கொரோனா தொற்று சவால்களும் -சர்வதேச தொழிலாளர் தினமும்
சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நிச்சயமற்ற தொழில் சூழலொன்று உருவாகியுள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான தொழிலாளர் தினத்தை நாம் அனுஸ்டிக்கிறோம்.
தொற்று நோயின் தீவிரத்தினால் பல்வேறு தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளுக்கு பல்வேறு அரசாங்கங்களும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன.
இதன் காரணமாக உலகின் முன்னணி நிறுவனங்களாகக் கருதப்படும் நிறுவனங்களே தமது பணியாளர்களை தொழிலில் இருந்து நீக்கியிருக்கின்றன.
கொரோனா தொற்று பரவல் ஏற்படுத்தியுள்ள நிச்சயமற்ற தன்மையினால் பல்வேறு வணிகங்கள் மூடப்பட்டுள்ள நிலையையும் அவதானிக்க முடியும்.
சர்வதேச அளவில் படிப்படியாக குறைந்து வந்த வேலையின்மை வீதம் மீண்டும் சடுதியாக அதிகரித்திருக்கிறது.
![]() |
Image copyrights reserved to respective owners only |
இதன் காரணமாக சர்வதேச ரீதியில் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரங்கள் வீழ்ச்சியை எதிர்நோக்கியிருக்கின்றன.
அது மட்டுமல்ல, தொழிலாளர் தினத்தின் மூலம் வென்றெடுக்கப்பட்ட உரிமையே எட்டு மணி நேர உழைப்பு என்பதாகும்.
இந்த உரிமை கொரோனா தாக்கத்திற்கு மத்தியில் பாரிய கேள்விக்குறியாகி உள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் வீட்டில் இருந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக நிறுவனங்கள் நன்மை பெறுவதுடன் தொழிலாளர்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வு உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இதனால் பாதிக்கப்படுகின்றன.
அத்துடன் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு தேவையான செலவுகளையும் தாமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
கொரோனா தாக்கத்தினால் ஏற்கனவே நிதிச் சுமையை எதிர்கொண்டுள்ள தொழிலாளர்களுக்கு இது மேலதிக செலவினத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
மேலும் எட்டு மணிநேரத்தையும் தாண்டி பணிபுரிய வேண்டிய நிலையை கொரோனா தாக்கம் உருவாக்கியிருக்கிறது.
அத்துடன் மன அழுத்தம் அதிகரிப்பதற்கும், வீட்டு வன்முறைகள் அதிகரிப்பதற்கும் இந்த வீட்டில் இருந்து வேலை செய்யும் முறைமை காரணமாக அமைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆகவே இது போன்ற சூழ்நிலைகள், தொழில் சட்டங்கள் காலத்துக்கு ஏற்ற வகையில் புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தி நிற்கின்றன.
அது மட்டுமல்ல, தொழிலாளர்கள் என்றால் யார் என்பதையும் நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
விவசாயிகளும், நாளாந்த வருமானத்தை ஈட்டுபவர்களும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களும் மாத்திரமே தொழிலாளர்கள் என்கிற எண்ணம் நம்மில் மேலோங்கியிருக்கிறது.
ஆனால் இந்த உலகில் தொழில் புரியும் அனைவரும் தொழிலாளர்களே.
கொரோனா தாக்கம் நீங்கினாலும் அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் உடனடியாக நீங்கப் போவதில்லை.
ஆகவே நாம் கொரோனா தொற்றுக்கு எதிராக மாத்திரமின்றி அது ஏற்படுத்தியுள்ள சவால்களுக்கு எதிராகவும் போராட வேண்டும்.
அனைவருக்கும் தொழிலாளர் தின நல் வாழ்த்துக்கள்!
குறிப்பு:
இந்த கட்டுரை விசேட தொகுப்பாக 2021.05.01 அன்று இலங்கையின் கெப்பிட்டல் வானொலியின் காலை நேர செய்தி அறிக்கையில் ஒலிபரப்பானது.
விரைவில் நல்லதொரு தீர்வு கிடைக்கட்டும்...
ReplyDelete