Tuesday, July 28, 2015

ஒரு நாடும் 225 பொய்யுரைஞர்களும் - 03

 

'ஆகஸ்ட் 17 அன்று எனக்கெதிராகப் பேசிய அனைவருக்கும் தக்க பதில் அளிப்பேன்' என முன்னாள் ஜனாதிபதி மகிந்த சூளுரைத்துள்ளார். பெருவாரியான வாக்குகள் மற்றும் ஆசனங்களுடன் தனக்கேற்ற அரசை அமைக்கும் பலம் தனக்குக் கிடைக்கும் என அவர் திடமாக நம்புகிறார். ஜனவரி 8 ஆம் திகதி அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு வெளியேறும் போதிலிருந்தே இந்த எதிர்பார்ப்பு அவருக்குள் இருந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை மகிந்த பெறுவாராயின் தனது 3வது முறையும் ஜனாதிபதியாகும் கனவுக்கு நிச்சயம் உயிர் கொடுப்பார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த தோற்றுப் போனார். ஆனாலும் 45% வாக்குகளை பெற்றிருந்தார். தமிழர் பிரதேசங்களில் மாத்திரமே அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஏனைய பிரதேசங்களில் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தையே மகிந்த கொண்டிருந்தார். இது சிறுபான்மை மக்களின் ஏகோபித்த எதிர்ப்பையும் பெரும்பான்மையினரின் மத்தியில் இழக்கப்படாத ஆதரவையும் வெளிக்காட்டுகிறது. தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மகிந்தவைப் புறந்தள்ளினர். மகிந்தவும் சிங்கள மக்களின் வாக்குகளாலேயெ தன்னால் வென்றுவிட முடியும் என எண்ணினார். மேலும் மக்கள் தன்னை ஒரு கதாநாயகனாகவே இன்னமும் கருதிக் கொண்டிருப்பதாகவும் அவர் எண்ணிக் கொண்டிருந்தார். மூன்றாவது முறையாகவும் தன்னை ஜனாதிபதியாக மக்கள் கண்ணை மூடிக்கொண்டு தேர்ந்தெடுப்பார்கள் என நம்பினார். தனது மூன்றாவது பதவிக்காலத்தின் முடிவில் தனது சந்ததியினை ஆட்சி பீடத்தில் அமரவைக்க அல்லது தமிழகத்தைப் போல ஐந்து முறை தன்னாலும் இலங்கையில் அரசாள முடியும் என திட்டமிட்டிருக்கலாம். ஆனால் அத்தனையும் கனவாகிப் போனது. விக்கிரமாதித்தனின் வேதாளத்தைப் போல மீண்டும் தேர்தலில் குதித்திருக்கிறார்.

அண்மையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்த மைத்திரிபால அவர்கள் தனது விருப்பமின்றியே மகிந்தவுக்கு வேட்பு மனு வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். சுதந்திரக்கட்சியின் தலைவராக தற்போது மைத்திரியே இருந்தாலும் கட்சி மகிந்தவுக்கு ஆதரவாகவே உள்ளது. இதனை சுதந்திரக் கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான குழுவுக்கு மகிந்தவை தலைவராக நியமித்திருப்பதிலிருந்தே அறிய முடியும்.

மகிந்தவுக்கு எதிராக 7500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றின் மீதான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. தேர்தலில் மகிந்த வெற்றி பெற்றாலும் இவ்விசாரணைகள் தொடருமா? மைத்திரிபாலவின் அனுமதி இன்றி மகிந்தவை போட்டியிட கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளமையானது மகிந்த பிரதமராகுவார் என்ற எதிர்பார்ப்பினாலா?

தேர்தல் வெற்றிக்குப் பின்னர் மகிந்தவை பிரதமராக்குவோம் என சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. இது சாத்தியமானதே என மகிந்தவும் நம்புகிறார். பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கா அல்லது நாடாளுமன்றத்திற்கா உள்ளது என்பது பற்றிய பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் வெளிக்கிளம்பியுள்ளன. தேசிய அரசாங்கத்தில் இடம்பெறும் எண்ணமும் மகிந்தவுக்கு இல்லை. மகிந்த வெற்றி பெறுவாரா இல்லையா என்பதும் வெற்றி பெற்றால் பிரதமர் பதவியை அடைவாரா இல்லையா என்ற கேள்விகள் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஜனாதிபதியாக இருந்த மகிந்த பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதானது உயர் தரம் படித்த ஒருவர் சாதாரண தரம் எழுதுவது போலுள்ளது என அண்மையில் ஒருவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததுமே மகிந்த நாடாளுமன்றத் தேர்தல் குறித்து சிந்திக்கத் தொடங்கி விட்டார். மைத்திரிபால தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய அரசு அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். நாடாளுமன்றம் கலைக்கப்படப்போவது உறுதி. ஆகவே இழந்ததை மீண்டும் அடைந்துவிடலாம் என எண்ணினார். சுதந்திரக் கட்சி உறுப்பினர்களைக் கொண்டு அரசைக் கலைக்கும் முயற்சிகளை எடுத்தார். ஆனால் மைத்திரி அவ்வாறான எதுவும் இடம் பெறுவதற்கு முன்னர் 19 மற்றும் 20 வது திருத்தங்களை நிறைவேற்றிக் கொள்ள முனைந்தார். அவரால் 19 ஐ மட்டுமே நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது. ஆகவே மகிந்த தனது ஆதரவை பெருக்கிக் கொண்டு தனது அரசுக்கெதிராக நம்பிக்கையிலாப் பிரேரணையை நிறைவேற்ற முன் மைத்திரி ஆட்சியைக் கலைத்து தேர்தலை அறிவித்தார்.

மகிந்த இம்முறை தேர்தலில் வென்றே ஆக வேண்டியுள்ளது. இல்லையேல் அரசியல் வாழ்க்கையே அஸ்தமனமானது போலாகிவிடும் என்பதுடன் ஜனாதிபதிப் பதவியை இழந்தாலும் கைப்பற்றி வைத்திருக்கும் சுதந்திரக் கட்சி மீதான ஆதிக்கமும் இல்லாது போய்விடும். தன்னை வெல்ல யாரும் இல்லை என்று சர்வாதிகாரம் புரிந்த மகிந்தவுக்கு இது பாரிய பின்னடைவாக அமையும். உடனடியாக பிரதமராகாவிட்டாலும் நாடாளுமன்ற உறுப்பினராகவேனும் ஆக முடியாது போகுமாயின் அது மகிந்தவின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதியது போலிருக்கும் என்பதுடன் சிறைவாசம் அனுபவிக்கவும் நேரிடலாம். கடந்த பத்து வருட காலம் மகிந்த நாட்டை ஆட்சி செய்ததற்கான பிரதிபலனை மக்கள் இத்தேர்தலிலேயே வழங்கவுள்ளனர். விடை இன்னும் சில நாட்களில்...
 

Friday, July 24, 2015

ஒரு நாடும் 225 பொய்யுரைஞர்களும் - 02

நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. முக்கியமானது பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் மகாராஜா ஊடக நிறுவனத்தின் மின்னல் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ரங்கா தொடர்பானது. அண்மையில் காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையகத்தில் 11 பெண் வேட்பாளர்களை நிறுத்திவிட்டு சுதந்திரக் கட்சியில் தேசியப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இது எந்த வகையில் நியாயம் எனக் கேட்கத் தோன்றுகிறது. 

ஐ.தே.க வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் ரங்காவின் மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில நாட்களிலேயே மரணமானார். இது பல விதங்களிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும் ரங்கா சுதந்திரக் கூட்டமைப்புடன் நெருக்கத்தைப் பேணி வந்ததும் சந்தேகத்துக்குரியதாகிறது. மின்னல் பக்கச் சார்பற்ற நிகழ்ச்சி என விளம்பரப்படுத்தப்பட்டு வந்தாலும் மகாராஜா நிறுவனத்தினதும் வேறு சில நபர்களினதும் சுய இலாபத்திற்காகவே நடாத்தப்படுகிறது என்பது தற்போது புலனாகிறது.

ரங்கா தொடர்பில் வெளியாகியுள்ள காணொளியில் தொலைபேசி உரையாடல்கள் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் நேயர்கள் ஏற்படுத்துவதில்லை. மாறாக ரங்காவே நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு என மக்களை நம்ப வைப்பதற்காக செய்திருக்கும் ரகசிய ஏற்பாடே அது. மேலும் ரங்கா தனக்குப் பிடிக்காத அரசியல் வாதிகளை திட்டுவதற்கு வருபவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார். இது தான் அந்தக் காணொளி சொல்லும் செய்தி. ஊடகவியலாளராகவும் அரசியல் வாதியாகவும் செயற்படும் ரங்காவிடமிருந்து மக்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. இலங்கையின் முன்னணி தமிழ் ஊடகமான சக்தி தொலைக்காட்சியும் இதற்கு உடந்தை என்பது இன்னும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.

இலங்கையின் சக்தி வாய்ந்த ஊடகமாக மகாராஜா தனது நடுநிலையைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. சிரச ஊடகவியலாளர் ஐக்கிய தேசிய கட்சியிலும் சக்தி ஊடகவியலாளர் சுதந்திரக் கூட்டமைப்பிலும் உள்ளனர். மேலும் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப் படுத்தும் ரங்கா தனது புகழை அதிகரிப்பதற்கு மலையகத்தில் பெண் வேட்பாளர்களை போட்டியிடச் செய்துள்ளார். இது நியாயமா? வடக்கை பிறப்பிடமாகக் கொண்ட ரங்கா மலையக மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி பலனடைந்து வருகிறார். இது இனியும் தொடர வேண்டுமா என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும்.


ரங்காவின் மின்னல் நிகழ்ச்சி தொடர்பில் சில விடயங்களை முன்வைக்க வேண்டும். சரி வர ஒரு விடயத்தை தடங்கலின்றி சொல்லி முடிக்கத் தெரியாத ஒருவர்தான் இந்நிகழ்ச்சித் தொகுப்பாளரான ரங்கா. முன்னேற்பாடு செய்யப்பட்ட அழைப்புகளுடன் அரசியல் வாதிகளை கிண்டி விட்டு அதில் உருவாகும் பிரச்சினைகளில் குளிர் காய்பவர் இவர். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அரசியல் வாதிகளின் கருத்துக்களுக்கு இடம்கொடாமல் தனது கருத்துக்களை அவர்கள் மீது வலிந்து திணிக்க முயல்வார். தேவையற்ற விடயங்களை நிகழ்ச்சியின் முக்கால்வாசி நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கடைசி நேரத்தில் சூடான விவாதத்தைக் கிளறிவிட்டு நிகழ்ச்சியை முடித்துவிடுவார். இதனால் குறித்த அரசியல் வாதிகளுக்குள் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும். இதுவே அவரது தேவையுமாகும்.


இவ்வாறுதான் காலஞ்சென்ற மகேஸ்வரன் மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரைப் பழி வாங்கும் நோக்கில் அவரைக் கிளறி அவர் இரு வார காலத்தில் வெளிடவிருந்த இரசிய ஆவணம் தொடர்பில் வெளி உலகுக்கு அறியத்தந்தார். வெளிவந்தது இரகசிய ஆவணமல்ல, அவரது மரணச் செய்தியே. தற்போது வெளியாகியுள்ள காணொளியை நம்பாமல் இருப்பதற்கான எவ்விதமான அடிப்படையும் நம்மிடம் இல்லை. தற்போது தேர்தல் முடிவடையும் வரை மின்னல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தேர்தல்கள் ஆணையாளர் தடை விதித்துள்ளார். இதன்போது பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டும் திரையிட ரங்கா அனுமதி கோரியுள்ளார். இதிலிருந்தே மின்னல் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி என்பது புலனாகிறதல்லவா?

மகிந்த அரசின் கைக்கூலியான ரங்காவின் பிரஜைகள் முன்னணி சார்பாக இம்முறை 11 பெண் வேட்பாளர்கள் மலையகத்தில் களம் இறக்கப்பட்டுள்ளனர். பெண்கள் தொடர்பில் அதிகம் பேசப்படுகின்ற இக்காலப்பகுதியில் ரங்காவை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயமே. இதுவரை எந்தவொரு கட்சியும் 100% பெண் வேட்பாளர்களை களமிறக்கியதில்லை. ஆனால் ரங்காவின் செயல்பாடுகளால் இதனை ஆதரிக்க முடியாத நிலையே காணப்படுகிறது. சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் தனக்கான இடத்தை ஒதுக்கிக் கொண்டு தனது கட்சியில் பெண் வேட்பாளர்களை தனியே போட்டியிடச் செய்ததன் பின்னணி குறித்து நாம் சிந்திக்காமல் இருக்க முடியாது. வடக்கை பிறப்பிடமாகக் கொண்ட ரங்கா மத்தியில் ஏன் உறுப்புரிமை பெற வேண்டும்? 

எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட விரும்பும் ஒருவர் தான் பிறந்த மாகாணத்தில் மாத்திரமே போட்டியிட முடியும் என சட்டத்தால் வரையறுக்க வேண்டும். இல்லையேல் ரங்கா போன்றவர்கள் தொண்டமானைப் போல் மலையகத்தை சீரழிப்பதை தடுக்க முடியாது போய்விடும்.

தேர்தலுக்கான காலம் நெருங்கி வருகிறது. ஆகவே நிச்சயம் அனைவரும் தவறாது வாக்களிப்போம். வாக்களிக்கும் முன் சிந்திப்போம். மக்களுக்கான அரசாங்கத்தை அமைக்கவே ஜனவரி 8 இல் மாற்றத்தை ஏற்படுத்தினோம். அதே மாற்றத்தை ஆகஸ்ட் 17 இலும் ஏற்படுத்த உறுதி பூணுவோம். ஏமாற்று வித்தைக்காரர்களை நிராகரிப்போம். எமக்காக சேவை செய்யத் தயாராகவுள்ள இளம், புதிய அரசியல் வாதிகளை கட்சி பேதமின்றி ஆதரிப்போம். புதிய இலங்கையை உருவாக்குவோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?