பதினான்காம் ஆண்டில் கால் பதிக்கும்'சிகரம்' !
பதின்மூன்று ஆண்டுகளைக் கடந்து பதினான்காம் ஆண்டில் காலடி பதித்திருக்கிறது நமது 'சிகரம்' !. பாடசாலை மாணவனாக இருந்தபோது ஆரம்பித்த பெருங்கனவு, தந்தையாக ஆன பின்பும் இன்னமும் தீராக் கனவாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2006.06.01 அன்று பாடசாலையில் கையெழுத்துப் பத்திரிகையாக தனது பயணத்தை ஆரம்பித்தது 'சிகரம்'. இன்று வலைத்தளமாகவும் இணையத்தளமாகவும் பரிணமித்திருக்கிறது. உலகில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் முதல்தர இணையத்தளமாகவும் அச்சு ஊடகமாகவும் 'சிகரம்' உருவாக வேண்டும் என்பதே என் அவா. என் கனவை என்றேனும் நனவாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையில் என் நெஞ்சில் சுமந்து திரிகிறேன். நனவாகிவிடு என் பெருங்கனவே! என் சராசரி ஆயுளின் இரண்டில் ஒரு பகுதியை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் கடக்கப் போகிறேன். ஆன போதிலும் இன்னும் கனவு கனவாகவே இருக்கிறது. கனவை நனவாக்க முடியாமலே போய்விடுமோ என்பதே என் பேரச்சமாக இருக்கிறது. எனினும் ஏதாவது ஒரு வழியில் கனவை நனவாக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டு வந்தவண்ணமே இருக்கிறேன். நனவாகிவிடு...