிர்ந்த ஒரு கருத்தை நீங்கள் இந்த புத்தகத்தில் உள்ளடக்கியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு புத்தகத்தில் எனது பெயர் இடம்பெறுவது இதுவே முதல்முறை. நானும் புத்தகம் வெளியிட வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டு வருகிறேன். ஆனால் நீங்கள் என் கருத்தையும் உள்ளடக்கி உங்கள் நூலை வெளியிட்டிருப்பதை என் கனவு விரைவில் நிஜமாகப் போகிறது என்பதற்கான முன்னறிவிப்பாக நான் எடுத்துக் கொள்கிறேன்.

வெளிநாட்டு வேலை! பலரின் கனவு அல்லது தேவையாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு இருக்கிறது. உள்நாட்டில் சில ஆயிரங்களில் கிடைக்கும் சம்பளத்தையும், வெளிநாட்டில் பல ஆயிரங்கள் முதல் இலட்சங்கள் வரை கிடைக்கும் சம்பளத்தையும் ஒப்பிட்டு விரைவாக எதிர்பார்க்கின்ற வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான ஒரு வழிமுறையாக வெளிநாட்டு வேலை பார்க்கப்படுகிறது. 

வெளிநாட்டு வேலை எந்த அளவுக்கு கவர்ச்சிகரமான சம்பளத்தை கொண்டிருக்கிறதோ அந்த அளவுக்கு கடுமையாகப் பிழிந்து வேலை வாங்கும் ஒன்றாகவும் இருக்கிறது. வெளிநாட்டு வேலைக்கு செல்கிறவர்கள் அங்கு தமக்கு நேரும் துன்பங்களையெல்லாம் தமக்குள்ளேயே தான் புதைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமது வீட்டுக்கு அழைப்பு ஏற்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் சிரித்த முகத்தையே காண்பிக்கிறார்கள். காரணம் அங்கு தாம் எதிர்கொள்ளும் துன்பங்களை இங்கு உள்ளவர்கள் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டார்கள். 

விசேடமாக பெண்கள். வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்களின் நிலைமை மிக மோசம். பல துன்பங்களுக்கு மத்தியிலேயே அவர்கள் வெளிநாட்டில் தொழில் புரிகின்றார்கள். உடலில் ஆணி குத்தப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு திருப்பியனுப்பப்படும் எத்தனை பெண்களை நாம் பார்த்திருக்கிறோம்? எத்தனை பேர் உயிரை இழந்து வெற்றுடலாக நாடு திரும்பியிருக்கிறார்கள்? 

இத்தனைக்கும் மத்தியில் வெளிநாட்டில் வேலை செய்யும் பலரின் வாழ்க்கை அனுபவங்களை நீங்கள் தொகுத்து நூலாக்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நூலின் வாசிப்பு அனுபவத்தில் இவை தொடர்பான மேலதிக விடயங்களை பகிர்ந்து கொள்கிறேன். ஆனால் நான் ஒருபோதும் வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்பியதில்லை. எனக்கு ஒரு துன்பம் என்றால் பகிர்ந்து கொள்ள ஒரு துணை அவசியம். பிள்ளைகள் வளர்வதை கண்கூடாக பார்க்க வேண்டும். இப்படி பல காரணங்கள். எனக்கு கிடைக்கும் சம்பளம் போதவில்லை என்றாலும் எனக்கு இதுவே போதும் என்றே தோன்றுகிறது. 

சரி நண்பரே. இதுவரை நாம் தனிப்பட்ட ரீதியில் பேசிக்கொண்டதில்லை. உங்கள் குடும்பத்தை பற்றி சொல்லுங்கள். உங்கள் வாழ்க்கையை பற்றி சொல்லுங்கள். உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள், புத்தகங்களை பற்றி சொல்லுங்கள். இன்னுமின்னும் உங்களைப் பற்றி நான் என்னவெல்லாம் அறிந்து கொள்ளலாம்? அத்தனையும் சொல்லுங்கள். 

கடிதம் எழுதுவது குறைந்து போயுள்ள இந்த காலத்தில் இதெல்லாம் தேவையா என்று தோன்றலாம். ஆனால் இது நமக்குள் ஒரு நல்லுறவை வளர்க்கவும், பல விடயங்களை காத்திரமான முறையில் பகிர்ந்து கொள்ளவும் உதவும் என நம்புகிறேன். வாழ்க்கையில் ஒரு புதிய பிடிப்பை ஏற்படுத்துவதற்கும் இந்த கடிதங்கள் நமக்கு உதவலாம். 

அதுமட்டுமின்றி, எழுத்தாற்றலை மேம்படுத்திக்கொள்வதற்கான ஒரு வழியாகவும் கடிதம் எழுதுவதை நான் பார்க்கிறேன். கடித இலக்கியம் என்றே ஒரு பகுதி உண்டல்லவா? எத்தனையோ பெருந்தலைவர்களின் கடிதங்கள் இன்று அவர்களின் சுயசரிதையாக மாறி நிற்கவில்லையா? நம்முடைய கடிதமும் அவ்வாறு வரலாறாக மாறவில்லை என்றாலும் நம் மன உணர்வுகளை எழுத்தில் கொண்டுவந்து பகிர்ந்து கொள்வதற்கான களமாக அமையும் என உறுதியாக நம்புகிறேன். 

நீண்ட நாட்களாக திட்டமிட்டு இப்போது தான் இந்த கடிதத்தை நிறைவு செய்து உங்களுக்கு அனுப்பி வைக்க காலம் வாய்த்திருக்கிறது. எடுத்த காரியமொன்றை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சிளிக்கக்கூடிய விடயமாக உள்ளது. உங்கள் வேலைப்பளுவுக்கு மத்தியிலும் இந்த கடிதத்திற்கு பதில் எழுத இயலுமானால் அதை விட எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வேறொன்று இருக்க முடியாது. 

மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திப்போம் நண்பா! 

இப்படிக்கு 
வாசிப்பை நேசிக்கும் 
சிகரம் பாரதி 
இலங்கை

Comments

  1. நல்லதொரு கடிதம். வெளிநாட்டு வாழ்க்கை - வலிகள் நிறைந்த வாழ்க்கையாகவும் இருக்கிறது என்பதை நானும் பல நண்பர்கள் சொல்லக் கேட்டு இருக்கிறேன். தொடரட்டும் கடிதங்கள்.

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!