Saturday, 21 January 2017

ஏறு தழுவும் உரிமை மீட்க வெகுண்டெழுந்தான் செல்லினத்தமிழன்! - 02

ஏறு தழுவும் உரிமையை மீட்க தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. மாணவர்களின் இப்போராட்டம் ஏறு தழுவும் உரிமை மீட்புக்காக மட்டுமல்லாது காவிரி மேலாண்மை வாரியம், பன்னாட்டு வணிக நிறுவனங்கள் தமிழகத்தின் நீராதாரத்தை சிதைத்தல், சுவாதி படுகொலை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து பன்முகம் கொண்ட போராட்டமாக தொடர வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது. போராட்டக்காரர்கள் மத்தியில் இவை தொடர்பான கருத்துக்கள் பரவலாக இருந்தாலும் ஏறு தழுவும் உரிமையை மீட்டுவிட்டால் போராட்டம் முழுமையடைந்துவிடும் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் இடம்பெற்று வரும் இந்த ஏறு தழுவுதல் உரிமை மீட்புக்காக நடைபெறும் இப்போராட்டத்தில் கூட இளைஞர்களிடையே பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் நிலவி வருகின்றன. அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வாடிவாசல் திறந்து ஏறு தழுவுதல் இடம்பெற்றால் போராட்டம் நிறைவுக்கு வரும் என ஒரு பகுதியினர் கூறுகின்றனர். அவசரச் சட்டம் போதாது, நிரந்தரத் தீர்வு வரும் வரை போராடுவோம் என்கின்றனர் மறு தரப்பினர். இல்லை ஏறு தழுவுதல் உரிமையை மீட்டபின் ஏனைய பிரச்சினைகளுக்காகவும் போராடுவோம் என இன்னொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆக இளைஞர்களின் இலக்கு எது என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. 

ஏறு தழுவுதல் தொடர்பில் அவசரச் சட்டம் பிறப்பிக்கக் கோரி பாரதப் பிரதமரைச் சந்தித்தார் தமிழக முதல்வர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் மத்திய அரசினால் எதுவும் செய்ய முடியாது, மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கும் எனத் தெரிவிக்கிறார் பிரதமர். இதனை அடுத்து சட்ட வல்லுநர்களுடனான ஆலோசனையின் பின்னர் தமிழக முதல்வர் அவசரச் சட்ட வரைவைத் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பினார். தொடர்ந்து மத்திய அரசு திருத்தங்களுடன் ஒப்புதல் அளிக்க உள்துறை அமைச்சகம், சுற்று சூழல் அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்கள் ஒப்புதல் அளிக்கின்றன. மத்திய அரசு மாநில அரசின் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருப்பதால் நீதிமன்றம் ஒருவார காலத்திற்கு தனது தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசு விடுத்த வேண்டுகோளையும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. இன்னும் குடியரசுத் தலைவரும் தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளிக்க வேண்டும். இவர்களின் ஒப்புதல் நாளை அல்லது நாளை மறுநாள் கிடைக்கலாம். ஏறு தழுவுதல் போட்டி வரும் வாரத்தில் நிச்சயம் நடக்கும். அதன் பின்னர் இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம் நிறைவுக்கு வரும். தொடர்ந்து நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிடும். இதுதான் நடந்த, நடக்கப் போகிற நிகழ்வுகளின் மீதான சாராம்சப் பார்வை. அவசரச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நிரந்தரச் சட்டம் உருவாக்கப் படுமா மற்றும் நீதிமன்றம் ஏறு தழுவுதலுக்கு தான் விதித்த தடையை நீக்குமா என்பதெல்லாம் கேள்விக்குறியே. 

நீதிமன்றம் தனது தீர்ப்பை அளிக்காமல் மத்திய அரசு ஒருபோதும் நிரந்தரச் சட்டம் பிறப்பிக்காது. நீதிமன்றம் நினைத்தால் இவ்வழக்கை இன்னும் இரண்டாண்டுகளுக்கு இழுத்தடிக்கலாம். ஆனால் இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம் அதுவரை நீடிக்குமா? ஏறு தழுவுதலுக்கான தடையை மீண்டும் நீதிமன்றம் உறுதி செய்தால் மீண்டும் இவாறான இளைஞர்களின் எழுச்சி நிகழுமா? ஒரு வேளை ஏறு தழுவுதலுக்கு நிரந்தர அனுமதி கிடைத்துவிட்டால் இன்னும் ஒரு மூன்று மாதங்களிலேனும் இந்த இளைஞர்கள் மீண்டும் தன்னெழுச்சியாக காவிரி மேலாண்மை வாரியம், பன்னாட்டு வணிக நிறுவனங்கள் தமிழகத்தின் நீராதாரத்தை சிதைத்தல், சுவாதி படுகொலை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் திரண்டு வருவார்களா? நாள் கணக்கில் மத்திய அரசையும் மாநில அரசையும் அரசியல் சாயமின்றி கேள்வி கேட்பார்களா? இனி வரும் காலங்களில் இளைஞர் ஒன்று கூடல்கள் மாவட்டம் தோறும் நகரம், கிராமங்கள் தோறும் வாராவாரம் அல்லது மாதம் ஒருமுறையேனும் நிகழ வேண்டும். இவ்வொன்று கூடல்கள் மெரீனா கடற்கரை போன்ற பொதுவெளியில் நிகழ வேண்டும். அன்றைய நாளில் தீர்மானங்களை நிறைவேற்றி அவற்றுக்காக குரல் கொடுக்க வேண்டும். அரசியல் வாதிகளையோ நடிகர்களையோ இணைத்துக்கொள்ளாமல் இதே போல் தன்னெழுச்சியான முறையில் குரலெழுப்ப வேண்டும். செய்வீர்களா? செய்வீர்களா? 

6 comments:

 1. நடக்கும்... நடக்க வேண்டும்...

  ReplyDelete
 2. நடக்கும் நம்பிக்கைதான்

  ReplyDelete
 3. அரசியலில் இறங்காது
  தமிழனின் முதலீடான
  கல்வியை மேம்படுத்தியவாறு
  ஒழுக்கம், பண்பாடு பேணி
  எவருக்கும் இழப்புகளை ஏற்படுத்தாது
  ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கான
  எழுச்சி நுட்பங்களைக் கையாண்டு
  மாணவர்களே தமிழ்நாட்டை மேம்படுத்தலாம்!
  ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றி
  எதிர்கால வெற்றிகளுக்கு ஓர் முன்மாதிரி!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...