ஒரு நாடும் 225 பொய்யுரைஞர்களும் - 03

'ஆகஸ்ட் 17 அன்று எனக்கெதிராகப் பேசிய அனைவருக்கும் தக்க பதில் அளிப்பேன்'
என முன்னாள் ஜனாதிபதி மகிந்த சூளுரைத்துள்ளார். பெருவாரியான வாக்குகள்
மற்றும் ஆசனங்களுடன் தனக்கேற்ற அரசை அமைக்கும் பலம் தனக்குக் கிடைக்கும் என
அவர் திடமாக நம்புகிறார். ஜனவரி 8 ஆம் திகதி அமைதியான முறையில் ஆட்சியை
ஒப்படைத்துவிட்டு வெளியேறும் போதிலிருந்தே இந்த எதிர்பார்ப்பு அவருக்குள்
இருந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை மகிந்த
பெறுவாராயின் தனது 3வது முறையும் ஜனாதிபதியாகும் கனவுக்கு நிச்சயம் உயிர்
கொடுப்பார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த தோற்றுப் போனார். ஆனாலும் 45% வாக்குகளை
பெற்றிருந்தார். தமிழர் பிரதேசங்களில் மாத்திரமே அதிக வாக்கு
வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஏனைய பிரதேசங்களில் மிகக் குறைவான
வாக்கு வித்தியாசத்தையே மகிந்த கொண்டிருந்தார். இது சிறுபான்மை மக்களின்
ஏகோபித்த எதிர்ப்பையும் பெரும்பான்மையினரின் மத்தியில் இழக்கப்படாத
ஆதரவையும் வெளிக்காட்டுகிறது. தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்
மகிந்தவைப் புறந்தள்ளினர். மகிந்தவும் சிங்கள மக்களின் வாக்குகளாலேயெ
தன்னால் வென்றுவிட முடியும் என எண்ணினார்.
மேலும் மக்கள் தன்னை ஒரு கதாநாயகனாகவே இன்னமும் கருதிக்
கொண்டிருப்பதாகவும் அவர் எண்ணிக் கொண்டிருந்தார். மூன்றாவது முறையாகவும்
தன்னை ஜனாதிபதியாக மக்கள் கண்ணை மூடிக்கொண்டு தேர்ந்தெடுப்பார்கள் என
நம்பினார். தனது மூன்றாவது பதவிக்காலத்தின் முடிவில் தனது சந்ததியினை ஆட்சி
பீடத்தில் அமரவைக்க அல்லது தமிழகத்தைப் போல ஐந்து முறை தன்னாலும்
இலங்கையில் அரசாள முடியும் என திட்டமிட்டிருக்கலாம். ஆனால் அத்தனையும்
கனவாகிப் போனது. விக்கிரமாதித்தனின் வேதாளத்தைப் போல மீண்டும் தேர்தலில்
குதித்திருக்கிறார்.
அண்மையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்த மைத்திரிபால அவர்கள் தனது
விருப்பமின்றியே மகிந்தவுக்கு வேட்பு மனு வழங்கப்பட்டதாக
தெரிவித்திருந்தார். சுதந்திரக்கட்சியின் தலைவராக தற்போது மைத்திரியே
இருந்தாலும் கட்சி மகிந்தவுக்கு ஆதரவாகவே உள்ளது. இதனை சுதந்திரக்
கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான குழுவுக்கு மகிந்தவை தலைவராக
நியமித்திருப்பதிலிருந்தே அறிய முடியும்.
மகிந்தவுக்கு எதிராக 7500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்
அவற்றின் மீதான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
தேர்தலில் மகிந்த வெற்றி பெற்றாலும் இவ்விசாரணைகள் தொடருமா?
மைத்திரிபாலவின் அனுமதி இன்றி மகிந்தவை போட்டியிட கட்சி உறுப்பினர்கள்
தீர்மானித்துள்ளமையானது மகிந்த பிரதமராகுவார் என்ற எதிர்பார்ப்பினாலா?
தேர்தல் வெற்றிக்குப் பின்னர் மகிந்தவை பிரதமராக்குவோம் என சுதந்திரக்
கட்சி தெரிவித்துள்ளது. இது சாத்தியமானதே என மகிந்தவும் நம்புகிறார்.
பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கா அல்லது நாடாளுமன்றத்திற்கா
உள்ளது என்பது பற்றிய பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் வெளிக்கிளம்பியுள்ளன.
தேசிய அரசாங்கத்தில் இடம்பெறும் எண்ணமும் மகிந்தவுக்கு இல்லை. மகிந்த
வெற்றி பெறுவாரா இல்லையா என்பதும் வெற்றி பெற்றால் பிரதமர் பதவியை அடைவாரா
இல்லையா என்ற கேள்விகள் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஜனாதிபதியாக
இருந்த மகிந்த பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதானது உயர் தரம் படித்த ஒருவர்
சாதாரண தரம் எழுதுவது போலுள்ளது என அண்மையில் ஒருவர் கூறியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததுமே மகிந்த நாடாளுமன்றத் தேர்தல்
குறித்து சிந்திக்கத் தொடங்கி விட்டார். மைத்திரிபால தனது தேர்தல்
விஞ்ஞாபனத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தின் பின்னர் நாடாளுமன்றம்
கலைக்கப்பட்டு புதிய அரசு அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றம் கலைக்கப்படப்போவது உறுதி. ஆகவே இழந்ததை மீண்டும்
அடைந்துவிடலாம் என எண்ணினார். சுதந்திரக் கட்சி உறுப்பினர்களைக் கொண்டு
அரசைக் கலைக்கும் முயற்சிகளை எடுத்தார். ஆனால் மைத்திரி அவ்வாறான எதுவும்
இடம் பெறுவதற்கு முன்னர் 19 மற்றும் 20 வது திருத்தங்களை நிறைவேற்றிக்
கொள்ள முனைந்தார். அவரால் 19 ஐ மட்டுமே நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது. ஆகவே
மகிந்த தனது ஆதரவை பெருக்கிக் கொண்டு தனது அரசுக்கெதிராக நம்பிக்கையிலாப்
பிரேரணையை நிறைவேற்ற முன் மைத்திரி ஆட்சியைக் கலைத்து தேர்தலை அறிவித்தார்.
மகிந்த
இம்முறை தேர்தலில் வென்றே ஆக வேண்டியுள்ளது. இல்லையேல் அரசியல் வாழ்க்கையே
அஸ்தமனமானது போலாகிவிடும் என்பதுடன் ஜனாதிபதிப் பதவியை இழந்தாலும்
கைப்பற்றி வைத்திருக்கும் சுதந்திரக் கட்சி மீதான ஆதிக்கமும் இல்லாது
போய்விடும். தன்னை வெல்ல யாரும் இல்லை என்று சர்வாதிகாரம் புரிந்த
மகிந்தவுக்கு இது பாரிய பின்னடைவாக அமையும். உடனடியாக பிரதமராகாவிட்டாலும்
நாடாளுமன்ற உறுப்பினராகவேனும் ஆக முடியாது போகுமாயின் அது மகிந்தவின்
அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதியது போலிருக்கும் என்பதுடன் சிறைவாசம்
அனுபவிக்கவும் நேரிடலாம். கடந்த பத்து வருட காலம் மகிந்த நாட்டை ஆட்சி
செய்ததற்கான பிரதிபலனை மக்கள் இத்தேர்தலிலேயே வழங்கவுள்ளனர். விடை இன்னும்
சில நாட்களில்...
மகிந்தாவை ஜெயிக்க வைக்கத் தானே தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மற்றும் முன்னாள் புலிப் போராளிகள் என்ற பேரில் சிலரும், புலம் பெயர் நாடுகளில் சிலரும் முயன்று கொண்டிருக்கின்றார்களே, அது போதாதா? அப்போது தானே மிச்சம் மீதி இருக்கும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வசிக்கும் அவர்களின் உறவினர்களையும் அகதிகளாக கனடா, ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு போக முடியும்.
ReplyDeleteகருத்துரைக்கு மிக்க நன்றி.
Deleteநிச்சயம் பார்க்கிறேன்.
ReplyDeleteநன்றி
ReplyDelete