Tuesday, 27 September 2016

சிகரம் பாரதி 4/50

வணக்கம் வலைத்தள வாசக நண்பர்களே!

2016.09.25

[1] இன்று எனது உடன் பிறந்த சகோதரன் ஜனார்த்தனன் க்கு பிறந்த நாள். மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரா. நேற்று இரவு நமது தொடர் பதிவின் மூன்றாம் பதிவை பதிப்பித்துவிட்டு தூங்கும் போது மணி அதிகாலை ஒன்று! இந்த 4 வது தொடர் பதிவோடு இந்த வருடத்தில் நான் எழுதிய மொத்த பதிவுகளின் எண்ணிக்கை 14 ஆகிறது. இது நான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்து 5 வருடங்களில் மூன்றாவது  அதிக எண்ணிக்கையிலான பதிவுகளின் எண்ணிக்கையைச் சமப்படுத்துகிறது. இரண்டாவது அதிக எண்ணிக்கை 15 ஆகும். ஆனாலும் எழுத்துக்களின் அல்லது எழுதுபவரின் தரத்தை இந்த எண்ணிக்கைகள் தீர்மானிப்பதில்லை என்பதே நிஜம்!

[2] 'தொடரி' மற்றும் 'ஆண்டவன் கட்டளை' ஆகிய தமிழ்த் திரைப்படங்கள் இவ்வாரம் வெளியாகி இருந்தன. இரு திரைப்படங்களுமே மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. விஜய் சேதுபதியின் ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமாக இருக்கும். இன்றைய முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் மற்றும் ரஜினி போன்றவர்களை விட விஜய் சேதுபதியின் நடிப்பு மிகப் பிரமாதமானது. தனக்கான கதையை மிகக் கச்சிதமாக இவர் தேர்வு செய்து கொள்வார். தன் கதையின் கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டுவார் விஜய் சேதுபதி. சமூக வலைத்தளங்களிலும் சரி, நண்பர்கள் வட்டாரத்திலும் சரி ஆண்டவன் கட்டளை திரைப்படம் தொடரியிலும் பார்க்க அருமையாக இருக்கிறது என்பதே கருத்தாக இருக்கிறது. பார்க்கலாம் என் மனம் என்ன சொல்கிறது என்று....

[3] சர்வதேச புத்தகக் கண்காட்சி கொழும்பு 2016 - இன் இறுதிநாள் இன்றாகும் (2016.09.25). கடந்த வருட புத்தகக் கண்காட்சியில் சில நூல்களை வாங்கியிருந்தேன். ஆனால் இவ்வருடம் கண்காட்சிக்கு செல்வதற்கான அவகாசம் கூடக் கிடைக்கவில்லை. ஆனால் இப்புத்தகக் கண்காட்சி நடைபெற்றுவரும் இருவாரகாலப் பகுதியில் தான் தமிழக நண்பர் வெற்றிவேலின் 'வானவல்லி' புதினம் கரம் கிட்டியுள்ளது. ஆகவே வானவல்லியைத்தான் இவ்வருட புத்தகக் கண்காட்சிக்கான கொள்வனவாகக் கொள்ள வேண்டியுள்ளது. அடுத்த வருடம் புத்தகக் கண்காட்சியில் எப்படியேனும் சில நூல்களை அள்ளிவிட வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

[4] காமிக்ஸ் புத்தகங்களின் ரசிகர்களில் நானும் ஒருவன். காமிக்ஸ்கள் வாசிக்க வாசிக்க ஆர்வத்தை தூண்டுவன. அடுத்தது என்ன என்கிற ஆர்வத்தை எப்போதும் காமிக்ஸ் கதைகள் நமக்குள் தூண்டிக் கொண்டேயிருக்கும். இன்று உலக காமிக்ஸ் தினம். நூறாண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு இவற்றுக்கு உண்டு. குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க இவ்வாறான கதைகள் மிகச் சிறந்தவை. சிறந்த கற்பனா சக்தியையும் நினைவாற்றலையும் இவ்வாறான கதைகள் குழந்தைகளுக்கு வழங்க வல்லன. எப்போது நான் காமிக்ஸ் கதைகளை வாசித்தாலும் குழந்தைப் பருவத்திற்கே என்னை அழைத்துச் சென்றுவிடும். வாழ்க காமிக்ஸ் உலகம் , வாழ்க காமிக்ஸ் வாசகர்கள்! #உலக_காமிக்ஸ்_தினம் #World_Comics_Day

2016.09.26

[1] பேஸ்புக் (facebook) உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களுள் ஒன்று. டுவிட்டர் மற்றும் கூகிள் பிளஸ் ஆகியனவும் பேஸ்புக்குடன் போட்டி போட்டாலும் நமது சாமானிய மக்கள் தேடுவதென்னவோ பேஸ்புக்கைத்தான். நொடிப்பொழுதில் நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும் தகவல்களைத் தேடிப் பெற்றுக்கொள்ள இலகுவாக இருப்பதும் மட்டுமன்றி பயன்பாட்டுக்கு இலகுவாக இருப்பதுமே பேஸ்புக் கீழ்த்தட்டு மக்களை இலகுவாகச் சென்றடையக் காரணமாக உள்ளது. இன்று நம்மால் கொள்வனவு செய்யப்படும் ஒவ்வொரு ஆன்ட்ராய்டு கைப்பேசியிலும் கூகிளின் கூகிள் பிளஸ் இணைத்தே வழங்கப்படுகிறது. இந்த செயலியை அழிக்கவும் முடியாது. ஆனாலும் நம்மவர்கள் பேஸ்புக்கைத்தான் தேடித் தரவிறக்கம் செய்கிறார்கள்.

32 வயது இளைஞர்! மார்க் சுக்கர்பேர்க் . 2004இல் ஆரம்பித்த பேஸ்புக் இன்று 12ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்று நிற்கிறது. 20 வயதில் ஆரம்பித்த பயணம். பல்கலைக் கழகப் படிப்பைக் கூட முழுமையாக முடிக்காத ஒருவர். உலக மக்களையெல்லாம் பேஸ்புக் என்னும் மந்திரச் சொல்லால் கட்டிப்போட்டிருக்கிறார் மார்க். வாட்ஸப்பை பில்லியன்களில் வளைத்துப் போட்டார். இதன் மூலம் பேஸ்புக் மேலும் ஓரடி முன்னோக்கி வந்திருக்கிறது. பேஸ்புக், வாட்ஸப், மெசெஞ்சர் என படிப்படியான வளர்ச்சி கண்டுவருகிறார் மார்க். எதிர்காலத்தில் ஆன்ட்ராய்டிற்கு மாற்றாக பேஸ்புக் என்னும் பெயரிலேயே கைப்பேசி இயங்குதளமோ அல்லது குரோமியம் போன்ற மடிக்கணினி இயங்கு தளமோ வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் உனக்கு 32 - எனக்கு 12 என்று மார்க்கும் பேஸ்புக்கும் இளமை ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருப்பதால்...

[2] எனக்கான தனி இணையத்தளத்தை உருவாக்கிட வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவாக உள்ளது. ஆனால் இன்னமும் அந்தக் கனவு கனவாகவே உள்ளது. அதற்காக சிலமுறை முயற்சிகளை மேற்கொண்டாலும் அது கைகூடவில்லை. வரும் வருடத்திலேனும் கனவை நனவாக்கிட வேண்டும் என்பதே என் அவா!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?

பிரபல பதிவுகள்

Featured post

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 01 - வெளியேறப்போவது யார்? #BB WEEK 01 NOMINATION

பிக் பாஸ் தமிழ்  பருவம் 02 துவக்கம் - 17/06/2018 நாள் 01 வாரம் 01  18/06/2018 முதலாம் வாரம் வெளியேற்றப்படவேண்டிய போட்டியாளர்கள் தேர...