உரைநடை எழுத்தாளர் ஆவது எப்படி - பாராவின் உரையை முன்வைத்து...
காலை ஏழு மணிக்கு எனது இன்றைய நாளை ஆரம்பித்தேன். நேற்று முன்தினம் இரவு மூன்று மணித்தியாலமே உறங்கக் கிடைத்தது. நேற்று அதிகாலை 03.30 க்கு வேலைக்காக எழுந்து சென்று மீண்டும் வீடு திரும்பியபோது மாலை நான்கு மணி. ஒரு மணிநேரம் மட்டும் கண்களுக்கு ஓய்வு கொடுக்க நேரம் கிடைத்தது. மீண்டும் ஆசான் பாராவின் மிருது வாட்ஸ்அப் நாவல் தொடரை வாசித்துவிட்டு உறங்கும் போது நள்ளிரவு 12.30. அதிகாலை நான்கு மணியளவில் பாரிய சத்தம் கேட்டது. கொஞ்ச நேரம் கூர்ந்து அவதானித்ததில் இடியும் மின்னலும் தன் லீலைகளை காட்டிக் கொண்டிருந்தன. மீண்டும் கஷ்டப்பட்டு உறங்கி ஏழு மணியளவில் விழித்துக் கொண்டு தேநீரை அருந்தினேன். சரி, இப்போதே வாசிக்க வேண்டாம், எதையாவது கேட்கலாம் என்று யூடியூபை Scroll செய்த போது 'காலத்தை வென்று நிற்கும் சிறுகதைகள்' என்ற தலைப்பில் ஆசான் பாரா ஆற்றிய உரையொன்று கண்ணில் பட்டது. ஏற்கனவே கேட்ட ஞாபகம். சரி மீண்டும் கேட்கலாம் என்று காணொளியை Play செய்து கேட்க ஆரம்பித்தேன்.
நேற்று பாரதி சித்தர்களை சந்தித்ததை பற்றி ஆசான் பாரா எழுதியிருந்தார். இன்று இந்த உரையில் யேசுவின் வாழ்க்கை வரலாற்றை ஓவியமாக வரைந்த கதையில், குழந்தை யேசுவாக நின்றவரே, சில காலம் கழித்து யூதாசாகவும் மாடலாக நிற்க நேர்ந்த துயரத்தை வெளிப்படுத்திய கதையைப் பற்றி சொல்லியிருந்தார். கருணையை வெளிப்படுத்திய முகத்தில் தானே கயமையும் வெளிப்பட்டது? இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது யார்? அந்த மனிதனா? சமூகமா? காலமா? இன்னும் அந்த சிறுகதையை வாசிக்கும் போது மாறுபட்ட எண்ணங்கள் எழலாம். ஒரு படைப்பு வாசகனுக்குள் தாக்கத்தை ஏற்படுத்துமானால் நிச்சயமாக அந்த படைப்பு ஒரு நல்ல படைப்புத் தான். இயேசுவாக அமர்ந்த ஓவிய மாடலே பின்னாளில் யூதாஸாக அமர வேண்டிய நிலை ஏற்பட்டதாக கற்பனை செய்து எழுதிய அந்த எழுத்தாளரின் சிந்தனை, அதனை வெளிப்படுத்திய விதம் பாராட்டத்தக்கது. ஆனால் அவர் தன் கதைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை தன் அடையாளத்திற்கு கொடுக்கவில்லை என்பதே கவலைதான்.
ஏற்கனவே பேஸ்புக்கில் ஒரு படைப்பை எழுதுவதாக சொல்லி இருக்கிறார் ஆசான் பா. ராகவன். இந்த உரையில் தங்கிலீஷில் ஒரு படைப்பை முயற்சிப்பதாக சொல்லி இருக்கிறார். வித்தியாசமான யோசனைகள் தான். வாட்ஸ்அப் சேனலில் நாவல் எழுதுவது என்பதே உலகில் பாராவால் தான் அறிமுகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். சரி, பாரா எதில் எழுதினாலும் நாங்கள் படிக்க தயார். ஆனால் ஆசான் பா. ராகவனின் உரைகளும், நேர்காணல்களும் புத்தகமாக தொகுக்கப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். ஏனெனில் வாசகர்களாகிய எங்களுக்கு பயன்படக்கூடிய பல விடயங்கள் இவற்றில் இருக்கின்றன. இவையும் பாராவின் எழுத்தின், எண்ணத்தின் ஒரு வெளிப்பாடே. ஆகவே இவற்றை ஒவ்வொன்றாக எழுத்தில் கொண்டுவந்து, அதையும் ஒரு புத்தகம் ஆக்குமாறு அவரிடம் கேட்டுக் கொள்கிறேன்.
எழுதுதல் பற்றிய குறிப்புகள் புத்தகத்தில் இருப்பதை போன்று இந்த உரையிலும் எழுதுவதற்கான பல குறிப்புகளை வழங்கியிருக்கிறார். பாரா சொன்னது போல நானும் புத்தகங்களை ஒளித்து வாசித்த ஒருவன் தான். அப்போது எட்டில் இருந்து பத்து வயது இருக்கலாம். பத்தாம் வயதில் இலங்கையில் புலமைப் பரிசில் பரீட்சை என்று ஒரு நாடளாவிய பொதுப் பரீட்சை இருக்கிறது. அதில் கவனம் செலுத்தி படிப்பதை விட்டுவிட்டு புத்தகத்திற்குள் கதைப் புத்தகத்தை மறைத்துவைத்து வாசித்தவன் நான். அந்த பரீட்சையில் சித்தி அடைய 200 க்கு 129 புள்ளிகள் தேவைப்பட்ட நிலையில் என்னால் 126 புள்ளிகளையே பெற முடிந்தது. அது ஒரு தனி வரலாறு.
ஆசான் பாரா உரையாற்றியது ஒரு சிறுகதை பயிற்சி வகுப்பாக அல்லது கருத்தரங்காக இருந்திருக்கலாம். ஆனால் நேரம் அதிகமாக இருந்ததால் முழுமையாகக் கேட்கவில்லை. முப்பது நிமிடங்கள் கேட்பது என்று இந்த இடத்தில் முடிவு செய்து தொடர்ந்து கவனித்தேன். கவனித்தேன். ஆனால் சரியாக கவனித்தேனா என்று தெரியவில்லை. எனக்கு கவனச் சிதறல் அதிகம். கற்பிப்பதை அல்லது உரையாற்றுவதை என்னால் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்க முடியாது. அதில் இருந்து ஏதாவது ஒரு விடயத்தை நூல் பிடித்துக்கொண்டு சிந்தனை வேறு எங்காவது அலைபாய சென்றுவிடும். இது பிறவிக் குறைபாடாக இருக்க வேண்டும். எவ்வளவு முயன்றும் சரிசெய்ய முடியவில்லை.
என்னத்த வேணா எழுதுங்க, எளிமையா எழுதுங்க. இதுதான் எழுத்தின் முதல் பாடம். சொற்களுக்கு ஒலி இருக்கிறது என்பது புதிது. யோசித்துப் பார்த்தால் அதுவும் உண்மைதான் இல்லையா? சுருக்கம், தெளிவு, உறுதி இதெல்லாம் எழுத்திற்கு தேவையான இன்னபிற விடயங்கள். ஆனா அந்த கல்யாண பொண்ணு மேக்கப்பை உதாரணம் சொன்னார் பாருங்க. வேற லெவல். நடிக்க வேண்டும் என்ற ஆசையை தன்னுள் வைத்துக்கொண்டு அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து புலம்பிக் கொண்டிருக்கும் ஒருவனுடைய கதையை சொன்ன - தெளிவுபடுத்திய விதம் அருமை.
'மூன்று ஆண்டுகள் உருண்டு ஓடின. அது எப்படி உருண்டு ஓடும்?' என்று பாரா கேட்ட இடத்தில் சத்தமாக சிரித்துவிட்டேன். ஒவ்வொரு விடயத்தையும் தெளிவாக புரியும் படியாக விளங்கப்படுத்தியிருந்தார். 30 நிமிடத்தில் நிறுத்த எண்ணிய காணொளியை முழுவதும் பார்த்து முடிக்கும் வரை வைக்க முடியாமல் பேசிய விதம், அதில் இருந்த ஈர்ப்புதான் ஆசான் பாரா. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் பாராவின் எழுத்துக்கள் காணொளிகளிலேயே கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. முதலிலேயே சொன்னபடி அவற்றையும் தொகுத்தால் நன்றாக இருக்கும்.
காணொளி இணைப்பு:- https://youtu.be/OSYekWT0UXo
சிகரம் பாரதி
இலங்கை
மலையகம்.
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்