பாசத்தில் பாரபட்சம் - சரியா?
வணக்கம் வலைத்தள வாசகர்களே!
நான் அண்மையில் வாசித்த ஒரு செய்தி. பெற்றோரின் பாரபட்ச பாசம் காரணமாக 6 வயது தங்கையைக் கத்தியால் குத்திக் கொன்ற 13 வயது அக்கா. தன்னை விட தன் தங்கை மீது அக்காளின் மனதில் முளைவிட்ட வன்மத்தின் கோர விளைவு இது.
இச்சம்பவத்திற்கு பெற்றோரே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளைக் கொண்ட பெரும்பாலான பெற்றோர் செய்யும் தவறே இது. குழந்தைகள் வளர்ந்து கொஞ்சம் பெரியவர்களாகி விட்டால் அவர்கள் எல்லாவற்றையும் தாமாகவே புரிந்து கொள்ள வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அந்த பருவத்தில் தாம் எப்படி இருந்தோம் என்பதை அந்தப் பெற்றோர் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
பெற்றோரின் பாசத்தின் மீதான எதிர்பார்ப்பு பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட வயது வரை இருந்து கொண்டே இருக்கும். இந்த வயதெல்லை ஆளுக்காள் மாறுபடலாம். அதனை கண்டறிந்து பாசம் காட்ட வேண்டியது பெற்றோரின் கடமை. அதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ள வீட்டில் இந்த வயதெல்லை இன்னும் அதிகமாகும். எல்லோருக்குமே தொட்டில் பருவத்தில் தாம் நடத்தப்பட்ட விதம் நினைவில் இருப்பதில்லை. அவர்களுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அவர்கள் அவற்றை நினைவில் கொள்வார்கள். எனவே பிள்ளைகளின் மனம் பக்குவப்படும் வரை பாசத்தின் அளவு மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.
புதிதாக ஒரு பிள்ளை பிறந்ததும் அந்தப்பிள்ளையையே அதிகம் கவனிப்பதும் மூத்த பிள்ளையை கண்டுகொள்ளாமல் விடுவதும் மிகத் தவறு. அப்படியானால் எல்லாப் பிள்ளைகளும் இந்த மாதிரி கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்களா என நீங்கள் கேட்கலாம். எல்லோரும் கொலை முயற்சியில் ஈடுபடுவதில்லை. ஆனால் நீங்கள் காட்டும் பாரபட்சத்தை நினைவில் இருத்திக் கொள்கிறார்கள். சமயம் வரும்போது கோபமாகவோ, சண்டையாகவோ அல்லது ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படுத்துகிறார்கள்.
பாரபட்ச பாசமானது முதலில் ஏக்கமாகவும் பின்பு வன்மமாகவும் பிள்ளைகளின் மனதில் உருவெடுக்கிறது. இதுவே இக்கொலைக்கும் காரணமாகியிருக்கிறது. அனைத்துப் பெற்றோர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. நமது பிள்ளைகளை எப்படி வளர்த்தோம் என்பதை அளவிட்டுக் கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. பாரபட்ச பாசம் கொலையானதால் கதை வெளியாகியிருக்கிறது. இன்னும் ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும் வெளிவராத எத்தனை எத்தனை கதைகள் இருக்குமோ யாரறிவார்?
பெற்றோர்களே இது உங்கள் தருணம். சிந்தித்து செயல்படுங்கள்.
நன்றி,
இப்படிக்கு
சிகரம்பாரதி.
உண்மையிலேயே சிந்திக்க வேண்டிய விசயம்தான்
ReplyDeleteஉண்மைதான் மனதிலேயே வைத்து மருகிக் கொண்டு தன் இயல்பான நடவடிக்கைகளில் நம்பிக்கையிழந்திருப்பவர்கள் அனேக முதல் குழந்தைகள்....
ReplyDeleteசிறந்த பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்
சிந்திக்கவைக்கும் பதிவு.
ReplyDeleteஇன்று தங்கள் பதிவை வலைச்சரத்தில் நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்.
http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_12.html
நன்றி.