Monday, June 4, 2012

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு (04) - ஆய்வரங்கு - சிற்றிதழ்அரங்கு எண்: 04

'எழுத்து' சி.சு.செல்லப்பா அரங்கு
(மண்டபம் 01 - சங்கரப்பிள்ளை மண்டபம்)
03-06-2012 மு.ப 08:40-பி.ப 12:50 மணி 


அரங்கு:

சிற்றிதழ் இணைத் தலைமை: பேராசிரியர் சபா ஜெயராசா, தா.கோபாலகிருஸ்ணன் 
ஆய்வு மதிப்பீட்டாளர்: எஸ்.மோசேஸ், அன்பு மணி
இணைப்பாளர்: அந்தனி ஜீவா 

ஆய்வுக் கட்டுரைகள்:

1. பெண்களும் சஞ்சிகைகளும் - ஒரு நோக்கு - செல்வி செகராச சிங்கம் ஜனதீபா (உளவியல் துறை விரிவுரையாளர்)

2. இதழியலில் இலத்திரனியலின் தாக்கங்கள் - தி.ஞானசேகரன் ('ஞானம்' ஆசிரியர்)

3. ஈழத்துத் தமிழ்ச் சிற்றிதழ்கள் இலக்கிய வளர்ச்சியில் ஏற்படுத்திய தாக்கம் - ஓர் அவதானிப்பு - தம்பு சிவசுப்ரமணியம் ('கற்பகம்' ஆசிரியர்)


4. கிழக்கிலங்கைச் சிற்றிதழ்களின் வகிபாகமும் அதன் இலக்கியப் பங்களிப்பும் - எஸ்.ஆர்.தனபாலசிங்கம் ('நீங்களும் எழுதலாம்' ஆசிரியர்)

5. பன்முகப் பார்வையில் மலையகச் சிற்றிதழ்களின் இயக்கம் - சு.முரளிதரன் (தலைவர், ஹட்டன் தமிழ்ச் சங்கம்)
6. இணைய இதழ்கள் - பார்வையும் பதிவும் - லெனின் மதிவானம் (பிரதி ஆணையாளர், கல்வி வெளியீட்டுத் திணைக்களம்)
7. ஈழத்துச் சஞ்சிகைகளின் எதிர்காலம் - ச.மணிசேகரன் (ஆசிரியர்)
8. சிற்றிதழ்கள் ஆவணப் படுத்தலின் அவசியம் - சிவானந்தமூர்த்தி சேரன் (பிரதம செயற்பாட்டதிகாரி, இணைய நூலக நிறுவனம், இணையம்: http://noolahamfoundation.org/wiki/index.php?title=Main_Page )

ஆய்வரங்குத் தொகுப்பு:

                    இணைப்பாளர் சபா ஜெயராசாவின் தலைமையுரையுடன் ஆய்வரங்கு ஆரம்பமானது. பல்வேறு பழைய, புதிய மற்றும் அழிந்து போன சிற்றிதழ்களின் முகப்பு அட்டைகள் projector மூலமாக 'நூலகம்' நிறுவனத்தினரால் காட்சிப் படுத்தப் பட்டன. 'நூலகம்' நிறுவனம் 'இதழகம்' எனும் பெயரில் தான் ஆவணப் படுத்தியுள்ள 400க்கும் மேற்பட்ட சஞ்சிகைகளின் பெயர்ப் பட்டியலை சிறு நூலாக அச்சிட்டு ஆய்வரங்கிற்கு வருகை தந்திருந்தோருக்கு இலவசமாக வழங்கியது.


                     எல்லா மாற்றங்களுமே ஒரு சிறு புள்ளியில் இருந்தே ஆரம்பித்திருக்கின்றன. அது போல ஆங்கிலத்தில் Little Magazine என்று அழைக்கப் படும் சிற்றிதழ்களும் ஒரு பாரிய மாற்றத்துக்கான சிறு புள்ளியாகவே தமது பயணத்தை ஆரம்பிக்கின்றன. தற்போது ஆங்கிலத்தில் Productive Magazine என்று சிற்றிதழ்கள் அடையாளப்படுத்திக் கூறப் படுகின்றன. அதாவது விளைவை / மாற்றத்தை உண்டு பண்ணக் கூடிய இதழ்கள் என்பது பொருள். தற்காலத்தில் நுகர்ச்சி வாதத்தை அடிப்படையாகக் கொண்ட சிற்றிதழ்களும் வெளிவர ஆரம்பித்துள்ளன. உதாரணமாக சிகையலங்காரம் பற்றிய தகவல்களை வழங்கும் வகையில் வெளிவரக் கூடிய ஒரு சிற்றிதழ் இவ்வகைப் பாட்டுக்குள் அடங்கும்.


                   இந்தியாவில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் முப்பதுக்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் தோற்றம் பெற்றுள்ளன. ஆனால் அவற்றுள் எத்தனை நிலை பெறும் என்பது கேள்விக் குறியே. பொதுவாகவே சிற்றிதழ்களின் ஆயுட்காலம் குறைவு என்று கூறப் படுகிறது. எழுச்சியோடு ஆரம்பிக்கும் அவை எழுச்சியின் தாகம் தணிந்ததும் நின்றுவிடுகின்றன என்ற வாதம் முன்வைக்கப் படுகிறது. சிற்றிதழ்கள் பெரும்பாலும் தனிப்பட்ட ஒருவரின் முயற்சியாக அமைவதால் பல்வேறு சவால்களை எதிர்நோக்க நேரிடுகிறது. சிற்றிதழ்களை ஆரம்பிப்பது தற்கொலைக்கு சமனானது. ஆனால் இந்த சவால்களை தாண்டி வரும்போதே சிற்றிதழ்கள் வெற்றி பெறுகின்றன.


                   சிற்றிதழ்களை நடாத்துவதில் உள்ள சவால்களை பின்வரும் அடிப்படையில் பட்டியலிட முடியும்.


  1. சிறந்த அச்சக வசதி இன்மை 
  2. சிற்றிதழாளரின் பொருளாதார நெருக்கடி
  3. விற்பனை குறைவு 
  4. பிராந்திய ரீதியாக உள்ளடக்கப் படுதல்  
  5.  இதழாசிரியர்களின் தேடல் பண்பு விருத்தி அடையாமை 
  6. வடிவமைப்பில் கவனம் செலுத்தாமை 
  7. இணைய வளர்ச்சியின் தாக்கம்.

                          ஆரம்ப காலங்களில் இந்திய - தமிழக சஞ்சிகைகள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தின. பல்வேறு இலங்கை எழுத்தாளர்களின் ஆக்கங்களை பிரசுரித்து அவர்களை அவை அடையாளம் காட்டின. காலப் போக்கில் இலங்கையிலும் சிற்றிதழ்கள் தோற்றம் பெற்றன. ஆயினும் அவை இந்திய இதழ்களின் ஆதிக்கம் காரணமாக பல சவால்களை எதிர்நோக்கின. பின்னர் நமது இலங்கைச் சிற்றிதழ்கள் நிலை பெற்ற பின்னர் வளர்ந்து வந்த பல்வேறு படைப்பாளிகளை உலகுக்குப் புடம் போட்டுக் காட்ட ஆரம்பித்தன. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் சிற்றிதழ்கள் தோற்றம் பெற ஆரம்பித்தன.

                         சிற்றிதழ்கள்  மாதம் ஒரு முறை, இரு மாதம் ஒரு முறை, காலாண்டுக்கு ஒரு முறை மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை என்னும் கால சுழற்சியின் அடிப்படையில் வெளியாகின்றன.


                       ஆரம்ப காலத்தில் மலையகத்தில் சிற்றிதழ்கள் தோற்றம் பெற்ற போது இந்திய-தமிழக வாசனை வீசும் பெயர்களைத் தாங்கி வெளி வந்தன. தாம் 'இந்திய வம்சா வளியினர்' என்பதை வலியுறுத்தவே அவ்வாறு செய்தனர். பின்வந்த காலங்களில் 'மலையகத்தை தமது தாயகமாக ஏற்றுக் கொண்ட பின்னர்' மலைமுரசு போன்ற 'மலையகம் சார்ந்த' பெயர்களைத் தாங்கி மலையகச் சிற்றிதழ்கள் வெளிவரத் தொடங்கின.

                         சஞ்சிகைகள் பெரும் பாலும் பிரதேச ரீதியானதாகவே வெளிவந்திருந்த காரணத்தால் சஞ்சிகைகளானவை தாம் வெளி வந்த பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை /  மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. தற்காலத்தில் பாரிய ஊடக நிறுவனங்கள் தேசிய ரீதியிலான சிற்றிதழ்களை வெளியிட்டு வருகின்றன. வீரகேசரி - கலைக்கேசரி சஞ்சிகையினையும் குமுதம் - தீராநதி இதழையும் வெளியிட்டு வருவதை உதாரணமாகக் குறிப்பிடலாம். இது சிற்றிதழ்கள் இதழியல் துறையில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதாக அமைகிறது.


                       இங்கு குறிப்பிட வேண்டிய விடயம் சிற்றிதழ் என்பது வணிக நோக்கம் சார்ந்து வெளியிடப்படுபவை அல்ல. சிற்றிதழ்கள் சமூக நோக்கு ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. இந்த வகையில் ஆனந்தவிகடன், குமுதம் போன்றவற்றை பெரும் வணிக இதழ்களாக மட்டுமே அடையாளப்படுத்த முடியும்.

                       இவ்வேளையில் சிற்றிதழ்களின் தோற்றம் - வளர்ச்சி பற்றிய ஓரிரு மேலதிகத் தகவல்களைப் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. ஆரம்பத்தில் செய்திப் பத்திரிகையாக தொடங்கிய இதழ்கள் பின்னர் துறை சார்ந்த இதழ்களாக வெளியாகின. அவ்வாறான இதழ்கள் கால வரிசைப்படி வருமாறு.


1831 - தமிழ்ப்பத்திரிகை - மதராஸ் 
1840 - பாலதீபிகை - நாகர்கோவில் 
1841 - உதய தாரகை - யாழ்ப்பாணம் 
1855 - தின வர்த்தமானி - தமிழகம்.

*ஆய்வரங்கில் பகிரப்பட்ட ஏராளமான கருத்துக்களில் முடியுமானவற்றை இந்தப் பதிவில் உங்களுக்குத் தொகுத்துத் தந்திருக்கிறேன். மீதமாக உள்ள பெண்களும் சஞ்சிகைகளும் பற்றிய பார்வை, இணைய சிற்றிதழ்கள், சிற்றிதழ்களை எண்ணிம ஆவணப்படுத்தல் மற்றும் சிற்றிதழ் உருவாக்க செயற்பாடு பற்றிய பார்வை ஆகிய விடயங்களைத் தாங்கிய பதிவு விரைவில் உங்களைத் தேடி வரும்.தகவல்கள்: உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 இல் இருந்து நேரடியாக - சிகரம் பாரதி.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?