Saturday, 27 June 2015

ஒரு நாடும் 225 பொய்யுரைஞர்களும் !

வணக்கம் வாசகர்களே! இலங்கையில் "சிறந்த பொய்யுரைஞர்கள் 225 பேரை தேர்ந்தெடுக்கும் மாபெரும் விழா" எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதிகூடிய பொய்யுரைஞர்களை பெறும் கூட்டணி க்கு "பிரதமர்" பரிசும் வழங்கப்படும். இது என்னடா புதுசா இருக்கேன்னு பாக்குறீங்களா? அட , ஒன்னுமில்லீங்க. நாடாளுமன்றத் தேர்தலைத்தான் அப்படிச் சொன்னேன். 225 என்கிற எண்ணிக்கையை சற்று தீவிரமாக சிந்தித்திருந்தால் உங்களுக்கு உடனே பிடிபட்டிருக்கும்.


             2015.06.26 ஆம் திகதி நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். தற்போது தொங்கு நாடாளுமன்றமே காணப்படுகின்றது. இவ்வருடம் ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி கொண்டதன் மூலம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார். பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. தனது வெற்றிக்கு உதவியதன் பேரில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கினார் மைத்திரிபால. ஆயினும் பிரதமர் பதவியை ரணில் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாயின் ஆகஸ்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அல்லாவிடில் "பிரதமர்" கிண்ணத்தை ஸ்ரீ.சு.க தட்டிச் சென்றுவிடும்.

        இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற தேர்தலில் சிறுபான்மையின மக்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. அகில இலங்கை ரீதியாகவும் அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது. 2010 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் 61.26% ஆக இருந்த அதேவேளை 2015 ஜனாதிபதித் தேர்தலில் 81.52% ஆக இருந்தது. ஆக அரசியலில் மக்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பது இதன்மூலம் விளங்கும். மேலும் செல்லுபடியாகாத வாக்குகளின் தரவொன்றையும் இங்கே சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. காரணம் எவருக்கும் பயனின்றி விரயமாகும் வாக்குகள் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டியுள்ளமையாகும். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் 596,972 வாக்குகள் செல்லுபடியற்றவையாகும். 2015 ஜனாதிபதித் தேர்தலில் 140,925 வாக்குகள் செல்லுபடியற்றவையாகும்.


              விக்கிபீடியாவின் தகவல்களின் படி இது 15 ஆவது நாடாளுமன்றத் தேர்தலாகும். நாடாளுமன்றத் தேர்தல்களின் வரலாறு 1947 முதல் ஆரம்பமாகிறது. அதற்கு முன்னர் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கான தேர்தல்கள் , இலங்கை அரசாங்க சபைக்கான தேர்தல்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன. 1960 இல் இரு தடவைகள் நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. முதல் தடவை எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் இரண்டாம் தடவை தேர்தல் நடாத்தப்பட்டது. 1982 இல் முன்னைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீட்டிக்க மக்களின் ஆணையைக் கோரும் தேர்தலே நடைபெற்றது.
 
               தொடரும் காலம் தேர்தல் முடியும் வரை மக்களுக்கு அச்சுறுத்தலாகவே அமையும். சண்டைகள், மோதல்கள் , பொய்யுரைகள் என நாடே கலகலக்கப் போகிறது.ஒன்றாக இருந்தவர்கள் பிரிந்து ஒருவரையொருவர் தூற்றுவர். பிரிந்திருந்தவர்கள் இணைவார்கள். புதிய கூட்டணிகள் உருவாகும். நிஜத்தில் நடக்க முடியாத அனைத்தும் வாக்குறுதிகளாய் வழங்கப்படும். அநீதிகளெல்லாம் நீதியாகும். இன்னும் பல கூத்துக்கள் மேடையேறும். ஊடகங்களின் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

               நடக்கப் போவது பொய் நாடகம் என்று நமக்குத் தெரிந்திருந்தாலும் இலங்கை மக்கள் நாம் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம் வாக்குச்சீட்டு ஆகும். ஆகவே, வாக்களிப்போம் வாரீர்!

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...