போர்க்குற்றமும் சர்வதேச சமூகமும் .

மே 18, 2009.

                       தமிழர்களோ அல்லது தமிழர் நலனில் அக்கறையுள்ள எவருமோ இந்தத்திகதியை அவ்வளவு இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள். இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மூன்று தசாப்தகால யுத்தம் முற்றுமுழுதாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நாள்.தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள். வீதிகள் தோறும் சிங்களவர்கள் இலங்கையின் தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு கொட்டும் மழையிலும் கூட வெற்றிக்களிப்பிலும் தமிழர்களை வென்றுவிட்டோம் என்ற ஆணவத்திலும் மிதந்து தமிழர்களின் உணர்வுகளை சீண்டிப்பார்த்த நாள்.

மறந்திருக்க மாட்டார்கள் தான் - ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன என்றபோதும் மறந்திருக்க மாட்டார்கள்தான்.

 

                                இலங்கையில் ஈழத்தமிழர் மற்றும் மலையகத்தமிழர் என இரு தமிழ்ச் சமூகங்கள் உள்ளன. இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் அடக்குமுறைகளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்து மூன்று தசாப்தங்களாகப் புரியப்பட்ட யுத்தம் ஈழத்தமிழர் நலன் சார்ந்து ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஒன்றாகும். அதில் மலையகத் தமிழர்களின் நலன் சற்றேனும் கவனத்திற் கொள்ளப்படவில்லையாயினும் ஈழத்தமிழர்களுக்கு உதவி புரிய மலையகத் தமிழர்கள் தயங்கவில்லை.

                         ஆயுதப் போராட்டத்தின் மூலம் தங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை ஈழத்தமிழர்கள் உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டினர். ஆயினும் அவர்கள் மலையகத் தமிழர்களையும் தங்கள் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளத் தவறிவிட்டனர் அல்லது மலையகத் தமிழர்கள் அவர்களுடன் இணைந்துகொள்ளத் தவறிவிட்டனர். விளைவு , மலையகத் தமிழர்களின் துயர வரலாறு மறைக்கப்பட்டு அல்லது மறக்கப்பட்டு ஈழத் தமிழர்கள் மட்டுமே இலங்கையில் வாழும் ஒரேயொரு தமிழ்ச் சமூகம் என்பதாகவும் அவர்கள் மட்டுமே அரசின் அடக்குமுறைகளுக்கு ஆட்பட்டிருப்பதாகவுமான தோற்றம் உலகின் முன் உயர்ந்துள்ளது.

 

                            இவ்விடயத்தை இங்கு கூற முக்கியமான காரணம் ஒரே நாட்டில் இரு வேறு தமிழ்ச் சமூகங்கள் இரு வேறாகவே இருப்பது ஆட்சியாளர்களுக்கு மிகுந்த வசதியாக இருக்கிறது. வெகுண்டெழுந்த ஒரு சமூகத்தை அடக்கிவிட்ட ஆணவமும் மற்றைய சமூகம் வழமை போலவே அடிமைப்பட்டுத்தான் கிடக்கும் என்ற நம்பிக்கையும்தான் அவர்களின் பலமாக இருக்கிறது. இவ்விரு தமிழ்ச் சமூகங்களும் இதுவரை ஒன்றுபட்டு செயல்பட்டதுமில்லை , இனி செயல்படுவதற்கான அறிகுறிகளும் இப்போதைக்கு இல்லை.

                                ஈழத் தமிழர்கள் மீதான கோபத்தை சிங்கள இனவாதிகள் 1983 மற்றும் 87 இல் மலையகத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட இன வன்முறைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள முயன்றிருந்தனர். இதில் மலையகத் தமிழர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இன்றும் அரசியல் கைதிகள் என்ற பெயரில் ஈழ யுத்தத்தின் காரணமாக கைதான மலையகத் தமிழர்கள் சிறையில் பல ஆண்டுகளாக வாடுகின்றனர்.

                         மலையகத் தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கவில்லை ; மலையகத் தமிழர்கள் ஈழப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படவில்லை ; அரசாங்கத்தை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபடவில்லை - இருந்தும் - மலையகத் தமிழர்கள் ஈழத்தை எதிர்க்கவில்லை, ஆதரித்தனர். சிறு எண்ணிக்கையினர் இயக்கங்களில் இணைந்து பணிபுரிந்தனர் ; போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தனர் ; மனதால் ஈழத்தை நேசித்தனர். ஈழப்போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது ரகசியமாய்க் கண்ணீர் வடித்தனர் ; தங்கள் மனதிலும் ஈழத் துயரைச் சுமந்தனர்.

                   மறந்திருக்க மாட்டார்கள்தான்.

 

                            போர் வெற்றி நாளை அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டித்து வருகிறது. ஆனால் தமிழர்கள் போரில் இறந்த தங்கள் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதியில்லை. இது தமிழர்களின் உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் ஒரு விடயமாகும். போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று இந்த ஐந்து வருட காலமாக வலியுறுத்தப்பட்டுக்கொண்டே வந்தாலும் இலங்கை அரசு அதைத் தட்டிக் கழித்துக் கொண்டே வருகிறது. சர்வதேச சமூகமும் இதனை மறைமுகமாக ஆதரித்துக்கொண்டிருக்கிறது.

                     போர்க்குற்றங்கள் இரு தரப்பிலுமே இழைக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும் விடுதலைப் புலிகள் தரப்பில் விசாரிக்கவோ சாட்சி சொல்லவோ எவரும் இல்லை. எனவே அரச தரப்பு போர்க்குற்றங்களைத்தான் தேடிப்பார்க்க வேண்டும். மேலும் ஒரு அரசு தனது மக்களுக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பட்சத்தில் அது வன்மையாகக் கண்டிக்கப்படத்தக்கதாகும்.

                               சர்வதேச சமூகம் நியாயமான உள்ளக விசாரணையைக் கோரி வருகிறது. அரச படைகளின் போர்க்குற்றங்களில் அரசுதான் பின்னணியில் உள்ளது என்பதை சர்வதேச சமூகம் உணரவில்லையா?தனது ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தில் போர்க்குற்றம் இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை எந்த அரசு முன்வந்து ஏற்றுக் கொள்ளும் என்பதைச் சற்று சிந்திக்க வேண்டும். ஆகவே சர்வதேச விசாரணையே தேவை.ஆயினும் அதை முன்னெடுப்பதிலும் பல சிக்கல்கள் உள்ளன. இலங்கை அரசுக்கு எதிராகப் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமானால் அதற்கு ஐ.நா சபையின் உறுப்பு நாடுகள் ஆதரவளிக்க வேண்டும். ஆயினும் சீனா போன்ற நாடுகள் இலங்கை அரசுக்கே தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றன.

  

                  பல வருடங்களுக்குப் பின் அண்மையில் வடமாகாண சபைத் தேர்தல் நடைபெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக தெரிவாகியுள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதனை அரசியல் உரிமைகளை வெல்வதற்கான மக்களின் அங்கீகாரம் என குறிப்பிட்டிருந்தது. மாகாணசபை என்பது இலங்கை அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட ஒரு அமைப்பே என்பதையும் மாகாண சபையை எந்நேரத்திலும் கலைக்கும் அதிகாரத்தை இலங்கை ஜனாதிபதி கொண்டுள்ளார் என்பதையும் கூட்டமைப்பு தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் சர்வதேச அழுத்தத்தை சமாளிக்கவே அரசு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தான் வெல்லும் என அறிந்திருந்தும் வடமாகாணசபைத் தேர்தலை முன்னெடுத்தது.

                          ஆகவே இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணைகள் என்பது சாத்தியமற்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை அரசு 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' [LLRC] வை அமைத்தது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் உடைமைகளை இழந்தோர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டனர். விசாரணை முடிவில் ஆணைக்குழு சில விடயங்களை அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. தன்னால் அமைக்கப்பட்ட அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே அரசு இன்னும் முழுமையாக அமுல்படுத்தவில்லை. நிலைமை இவ்வாறிருக்க சர்வதேசத்தின் கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்ப்பது தவறு.

 

                                 மேலும் இனி யுத்தக்குற்ற விசாரணைகளை முன்னெடுத்து சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிப்பதில் எந்த இலாபமும் இல்லை. மீண்டும் தமிழர்களுக்கு நஷ்டமே ஏற்படும். காரணம், தனிநாடு உருவாகும் வாய்ப்பு இனி இல்லை என்பது உறுதி. ஆகவே அரசியல் ரீதியாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளப் போராடுவதே சாலச்சிறந்தது. மேலும் போர்க்குற்ற விசாரணைகளை வலியுறுத்துவதன் மூலம் அல்லது அதனை இடம்பெறச் செய்து தண்டிப்பதன் மூலம் சிங்களவர்களிடம் காழ்ப்புணர்ச்சியை மேலும் அதிகரிக்கச் செய்ய முடியுமே தவிர குறைக்க முடியாது.

                              தனிநாட்டுக் கோரிக்கை கைவிடப்பட வேண்டும் ; போர்க்குற்ற விசாரணைகள் குறித்த ஆர்ப்பரிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் ; போரினால் தொடர்ந்தும் சிறையில் வாடுவோர் விடுதலை செய்யப்பட வேண்டும் ; மக்கள் தம் சொந்த மண்ணில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் ; மலையகத் தமிழருக்கு சொந்தக்காணி வழங்கப்பட வேண்டும் ; தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான மாதச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் ; மலையக தோட்டப்புறங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் ; தமிழர் பிரதேசங்களில் அத்து மீறிய சிங்களக் குடியேற்றங்கள் மீளப்பெறப்பட - நிறுத்தப்பட வேண்டும் ; இராணுவ மயமாக்கல் குறைக்கப்பட வேண்டும் மற்றும் மாகாண சபைகளுக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். மிக முக்கியமாக இலங்கையின் அரசியல் யாப்பு புதிதாக எழுதப்பட வேண்டும்.

                         இவையெல்லாம் நடைபெற வேண்டுமெனில் இலங்கையின் இரு தமிழ்ச் சமூகங்களும் ஒன்றிணைந்து அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். எத்தனை இடர்கள் எத்தனை துன்பங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது ஆயுதப் போராட்ட காலத்தைவிட இன்னும் மிக அதிகமாக நமது பலத்தை அரசியல் போராட்டத்தில் பிரயோகிக்க வேண்டும். தமிழ் மக்களுக்கான - இரு தமிழ்ச் சமூகங்களுக்குமான பொதுவான அரசியல் உரிமைகளை வென்றெடுப்பது ஒன்றே நமது குறிக்கோளாக இருக்கவேண்டும். ஆயுதப் போராட்டம் தந்த வலியை மறந்து விடக் கூடாது ; அதேநேரம் மீண்டும் அதன்பால் சென்றுவிடவும் கூடாது.

                           நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் , ஐ.நா சபை பிரேரணைகள் , யுத்தக் குற்ற விசாரணை ஆகியவை வெறும் கானல் நீரே. அரசியல் உரிமைகளை வெல்வதே உண்மையான தீர்வாகும்.

                         மலையகத்தமிழர்கள் ஈழத்தமிழர்களுடன் இணைந்து செயல்படத் தயாராகவே உள்ளனர். ஈழத் தமிழர்கள் இதனைப் புரிந்துகொண்டு இணைந்து போராட முன்வர வேண்டும். கடந்த காலங்களைப் போன்று மலையகத் தமிழர்களுடன்  ஒட்டியும் ஒட்டாமல் இல்லாமல் நாம் தமிழர்கள் என்ற உணர்வின் கீழ் ஒன்றுபட வேண்டும். ஈழத்தமிழர் துயர்துடைக்க மலையகத் தமிழர்கள் இதுவரை செய்த உதவிகளை மறக்கவோ மறுக்கவோ கூடாது - முடியாது.


                     மே 18. வலிமிகுந்த நாள்தான். ஆயினும் நாமும் சிங்களவர்கள் போல பழி உணர்ச்சியில் தவறிழைத்து விடக் கூடாது. தமிழர்கள் வீரத்தில் மட்டுமல்ல , பண்பிலும் கருணையிலும் விருந்தோம்பலிலும் சிறந்தவர்கள் தான் என்பதை உலகிற்கு உணர்த்த இது ஒரு நல்ல தருணம். அவ்வாறு செயல்பட்டால் சர்வதேசத்தின் உதவியின்றியே அரசியல் உரிமைகளை வென்றெடுக்க எங்கள் தமிழர்களால் இயலுமானதாகவிருக்கும்.

                             இலங்கையில் சகல அரசியல் உரிமைகளுடனும் ஈழத்தமிழர் , மலையகத்தமிழர் , சிங்களவர் மற்றும் முஸ்லிம் ஆகிய நான்கு சமூகத்தவரும் ஒன்றிணைந்து வாழப்போகும் அந்தநாள் வெகுதூரத்தில் இல்லை என்றே நான் நம்புகிறேன்!

குறிப்பு:

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வின் இறுதி அறிக்கையை உங்கள் பார்வைக்காய் [தமிழில்] இங்கே சமர்ப்பிக்கிறேன்.


நன்றி.
சிகரம்பாரதி.

Comments

  1. How much you received from Srilanka Government?

    ReplyDelete
  2. இந்தப் பதிவை படித்த பின்
    உலகமே பதில் கூறு!

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!