பேஸ்புக் Vs முகநூல்

பேஸ்புக் Vs முகநூல் 

பேஸ்புக்கை அதே பெயரில் குறிப்பிடுவதா அல்லது முகநூல் என்று தமிழில் அழைப்பதா என்று ஒரு குழப்பம் நெடுநாளாக இருக்கிறது. தமிழில் எழுத வேண்டும், தூய தமிழை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்டது தான் முகநூல் என்ற பெயர் சூட்டல். அதேபோல் டுவிட்டருக்கு கீச்சகம் என்றும் இந்த தமிழ் ஆர்வலர்கள் சொன்னார்கள். வாட்ஸப்புக்கு புவனம் என்றார்கள். இன்னுமின்னும் இதே போல பல பெயர்சூட்டல்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றிருக்கின்றன. இது சரியா தவறா என்றால் தவறு என்பதே நேரடி பதிலாகும். 

முதலில் பேஸ்புக், டுவிட்டர் என்பதெல்லாம் வணிகப் பெயர்ச் சொற்கள் என்பதை கருத்திற் கொள்ளுங்கள். பெயர்ச்சொல் என்பது எந்தவொரு மொழிக்காகவும் மாற்றம் செய்யப்பட முடியாதது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுரேஷ் என்ற பெயரை ஆங்கிலத்தில் அழைத்தாலும் சுரேஷாகவே இருக்க வேண்டும், கொரிய மொழியில் அழைத்தாலும் சுரேஷாகவே இருக்க வேண்டும். இப்படி நினைத்துக் கொள்ளுங்கள். சுரேஷ் என்றால் ஆங்கிலத்தில் ஜோன் என்று அர்த்தம் என்று வைத்துக் கொள்வோம். இப்போது ஒரு ஆங்கிலேயர் ஜோன் என்று அழைத்தால் சுரேஷ் திரும்புவாரா? இல்லை தானே? அவ்வாறே அவர் திரும்புவதாக இருந்தால்கூட உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் தனது பெயரை எவ்வாறு அழைப்பது என்பது தொடர்பில் அவர் அறிந்திருக்க வேண்டியதாக இருக்கும். அதேபோல் தான் Facebook என்பதை தமிழிலும் பேஸ்புக் என்றே அழைக்க வேண்டும். அதுவே பொருத்தமானதும் கூட. 




ஆங்கிலச் சொற்களையோ அல்லது வேறு மொழிச் சொற்களையோ தமிழில் பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் வரவேற்கத்தக்கது. ஆனால் கண்ணில் பட்ட எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்தியே தீருவோம் என்கிற வெறி மிகுந்த தமிழ்ப்பற்று ஆபத்தானது. இது தமிழை வளர்ப்பதற்கு மாறாக தமிழை அழித்துவிடும். எது பிறமொழிச் சொல், எது தமிழ்ச் சொல் என்ன வேறுபாட்டை அறிந்து கொண்டாலே தூய தமிழ் மக்களின் முழுமையான பயன்பாட்டுக்கு வந்துவிடும். பேஸ்புக்கை முகநூல் என்று கூறுபவர்கள் தான் ஹலோ வணக்கம் என்கிறார்கள். ஆகவே பெயர்ச் சொற்களுக்கும் ஏனைய சொற்களுக்குமான வேறுபாட்டை நாம் அறிய வேண்டும். பின்னர் மாற்று மொழிச் சொற்களை அடையாளம் கண்டு அவற்றுக்கான தமிழ் மொழிச் சொற்களை கண்டறிய வேண்டும். பின்னர் அதை மக்கள் மத்தியில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். 

தூய தமிழ் பயன்பாடு எனும் போது ஒரு சிக்கல் இருக்கிறது. உலகம் முழுவதும் தமிழர்கள் பரந்து வாழ்கின்றனர். மக்கள் வாழும் இடத்தின் அமைவிற்கேற்ப மொழி பயன்படுத்தப்படும் தன்மை மாறுகின்றது. 08 கோடி தமிழ் மக்கள் வாழும் தமிழ்நாட்டிலேயே வட்டார வழக்குகள் பல உள்ளன. ஆகவே அனைத்து தரப்பினருக்கும் பொருந்தக்கூடிய மொழிப் பயன்பாட்டை உருவாக்குவது என்பது சிரமமானது. என்றாலும் உருவாக்கித் தான் ஆக வேண்டும். எனில், என்ன செய்யலாம்? இங்கு கருத்திற் கொள்ள வேண்டிய முக்கியமான விடயமொன்று உள்ளது. 

எந்தவொரு மொழி பேசும் மக்களாக இருந்தாலும் அதில் நன்கு கற்ற சமூகம் என்று பார்த்தால் அவர்களின் வீதம் குறைவாகவே இருக்கும். மொழிப் புலமை மிக்கவர்கள் என்று 10 வீதம் பேரை கருத்திற் கொண்டாலும் (இதை விடவும் குறைவாக இருப்பதற்கே சாத்தியம் அதிகம்) மிகுதி 90 வீதம் பேர் தொடர்பாடலுக்காக மாத்திரமே தமது மொழியை பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள். இவர்கள் தமக்கு பயன்படுத்த இலகுவாக உள்ள சொற்களையே தொடர்பாடலுக்காக தெரிவு செய்வார்கள். கடினமான சொற்களை பயன்படுத்த ஒருபோதும் எளிய மக்கள் விரும்ப மாட்டார்கள். நீங்கள் ஏற்றுக் கொள்ள விரும்பாவிட்டாலும் இதுவே உண்மை. 

மொழி பயன்பாட்டுக்கு இலகுவாக அமைய வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள விரும்பாதவர்கள் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும். மக்களுக்காகத்தான் மொழியே அன்றி, மொழிக்காக மக்கள் இல்லை. இந்த மக்கள் தமிழர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைந்து செயற்படும் வரை மாத்திரமே தமிழ் மொழி நிலைத்து நிற்கும். அது வரையே உங்களாலும் என்னாலும் மொழிப்பெருமை பேச முடியும். இந்த மக்கள் இல்லையென்றால் தமிழன் என்று சொல்லிக்கொள்ள நீங்களும் நானும் இருக்க மாட்டோம். 

தொல்காப்பியர் காலத்தில் மொழி இப்படி இருந்தது, சங்க காலத்தில் மொழி இப்படி இருந்தது என்றெல்லாம் கூறுகின்றனர். மொழி அந்தந்த காலத்தின் தேவைக்கேற்ப அவ்வாறு இருந்திருக்கிறது. ஆனால் இது நவீன யுகம். அவசர உலகம். எல்லாம் சுருங்கிக் கொண்டே போகும் நிலையில் மொழியின் பயன்பாட்டை விரிவுபடுத்த வேண்டுமானால் வார்த்தைகளின் சிக்கல் தன்மை சுருக்கப்பட வேண்டியது கட்டாயமாகிறது. மக்கள் உடனடியாகவும் இலகுவாகவும் வேகமாகவும் பயன்படுத்தக்கூடிய மொழிப் பிரயோகத்தை எதிர்பார்க்கின்றனர். இது அவர்களுடைய தவறு அல்ல. காலத்தின் தேவை. கால் மாற்றத்தின் கட்டாயம். இதனை நாம் மறுக்க முடியாது. 

இறுதியாக, தனித் தமிழ் அல்லது தூய தமிழ் மொழிப் பயன்பாடு என்பது தேவை. ஆனால் மொழியின் பயன்பாடு இலகுவானதாக அமைய வேண்டும் என்பது கட்டாயம். மொழிப் பிரயோகம் கடினமாகிக் கொண்டே செல்லும் பட்சத்தில், சாதாரண மக்கள் மொழியில் இருந்து அந்நியமாகிக் கொண்டே செல்வார்கள். ஆங்கிலம் ஏன் உலக பொது மொழியாக ஆனது என்பதை தேடிப் பார்த்தால் இதனைப் புரிந்து முடியும். ஆங்கிலம் உலகின் அனைத்து மாற்றங்களுக்கும் வளைந்து கொடுத்து தன்னை அதற்கைற்ப தகவமைத்துக் கொண்டு முன்னேறிச் செல்கின்றது. 

இதற்காக தமிழ் மொழியின் தனித்துவம் இல்லாமலாக்கப்பட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. தமிழ் மொழியின் தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்கின்ற அதே சமயம், மொழியின் பயன்பாடும் இலகுபடுத்தப்பட வேண்டும். பேஸ்புக்கை தமிழ்ப்படுத்துவதை விட்டுவிட்டு, ஆட்டோ, பஸ், லொறி என அன்றாட பயன்பாட்டுக்கு உதவும் வார்த்தைகளுக்கு உடனுக்குடன் தமிழ் சொற்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதேநேரம் அனைத்து கல்விசார் செயற்பாடுகளும் தமிழிலிலேயே முன்னெடுக்கப்படக்கூடிய நிலையும் உருவாக்கப்பட வேண்டும். இதையெல்லாம் வெற்றிகரமாக செயற்படுத்த சர்வதேச ரீதியிலான தமிழ் மொழிச் சங்கமொன்று உருவாக்கப்பட வேண்டும். அதில் அனைத்துத் தமிழ் மக்களும் பங்களிக்கும் விதத்தில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விரிவாக சிந்திப்போம், விரைவாக சிந்திப்போம், நிறைவாக வாழ்வோம்! 

Comments

  1. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பக்கத்தில் ஒரு பகிர்வு/பதிவு.

    தங்கள் சிந்தனைகள் நன்று. ஹிந்தியில் facebook என்றே குறிப்பிடுகிறார்கள். ஹிந்தியில் பல ஆங்கில, வேற்று மொழி வார்த்தைகளை அப்படியே எழுதுவது தான் வழக்கம். யாரும் அந்த வார்த்தைகளுக்கு மாற்று வார்த்தை கண்டுபிடிப்பதில்லை.

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!