Sunday, 3 June 2012

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு (03) - ஆய்வரங்கு - கணினியும் தமிழும்.அரங்கு எண்: 01
பேராசிரியர் ஆ.மயில்வாகனம் அரங்கு
(மண்டபம் 01 - சங்கரப்பிள்ளை மண்டபம்)
02-06-2012 பி.ப - 01:45: - 04:45 மணி.

அரங்கு:

கணினியும் தமிழும் 

இணைத் தலைமை: ஞா.பாலச்சந்திரன் (கணினி விரிவுரையாளர்), டாக்டர் எம்.கே.முருகானந்தன் 
ஆய்வு மதிப்பீட்டாளர்: மேமன் கவி 
இணைப்பாளர்: ஆ.குக மூர்த்தி.

ஆய்வுக் கட்டுரைகள்:
1. தொலைக்கல்வியில் கணினியின் பங்கு - இலங்கை மீதான ஒரு கண்ணோட்டம் - ரதிராணி யோகேந்திர ராஜா (யாழ் பல்கலைக் கழகம்)
2. தகவல் தொழில் நுட்பத்தில் தமிழ், சவால்களும் தீர்வுகளும் - ஒரு பார்வை - தங்கராஜா தவரூபன் (தலைமை நிறைவேற்று அலுவலர், இணையத்தள/ மென்பொருள் வடிவமைப்பாளர், யாழ் பல்கலைக் கழகம்)
3. தமிழும் இணையமும் - பேராசிரியர் மு.இளங்கோவன் ( பாரதி தாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுச் சேரி, தமிழ் நாடு. வலைத்தளம்: http://muelangovan.blogspot.com/ )
4. "விழி மொழி" - தமிழ் சைகை மொழி கணினியாக்கம் - சிவஜோதி வஞ்சிக்குமரன் (மென்பொருள் பொறியியலாளர்) - பதிலியாக கட்டுரையை விழாவில் சமர்ப்பித்தவர் - ரமேஷ் குமரேசன்.
5. தமிழ் கணினி - செய்ய வேண்டியவை - கெ.சர்வேஸ்வரன் ( கணினி விரிவுரையாளர், இணையம் : http://k.sarveswaran.lk/ )


ஆய்வரங்குத் தொகுப்பு:
                        'தொலைக் கல்வியில் கணினியின் பங்கு' பற்றிக் குறிப்பிடும் போது கணினி - இணையம் வழிக் கற்பதை மட்டும் 'தொலைக் கல்வி' என்ற பதம் குறிக்க வில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தபால் மூலம் கற்பது கூட தொலைக் கல்வி தான். ஆனால் இன்று தபால் மூலத் தொலைக் கல்வியை விட கணினி - இணைய வழித் தொலைக் கல்வியே அதிக முக்கியத்துவம் - செல்வாக்குப் பெற்று விளங்குகிறது. இலங்கையில் 2003 இல் தொலைக் கல்வியை நவீன மயமாக்கும் திட்டம் - (Distance Education Modernization Project - DEMP) - இன் கீழ் உருவாக்கப் பட்ட NODES - National Online Distance Education Service) - நிறுவகத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


                         ஆய்வுப் பிரச்சினையாக "தொலைக் கல்வியில் கணினியின் பங்கு ஏன் முக்கியத்துவமுடையதாக கருதப் படுகிறது?" எனும் கேள்வி முன் வைக்கப் பட்டது. இதற்கு பதிலாக பின்வரும் விடயங்களைக் கூற முடியும். 1.வயது வேறு பாடு இல்லை. 2.தொழில் புரிந்து கொண்டே கற்கக் கூடிய வசதி. 3.சுய கல்வி வசதி. 4.தொழி நுட்ப அறிவு விருத்தியாகும். இவை மட்டுமின்றி இன்னும் பல காரணிகள் உள்ளன என்பதை கருத்திற் கொள்க.

                         யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் மூலம் இந்த இணைய வழி தொலைக் கல்வியை தமிழில் பெற முடிகிறது. நிற்க, நீங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இணையத் தளம் என்ன எழுத்துரு (font) வைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்டுள்ளது என்பதை அறிவீர்களா? இக் கேள்வி நம்மை அடுத்த ஆய்வுக்குள் அழைத்துச் செல்கிறது.

                          தமிழ் எழுத்துருவில் எழுத, தமிழ் மின் நூல்களை வாசிக்க போன்ற வசதிகளை வழங்கக் கூடிய சில இணையத் தளங்கள் இவ் அரங்கிலே பட்டியலிடப்பட்டன. அவை வருமாறு.
                'இணையம்' என்ற சொல் தமிழுக்கு முதன் முதலில் 1995 இல் பாலாபிள்ளை என்பவரால் அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. இணையத்தை தரவுத் தளம் (Database), இணையத் தளம் (Website), வலைப்பூ (Blog spot), மின் இதழ்கள் (e-magazine), இணையக் குழுக்கள் என வகைப் படுத்தலாம். கணினியில் தமிழில் தட்டச்சு செய்ய தமிழ் 99, பாமினி, முரசு அஞ்சல், இ-கலப்பை, செம்மொழி எழுத்துரு முதலான எழுத்துரு வகைகள் பயன் படுத்தப் படுகின்றன. 1984 இல் 'பெத்தலேகம் கலப்பகம்' எனும் நூல் முதன் முதலில் கணினி வழி அச்சேற்றம் கண்டது. பாமினி எழுத்துருவை மானிப்பாய் என்ற இடத்தைச் சேர்ந்த ராமலிங்கம் முத்தையா என்பவரே உருவாக்கினார். இவரே தமிழ் விசைப் பலகையின் முன்னோடியுமாவார்.


                         இப்போது இலங்கை உள்ளிட்ட 5 நாடுகளில் தாய் மொழியில் இணையத் தள முகவரியைக் கையாளும் வசதி உருவாக்கப் பட்டுள்ளது. http://தளம்.பாராளுமன்றம்.இலங்கை என்பது இலங்கை பாராளுமன்ற இணையத் தளத்துக்கான தமிழ் மொழி மூல முகவரியாக அமைகிறது. ஆனால் இது தமிழகத்தில் இன்னும் பரிசோதனை நிலையிலேயே உள்ளது.


                  கணினியில் அல்லது இணையத்தில் தமிழைப் பயன்படுத்த முனையும் போது அதில் பல சிக்கல்கள் எழுகின்றன. அந்த சிக்கல்களை ஏற்படுத்தும் காரணிகள் அல்லது கணினி / இணையத்தில் தமிழைப் பயன் படுத்துவதில் உள்ள சவால்களை மிகச் சரியாகக் கண்டறிந்து உரிய தரப்பினர் அதற்கான தீர்வுகளை முன்வைக்க வேண்டும். அப்போது 'தமிழ்க் கணினி' என்ற எண்ணக் கரு முழுமை பெறும்.


                       தற்போது உலகிலே வித விதமான சாதனங்கள், மென் பொருட்கள் என நாளுக்கு நாள் ஏதேனும் ஒரு புதுமை படைக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சிவஜோதி வஞ்சிக் குமரன் அவர்களால் உருவாக்கப் பட்டுள்ள புதிய மென் பொருள் தான் "விழி மொழி மென்பொருள்". வாய் பேச முடியாதவர்கள் சைகை மூலம் கணினியைப் பயன் படுத்துவதை சாத்தியமாக்குவதே இம் மென்பொருளின் இலக்காகும். நேரடி சைகை, கைவிரல் சைகை என இரு வகையாக சைகை மொழியினை பிரிக்கலாம். இவர் கை விரல் சைகையினை அடிப்படையாக கொண்டு இம் மென்பொருளை உருவாக்கியுள்ளார். கிட்டத் தட்ட 74% "விழி மொழி மென்பொருள்" வெற்றியளித்துள்ளது.


                       நிறைவாக ஆய்வுக் கட்டுரைகள் மேமன் கவி அவர்களால் தர மதிப்பீடு செய்யப் பட்டன. அவர் "கணினியில் தமிழ் தொழிநுட்பம் பற்றி ஆய்வாளர்கள் பேசினார்கள். ஆனால் கணினியில் தமிழ் இலக்கியத்தின் பங்கு பற்றி பேசப்படவில்லை" என்பதை சுட்டிக் காட்டினார். மேலும் "கணினி மற்றும் இணைய தளங்களின் வருகையின் பின்னர் வாசிப்பு முறைமையில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றி நாம் சிந்தித்துள்ளோமா?" என்கிற முக்கியமான வினாவையும் நம் முன் வைத்தார். இப்போது சுண்டுவிரல் தொடர்பாடல் முறைமை (குறுஞ்செய்தி - SMS அனுப்பல்) பெருகிவிட்டது. எனவே மேற்படி கேள்வி முக்கியமானதே எனவும் சுட்டிக் காட்டினார். ஆய்வரங்கிலே 'Standard' எனும் ஆங்கிலச் சொல்லுக்கு 'செந்தரம்' என்ற கலைச் சொல் தங்கராஜா தவரூபன் அவர்களால் பயன் படுத்தப் பட்டது வரவேற்கத் தக்கது. சான்றிதழ் வழங்கலுடன் ஆய்வரங்கு இனிதே நிறைவு பெற்றது.


தகவல்கள்: உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 இல் இருந்து நேரடியாக - சிகரம் பாரதி.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...