Share it

Saturday, 4 May 2019

இலங்கை சிந்தும் ரத்தம் உண்மையில் யாருக்கானது ? வரலாறு தரும் புதுக்கோணம் ! | கட்டுரை | கலைஞர் செய்திகள் | ராஜசங்கீதன்இனப்படுகொலையால் சிவந்த மண் பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிவந்திருக்கிறது. இயேசு மீது சிதறிய ரத்தம் இலங்கையோடு நிற்காமல் இந்தியப்பெருங்கடலுக்கும் பரவும் வாய்ப்பை அலசுகிறது இக்கட்டுரை.

ராஜசங்கீதன்

மனித வரலாறை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று, போர்க்காலம். இரண்டு, போருக்கு தயாராகும் காலம். சமாதானம் என ஒன்றை மனிதன் அறிந்ததே இல்லை (ஓஷோ). 

உலகப்போர்கள் திடுமென ஒரு நாளில் தொடங்கி விடுவதில்லை. முதல் உலகப்போர் ஆஸ்த்ரிய ஹங்கேரி நாட்டின் இளவரசர் கொல்லப்பட்டதில் தொடங்கியதாக நாம் படித்திருப்போம். ஆனால், அக்கொலைக்கு முன் இருந்த உலகச்சூழலை அலசி பார்த்தால் முக்கியமான உண்மை தெரியும். அத்தகைய சூழல் எப்போதுமே உலகில் இருந்து வருகிறது என்கிற உண்மை! 

உலகப்போர்களுக்கான காரணங்கள் என்ன?

முதல் உலகப்போருக்கு முன், உலக வணிகத்தில் முதன்மையாக இருந்த நாடு பிரிட்டன். உலகின் பெரும்பான்மையான நாடுகளை அடிமையாக்கி காலனிகளாக வைத்திருந்தது. அந்த நாடுகளின் வளங்களை சுரண்டி, உழைப்பை உறிஞ்சி, வணிகத்தையும் பெருக்கி படாடோபமாக கல்லா கட்டிக் கொண்டிருந்தது. ‘சூரியன் மறையாத பேரரசு’ என சொல்லி மார்தட்டிக் கொண்டது. பிரிட்டனை போல் வணிக ரீதியாக உலகை ஆள முடியவில்லையெனினும் ஜெர்மனி தன்னளவில் தொழில்துறையில் அச்சமயத்தில் வளர்ந்து கொண்டிருந்தது.

ஒரு நாட்டிலுள்ள முதலாளிகள் அரசின் தயவில் வளர்ந்து அந்நாட்டு மக்களை சுரண்டி முடித்த பிறகு, மிக இயல்பாக பிற நாடுகளை நோக்கி நகர தொடங்குவார்கள். விரலுக்கேத்த வீக்கமெல்லாம் முதலாளித்துவத்தில் கிடையாது. தொழில்துறை வளர்ந்திருந்த ஜெர்மனி அடுத்த கட்டமாக பிற நாடுகளை நோக்கி தன் வணிகத்தை பரப்பும் முயற்சிக்கு பிரிட்டன் தடையாக இருந்தது. வணிகத் தொடர்பை ஏற்படுத்தும் கடல் வழிகள் யாவும் பிரிட்டன் வசம் இருந்தன. பிரிட்டனுடன் போரென்பது ஜெர்மனிக்கு தவிர்க்க முடியாததானது.

போருக்கான ஆயத்த வேலைகளை ஜெர்மனி தொடங்கியது. தனக்கு ஆதரவாக இத்தாலி, ஆஸ்த்ரிய ஹங்கேரி நாடுகளுடன் ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டது. இந்த நாடுகளுடன் ஏதோவொரு வகையில் பிரிட்டன் அல்லது அதன் நட்பு நாடுகளுக்கு பிரச்சினை ஏற்படும் என்பதை ஜெர்மனி யூகித்திருந்தது. போர்க்கப்பல்களை அதிகமாக கட்டத் தொடங்கியது. பிரிட்டனுக்கு மூக்கு வியர்த்தது. ஆயுதங்களையும் கப்பல்களையும் பெருக்கும் வேலைகளை பிரிட்டனும் தொடங்கியது. ஓடுமீன் ஓடி போர்மீன் வருவதற்கு காத்திருந்த ஜெர்மனிக்கு செர்பியர்களின் தேசிய இன போராட்டம் லட்டாக கிடைத்தது. செர்பியர்கள் அதிகமாக வாழும் போஸ்னியாவின் விடுதலையை செர்பியா ஆதரித்தது. செர்பியாவுக்கு நட்பு நாடு ரஷ்யா. பிரிட்டன் ரஷ்யாவுக்கு நட்பு. செர்பிய போராளி அழுத்திய துப்பாக்கியின் விசை, முதல் உலகப்போரை வெடிக்க வைத்தது. முதல் உலகப்போருக்கு சூட்டப்பட்ட பெயர், ‘போர்களை முடிவுக்கு கொண்டு வரும் போர்’!

முதல் உலகப்போரில் அடைந்த தோல்விக்கான பழி வாங்கலே இரண்டாம் உலகப்போர். சற்றே புதிதாக தேசியவாத சர்வாதிகாரமும் ஹிட்லர், முசோலினி போன்றோரின் தனி மனித அகங்காரங்களும் இரண்டாவதில் சேர்ந்து கொண்டன.


முசோலினியுடன் ஹிட்லர்

குண்டுவெடிப்பு சொல்லும் சேதி

இரண்டு உலகப்போர்களுக்கான சூழலையும் முன்னேற்பாடுகளையும் இன்று பொருத்தி பார்க்கையில், துரதிர்ஷ்டவசமாக எல்லாமும் பொருந்தி போகிறது. பேரச்சம் எழுகிறது. அச்சம், நமக்கு மிகவும் பிரத்யேகமானதாக இருக்கிறது. ஏனெனில் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் கண்டெடுத்த லாபவெறி, தேசிய இன ஒடுக்குமுறை, வலதுசாரி தேசியவாதம், வணிகப்போட்டி யாவும் நமக்கருகே நிகழ்கின்றன. நாமே அதில் இருக்கிறோம். உலக நாடுகளின் ‘நாடு பிடிக்கும் போட்டி’யில் நாடில்லாமல் வெளியேற்றப்பட்டிருப்பது தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஆகிய நாம்.

இந்துக்கள் மட்டுமே தமிழர்கள் என்றால் இந்து ஏற்றுக்கொள்ள மாட்டான். இஸ்லாமியர்களும் தமிழர்கள்தான் என்றால் தமிழன் ஏற்றுக் கொள்ள மாட்டான். அந்த சூட்சுமப்பிரிவினையில் இருப்பதுதான் உலக அரசியல். அதில் வெடித்தவையே இலங்கையின் குண்டுகள்! 
அமெரிக்காவின் தீவிரவாதம்

சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, Carter Cables III என்ற பெயரில் வெள்ளை மாளிகை ஆவணங்களை 2010ஆம் ஆண்டில் வெளியிட்டார். அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வும் இஸ்ரேலும் சேர்ந்தே ISIS-ஐ உருவாக்கிய உண்மை வெளிப்பட்டது. தற்போது அமெரிக்காவில் ஆட்சியை பிடித்திருக்கும் ட்ரம்ப், அவருடைய தேர்தல் பிரசார காலங்களில் ISIS-ஐ உருவாக்கியது ஹிலாரி க்ளிண்டன் என பேசியது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமியர்களுக்கு மிகப்பெரும் எதிரியாக இருக்கும் இஸ்ரேலிலும் அமெரிக்காவிலும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு என சொல்லப்படும் ISIS ஒரு கல்லை கூட தூக்கி எறிந்ததில்லை என்பதே அவ்வமைப்பின் ரிஷிமூலத்தை கூறும். அரபு நாடுகளுக்குள்ளும் உலக நாடுகளுக்குள்ளும் ஆதிக்கம் செலுத்த விரும்பும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் தூக்கி வரும் பதாகை, War on terror ! 
அமெரிக்க - சீன போருக்கு களமாகும் இலங்கை

வணிகப்பரவலை பயங்கரவாதத்தின் துணை கொண்டு பிற நாடுகளில் அமெரிக்கா ஏற்படுத்திக் கொண்டிருக்கையில் அமைதியாகவும் நிதானமாகவும் சீனா வளர்ந்து கொண்டிருக்கிறது. சீரான பொருளாதார வளர்ச்சியால் இயல்பாகவே சீனா பிராந்திய (ஆசிய) வல்லரசாக மாறியிருக்கிறது. பிற நாடுகளுக்கு பரவும் முனைப்பையும் சீனா கொண்டிருக்கிறது.

ஆனால், கடல் வழிகளெல்லாம் அமெரிக்காவுக்கு ஏதுவாக இருக்கின்றன. அவற்றை கைப்பற்றுவதில்தான் சீனச்சந்தை விரிவடைய முடியும். அமெரிக்கா அல்லாத இன்னொரு மையத்தை சோவியத்துக்கு பிறகு உலக நாடுகள் தற்போது காணத் தொடங்கியிருக்கின்றன. இன்னொரு மையம் உருவாகும் நேரங்களில் உலகப்போர் மட்டுமே முடிவாக்கப்படும். 
ஆசியப் பிராந்தியத்துக்குள் எப்படியேனும் இடம் பிடித்துவிட அமெரிக்கா பல வகைகளில் முயன்று வந்திருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினை அப்படியொரு வகைதான். அவற்றையெல்லாம் மீறி இலங்கை அரசின் துணையோடு இலங்கைக்குள் நுழைந்து, இந்தியப்பெருங்கடல் வணிகத்தை தனக்கென சீனா ஆக்கியிருக்கிறது. இந்தியப் பெருங்கடல் வழியை கைப்பற்ற இலங்கை அரசுக்கு சீனா உதவப் போய்தான் ஈழத்தை நாம் இழந்தோம். சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் அமெரிக்கா முறியடிக்க முடியவில்லை எனில், எப்படியேனும் இலங்கைக்குள் தன் காலையும் பதித்துவிட முடியவில்லையெனில், அமெரிக்கா ஆசியாவை இழக்க நேரிடும். உலகின் பெருங்கண்டமான ஆசியாவில் சீனா வல்லரசாக இருந்தால், உலக வல்லரசாக அது மாறும் நாள் அதிக தொலைவில் இருக்காது.

குண்டுவெடிப்பை துப்பறிய இலங்கை வந்திறங்கியிருக்கும் FBI-ன் இயக்குனர் Chris Wray கூறியிருக்கும் விஷயம் மிகவும் முக்கியமானது. இதுதான் அது.

“பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் நேற்றைய செய்தி அல்ல என்பதை நினைவுபடுத்தும் விஷயமாகவே இலங்கை குண்டுவெடிப்பை பார்க்கிறேன். பயங்கரவாதம் என்கிற பிரச்சினை இன்னும் முடிந்துவிடவில்லை”

எட்டும் தூரத்தில் முடிவு

மோடி பல நாடுகளுக்கு சென்று போட்டிருக்கும் ஒப்பந்தங்கள் என்னென்ன என்பது நம் யாருக்கும் தெரியாது. இந்தியாவின் காவி பயங்கரவாதமும் இலங்கை பேரினவாதமும் ‘இஸ்லாமியர்களே வெளியேறுங்கள்’ என்ற ஒற்றைக் குரலை வந்தடைந்திருப்பது நல்ல அறிகுறி அல்ல. இந்தியப்பெருங்கடல் வணிகமும் தமிழ்நாடு உள்ளிட்ட தக்காண பீடபூமியில் உள்ள வளங்களும் உலக மற்றும் பிராந்திய வல்லரசுகளை ஈர்க்கவல்லது. ஈழத்தை அழித்த சீனாவும் இஸ்லாமியர்களை ஒடுக்க வந்திறங்கியிருக்கும் அமெரிக்காவும் இலங்கையில் ஆடப்போகும் ‘நாடு பிடிக்கும் விளையாட்டு’ தமிழ்நாட்டுக்கு எந்தவிதத்திலும் சாதகமாக இருக்கப்போவதில்லை.

உலகப்போரை சந்திக்கும் கடைசி மனிதர்களாக நாம் இருக்கலாம்!

எழுதியவர் -ராஜசங்கீதன் 


குறிப்பு: நமது வாசகர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இக் கட்டுரையை இங்கு மீள் பிரசுரம் செய்கிறோம். கட்டுரையை எழுதிய ராஜசங்கீதன் அவர்களுக்கும் கட்டுரையை வெளியிட்ட 'கலைஞர் செய்திகள்' இணையத்தளத்துக்கும் மனமார்ந்த நன்றிகள். 

இலங்கை சிந்தும் ரத்தம் உண்மையில் யாருக்கானது ? வரலாறு தரும் புதுக்கோணம் ! | கட்டுரை | கலைஞர் செய்திகள் | ராஜசங்கீதன் 
https://newsigaram.blogspot.com/2019/05/what-is-happening-in-srilanka-is-the-reason-for-world-war.html 
#இலங்கை #சீனா #அமெரிக்கா #ஐஎஸ்ஐஎஸ் #தீவிரவாதம் #வல்லரசு #போர் #உலகம் #அரசியல் #ஆசியா #இந்தியா #வணிகம் #கட்டுரை #ராஜசங்கீதன் #கலைஞர்_செய்திகள் 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts