Saturday, February 4, 2017

இலங்கையின் 69வது சுதந்திர தினம்

இன்று (பிப்ரவரி 04 ) இலங்கை தேசத்திற்கு சுதந்திர தினமாம். 'நா இங்க இல்ல' என்ற வடிவேலு பாணியில் 'நா அடிமையா இல்ல' என்று வருடா வருடம் நம் நாட்டு மக்களைக் கூப்பிட்டு அறிவிக்கும் நாள். இன்றைய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் அனைத்தும் கோலாகலமாக இடம்பெற்று முடிந்தன. 1948 இல் ஆங்கிலேயர் விட்டுச் சென்றதை விட மோசமான நிலையிலேயே இன்று நம் நாடு உள்ளது. பொருளாதாரம், அரசியல் மற்றும்  கல்வி போன்ற அனைத்திலுமே பின்தங்கிய நிலையிலேயே உள்ளோம். ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைக்காமலே இருந்திருக்கலாம் என்ற கருத்தும் இன்று நம்மில் பலரிடையே உள்ளது. ஆங்கிலேயர் சென்ற பின்புதான் இனவெறி, அரசியல் பகைமைகள் மற்றும் ஊழல்கள் ஆகியவை பல்கிப் பெருகி மக்களின் வாழ்க்கையைச் சிதைத்தன. ஆங்கிலேயரின் அரசியலமைப்பில் தமிழர்களுக்கு பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 
ஆனால் சிங்களவர்களின் கையில் ஆட்சி ஒப்படைக்கப்பட்ட பின்னர் தமிழர்களை அழித்தொழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக சுதந்திரம் பெற்ற கையோடு தனிச்சிங்கள சட்டம் அமுல்படுத்தப்பட்டமையைக் குறிப்பிடலாம். இன்று இலங்கையில் என்னதான் சமாதான சூழல் நிலவினாலும் இனத்துவேஷம் நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது. சர்வதேச நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக தமிழர்களோடு இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கவே இலங்கை அரசு முயன்று வருகிறது. மீண்டும் ஆங்கிலேயர் கைகளிலேயே ஆட்சியை ஒப்படைத்தால் கூட பரவாயில்லை என்றே தோன்றுகிறது. 

தற்போதைய ஆட்சியாளர்கள் இலங்கையை சீனாவுக்கு கூறு போட்டு விற்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் ஆரம்பித்த இந்த மகத்தான பணி மைத்திரிபால சிறிசேன காலத்திலும் எவ்வித தடையுமின்றி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வீதி அபிவிருத்தியா, கட்டிட நிர்மாணமா அல்லது துறைமுக அபிவிருத்தியா அது எதுவாக இருந்தாலும் உடனே சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு கொடுத்துவிடுகிறார்கள். இன்னும் சில வருடங்களில் சீனர்களுக்கு இலங்கையில் வாக்குரிமையும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம் சீனாவின் அபிவிருத்தித் திட்டங்களில் பணியாற்ற சீனாவிலிருந்து ஊழியப் படையும் அழைத்துவரப்படுகிறது. ஆங்கிலேயர்கள் யுத்தம் புரிந்து நாட்டைக் கைப்பற்றினார்கள். ஆனால் இலங்கை தானாக மனமுவந்து சீனாவின் காலடியில் நாட்டை வழங்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. 

மலையகத் தமிழர்கள், யாழ் தமிழர்கள், முஸ்லிம்கள் என மூன்று சிறுபான்மையின மக்கள் இலங்கையில் உள்ளனர். பெரும்பான்மையாக உள்ள சிங்களவர்கள் சிறுபான்மையினரை நாட்டை விட்டு விரட்டிவிட்டு இலங்கையை தமக்கு மட்டும் உரியதாக்கிக் கொள்ள நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றனர். ஆனால் அது முடியவில்லை. ஆங்கிலேயர் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து ஆட்சியைத் தொடர்ந்திருந்தால் இலங்கையை சிங்கப்பூரை விடவும் அழகிய நாடாக மாற்றியிருக்கலாம். ஆனால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் அழிப்பதிலேயே இலங்கையின் அரசாங்கங்கள் தனது 69 வருடங்களையும் செலவிட்டுவிட்டன. ஆதலால் கால மாற்றம் தானாகவே நிகழ்த்திக்கொண்ட அபிவிருத்தி தவிர வேறெந்த முன்னேற்றங்களும் இந்நாட்டில் நிகழவில்லை. இனி வரும் காலம் இன, மத பேதங்களற்ற ஒரு இலங்கை முன்னேற்றப் பாதையை நோக்கி நகரும் என நம்பியிருக்கலாம். எது எப்படியோ என் இலங்கை தேசத்திற்கு அறுபத்தொன்பதாவது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

4 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?