பயணங்கள் பலவிதம் - 09 (பகுதி - 01)

'யாழ்தேவியில் நாங்கள் காதல் செய்தால் யாழ் மீட்டுமே ரயில் தண்ட வாளம்' என்றொரு இலங்கைப் பாடல் உண்டு. நான் யாழ்ப்பாணத்துக்குச் சென்றபோது அந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்தது. வாங்க என்னோடு பயணிக்கலாம். 



2018/06/11
கொட்டகலை - கொழும்பு 

மீண்டும் அதே கொழும்பு நோக்கிய பயணம். இந்த முறை நான் வேலை செய்து விலகிய நிறுவனத்தில் எனது சம்பளம் உள்ளிட்ட விடயங்களைப் பெற்றுக் கொள்வதற்காகப் பயணமாகியிருந்தேன். 

அதிகாலை மூன்று மணியளவில் எழுந்து கொழும்பு செல்வதற்காகத் தயாரானேன். அதிகாலை நான்கு மணியளவில் எனக்குத் தெரிந்த முச்சக்கர வண்டியில் பயணம் ஆரம்பமானது. சுதா என்னும் முச்சக்கர வண்டி நண்பர் கொழும்பில் இருந்து சிலரை ஏற்றி வருவதற்காக சென்றார். ஆகவே அவர் கொட்டகலையில் இருந்து வெறுமனே தான் சென்று வர வேண்டும். அதனால் நான் கொழும்பு செல்ல வேண்டியிருப்பதை அறிந்த அவர் தன்னோடு வருமாறு அழைத்தார். நானும் அவருடைய அழைப்பை ஏற்று அவருடன் பயணமானேன். 

அதிகாலை நேரம் குளிரும் தூக்கமும் துன்புறுத்தினாலும் அவருடன் உரையாடியபடி பயணித்தேன். காலை எட்டு மணியளவில் ஓரிடத்தில் நிறுத்தி காலை உணவை எடுத்துக் கொண்டோம். காலை ஒன்பது மணியளவில் கொழும்பைச் சென்றடைந்தோம். 




அவர் அழைத்து வர வேண்டியவர்கள் கொள்ளுபிட்டியில் இருந்ததால் என்னை அங்கு இறக்கிவிட்டார். அங்கிருந்து 155 இலக்க பேரூந்தில் ஏறி எனது மனைவியின் அண்ணா வீடு அமைந்துள்ள இப்பாவத்தைக்குப் பயணமானேன். அங்கு குளித்து தயாராகி எனது நிறுவனத்திற்குச் சென்றேன். அங்கு எனது வேலைகளை நிறைவு செய்து கொள்ள மாலை நான்கு மணிக்கு மேல் ஆகிவிட்டது. 




2018/06/12 

அடுத்த நாள் தொழில் திணைக்களத்திற்குச் சென்று எனது ஊழியர் நம்பிக்கை நிதிய உதவு தொகையை மீளப் பெறுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தேன். 
















பின் எனது நண்பன் திரேஸ் தொழில் புரியும் ஈஸ்வரன் பிரதர்ஸ் நிறுவனத்தின் தொட்டலங்க பிரிவுக்குச் சென்று அவனைச் சந்தித்து உரையாடினேன். அங்கிருந்து நாம் இருவரும் இணைந்து பேஸ்புக்கில் நேரலை காணொளி ஒன்றையும் பதிவு செய்தோம். 

பின் மாலை ஆறு மணிக்கு அங்கிருந்து இருவரும் புறப்பட்டு கோட்டை புகையிரத நிலையத்திற்குச் சென்று அடுத்த நாள் யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்காக ஆசன முன்பதிவு செய்து கொண்டு வந்தோம். அன்றிரவும் நண்பனது அறையிலேயே தங்கிக் கொண்டேன். 

2018/06/13
கொழும்பு - யாழ்பாணம் 

அதிகாலை 05.10 மணிக்கு கல்கிஸ்சையில் இருந்து புறப்பட்டு கொழும்பு கோட்டை, அநுராதபுரம், வவுனியா, யாழ்ப்பாணம் ஊடாக காங்கேசன்துறை நோக்கிப் பயணிக்கும் கடுகதிப் புகையிரதத்தில் ஆசன முன்பதிவு செய்திருந்தேன். 




அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் புகையிரத நிலையம் சென்றுவிட்டேன். 05.10 மணிக்கு கல்கிஸ்சையில் இருந்து புறப்பட்ட புகையிரதம் காலை 05.35 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடைந்தது. முழுவதும் முதல் வகுப்பு முன்பதிவு ஆசனங்களை மட்டுமே கொண்ட புகையிரதம் அது. ஆசன முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அப்புகையிரதத்தில் பயணிக்க முடியும். புகையிரதம் வரும்போது பயணச்சீட்டு பெற்று பயணிக்க முடியாது. 










A முதல் F வரை எழுத்துக்களில் புகையிரதப் பெட்டிகள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. எனது ஆசனம் E-34. நான் முதலில் எனது ஆசனம் உள்ள பெட்டியைக் கண்டறியும் வழி தெரியாது தடுமாறி விட்டேன். பின் புகையிரத நிலைய ஊழியர் ஒருவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். ஆசன இலக்கத்துடன் குறிப்பிடப்பட்டுள்ள ஆங்கில எழுத்து உள்ள பெட்டியில் தான் பயணிக்க வேண்டும்.






யன்னலோர ஆசனம். ஆனாலும் யன்னலைத் திறக்க முடியாது. முதல் வகுப்புப் பெட்டி என்பதால் குளிரூட்டப்பட்டிருக்கும். ஆனால் நான் பயணித்த பெட்டியில் குறைந்த அளவிலேயே குளிரூட்டப்பட்டிருந்தது. காலை 05.45க்கு கொழும்பு கோட்டையில் இருந்து புகையிரதம் தனது பயணத்தை ஆரம்பித்தது. 




கடுகதிப் புகையிரதம் என்பதால் பிரதான நிலையங்களில் மட்டுமே நிறுத்தப்பட்டது. ஒரு மணித்தியாளமளவில் கொஞ்சம் தூங்கினேன். கண்விழித்தபோது யன்னலினூடே வெயில் சுள்ளென்று அடித்தது. வெயிலினால் ஏற்பட்ட வெப்பம் காரணமாக நான் பயணித்த பெட்டியில் குளிரூட்டி (வளிச்சீராக்கி) தொழிற்படவில்லையோ எனத் தோன்றியது. 


புகைப்படத்தில் இடம் கொழும்பு (Colombo) எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இனி வரும் புகைப்படங்கள் கொழும்பில் எடுக்கப்பட்டவை அல்ல என்பதைக் கவனத்திற் கொள்க. திறன்பேசியில் இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே Location Update ஆகும். இல்லாவிட்டால் நாம் இறுதியாக இணைத்த Location ஐயே காட்டும். 



கொழும்பு - யாழ்ப்பாணம் பயணப் பாதையில் கிளிக்கியவை... 





























வவுனியாவைத் தாண்டிய பொழுது சமவெளி நிலப்பரப்பில் வெற்று நிலங்களையே அதிகம் காண முடிந்தது. மலையகம் முழுவதும் பச்சைப் பசேலென்ற இயற்கையால் முழுவதும் சூழப்பட்டிருக்கும். 















உணவகத்துக்கு என தனிப்பெட்டி ஒதுக்கப்பட்டிருந்தது. தேநீரும் சிற்றுண்டியையும் பெற்றுக்கொண்டு அமர்ந்தேன். 








அங்கு சில செல்பிகளையும் கிளிக்கினேன். காலை உணவை முடித்துக்கொண்டு எனது இருக்கைக்குத் திரும்பினேன். 



















யன்னலினூடே தெரிந்த இயற்கையை ரசித்தபடி எனது பயணம் தொடர்ந்தது. காலை 11.55க்கு யாழ் புகையிரத நிலையத்தை சென்றடைந்தேன். 






நான் யாழ் வருவதை நண்பன் விசுவுக்கு முன்னதாகவே தெரியப்படுத்தியிருந்தேன். ஆகவே யாழ் ரயில் நிலையத்தில் இருந்து நண்பன் விசுவுக்கு அழைப்பை ஏற்படுத்தினேன். 



அன்றைய தினம் அவனுக்கான வேலை நாளாக இருந்த காரணத்தால் அவனது வழிகாட்டலின் படி, புகையிரத நிலையத்தில் இருந்து முச்சக்கர வண்டியில் யாழ் பேரூந்து நிலையம் வந்து, அங்கிருந்து அவனது தங்கும் அறை அமைந்திருந்த மருதனார் மடம் நோக்கி பேரூந்தில் பயணமானேன். 































அன்றிரவு நண்பன் வேலை முடிந்து வந்ததும் பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினோம். மோட்டார் சைக்கிளில் சென்று இரவு உணவு எடுத்து வந்து உண்டோம். அவன் தங்கியிருந்தது ஹோட்டல் விடுதி ஒன்றில். அவனைப் போன்ற, தொழில் செய்யும் சிலருக்கு மாத வாடகைக்குக் கொடுத்திருந்தார்கள். விருந்தினர்கள் நாள் வாடகையில் தங்கிக் கொள்ளலாம். எனக்கும் ஒரு அறை எடுத்துத் தர, அங்கு உறங்கினேன். 

(இரண்டாம் பகுதி விரைவில்...)

பின் குறிப்பு: 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி முதல் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் திகதி வரை நான் மேற்கொண்ட பயணங்களின் தொகுப்பே இது. 

இதனை சுமார் 11 மாதங்கள் (ஒரு வருடத்திற்கு ஒரு மாதம் மட்டுமே குறைவு) கழித்து உங்கள் பார்வைக்கு சமர்ப்பிப்பதற்கு மன்னிக்கவும். 80 வீதமான பதிவை முன்னரே எழுதிவிட்டேன். ஆனால் மீதம் 20 வீதத்தை எழுதி பூரணப்படுத்தி உங்களுக்கு வழங்க சந்தர்ப்பம் அமையாமல் போய்விட்டது. 

இருந்தாலும் எனது பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைத்து இதனை இச்சந்தர்ப்பத்தில் உங்கள் முன் வைக்கிறேன். 

நன்றி! 

பயணங்கள் பலவிதம் - 09 
https://newsigaram.blogspot.com/2019/05/PAYANANGAL-PALAVIDHAM-09-PART-01.html 
#கொட்டகலை #கொழும்பு #யாழ்ப்பாணம் #வவுனியா #பயணம் #அனுபவம் #இலங்கை #Kotagala #Colombo #Jaffna #Vavuniya #Travel #Experience #LK #LKA #Lanka #SriLanka

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!