வந்தாச்சு புது ஐ-போன் [ IPhone 6 / 6+ ]
வணக்கம் வாசகர்களே! நாம் இதுவரை பேசாத பகுதி கைப்பேசிகள் பற்றியும் அதன் தொழினுட்பங்கள் பற்றியதுமாகும். நமது கைகளில் அதிகமாக சாம்சுங் , நோக்கியா , htc , மைக்ரோமாக்ஸ் போன்ற கைப்பேசிகள் தான் இருக்கும். இவற்றுக்கு சமனான எண்ணிக்கையில் சாதாரண மக்களிடையே சீனத் தயாரிப்புகள் [ அல்லது தரம் / விலை குறைந்த வர்த்தக நாமம் அற்ற ] காணப்படுகின்றன. பென்ஸ் காரைப் போலவே பணக்காரர்களுக்கேயுரிய அம்சங்களுடன் வலம் வருவது தான் இந்த ஆப்பிள் இன் ஐ-போன்.
ஆப்பிள் ஐ-போன் வரிசையில் இந்த வாரம் வெளியாகி எல்லோரையும் முணுமுணுக்க வைத்திருப்பது தான் இந்த ஐ-போன் 6 மற்றும் 6 பிளஸ். அப்படி இருக்குமா , இப்படி இருக்குமா என்ற விவாதங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ஐ-போன் இன் புதிய பதிப்பு.
அழகிய வடிவமைப்பு, புதிய IOS 8 இயங்குதளம் , விரல் அடையாளப் பாதுகாப்பு என்று பல்வேறு அம்சங்களைத் தாங்கி வந்திருக்கிறது ஆப்பிளின் இந்தப் புதிய குழந்தை. என்னைப் போலவே உங்களில் பலருக்கும் இதெல்லாம் பார்த்துப் பெருமூச்சு விடுவதற்கான ஒரு அம்சமாகவே இருக்கும். விதிவிலக்கானவர்களும் இருக்கலாம்.
இப்போது கைப்பேசி தொழிநுட்ப சந்தையில் முன்னணி நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் பொங்கல் தீபாவளிக்கு தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவது போல புதிது புதிதாக கைப்பேசிகளை அறிமுகம் செய்கின்றன. எதை வாங்குவது எதை விடுவது என்று நாம் தான் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. சரி , இந்த ஐ-போன் 6 மற்றும் 6 பிளஸ் இல் காணப்படும் முக்கிய அம்சங்களை ஒரு பார்வை பார்த்துவிடலாமா?
நினைவகம் : 16 / 64 / 128 GB
திரை : 4.7 மற்றும் 5.5 Retina HD display
விரல் அடையாளம் மூலம் உள்நுழையும் வசதி
கமரா : 8 மெகாபிக்ஸல்
இயங்குதளம் : புதிய IOS 8
இன்னும் விபரங்களுக்கு : IPhone 6 Features from Apple

இது இப்படியிருக்க நமது ஆண்ட்ராய்டு கைப்பேசிகளில் இப்போது கிட்காட் [Kitkat] 4.2 வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு அடுத்த பதிப்பான "L" கூட விறுவிறுப்பாக இப்போதே தயாராகி வருகிறதாம். ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் பெரும்பாலும் ஒரே மாதிரியான இடைமுகப்பையே கொண்டுள்ளன. காரணம் இயங்குதளம் - கைப்பேசி இரண்டும் வேறு வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. ஆப்பிள் , பிளாக்பெர்ரி மற்றும் விண்டோஸ் ஆகியவை மட்டுமே இயங்குதளம் - கைப்பேசி ஆகிய இரண்டையும் தாமே அறிமுகம் செய்கின்றன.
இந்த புதிய ஐ-போன் மூலமாகத்தான் ஒரு கைப்பேசியின் ஆகக் கூடிய உள்ளக நினைவாக அளவாக 128 GB அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சாதாரண கணக்கிற்காக இத்தனை நினைவகத்தையும் mp3 பாடல்களினால் மட்டுமே நிரப்புகிறோம் என்று எடுத்துக் கொள்வோம். ஒரு பாடலின் சராசரி அளவு 5MB . ஆகா போடக் கூடிய மொத்தப் பாடல்களின் அளவு - 26215. அம்மாடியோ........ இளையராஜா , எஸ்.பி.பி எல்லோரையும் அள்ளிவிடலாம் போலிருக்கிறதே?
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்