இன்னும் சொல்வேன் - 01

மனம். இயற்கையின் படைப்பில் அற்புதமானதொரு சிருஷ்டிப்பு. ஏனெனில் அதன் போக்கை நம்மாலேயே புரிந்து கொள்ள முடிவதில்லை. சந்தோஷமோ, துக்கமோ எதுவாயிருந்தாலும் அதனை மனதுக்குள்ளேயே வைத்தால் அதற்குப் பெயர் குப்பை தான். நமது சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள போதிய நண்பர் வட்டமோ அல்லது அதற்கு ஒப்பான யாரோ இருந்தால் எந்த விதக் குப்பையுமே சேர வாய்ப்பில்லை. ஆனால் எதற்கும் வரையறை இருக்கிறதே? ஒருவர் மீது முழுமையான நம்பிக்கை அல்லது பாசத்தை வைக்காதவரை இந்த வரையறை நம்மை எதுவும் செய்யப் போவதில்லை. மாறாக, பாசம் என்பது நம்மை, நமது உணர்வுகளை வரையறைக்குட்படுத்துகிறது. அதாவது, ஒருவர் மீது உண்மையான பாசம் கொண்டிருந்தால் அவர் எந்தச் சூழ்நிலையிலும் துன்பப் படுவதை நாம் விரும்பமாட்டோம். அந்த வேளையில் உங்களுக்கு ஏற்படும் ஒரு துன்பத்தை உடனே சொல்வீர்களா, அல்லது உங்களுக்குள்ளேயே புதைத்துக் கொள்வீர்களா? இங்கே தான் அன்பின் வரையறை ஆரம்பமாகிறது. நாம் நம்மவரின் நலன் கருதி நமது துன்பங்களை அவரிடம் பகிர்ந்து கொள்ளாது போனாலும் கூட, நமது நலன் பாதிக்கப் படுகிறதே? இப்போது நாம் எதைப் பற்றி பேசப் போகிறோம் என்பது உங்களுக்கெல்ல...