அகவை ஒன்பதில் சிகரம்!
வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்! இன்று ஒரு மிக முக்கியமான நாள். ஒரு கையெழுத்து சஞ்சிகையாக தன் பயணத்தை ஆரம்பித்த "சிகரம்" வலைத்தளம் வரை வேர்விட்டு தனது எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாம் ஆண்டில் கால் பதிக்கிறது.
நாம் அறிந்ததை பிறரும் அறிய வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் "சிகரம்". 2003 ஆம் ஆண்டிலிருந்து எனது எழுத்து முயற்சிகள் பல இருந்தாலும் 2006 இல் துவங்கிய "சிகரம்" தான் வெற்றிக் கதவைத் திறந்துவிட்டது. தரம் 11 இல் கல்வி கற்ற போது உருவாக்கப்பட்ட "சிகரம்" கையெழுத்து சஞ்சிகை 2009 வரை தனது பயணத்தை தொடர்ந்தது. போதிய வாசகர்களிடம் கொண்டு சென்று சேர்க்க இயலாத காரணத்தால் 2009 இல் கையெழுத்து சஞ்சிகையை இடை நிறுத்த வேண்டியதாகி விட்டது.
கையெழுத்து சஞ்சிகை என்பது ஒரு பிரதி தான் உருவாக்கப் படும். அதாவது என் கையெழுத்தில் உருவாக்கப்படும் நேரடிப் பிரதி ஒன்றைத்தான் ஒவ்வொரு வாசகரிடமும் எடுத்துச் சென்று வாசிக்கும் படி வழங்க வேண்டும். ஒருவரிடம் கொடுத்து அவர் வாசித்த பின் அவரிடம் இருந்து மீளப்பெற்று அடுத்த வாசகரிடம் கொடுக்க வேண்டும். இச்சுழற்சி முறையானது அடுத்த சஞ்சிகை வெளியிடப்படும் வரை நிகழும். அடுத்த சஞ்சிகை வெளியிட்ட பின் இதே முறையில் வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மிகக் கடினமான பணிதான். ஆனாலும் பாடசாலைக் காலத்தில் ஓரளவுக்கு இலகுவாக இருந்தது. ஏனெனில் எனது வகுப்பறை மற்றும் பக்கத்து வகுப்பறைகளை கையெழுத்து சஞ்சிகையின் விநியோக மையங்களாக உபயோகித்துக் கொண்டேன்.
பாடசாலைக் காலத்தின் பின் இது மிகக் கடினமான பணியானது. 2009 ஆகஸ்ட்டில் எனது பாடசாலைக் காலம் நிறைவடைந்தது. நாட்டின் பல பிரதேசங்களிலுமிருந்து வந்த மாணவர்கள் எங்கள் வகுப்பில் / தரத்தில் கல்வி கற்றனர். அவ்வாறான சுமார் 100 வாசகர்களே "சிகரம்" கையெழுத்து சஞ்சிகையின் வாசகர்களாக இருந்து வந்தனர். பாடசாலைக் காலம் நிறைவடைந்த பின்னர் அவர்களில் முக்கால் வாசிப்பேர் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போய்விட்டனர். ஆகவே எனது ஊரை அண்டிய - மிகக் கிட்டிய பிரதேச நண்பர்களையே எனது வாசகர்களாக்கிக் கொள்ள நேர்ந்தது. ஒரு பத்துப் பதினைந்து பேரளவில் தான் இருக்கும்.
ஒவ்வொருவர் வீடுகளையும் தேடிச் சென்று கையெழுத்துப் பிரதியைக் கொடுத்துவிட்டு வரவேண்டும். மீண்டும் அவர் வீட்டுக்கு சென்று பிரதியை வாங்கிக் கொண்டு அடுத்த வாசகரின் இல்லம் நாடிச் செல்ல வேண்டும். வெயில், மழை மற்றும் தூரம் பாராது இப்பணியை சிலகாலம் முன்னெடுத்தேன். ஆனால் போதுமான வாசகர்களின் எண்ணிக்கை இல்லாத காரணத்தால் 100 வது பிரதியுடன் "சிகரம்" கையெழுத்து சஞ்சிகையை இடை நிறுத்தினேன்.
பாடசாலைக் காலத்திலேயே இலங்கையிலிருந்து வெளிவந்த பல்வேறு சஞ்சிகைகள், நாளிதழ்களுக்கு ஆக்கங்களை எழுதிக் கொண்டிருந்தேன். ஆகவே அதனை தொடர்ந்து செய்தேன். 75 க்கும் மேற்பட்ட ஆக்கங்களை எழுதியிருக்கிறேன். பின்பு " தூறல்கள்" வலைத்தளத்தின் வாயிலாக செப்டெம்பர் 03, 2010 இல் கால் பதித்தேன். தொடர்ந்து மே 02, 2012 இல் "சிகரம்" வலைத்தளம் வாயிலாக பயணத்தைத் தொடர்கிறேன். ஜூலை 01, 2012 முதல் "கவீதாவின் பக்கங்கள்" வலைத்தளம் வாயிலாக என் தோழியின் கவிதைகளை அவரின் பிரதிநிதியாக இருந்து அவரது கவிதைகளை வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறேன்.
அத்துடன் இன்று மற்றுமொரு தளத்திலும் "சிகரம்" கால் பதிக்கிறது. அதாவது "சிகரம்" தனது செய்தி வலைத்தளமாக "சிகரம் 3" இனை அறிமுகம் செய்கிறது. அரசியல், விளையாட்டு, சினிமா , அறிவியல் மற்றும் தொழிநுட்பம் சார்ந்த செய்திகளை [ஏனைய செய்தி வலைத்தளங்கள் / இணையத்தளங்கள் போல நிறைய பதிவுகளை வெளியிடாமல்] நாளுக்கு ஒன்று என்ற அடிப்படையில் வெளியிட தீர்மானித்துள்ளேன். முக்கியமான, பயனுள்ள விடயங்கள் மட்டுமே பகிரப்படும்.
இந்த நன்னாளில் எனது பெற்றோர் , பாடசாலை நண்பர்கள், எழுத்தறிவித்த ஆசிரியர்கள், பிரதேச எழுத்தாளர்கள், வலைத்தளம் மற்றும் முகநூல் [Facebook ] , டுவிட்டர் மற்றும் இன்ன பிற சமூக வலைத்தள நண்பர்கள் , திரட்டிகள் மற்றும் என் நலனில் அக்கறையுடையோர் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை மன நிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது பயணத்தின் முடிவிடமல்ல, ஒரு தரிப்பிடம். அவ்வளவுதான். இதோ புறப்பட்டுவிட்டேன், அடுத்த தரிப்பிடத்தை நோக்கி... ஒவ்வொரு தரிப்பிடங்களையும் நான் சென்றடையும் வரை என் நன்றிக்குரிய அனைவரிடமிருந்தும் ஆதரவையும் அன்பையும் எதிர்பார்க்கிறேன்.
அதுவரை
என்றும்
உங்கள் அன்பின்
சிகரம்பாரதி.
வாழ்த்துகள் சிகரம் பாரதி..... தொடரட்டும் உங்கள் படைப்புகள்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteநாங்களைப் பற்றிய சுயஅறிமுகம் நன்றாக உள்ளது மேலும் பல படைப்புக்கள்உருவாகட்டும்
30/06/2014-வலைச்சர ஆசிரியர் பணிக்கு எனது வாழ்த்துக்கள்
-நனறி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி உள்ளமே !
Deleteஅகவை ஒன்பதில் சிகரம்!
ReplyDeleteஅழகு நடை போடுகிறதா
அறிவுப் பசி போக்குகிறதா
நல் வழிகாட்டல் ஊட்டுகிறதா
நல்லன எல்லாம் வெளிப்படுத்துகிறதா
அத்தனைக்கும் என் வாழ்த்துகள்!
வலைச்சர ஆசிரியர் பணி ஏற்றமைக்கு என் வாழ்த்துகள்!
தங்களின் முயற்சி தொடரட்டும். தாங்கள் மென்மேலும் சாதனை புரிய வாழ்த்துக்கள்.
ReplyDeletewww.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in
மிக்க நன்றி நண்பரே!
Delete