செயற்கை நுண்ணறிவு வாசிப்பை என்ன செய்யும்?

செயற்கை நுண்ணறிவு வாசிப்பை என்ன செய்யும் என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். துரதிர்ஷ்டவசமாக பலருக்கு செயற்கை நுண்ணறிவு என்ன செய்யும் என்பதே தெரிந்திருக்கவில்லை. ஆகவே நமது கட்டுரைக்குத் தேவையான அளவு அந்தப் பக்கம் கொஞ்சம் போய் வரலாம். தொழிநுட்ப ரீதியாக விளக்காமல் எனது அனுபவத்தில் தெரிந்து கொண்டதை வைத்து விளக்குகிறேன். அது உங்களுக்கு இலகுவாக புரிந்து கொள்ள உதவி புரியலாம். நமது பள்ளிக் கல்வி பாலர் பாடசாலையில் ஆரம்பித்து, பாடசாலை, கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் என்று சென்று சிலநேரங்களில் உயர் படிப்பு வரை போகிறது. நாம் ஒவ்வொரு படிப்பும் தரும் அனுபவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கடந்துசென்று விடுகிறோம். திடீரென்று முதலாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து ஒரு கேள்வியைக் கேட்டால் நமக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அதற்காக நாம் முட்டாள் என்று அர்த்தம் இல்லை. ஆனால் எப்போதோ கற்ற ஒன்றை நாம் அப்படியே நினைவில் வைத்திருப்பதில்லை. உணவு எப்படி வயிற்றுக்குள் சென்று சத்துக்களை மட்டும் உடலுக்கு அளித்துவிட்டு மிகுதி கழிவாக வெளியேறி விடுகிறதோ கல்வியும் அப்படித்தான். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ந...