Friday, 1 June 2012

எல்லைகளுக்குட்பட்டு இயங்கக் கவிதை என்பது சிற்றோடை அல்ல

- சிகரம் பாரதி


தமிழ்க் கவிதை வரலாற்றில் மரபுகள் உடைக்கப்பட்டு புதுக்கவிதை வரலாறு ஆரம் பித்த காலத்திலிருந்துஇன்றுவரை‘கவிதை’ பற்றிய பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றுவருகின்றன. இந்த வாதங்கள், பல மாறுபட்ட கோணங்களில் மேற்கொள்ளப் பட்டுவருகின்றன. சிலர் ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்துவரும் அதே நேரம், வேறு சிலர் தம் கருத்தை முதன்மைப் படுத்தி பிறர் கருத்தை ஆராய்ந்தறியாது நிரா கரித்தும் வருகின்றனர்.


இன்னொருவரது கருத்தை விமர்சிக்க முனையும் விமர்சகர்கள் கருத்தை விட்டு விட்டு, கருத்தைத் தெரிவித்தவரைப் பற்றி தவறான முறையில் விமர்சிக்கின்றனர். இது ஆரோக்கியமான செயற்பாடல்ல. ஆனால் வாதப் பிரதிவாதங்களின் மூலம் கவிதைக் கலை குறித்து காலத்துக்குக் காலம் பல மாறுபட்ட தீர்மானங்களை எடுப்பதற்கான அல்லது முன்வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனினும் கவிதையானது தன்னை ஒரு தீர்மானத்துக் குள் அல்லது வரையறைக்குள் உள்ளடக்கிக் கொள்ளாமல் தன்போக்கில் பயணித்துக் கொண்டே விவாதங்களுக்கும் இடமளித்துச் செல்கிறது.


“ஒரு கலையானது வரைவிலக்கண மொன்றுக்குள் அடக்கப்படக்கூடியதா?” என்ற கேள்வி நம்முன் எழுகிறது. வரை விலக்கணமானது குறித்த விடயத்திற்கான எல்லைகளை நிர்ணயித்து, அந்த எல்லைக் குள்ளேயே முழு விடயத்தையும் மட்டுப் படுத்திவிடுகிறது. கவிதைக் கலையானது எல்லைகளுக்குட்பட்டு இயங்கக் கூடியதா என்றால் இல்லை என்பதே பதில். இதன் மூலம் கவிதைக்கென எந்தவொரு நிலை யான வரைவிலக்கணங்களும் இல்லை என்பது உறுதியாகிறது. எல்லைகளுக்குட் பட்டு இயங்க, கவிதை என்பது சிற்றோடை அல்ல; கவிதை என்பது காட்டாறு. தான் விரும்பும் இடமெங்கும் தன் தடத்தைப் பதிக் கும். கவிதை குறித்த வரைவிலக்கணங்கள் யாவும், அவரவர் சுயகருத்தேயன்றி அங்கீ கரிக்கப்படத்தக்க வரைவிலக்கணமல்ல.


புதுக் கவிதையயன்று பார்க்கும்போது அதன் முன்னோடியாகத் தமிழில் மஹாகவி பாரதியையே குறிப்பிடுகிறோம். புதுக்கவிதை இன்று பல பரிமாணங்களைக் பெற்றிருக் கின்றது. புதுக்கவிதைகளின் ஆட்சிக்காலம் இது. புதுக் கவிதைகள் செல்வாக்குப் பெற்ற தற்கான காரணம் எவ்வித வரையறையு மின்றி யாவராலும் எழுதக்கூடியதாக அமைந்துள்ளமையே எனலாம்.


கலையானது நிலைபெறும் போது அதற் குரிய தனித்தன்மையுடன் நிலை பெறுகின் றது. புதுக்கவிதையும் அதனைப் போன் றதே. வரிகளை உடைத்து போடுவது தான் புதுக்கவிதையல்ல. புதுக்கவிதையானது தானே அதற்குரிய தனித் தன்மையுடனும், அடையாளங்களுடனும் தன்னை இனம் காட் டுகிறது.


இதுவே கவிதையை ஏனைய இலக்கிய வடிவங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும். ஆனால் நயமுடன் எழுதப்பட்ட ஒன்று கவிதையாகத் தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு கட்டுரை கூட அவ் வாறு அமையலாம். ஆனால் கவிதைக்கே யுரிய சிறப்பம்சமாக இந்த நயத்தைக் குறிப் பிடலாம். கவிதையின் மீதான வாசகனின் ரசனையை இதுவே ஈர்த்து வைத்திருக்கிறது.


கவிதையில் முக்கியமானது “பாடு பொருள்” அதாவது எந்த விடயத்தை மைய மாகக் கொண்டு கவிதை படைக்கப்படுகி றதோ அதுவே பாடுபொருளாகும்.


மஹாகவி பாடுபொருள் பற்றி


“இன்னவைதான் கவி எழுத
ஏற்றபொருள் என்று பிறர்
சொன்னவற்றை நீர் திருப்பிச்
சொல்லாதீர்! சோலை, கடல்
மின்னல், முகில், தென்றலினை
மறவுங்கள் மீந்திருக்கும்
இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு
என்பவற்றைப் பாடுங்கள்.”
எனக் கூறியிருப் பது பாடுபொருளின் உள்ளடக்க அமைவை வெளிப்படுத்தி நிற்கிறது.


மக்களின் யதார்த்த வாழ்வியலைச் சித்தி ரிக்கும் இலக்கியங்கள் படைக்கப்படுவதன் மூலமே ஒரு சமூக முன்னேற்றத்திற்கான விதை விருட்சமாக முடியும். எனவே பாடு பொருள் குறித்த தெளிவுடன் எதிர்காலத்தில் இலக்கியங்கள் (கவிதைகள்) படைக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். ஏனெனில் காதல் என்ற கற்பனை உலகத்தைப் பாடுவதைவிட வறுமை என்ற நிஜ உலகைப் பாடுவதே சாலச் சிறந்ததாகும்.


புதுக்கவிதையைப் பற்றிப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் “நன்கு பிரபலமானவர்கள்” என்று சொல்லப்படுபவர்களை மையமாக வைத்தே விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. வாசகர் என்ற நிலையிலிருந்து கூட ஆர்வத் தின் மிகுதியால் பலரால் கவிதைகள் எழுதப் படுகின்றன. புதுக் கவிதை தொடர்பான வாதங்களுக்கு இவ்வாறான வாசகர்களால் எழுதப்படும் கவிதைகள் கணக்கெடுக்கப்படு வதில்லை. முன்னணிக் கவிஞர்கள் எனப் படுவோரைப் பார்க்கிலும் இவர்களாலும் மிகச் சிறந்த கவிதைகள் எழுதப்படுகின்றன. புதுக்கவிதை சரியாகக் கையாளப்படுகிறதா இல்லையா என்பதை இவர்களது கவிதை களையும் ஆய்வு செய்த பின்னரே முடிவு செய்யவேண்டும்.


புதுக்கவிதை எதிர்ப்பு வாதம் என்பது போலியானது. அது ஒரு இயலாமையின் வெளிப்பாடு. புதுக்கவிதை மக்களால் ஏற் கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு மக்களால் ரசிக் கப்பட்ட சூழலையே நாம் இன்று காண்கி றோம். இச்சந்தர்ப்பத்தில் புதுக்கவிதை தேவையா இல்லையா என்கிற வாதம் புறந் தள்ளப்பட வேண்டியது. மேலும்,புதுக் கவிதை சரியாகக் கையாளப்படவில்லை என்று விமர்சிப்பவர்கள், அதனைச் சரியா கக் கையாளக் கற்றுத்தர முன்வருவ தில்லை. அதற்கான எந்தவொரு ஆக்கபூர்வ மான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. வீண் நியாயம் பேசுபவர்கள் செயற்பட மட்டும் முன் வருவதில்லை.


கவிதை என்பது மன உணர்வுகளின் ஒரு வெளிப்பாடே. சில புனைவுகளைச் சேர்த் துச் சொல்வதால் அதற்கென ஒரு தனிநடை யும் சிறப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. புனைவு களின்றி ஒரு நயமின்றிச் சொல்லப்பட்டால் அது ஒருபோதும் சிறந்த கவிதையாக மாட் டாது. வாசகனை ஈர்க்கும் காரணிகளில் புனைவுகளுக்கும் ஒரு முக்கிய இடமுண்டு. நாம் சொல்ல வந்த கருத்துக்களை ஒப்பீடுக ளுடன் விளக்கும்போது அக்கவிதையில் ஒரு அழுத்தத்தை உணர முடிகிறது.


கவிதையில் கையாளப்படும்மொழிநடை குறித்துப் பேசும்போது வாசகர் மட்டத்திலி ருந்து முரணான ஒரு கருத்தே முன்வைக் கப்படுகிறது. அதாவது கவிதையில் கையா ளப்படும் மொழிநடை புரியவில்லை என்பதா கும். நான் மேலே குறிப்பிட்டபடி புனைவுக ளுடன் கவிதை எழுதும்போது சாதாரண மொழி நடையில் எழுத முடியாது. மேலும் ஒரு மிகச் சிறந்த கவிதையானது குறிப்பிட்ட ஒரு அர்த்தத்தை மட்டும் நேரடியாக உணர்த்துவ தாக அமையக் கூடாது. வாசிப்பவரின் மன நிலையைப் பொறுத்து மாறுபட்ட அனுபவங் களை வழங்கக்கூடியதாக அமைய வேண் டும்.இதற்கு சாதாரண மொழிநடை பொருத்த மற்றது. கவிதையின் சிறப்பம்சங்கள் அதில் கையாளப்படும் மொழியும் ஒன்றாகிறது.


இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ்க் கவிதையை ஈழத்துத் தமிழ்க் கவிதை, மலையகத் தமிழ்க்கவிதை என இரு வகைப் படுத்தியே பார்க்கப்படுகிறது. இவ்வாறு வகைப்படுத்தப்படக் காரணம் இரு பிரதேசங் களினதும் வாழ்க்கை முறையும் வாழ்க்கைத் தரமும் சூழலும் மாறுபட்டு அமைந்திருப்பதா கும். எனினும் இலங்கையின் கவிதையை அடையாளப்படுத்த முனைவோர் ஈழத்துக் கவிதைகளை மட்டுமே கவனத்திற் கொள் கின்றனர். மலையகத் தமிழ்க் கவிதைகள் உரிய இடத்தைப் பெறாமல் போய்விட்டதா எனும் கேள்வி இவ்விடத்தில் எழுகிறது. பத் திரிகைகளாகட்டும் சஞ்சிகைகளாகட்டும் ஈழக் கவிதைகளுக்கே முன்னுரிமை வழங்கு கின்றன. மலையக எழுத்தாளர்களின் கவி தைகளும் சரி அவர்களது நூலாக்கங்களும் சரி பெரிதாக அடையாளப்படுத்தப்படுவ தில்லை. இந்த நிலைமையின் பின்னணி என்ன என்பதை அறிய முடியவில்லை. ஆனால் இரு பிரதேசக் கவிதைகளுமே இன் னமும் முழுமையான விருத்தியை அடைய வில்லை என்பதே உண்மை.


மொழி என்ற எல்லையைக் கடக்கும் போது வானவில்லின் வர்ண ஜாலங்களாய் விரியும் படைப்புலகின் அதிசயங்கள் நம்மை வியக்கவைக்கின்றன. அந்த வகையில் மொழிபெயர்ப்புக் கவிதைகளும் ஒரு முக் கிய இடத்தைப் பெறுகின்றன. இவ்வகைக் கவிதைகள் விசேடமாக நோக்கப்படுகின் றன. இதில் சிறப்பான அம்சம் என்ன வெனில் மொழிபெயர்த்து கவிதையை எழுது பவர் இருவகைப் பாத்திரத்தை வகிப்பதாகும். அதாவது எழுத்தாளனே வாசகனாகவும் இருப்பதாகும். எழுதுகின்ற எல்லோருமே எழுத்துத்துறையில் இருக்கின்ற எல்லோ ருமே வாசகர்களாகவும் இருப்பார்கள். ஆனால் மொழிபெயர்ப்புக் கவிதைகளைப் பொறுத்த வரையில் வாசகன் எழுத்தாளனா கவும் எழுத்தாளனே வாசகனாகவுமாக இரு வகைப் பணிகளையும் ஒரேநேரத்தில் ஆற்ற வேண்டியிருக்கிறது.


மூலக்கவிதையை எழுதுகையில் கவி ஞன் என்ன மன உணர்வைப் பிரதிபலித் தானோ அதே மன உணர்வை பெயர்ப்புக் கவிதையை எழுதுபவரும் வாசிப்பவரும் அடைய வேண்டியது அவசியமாகிறது. மூன்று தரப்பினர் சம்பந்தப்படும் இலக்கிய வடிவம் என்றால் இது தான்.


இன்று கவிதையானது பலதரப்பட்ட மக்க ளையும் சென்றடைகிறது. எனவே நாம் கவிதை பற்றிய ஆக்கபூர்வமான நடவடிக் கைகளை எடுக்க வேண்டியது அவசியமா கும். மரபுக் கவிதை, புதுக்கவிதை என்னும் எல்லைகளைக் கடந்து அதன் சூட்சுமங் களைப் புரிந்து கவிதையை அணுகுவதே எதிர்காலத்தில் வளமான கவிதையைக் கண்டடைவதற்கு வழிவகுக்கும்.


முக்கிய குறிப்பு: மேற்படி கட்டுரையானது 'மறுபாதி' என்னும் ஈழத்து கவிதை சஞ்சிகை ஒன்றில் வெளியானதாகும். (இதழ் எண்: 04) இது அவர்களின் வலைத்தளத்திலும் வெளியாகியிருந்தது. அதனை பிரதி எடுத்து எனது வலைத்தளத்தில் மீள் பிரசுரம் செய்கிறேன். இது என்னால் எழுதப்பட்ட கட்டுரை ஆகும்.


'மறுபாதி' வலைத்தள முகவரி: http://marupaathy.blogspot.com/


எனது கட்டுரையை 'மறுபாதி' வலைத்தளத்தில் காண: http://marupaathy.blogspot.com/2010/10/blog-post_5120.html


நன்றி: மறுபாதி.

7 comments:

 1. வணக்கம் பாரதி!உண்மையில் கவனிக்கப்பட்டிருக்கவேண்டிய பதிவு இது.நீளம் கருதியோ,எழுத்துருவின் அளவு காரணமாயோ நேரமின்மையோ இதை கவனிக்கத்தவறியிருக்கலாம்.

  இங்கு எடுத்து பேசப்பட்ட பொருள் அவசியமானது.கவிதைக்கலாச்சாரத்தின் வளர்ச்சி பற்றியது.

  கருத்துரைப்பது அவசியம்.ஆனால் மேற் சொன்னது போல படைப்பாளியை விமர்சிப்பது தான் ஆரோக்கியமற்றது.

  புதுக்கவிதை என்பது சுதந்திரமானது.ஆனால் சில சமயங்களில் புரிதலுக்கு அப்பாற்படுகிறது.நானும் அத்தவறை செய்ததுண்டு.

  எப்படியோ சமூகநோக்கில் பல்வகை இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும்.அது தான் எல்லோரது விருப்பமும்.!
  வாழ்த்துக்கள் பாரதி.!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் விரிவான பார்வைக்கு மிக்க நன்றி உள்ளமே. எந்தவொரு விடயத்திற்குமே புரிதல் தான் முக்கியமானது. அந்தப் புரிதல் உங்களிடம் இருக்கிறது. ஆதலால் தவறுகளை திருத்திக் கொள்வது எளிதானதே. நிச்சயமாக நம் தமிழ் இலக்கியங்கள் புதிய பாதை நோக்கி பயணிக்கும் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது, சந்திப்போம் உள்ளமே.

   Delete
 2. நண்பா, தற்காலக் கவிதை பற்றி மிக அழகாக கூறியுள்ளீர்கள். அருமை. எழுத்தின் அளவை சிறிது அதிகப் படுத்தலாம் என்று நினைக்கிறேன், மிகவும் சிறியதாக இருப்பதால் சற்று படிக்க சிரமமாக உள்ளது...

  ReplyDelete
  Replies
  1. நன்றி. எழுத்தை சரி செய்து விட்டேன்.

   Delete
 3. பாபுனைய விரும்புவோருக்கு இப்பதிவு சிறந்த வழிகாட்டலாக இருக்கும் என்பதால் தங்கள் பதிவை எனது தளத்திலும் பகிர்ந்துள்ளேன்.
  http://paapunaya.blogspot.com/2014/06/blog-post_30.html

  ReplyDelete
 4. கவிதைகள் புதுக்கவிதைகள் பற்றிய சிறப்பான ஒர் அலசல்! விரிவான விளக்கங்கள் அருமை! நன்றி!

  ReplyDelete
 5. கவிதைகளைப் பற்றிய தங்களின் நோக்கு பாராட்டத்தக்கது.
  www.drbjambulingam.blogspot.in
  www.ponnibuddha.blogspot.in

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...