பாலியல் பகிடிவதைக்குள் சிக்கித் தவிக்கும் கொழும்புப் பல்கலைக் கழக மாணவிகள்
கொழும்புப் பல்கலைக் கழக மாணவிகள் மீது பாலியல் ரீதியான பகிடி வதைகள் மேற்கொள்ளப் படுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக அதிரடித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பகிடி வதைகளுக்கெதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வந்தாலும் அவை இல்லாதொழிக்கப் படவில்லை. மாறாக, அவற்றை மறைமுகமாக மேற் கொள்ளப் பட்டு வருகின்றன.
கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் படி கொழும்புப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவிகள் உயர் கல்வி அமைச்சுக்கு அனுப்பியுள்ள அநாமதேயக் கடிதமொன்றின் மூலமே இவ்விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்விடயம் குறித்த மேலதிகத் தகவல்கள் வருமாறு:
மேற்படி பாலியல் பகிடி வதைகளுக்குள்ளாக்கப் படும் மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள இருட்டறை ஒன்றுக்கு வருமாறு பணிக்கப் படுகின்றனர். அந்த மாணவிகள் இருட்டறைக்குள் சென்று சிறிது நேரத்தின் பின்னர் ஆண் மாணவர் குழுவொன்று அவ்வறைக்குள் செல்லும். பின்னர் அந்த மாணவிகள் மாணவர்களுக்கு உடல் மசாஜ் செய்யும்படி உத்தரவு வழங்கப் படும். இச்செயலில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் காண முடியவில்லை என்று உயர் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப் படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேவையேற்படின் காவல் துறையினரின் உதவி நாடப் படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இது பல்கலைக் கழகங்களின் நற் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதுடன் மாணவர்களின் கல்வியையும் பாதிக்கும்.
பல்கலைக் கழக பகிடி வதைகள் தொடர்பான அனைத்துப் புள்ளி விவரங்களின் படி 15 மாணவர்கள் இறந்துள்ளனர். இருவர் தற்கொலைக்கு தூண்டப் பட்டுள்ளனர். 25 பேர் பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கப் பட்டுள்ளதுடன், 6000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக் கழகங்களில் இருந்து விலகியுள்ளனர்.
பகிடி வதை என்னும் மிருகத் தனமான சேட்டை பல்வேறு முறைகளிலும் மாணவர்கள் மீது பிரயோகிக்கப் பட்டு வருகிறது. இலங்கையின் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் இது பரவலாக இடம் பெற்று வருகிறது. உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகும் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர முடியாது சிரமப் படுகின்றனர்.
ஆகவே இது தொடர்பில் உயர் கல்வி அமைச்சு தனது தீவிர கவனத்தைச் செலுத்த வேண்டுமென்பதுடன் இவ்வாறான சம்பவங்கள் உரியவர்களால் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
தகவல் மூலம்: the Sunday times - http://sundaytimes.lk/
தகவல் பக்கங்கள்:[1] http://www.sundaytimes.lk/120610/News/nws_03.html
நிச்சயமாய் கவனிக்க வேண்டியதோர் பதிவு.காரணம் தவறி இன்று நடக்கும் இந்த பகிடிவதைகளுக்குள் பகிடி உண்டோ இல்லையோ வதை நிச்சயம் உண்டு.ஆக்கபூர்வமான பதிவு.வாழ்த்துக்கள் சொந்தமே
ReplyDeleteகருத்துரைக்கு நன்றி தோழியே. இவ்வாறான கருத்துரைகளின் மூலமே வாசகர்களின் மன உணர்வுகளை அறிய முடிகிறது. நன்றி தோழி.
Delete