சௌம்யாவின் BOYZ சிறுகதையை முன்வைத்து...
சௌம்யா ராகவன் டுவிட்டரில் அறிமுகமானவர். பின்னர் பேஸ்புக்கிலும். அவரது களிற்றடி சிறுகதைத் தொகுப்பை வாங்கி வைத்திருக்கிறேன். இன்னும் வாசிக்க சந்தர்ப்பம் வாய்ப்பதில்லை. ஆனால் சௌம்யாவின் வலைத்தளத்தில் வெளியாகும் கதைகளை அவ்வப்போது வாசித்து வருகிறேன். ஒவ்வொன்றும் ஒரு ரகம். ஒன்றுபோல் மற்றொன்று இல்லை.
BOYZ சிறுகதை என்ன சொல்கிறது? உறவு முறைச் சிக்கல் ஒன்றின் ஒரு பக்கத்தை இந்தக் கதை பேசியிருக்கிறது.
முக்கிய குறிப்பு: சிறுகதையை வாசிக்காதவர்கள் அதனை வாசித்துவிட்டு வருவது சிறப்பு.
***
தமிழ்ச்செல்வி பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது சுபாஷூடன் திருமணமாகிறது. சுபாஷூக்கு அப்போதே 37 வயது. தமிழின் அம்மா பத்மா. ஒரு சமயம் வீட்டு வாசலில் இட்லிக் கடை வைத்து பிழைத்துக் கொண்டிருந்தாள். அப்போது கடைக்கு வாடிக்கையாக வந்து சென்றவர்களில் தான் இந்த சுபாஷ் அறிமுகம் ஆகிறார். மனநிலை சரியில்லாத கணவன் காரணமாக அவ்வப்போது வீட்டுக்கு உதவிகள் செய்து வரும் சுபாஷை தன் வீட்டில் வாடகைக்கு குடிவைக்கிறாள் பத்மா.
ஒரு கட்டத்தில் கணவன் இறந்துவிட ஒருவருக்கு மற்றவர் துணையாகிறார்கள். ஆனால் இதை அறியாத தமிழ்ச்செல்வி, சுபாஷூடன் நெருக்கமாகிறாள். முதலில் சுபாஷ் தன்னிடம் அத்துமீறுவதை அம்மா பத்மாவிடம் கூறிய போதிலும், அவள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறாள்.
இந்த சூழ்நிலையில் தமிழுக்கும் சுரேஷூக்கும் காதல் மலர, கர்ப்பமாகிறாள் தமிழ். வேறுவழியின்றி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துவிடுகிறாள் பத்மா. இந்த நிலையில் தமிழுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் குழந்தையை குளிப்பாட்டி விடுவதில் இருந்து சகல வேலைகளையும் சுபாஷ் தான் செய்கிறான். மகள் மீது அளவற்ற பாசம் அவனுக்கு.
பெண் குழந்தையிடம் சுபாஷ் இவ்வளவு நெருங்கிப் பழகுவது பத்மாவுக்கு கொஞ்சம் பயத்தைக் கொடுக்கிறது. ஒருநாள் இது வாக்குவாதமாகிவிட, பத்மா மகளிடம் உண்மையைக் கூறுகிறாள். மனைவி தமிழையும் சரி, குழந்தை மகிழையும் சரி ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்பவன் தான் சுபாஷ். ஆனாலும் பெண் குழந்தையுடனான இந்த நெருக்கத்தை பத்மாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆண் துணையின்றி இருந்த தனக்கு ஆறுதலாக இருந்த சுபாஷ், தன் மகள் தமிழை நெருங்கியது போல, பேத்தி மகிழிடமும் நெருங்கிவிடுவானோ என்பது பத்மாவின் அச்சம். இதை அறிந்த தமிழ், மகளை ஹாஸ்டலுக்கு அனுப்புவதுடன், அம்மாவையும் 'நீ எனக்கு போட்டி தானே' என்று கேட்டு ஹோமுக்கு அனுப்பிவைக்கிறாள்.
***
என்னைப் பொறுத்தவரை பத்மா ஆரம்பத்திலேயே தன் மகள் விடயத்தில் அவதானமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் பத்மா தன்னைப் பற்றி யோசித்த அளவுக்கு மகளைப் பற்றி யோசிக்காமல் இருந்துவிட்டாள். அந்தந்த நேரத்து சூழ்நிலைகளை மட்டும் எண்ணி தீர்மானம் எடுக்கும் பத்மா, மகள் சுபாஷிடம் ஏமாறும் போது திருமணம் செய்யும் முடிவையே எடுக்கிறாள். மறுபுறம் தமிழ் 04 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவளுக்கு வேறு தெரிவுகளும் இருக்கவில்லை. சிக்கலான நிலைதான்.
தமிழ் இருபதுகளில் நடமாடிக் கொண்டிருப்பவள். அவளால் தீர்க்கமாக யோசித்து முடிவெடுக்க முடியவில்லை. ஆனால் அவளால் அந்த சூழ்நிலையில் வேறு எதையும் யோசிக்கவும் முடியவில்லை. பாசமா இல்லை வேஷமா என்று அவளால் தினம் தினம் ஆய்வுகூட பரிசோதனையும் நடத்திக் கொண்டிருக்க முடியாதல்லவா?
தன் தாயும் தன்னிடம் உண்மையை மறைத்திருப்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழ் கர்ப்பமாக இருக்கும் போது பத்மா இதனை சொல்லியிருந்தாலும் அவளால் என்ன முடிவை எடுத்திருக்க முடியும்? ஆனால் மகள் மகிழ் சுபாஷூடன் அளவுகடந்த பாசத்துடன் பழகுவதை வேண்டுமானால் தடுத்திருக்கலாம். அல்லது சுபாஷ் வேண்டாம் என்று தீர்மானித்து தனித்து வாழ்ந்து காட்டியிருக்கலாம். ஆனால் அந்த முடிவை தமிழ் தன் 16 வயதிலேயே எடுத்திருந்தால் பத்மா சுரேஷை விட்டுக்கொடுத்திருப்பாளா என்பதும் சந்தேகம் தான்.
தமிழுடனான திருமணத்தின் பின், மகிழ் பிறந்த பின் சுபாஷ் பத்மாவின் பக்கம் போக முயற்சிக்கவில்லை. தமிழை நன்கு படிக்க வைத்து தேவையான எல்லா வசதிகளையும் செய்தும் கொடுக்கிறான். சுபாஷ் இல்லாமல் பத்மாவால் இத்தனையும் தந்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. மகள் மகிழையும் அளவுகடந்த பாசத்துடன் பார்த்துக்கொள்கிறான் சுபாஷ்.
ஆனால் பிரச்சினை எங்கு உள்ளது தெரியுமா? அளவு கடந்த பாசம் என்று கூறுகிறோம் அல்லவா? அதுதான், அதுவேதான் பிரச்சினை. சுரேஷ் தமிழை நெருங்கியதை எவ்விதத்திலும் நியாயப்படுத்தவே முடியாது. பத்மாவுடன் உறவில் இருந்ததால் தமிழ் நிச்சயம் மகள் முறைதான். ஆனால் மாமா என்கிற வார்த்தை அப்பா என்கிற உறவின் வீரியத்தை இல்லாமல் ஆக்கிவிட்டதாத தோன்றுகிறது. மறுபுறம் பத்மா சுரேஷை கணவனாக ஏற்றுக் கொள்வதில் அல்லது அதை குறைந்த பட்சம் தமிழிடம் வெளிப்படுத்துவதில் காட்டிய தயக்கம் சுபாஷூக்கும் தமிழுக்குமான நெருக்கத்திற்கான காரணமாக அமைந்துவிட்டது. கணவனை இழந்த பத்மா சுரேஷை ஏற்றுக் கொள்வதை சமூகம் எவ்வாறு எடுத்துக் கொள்ளும் என்கிற பயம் இதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.
தனக்கு இருப்பது பெண் குழந்தை என்பதாலும், தான் சுரேஷை ஏற்றுக் கொண்டால் அது தமிழின் எதிர்காலத்தை பாதிக்கலாம் என்றும் பத்மா யோசித்து தமது உறவை வெளிப்படுத்த தயங்கியிருக்கலாம். ஆனால் அந்த தயக்கம், வேறு வழியில் தன் எதிர்பார்ப்பின் ஆணிவேரையே அசைத்துப்பார்க்கும் என்று பத்மா யோசிக்கவில்லை. ஆனால் பத்மாவிடம் எல்லை மீறிய சுரேஷ், தமிழை திருமணம் செய்த பின்னர் ஒரு நல்ல வாழ்க்கையையே வாழ்கிறான். இந்த நிலையில் சுரேஷை சந்தேகிப்பது சரிதானா?
முதலில் ஒரு குழந்தை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வளர்க்கப்பட வேண்டிய விதம் ஒன்றுள்ளது. குழந்தைகள் வளர வளர தமக்கான கடமைகளை தாமே சுயமாக நிறைவேற்றப் பழக வேண்டும். இதுவே அவர்கள் சமூகத்தின் சவால்களை எதிர்கொள்ள கற்றுக் கொடுக்கும். மாறாக பாசம் என்ற பெயரில் பிள்ளைகளை சுயமாக இயங்க விடாமல் அவர்களது எல்லா வேலைகளையும் பெற்றோரே செய்ய ஆரம்பித்தால் பிள்ளைகள் எப்போதும் தங்கி வாழும் ஒருவராகவே வளர்வார்கள். ஒருவருடைய துணையின்றி தனித்து இயங்காத அவர்கள் சமூகத்தின் சவால்களை எதிர்கொள்ள முடியாமல் வாழ்க்கையில் தோற்றுப் போக நேரிடும்.
இந்த இடத்தில் பெண் குழந்தை என்கிற போது இன்னமும் கூடுதல் அவதானம் தேவை. தொடுகைகள் குறித்த புரிதல் தேவை. அந்த புரிதல் இல்லாமல் தானே தமிழ் சுரேஷிடம் வீழ்ந்தாள்? ஆகவே மகிழும் அவ்வாறு திசைமாறிப் போய்விடாமல் இருப்பதற்கு அவள் சுயமாக இயங்க வேண்டியது அவசியமாகும். என்னதான் அப்பாவாக இருந்தாலும் பெண் குழந்தைகள் அப்பாக்களின் துணையின்றி செயற்பட வேண்டிய கட்டாயமான இடங்கள் சில உள்ளன. அவற்றின் போது அவர்கள் தனித்து இயங்கியே ஆக வேண்டும். அம்மாவாக இருந்தாலும் ஒரு கட்டத்தின் பின்னர் பெண் குழந்தை தன் நிர்வாணத்தை வெளிப்படுத்துவதில்லையே? அப்படியிருக்க, அப்பாக்களிடம் அந்த விலகல் இன்னும் முன்னதாகவே நிகழ வேண்டும்.
சரி, இதில் யார் சரி யார் தவறு என்று பார்க்கலாம். பத்மா கணவனை இழந்த பின் சுரேஷை தான் அறிந்த வகையில் கொண்ட நம்பிக்கை காரணமாக தனக்கு துணையாக இணைத்துக் கொள்கிறாள். ஒரு பிடிமானத்திற்காகவும் ஒரு அன்பிற்காகவும் தானே இந்த மனித மனங்கள் ஏங்குகின்றன? பத்மா சுரேஷை திருமணம் செய்து கொள்ளாதது பற்றியோ அல்லது சுரேஷூடனான தனது உறவை தமிழிடம் வெளிப்படுத்தாதது பற்றியோ நாம் குறை சொல்ல முடியாது. காரணம் நாம் தான் சமூகத்தை இடியாப்பச் சிக்கல் ஆக்கி வைத்திருக்கிறோம். கணவனை இழந்த பத்மா சுரேஷை ஏற்றுக் கொண்டதை கதையாக எழுதியிருந்தால் இந்த பொம்பளைங்க இப்படித்தான் அலைவாளுக என்று எத்தனை பேர் கூறியிருப்பார்கள்? ஆகவே சமூக கட்டமைப்பை மாற்றாமல் அதை எதிர்பார்க்க முடியாது. ஆனால் இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். சமூகம் எப்போதும் தானாக மாறுவது இல்லை. யாரேனும் தம்மை அர்ப்பணித்து தான் இந்த சமூகத்தை மாற்றியிருக்கின்றார்கள். பத்மா போன்றோர் இந்த சமூகக் கட்டமைப்பை பொருட்படுத்தாமல் அதனை உடைத்து வெளிவரும் போதுதான் ஏனையோரும் அதனை பின்பற்றுவார்கள்.
தமிழ்? அவளது வயதுக் கோளாறு மற்றும் தந்தையின் சரியான கவனிப்பு கிடைக்காத நிலையில் சுரேஷின் அரவணைப்பில் தடுமாறியிருக்கலாம். எது பாசம், எதை எந்த எல்லை வரை அனுமதிக்க வேண்டும் என்கிற தெளிவு அவளுக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே பாசத்திற்காக ஏங்கிய தமிழ், சுரேஷின் எல்லா செயல்களையும் பாசமாகவே எடுத்துக் கொண்டுவிட்டாள். அதனால்தான் பிடிவாதமாக சுரேஷையே திருமணம் செய்து கொண்டதும், மகிழுக்காக அம்மாவிடம் வாதம் செய்ததும் நடந்தது.
பதினாறு வயசு பொண்ணுக்கு இதெல்லாம் தெரியாமலா இருந்திருக்கும் என்று கேட்கலாம். ஆனால் அவரவர் சூழ்நிலையில் இருந்து இதனை பார்க்க வேண்டும். அவரவர் வளர்கின்ற சூழலில் இருந்து தான் அவர்களுக்கான புரிதலும் தெளிவும் கிடைக்கிறது. தமிழ் ஆறு வயதில் இருந்தே சுரேஷிடம் வளர்ந்தமையால் அவளுக்கு அவனைத் தாண்டிய சமூகத்தை அடையாளம் காண்பதற்கான வாய்ப்புகள் கிடைத்திருப்பது அரிது. தமிழின் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு அவளையும் குறை கூற முடியாது.
சுரேஷ் செய்தது சரியா? நான் முன்பே சொன்னது போல மனித மனங்கள் ஒரு பிடிமானத்திற்காகவும், ஒரு துளி அன்பிற்காகவும் தான் ஏங்கி நிற்கின்றன. அந்த வகையில் தனிமையில் தவித்த சுரேஷ், பத்மாவை துணையாக ஏற்றுக் கொண்டதில் சரி தவறு இருக்கலாம். அதில் நாம் தலையிட்டு தீர்ப்பு சொல்ல முடியாது. ஆனால் ஆறு வயதில் இருந்தே தன்னிடம் வளர்ந்த தமிழிடம் அத்துமீறியதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தற்போது சமூக சூழ்நிலைகள் மாறி வருகின்றன. யாரும் யாரையும் திருமணம் செய்யலாம். இருபது வருட வயது வித்தியாசம் என்பதெல்லாம் இந்தக் காலத்தில் பொருந்தாததாகிப் போய்க் கொண்டிருக்கிறது. அதை விட அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்பவர்களையும் நாம் பார்க்கிறோம். ஆனாலும் சுரேஷ் - தமிழ் திருமண உறவை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் தமிழ் சுரேஷூக்கு சிறுமியாக, அதுவும் தான் இணைந்து வாழும் பெண்ணின் மகளாகவே அறிமுகமானாள். பத்மா தன் மகளுடன் சுரேஷை நெருங்கிப் பழக அனுமதித்ததும் தன் மகளை அவனும் தன் மகளாகவே பாவிப்பான் என்று நம்பித்தான். இங்கு பத்மாவுடனும் சரி, தமிழுடனும் சரி சுரேஷ் முதலில் செய்வது நம்பிக்கை மீறல். இரண்டாவது மகள் உறவில் இருக்க வேண்டிய பெண்ணை மனைவியாக்குவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இப்போது தமிழ் இறுதியாக எடுத்த முடிவு சரியானது தான். ஆனால் மகிழ் அந்த முடிவுடன் இணங்கிப் போவாளா என்பது சந்தேகமே. காரணம் தந்தைதான் எல்லாமும் என்று இருந்த குழந்தையால் அவரை பிரிந்திருப்பது என்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை. ஆனால் அவள் வளர்ந்த பின் நடந்தவை எல்லாவற்றையும் அறிந்தால் என்ன தீர்மானம் எடுப்பாள் என்பதையும் காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.
உறவுச் சிக்கலொன்றின் பேசப்பட வேண்டிய பகுதியை சௌம்யாவின் BOYZ கதை பேசியிருக்கிறது. கதையை நகர்த்தும் விதம், பயன்படுத்தும் வார்த்தைகள், உரையாடல்கள் அமைக்கப்பட்டுள்ள விதம், பாத்திர கட்டமைப்பு, பேச எடுத்துக் கொள்கிற விடயம் என எல்லாம் சௌம்யாவை மிஞ்ச ஆளே கிடையாது என்கிற வகையில் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. சௌம்யா தான் ஒவ்வொரு கதையையும் எழுதும்போதும் கதைச் சூழலை நன்கு உள்வாங்கி எழுதுவதால் நம்மாலும் கதையுடன் இயல்பாக ஒன்றிப் போக முடிகிறது. வாழ்த்துக்கள் சௌம்யா ராகவன். தொடர்ந்தும் எழுத்தில் பல உயரங்களை தொட மனமார வாழ்த்துகிறேன்!
சௌம்யா ராகவன் கதைகள் இதுவரை படித்ததில்லை என்றே தோன்றுகிறது. படிக்கிறேன்.
ReplyDeleteபெயர்க்குழப்பம் - உங்கள் விமர்சனம் பதிவில் சில இடங்களில் சுரேஷ் என்றும், சில இடங்களில் சுபாஷ் என்றும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இது குழப்பத்தை உண்டாக்கியது. எந்த பெயர் சரி?