செயற்கை நுண்ணறிவு வாசிப்பை என்ன செய்யும்?

செயற்கை நுண்ணறிவு வாசிப்பை என்ன செய்யும் என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். துரதிர்ஷ்டவசமாக பலருக்கு செயற்கை நுண்ணறிவு என்ன செய்யும் என்பதே தெரிந்திருக்கவில்லை. ஆகவே நமது கட்டுரைக்குத் தேவையான அளவு அந்தப் பக்கம் கொஞ்சம் போய் வரலாம். தொழிநுட்ப ரீதியாக விளக்காமல் எனது அனுபவத்தில் தெரிந்து கொண்டதை வைத்து விளக்குகிறேன். அது உங்களுக்கு இலகுவாக புரிந்து கொள்ள உதவி புரியலாம். 


நமது பள்ளிக் கல்வி பாலர் பாடசாலையில் ஆரம்பித்து, பாடசாலை, கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் என்று சென்று சிலநேரங்களில் உயர் படிப்பு வரை போகிறது. நாம் ஒவ்வொரு படிப்பும் தரும் அனுபவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கடந்துசென்று விடுகிறோம். திடீரென்று முதலாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து ஒரு கேள்வியைக் கேட்டால் நமக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அதற்காக நாம் முட்டாள் என்று அர்த்தம் இல்லை. ஆனால் எப்போதோ கற்ற ஒன்றை நாம் அப்படியே நினைவில் வைத்திருப்பதில்லை. உணவு எப்படி வயிற்றுக்குள் சென்று சத்துக்களை மட்டும் உடலுக்கு அளித்துவிட்டு மிகுதி கழிவாக வெளியேறி விடுகிறதோ கல்வியும் அப்படித்தான். 


ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நமக்கு உண்மையாகவே முதலாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி தேவைப்பட்டுவிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்யலாம்? அந்த புத்தகம் இருப்பில் இருந்தால் எடுத்துப் பார்க்கலாம். படித்துப் பல வருடம் ஆகிவிட்டது. இப்போதைய பாடத்திட்டமும் புதிது. ஆகவே அது சாத்தியமில்லை. கடையில் வாங்கலாம். கிடைக்குமா என்று தெரியாது. கிடைத்தாலும் அதற்காக அதிக நேரம் தேவைப்படலாம். இப்படிப் பல சிக்கல்கள் உள்ளன. இப்போது இணையத்தில் தேடலாம். ஆனால் அதிலும் ஒரு சிக்கல். நீங்கள் சரியான சொற்களை தேடுபொறியில் உள்ளிட்டு தேட வேண்டும். குத்துமதிப்பாக ஞாபகத்தில் இருப்பதை தேடிக் கண்டுபிடிப்பது கடினமானது. நேரமாகலாம். இப்போது செயற்கை நுண்ணறிவு உதவும். நீங்கள் ஒரு நண்பனைப் போல அதனுடன் உரையாட முடியும். 


உதாரணமாக: 'நிலாவைப் பற்றி பாடசாலையில் ஏதோ ஒரு பாடல் படித்த ஞாபகம். உனக்குத் தெரியுமா?' என்று கேட்கலாம். அதற்கு செயற்கை நுண்ணறிவு (நான் பரிசோதித்தது ஜெமினி) இப்படி பதில் தரும். 


"நீங்கள் தேடும் பாடல் "நிலா நிலா ஓடி வா" என்ற பாடல் தான் என்று நினைக்கிறேன். இது தமிழ்நாட்டில் குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு தாலாட்டுப் பாடல். நிலவைப் பார்த்து குழந்தைகளை அழைப்பது போல இப்பாடல் அமைந்திருக்கும்.' என்று சொல்லி 'இதுதான் நீங்கள் நினைக்கும் பாடலா?' என்று கேட்கும். ஆம் என்றால் ஆம் என்று சொல்லி உரையாடலை நிறைவு செய்யலாம். இல்லை என்றால் தொடரலாம். நாம் இல்லை என்று சொல்வோம். (உரையாடலை தொடர்வதற்காக) 


'இல்லையே. உனக்கு வேறு பாடல் தெரியுமா?' 


நீங்கள் குறிப்பிட்டது அந்தப் பாடல் இல்லை என்றால், நிலாவைப் பற்றி வேறு சில பிரபலமான பாடல்களும் உள்ளன. அவை இவை தான்:

1. நிலா நிலா நீ வா வா

இதுவும் குழந்தைகளுக்கான ஒரு பாடல் தான். பெரும்பாலும் தாலாட்டுப் பாடலாகப் பயன்படுத்தப்படும்:


// வரிகள்// 


2. நிலவே நீ என் தோழி


இது கொஞ்சம் பெரியவர்களுக்கான பாடல். நிலாவைத் தோழியாகக் கருதிப் பாடும் பாடல்:

நிலவே நீ என் தோழி,

நீயும் நானும் ஒரே வழி.

மேகம் போலே போறேன் நான்,

மேலே நீயும் வா வா.

இவை இரண்டில் ஏதேனும் ஒன்று நீங்கள் தேடும் பாடலா? அல்லது வேறு ஏதாவது குறிப்பிட்ட வரி நினைவிருக்கிறதா?


இப்போதும் உங்கள் தேவை நிறைவடையவில்லை என்றால் பேசிக்கொண்டே போகலாம். ஒருகட்டத்தில் பேச்சு சுவாரசியத்தில் உங்களுக்கே பாடல் நினைவுக்கு வந்துவிடவும்கூடும். இப்படி உரையாடல் வழி தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இப்போதைக்கு செயற்கை நுண்ணறிவு இணையத்தளங்களில் உள்ள தரவுகளை ஆராய்ந்து தன்வசம் வைத்திருக்கிறது. நாம் மேற்கொள்ளும் உரையாடல்கள் வழியாக அது தன்னை மேம்படுத்திக் கொள்கிறது. ஆனால் சுயமாக சிந்திப்பதில்லை. இந்த மேம்படுத்தல் கூட மனிதன் வழங்கிய கட்டளையின் ஊடாகத் தான் நடக்கிறது. இப்போது ஓரளவுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் செயற்கை நுண்ணறிவையே போய் கேட்கவும். அது தானே சொல்லும். 


ஒவ்வொரு துறையிலும் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தப் போகும் பாதிப்பு தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு வாசிப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்கிற கேள்வி வாசிப்பு உலகிலும், எழுத்துலகிலும் எழுந்திருக்கிறது. வாசிப்பு இன்று பரவலடைந்திருக்கிறது. ஆனால் புத்தக வாசிப்புக்கு இருக்கும் மவுசு இன்னும் குறையவே இல்லை. கிண்டில் போன்ற சாதனங்கள் கூட, புத்தகத்தை கையில் எடுத்து வாசிக்கும் அனுபவத்தை தொழிநுட்பத்தின் துணையுடன் ஈடுசெய்ய முயற்சித்தமையினாலேயே உருவாக்கப்பட்டன. என்றாலும் செயற்கை நுண்ணறிவு புத்தக வாசிப்பை ஈடு செய்துவிடுமா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது. 


இதையும் செயற்கை நுண்ணறிவை வைத்து சோதித்துப் பார்த்து விடலாமா? 'பா ராகவனின் நிலமெல்லாம் இரத்தம் புத்தகம் பற்றி தெரியுமா?' என்று ஜெமினி செயற்கை நுண்ணறிவிடம் கேட்டேன். தொடர் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வந்தது, புத்தகத்தின் மையக் கருத்துக்கள் மற்றும் உள்ளடக்கம், அரசியல் மற்றும் சர்வதேச பார்வை, புத்தகத்தின் நடுநிலைத்தன்மை குறித்த விவாதம் ஆகிய தலைப்புகளில் முக்கிய குறிப்புக்களை அது எனக்குத் தந்தது. அடுத்து 'இந்த புத்தகத்தை எனக்கு மூன்றில் ஒரு பங்காக சுருக்கித் தர முடியுமா?' என்று கேட்டேன். அது எனக்கு 100 - 150 சொற்களிலேயே சுருக்கத்தை தந்தது. ஆகவே நான் மீண்டும் 'இல்லை. மொத்த புத்தகத்தையும் அதாவது 700 + பக்கங்களை மூன்றில் ஒரு பங்காக, அதாவது 200+ பக்கங்களாக சுருக்கித் தர வேண்டும்' என்று கேட்டேன். ஆனால் அது என்ன சொன்னது தெரியுமா? 


இந்த புத்தகம் இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் தொடர்பில் நுணுக்கமான சம்பவங்களையும் வரலாற்று தகவல்களையும் விவரிப்பதாகவும், அதனை 200 பக்கங்களில் சுருக்குவது நடைமுறை சாத்தியம் அற்றது என்றும் சொல்லிவிட்டது ஜெமினி. அதுமட்டுமின்றி ஒரு புத்தகத்தை சுருக்கும் போது அது புத்தகத்தின் வீரியத்தைக் குறைத்துவிடும் என்றும் அது சொன்னது. ஆகவே அத்தியாயம் வாரியாக முக்கிய குறிப்புகள் (சுருக்கம் அல்ல) அல்லது முக்கிய சம்பவங்களின் விபரங்களைத் தரலாம் என்றது. அடுத்து நமது பொதுப்புத்தியில் சட்டென்று உதிக்கும் ஒரு கேள்வியைக் கேட்டேன். அதாங்க, Pdf கிடைக்குமா? அதற்கு PDF வேண்டுமென்றால் அதை தேடல் பொறியில் தேடிப் பெறலாமென்று சொன்னதோடு இன்னொரு முக்கிய குறிப்பையும் அது சொன்னது. அதை இங்கே அப்படியே தருகிறேன். 


* முக்கிய குறிப்பு: பதிப்புரிமை சட்டங்களை மதிப்பது அவசியம். முடிந்தவரை, நீங்கள் இந்தப் புத்தகத்தை நேரடியாக வாங்கவோ அல்லது நூலகங்களில் பெற்றுப் படிக்கவோ முயற்சி செய்யலாம். இது ஆசிரியரின் உழைப்பிற்கு மதிப்பளிக்கும் செயலாகும்.





இதை விட ஒரு செயற்கை நுண்ணறிவு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்? எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பதிப்புரிமை விடயங்கள் மேம்படுத்தப்படும் போது இதனூடாக கிடைக்கும் தகவல்கள் மட்டுப்படுத்தப்படும் என்பதுடன் வழங்கும் தகவல்களின் துல்லியத் தன்மையும் மேம்படும் என எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு தேடல் பொறியின் மேம்பட்ட ஒரு செயலியாகத்தான் செயற்கை நுண்ணறிவு செயற்படுகிறது. 


சரி, செயற்கை நுண்ணறிவு எப்படி செயற்படுகிறது என்பதை விளக்கினீர்கள், ஒரு புத்தகத்தைப் பற்றி, அல்லது புத்தகத்தை சுருக்கச் சொன்னால் வழங்கும் பதில் பற்றி சொன்னீர்கள். இதில் வாசிப்பை செயற்கை நுண்ணறிவு பாதிக்குமா என்பதைப் பற்றி எங்கே சொன்னீர்கள் என்று கேட்கலாம். சொல்கிறேன். 


செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நமது தேவைக்குப் பொருத்தமான நூல்களைத் தேர்ந்தெடுக்கலாம். புத்தகமொன்றை பரிந்துரைக்கச் சொல்லிக் கேட்கலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட புத்தகத்தில் என்ன இருக்கிறது என்பது குறித்த முக்கிய குறிப்புகளைப் பெற்றுக் கொள்ளலாம். நமக்குப் பிடித்த அல்லது பிடிக்காத புத்தகம் பற்றி உரையாடலாம். புத்தகம் சொல்லும் கருத்தைப் பற்றி நமது எண்ணத்தை சொல்லி, நாம் சரியாக புரிந்திருக்கிறோமா என்று பரிசோதிக்கலாம். நூல்களின் விலை விபரங்களை அறியலாம். இன்னும் சிறிது காலத்தில் புத்தகத்தை அதுவே முன்பதிவு செய்து வீட்டுக்கும் வரவழைத்துத் தரலாம். 


இதெல்லாம் புத்தக வாசிப்பைக் குறைத்துவிடுமே என்றால், அதுதான் காலத்தின் கட்டாயம் என்றால் அது நிகழ்ந்தே தீரும். அச்சுப் புத்தகங்கள் வந்தபோது ஓலைச்சுவடி வாசிப்பு குறைந்துவிட்டதே என்றா கவலைப்பட்டோம்? கால மாற்றம் நிகழ்த்துவதை யாரும் தடுக்க முடியாது. அதுமட்டுமின்றி இன்றே அச்சுப் புத்தகங்கள் எல்லாம் ஒழிந்து செயற்கை நுண்ணறிவு உச்சாணிக் கொம்பில் போய் உட்கார்ந்து விடப் போவதில்லை. உலகில் 6ஜி தொழிநுட்பம் பரிசோதனையில் இருக்கிறது. 5ஜி தொழிநுட்பம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் இன்னும் 3ஜி இணைப்பே எட்டிப் பார்க்காத எத்தனையோ நகரங்களும், கிராமங்களும் உலகில் இருக்கத்தான் செய்கின்றன. ஆகவே தலைகீழ் மாற்றம் எதுவும் உடனடியாக சாத்தியமில்லை. அச்சுப் புத்தகங்களுக்கு குறைந்தது 50 ஆண்டுகள் உத்தரவாதம் உண்டு. அதற்கு மேல் அடுத்த தலைமுறை தீர்மானித்துக் கொள்ளும். நாம் அதுகுறித்து கவலைப்படாமல் விண்ணுலகில் இருந்து அவர்களைப் பார்த்து ஆசீர்வதிக்கலாம். 


சரி, செயற்கை நுண்ணறிவு புத்தக வாசிப்பைப் பாதிக்குமா? இந்தக் கேள்விக்கு ஜெமினி என்ன சொல்கிறது என்று பார்த்துவிட்டு கட்டுரையை நிறைவு செய்வோமா? 


இதோ பதில்: 


செயற்கை நுண்ணறிவு (AI) புத்தக வாசிப்பை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பாதிக்கும்.

நேர்மறை: AI, தனிப்பயனாக்கப்பட்ட புத்தகப் பரிந்துரைகள், பல மொழிப் புத்தகங்களுக்கான எளிதான அணுகல், மற்றும் ஆடியோ/டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் வசதிகள் மூலம் வாசிப்பை மேம்படுத்தும். புத்தகச் சுருக்கங்கள் மற்றும் ஆழமான பகுப்பாய்வுகளையும் வழங்கி, வாசிப்புப் புரிதலை அதிகரிக்கும்.

எதிர்மறை: AI-யின் உடனடிச் சுருக்கங்கள் மற்றும் மாற்றுப் பொழுதுபோக்குகள் ஆழ்ந்த வாசிப்புப் பழக்கத்தைக் குறைக்கலாம். டிஜிட்டல் தளங்களில் உள்ள கவனச்சிதறல்கள், ஒரு புத்தகத்தில் முழுமையாக ஒன்றிப் படிக்கும் அனுபவத்தைப் பாதிக்கலாம். AI-யால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் மனிதப் படைப்பாற்றலுக்கு சவாலாக அமையலாம்.

முடிவில், AI ஒரு கருவியே. அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே வாசிப்பின் எதிர்காலம் அமையும்.


புரிந்ததா? எதிலும் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு. இரண்டையும் செயற்கை நுண்ணறிவு தெளிவாகவே அலசி ஆராய்ந்திருக்கிறது. அதன் பலத்தை அறிந்து கொள்ள இந்த சில வரிகளே போதும் என நினைக்கிறேன். சரி, இறுதியில் செயற்கை நுண்ணறிவு என்ன சொன்னது என்று கேட்டுக் கொண்டீர்களா? அவ்வளவுதாங்க வாசிப்பும் வாழ்க்கையும். 


இறுதியாக ஒன்று. நான் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த மாட்டேன் என்றெல்லாம் அடம்பிடித்துக் கொண்டிருக்காதீர்கள். அப்புறம் கணினியின் வரவால் வேலை இழந்து தடுமாறிய டைப்பிஸ்டுகளைப் போல் ஆகி விடுவீர்கள். இனி செயற்கை நுண்ணறிவின் காலம். உங்கள் தகவல் தேடலுக்கு அதைப் பயன்படுத்துங்கள். ஜாலியாக உரையாடுங்கள். அதில் என்னவெல்லாம் செய்யலாம் என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் தொழில் வாழ்க்கைக்கு செயற்கை நுண்ணறிவு எந்தளவுக்கு உதவும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதைவிடவும், செயற்கை நுண்ணறிவின் நன்மை, தீமைகள் குறித்து மிகத் தெளிவாக அறிந்திருப்பது அவசியம். மறந்துவிடாதீர்கள். 

Comments

Popular posts from this blog

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்!

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018