Friday, 20 January 2017

ஏறு தழுவும் உரிமை மீட்க வெகுண்டெழுந்தான் செல்லினத்தமிழன்!

ஜல்லிக்கட்டு எனத் தற்போது பரவலாக அழைக்கப்படும் ஏறு தழுவுதல் என்னும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கான தடையை நீக்கக் கோரி செல்லினங்களான கைப்பேசிகளிலேயே தினமும் மூழ்கிக் கிடக்கும் இக்கால இளைஞர்கள் வெகுண்டெழுந்துள்ளனர். மூன்றாவது நாளாகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இளைஞர்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் பெருகிவருகிறது. பெருகிவரும் மக்கள் ஆதரவின் காரணமாக திரைத்துறையினர் , அரசியல் வாதிகள் மற்றும் பலரும் ஏறு தழுவுதலுக்கு சட்டரீதியான அனுமதி கோரி தமது ஆதரவையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இரவு பகல், வெயில் பனி என எதனையும் பொருட்படுத்தாது மக்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. மாணவர்கள், பெண்கள், தாய்மார்கள் , குழந்தைகள், பெரியவர்கள் என அத்தனை மக்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். சிறு தீப்பொறியாக தொடங்கியது இப்போராட்டம். தீப்பொறி என்ன செய்யும் என எண்ணிய அதிகார வர்க்கம் கொழுந்துவிட்டெரியும் சுடரைக் கண்டு மிரண்டு போயிருக்கிறது. 

2004 ஆம் ஆண்டு விலங்குகள் நல தன்னார்வ அமைப்பாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பீட்டா என்னும் அமைப்பினால் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் காரணமாக 2014 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஏறு தழுவும் விளையாட்டை நீதிமன்றம் நிரந்தரமாக தடை செய்தது. இதனால் 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் ஏறு தழுவும் விளையாட்டு இடம்பெறவில்லை. தடையை நீக்கக் கோரி கடந்த இரண்டாண்டுகளாக ஆங்காங்கே சிறிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எவ்விதப் பலனும் இல்லை. இவ்வாண்டு பொங்கலுக்கு நிச்சயம் ஏறு தழுவும் விளையாட்டு நடைபெறும் எனக் காத்திருந்த மக்களுக்கு வழமை போல் ஏமாற்றமே மிஞ்சியது. எனவே இந்தாண்டும் ஆதரவு அறிக்கைகளினாலேயே அரசியல் நடத்திவிடலாம் என எண்ணியிருந்த அரசியல்வாதிகளுக்கு தற்போதைய மக்களின் மாபெரும் எழுச்சி பேரதிர்ச்சியாய் அமைந்துள்ளது. தமக்கு எந்தவொரு அரசியல் வாதியினதோ அல்லது அரசியல் கட்சியினதோ ஆதரவு தேவையில்லை என்று போராட்டக்காரர்கள் அரசியலைப் புறக்கணித்து தமிழன் என்ற உணர்வினால் ஒன்றிணைந்து போராடி வருவது பல்வேறு தரப்பினரையும் மக்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 

உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா வேம்பு இருக்கா என்று மக்களை பன்னாட்டு வணிக நிறுவனங்கள் மக்களை அடிமைப்படுத்தி வரும் நிலையில் தமது வீடுகளுக்கு செல்லாமல் தொடர்ந்து போராட்டக்களத்திலேயே இருக்கும் நண்பர்கள் வேப்பங்குச்சியினால் பல்துலக்கிய காட்சியை தொலைக்காட்சியினூடாக காணக்கிடைத்தபோது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் ஒரு சில இடங்களில் பெப்சி, கோலா போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களை வீதியில் ஊற்றி அவற்றுக்கெதிராகவும் தமது முழக்கங்களை மக்கள் வெளிப்படுத்தினர். ஏறு தழுவும் விளையாட்டுக்கு ஆதரவான மக்கள் போராட்டங்கள் குறித்து பல்வேறு ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்தாலும் News 7 தமிழ் தொலைக்காட்சியின் பங்கு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. காரணம் News 7 தமிழ் இல்  மக்கள் போராட்டம் 24 மணிநேரமும் கடந்த மூன்று நாட்களாக நேரலை செய்யப்பட்டு வருகிறது. எந்தவொரு ஊடகமும் தராத ஆதரவும் நடுநிலைமையும் News 7 தமிழ் தொலைக்காட்சியை மக்கள் மத்தியில் கவனிக்க வைத்துள்ளது. எந்தவொரு அரசியல் பிண்ணனியோ அல்லது பிரபலங்களின் ஆதரவோ இல்லாமல் மாணவர்களும் இளைஞர்களும் மக்களும் சுயமாக முன்னெடுத்துவரும் ஏறு தழுவுதல் தடைக்கெதிரான போராட்டத்தை News 7தமிழ் தொலைக்காட்சி தொடர்ச்சியாக 'மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டம்' என அடையாளப்படுத்தி வருவதும் இங்கே முக்கிய கவனத்துக்குரியதாகும்.

ஏறு தழுவுதல் தடைக்கெதிரான போராட்டம் சமூக வலைத்தளங்களினூடாக ஒன்றிணைந்த இளைஞர்களினாலேயே தமிழ்நாடு முழுவதும் தீயெனப் பரவியுள்ளது. #SAVEAJALLIKATTU #BANPETA #JUSTICEFORJALLIKATTU #SAVEOURCULTUREJALLIKATTU போன்ற குறிச்சொற்களினூடாக சமூக வலைத்தளங்களில் மக்கள் தமது எதிர்ப்பினைப் பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களினூடாக தமது எதிர்ப்பினைப் பதிவு செய்பவர்களில் ஒரு பிரிவினர் முறையற்ற வார்த்தைகளைப் பிரயோகித்து வருகின்றனர். ஏறு தழுவுதலை ஆதரிக்காத நடிகர்கள் மற்றும் அரசியல் வாதிகளுக்கெதிராகவே தகாத வார்த்தைப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது முற்றிலும் தவறான செயலாகும். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பிறரைப் பாதிக்காத வகையில் தனது கருத்தினைப் பதிவு செய்யும் உரிமை உண்டு. அதற்கு மாற்றுக் கருத்தினைப் பதிவு செய்யும் உரிமையும் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. ஆனால் எந்தவொரு தனிநபரையும் இழிவு படுத்தும் வகையிலோ அல்லது அவரது தனி மனித உரிமையைப் பாதிக்கும் வகையிலோ கருத்து வெளியிடும் சுதந்திரம் யாருக்கும் கிடையாது. மேலும் இவ்வாறான செயல்கள் தமிழினத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்துவதாகும். ஆகவே நண்பர்களே எப்போதும் தரக்குறைவாக நடந்துகொள்ளாதீர்கள். கண்ணியமான செயல்களே நம்மையும் நமது இனத்தையும் முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதை மறவாதீர்கள்.

ஏறு தழுவுதல் போட்டிக்காக அவசரச் சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து மாநில அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. விரைவில் ஒரு தற்காலிக தீர்வை எதிர்பார்க்கலாம். இந்தத் தற்காலிக தீர்வு மாணவர்களின் இந்தத் தன்னெழுச்சியான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருமா? நிரந்தரத் தீர்வு வரை தொடருமா? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்ததற்கெதிராகவும் தொடருமா? இப்படிப் பல கேள்விகள் நம் முன்னே உள்ளன. இவற்றுக்கெல்லாம் மாணவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். 

10 comments:

 1. மாணவர்கள் நேற்றுவரை கட்டுக்கோப்புடன், பொது மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் போராட்டம் நடத்தி வந்தார்கள். இப்போது ரயில் மறியல் சாலை மறியல் பொதுமக்களைச் சோதிக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். பொது மக்களின் ஆதரவை இழப்பது நல்ல தந்திரமல்ல. பொதுவாக வலையுலகில் மாற்றுக்கருத்து கொண்டவர்களையும் மதிக்கும் மனப்பாங்கும் வளரவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக நண்பரே! பிறருக்கு இடையூறு விளைவிக்காத வகையில் நமது போராட்டங்கள் அமைய வேண்டும். சமூக வலைத்தள நண்பர்கள் நாகரீகத்தைக் கடைப்பிடிப்பதும் அவசியமாகும்.

   Delete
 2. போராட்டம் வெல்ல வேண்டும்

  ReplyDelete
 3. இந்த அறப்போராட்டம் வெல்லும்...

  ReplyDelete
 4. மாணவர்கள் எழுச்சி நிச்சய வெற்றி

  ReplyDelete
  Replies
  1. மாணவர்களின் தன்னெழுச்சிக்கு நிச்சயம் வெற்றி கிட்டும்!

   Delete
 5. போராட்டங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...