ஏறு தழுவும் உரிமை மீட்க வெகுண்டெழுந்தான் செல்லினத்தமிழன்! - 03

வணக்கம். ஏறு தழுவும் உரிமை மீட்க தொடங்கிய இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம் உரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு தமிழக அரசு சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு நிரந்தர சட்டமாக்கப்பட்டுள்ளது. மதுரை அவனியாபுரம், நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ( பிப் 05 - 2017 ) மிகக் கோலாகலமாக, மிக வெற்றிகரமாக இளைஞர்களுக்கு நன்றி கூறி நடாத்தி முடிக்கப் பட்டுள்ளது. மேலும் பாலமேடு மற்றும் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் இவ்வாரம் ( பிப் 09, 10 - 2017 ) ஏறு தழுவும் விளையாட்டு இடம்பெறவுள்ளது. எந்தக்காலத்திலும் ஏறு தழுவும் விளையாட்டு நடாத்தப்படும் நேரத்தில் தமிழக இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் உலகத் தமிழர்களின் பங்களிப்பை யாரும் மறந்துவிட முடியாது. ஜல்லிக்கட்டு அமைப்போ அல்லது தமிழக அரசோ ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் என்னும் இவ்வெற்றிக்கு உரிமை கோர முடியாது. தமிழக அரசு மக்களின் எண்ணத்தை நிறைவேற்றிய கருவி மட்டுமே. இளைஞர்களின் எழுச்சிக்கு தலைவணங்குகிறேன்!

 

ஏறு தழுவும் உரிமை மீட்க இலட்சக்கணக்கில் திரண்ட இளைஞர் கூட்டத்தைப் பார்த்து உலகமே வியந்து போனது. பயன் தருமா என்ற ஐயம் இருந்தாலும் உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் தமிழகத்தில் நிகழ்ந்த எழுச்சியினால் உந்தப்பட்டு தத்தம் வாழிடங்களில் தொடர் போராட்டங்களை நடாத்தி உலகின் கவனத்தை ஏறு தழுவுதலின் பக்கம் ஈர்க்க ஆதரவளித்தனர். ஆனால் தமிழக அரசு ஏறு தழுவும் உரிமை மீட்க நடந்த தொடர் போராட்டத்தை நிறைவு செய்ய நடவடிக்கை எடுத்தவிதம் அனைவரையும் தமிழக அரசின் மீது அதிருப்திகொள்ள வைத்தது. ஏழு நாட்கள் தொடர்ந்த அறவழிப் போராட்டத்தில் இறுதிநாளில் தமிழகக் காவல்துறை நடந்துகொண்டவிதம் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. முதலில் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் கோரிய போராட்டக்காரர்கள் தமிழக அரசின் மந்தப் போக்கினால் நிரந்தர சட்டமே இறுதித் தீர்வு எனக் கோரிக்கை விடுத்தனர். போராட்டத்தின் ஏழாம் நாள் மாலையில் நிரந்தர சட்டம் தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்படவிருந்த நிலையில் போராட்டத்தை அதன் போக்கிலேயே விட்டிருந்தால் சட்டம் நிறைவேற்றப்பட்ட சிலமணி நேரங்களில் மாணவர்கள் தாங்களாகக் கலைந்து போயிருப்பார்கள். ஆனால் தமிழகக் காவல்துறை வலுக்கட்டாயமாக போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்து வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு அந்தப் பழியை மாணவர்கள் மீது சுமத்தி தீராத களங்கத்தைத் தேடிக் கொண்டது. 

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழக முதலமைச்சரும் அமைச்சர்களும் அவசர அவசரமாக போட்டியை நடாத்தி மக்கள் போராட்டத்தின் வெற்றியை தமதாக்கிக் கொள்ளத் துடித்தனர். ஆனால் மக்கள் முதலமைச்சரையே அவர் போட்டியைத் துவங்கி வைக்கத் திட்டமிட்டிருந்த மதுரை அலங்காநல்லூருக்கு வர விடாமல் தடுத்து நிறுத்தினர். தமது கோரிக்கையில் இறுதிவரை மக்கள் உறுதியாக இருந்தனர். ஏறு தழுவும் உரிமை மீட்க கிராமத்து விவசாயிகளுக்காக கிளர்ந்தெழுந்ததில் இருந்து தான் எப்போதும் கைப்பேசியின் அடிமை அல்ல என்றும் சமூக உணர்வு தனக்கும் உண்டு எனவும் இக்கால இளைஞன் நிரூபித்திருக்கிறான். மேலும் இலட்சக்கணக்கான மாணவர்களை நவீன கைப்பேசிகளே ஒன்றிணைத்தன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இளைஞர்கள் தம் கைப்பேசிகள் மூலம் மாணவர்களை ஒன்றிணைத்து மக்களின் அக இருளையும், மெரீனா கடற்கரை இருளில் மூழ்கிய போது மெரீனாவுக்கே ஒளியை வழங்கி புற இருளையும் போக்கி உலகையே தம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தனர். போராட்டத்தின் இடையில் காவேரி பிரச்சினை, மீத்தேன் வாயு, மீனவர் பிரச்சினை மற்றும் அந்நிய குளிர்பான விற்பனை என சமகாலப் பிரச்சினைகள் பலவற்றுக்கும் குரல் கொடுத்து அனைத்துத் தரப்பு மக்களையும் மாணவர்கள் ஈர்த்தனர், 


எல்லாவற்றுக்கும் மேலாக டெல்லியில் உள்ள பெண்கள் கூட தமிழக ஆண் மாணவர்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொண்டது குறித்து பெருமை கொள்ளும் அளவிற்கு கட்டுக்கோப்பாக நடந்துகொண்டனர். ஒரு தலைவன் இல்லாமல் இலட்சக்கணக்கில் ஒரு கூட்டம் கூட முடியும் என்பதையும் அத்தனை பேரும் ஒரே கோரிக்கைக்காய் ஓரணியில் திரள முடியும் என்பதையும் ஏழு நாட்களாக மனவுறுதியுடன் இறுதிவரை ஒன்றிணைந்து பயணிக்க முடியும்  என்பதையும் தமிழர்கள் உலகுக்கு பறைசாற்றியிருக்கிறார்கள். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று தைரியமாக இப்போராட்டத்தின் பின்னர் எவ்வித மன உறுத்தலும் இன்றி நம்மால் சொல்லிக்கொள்ள முடிகிறதென்றால் எல்லாப் புகழும் களமிறங்கிப் போராடிய ஒவ்வொரு மாணவனுக்கும் பொதுமகனுக்கும் மட்டுமே உரித்தாகும். ஏறு தழுவும் உரிமை மீட்ட போராட்டம் இந்த நூற்றாண்டு கண்ட நவீன சுதந்திரப் போராட்டம்!

Comments

  1. Replies
    1. நிச்சயமாக சரித்திரத்தில் இடம்பெறும் இப்போராட்டம்!

      Delete
  2. ஏழு நாட்கள் தொடர்ந்த அறப்போராட்டத்தின் மூலம் ,மாணவர் , இளைஞர், பொதுமக்கள் அனைவரும் அந்த போராட்டத்தின் வாயிலாக நமது பண்பாட்டு , கலாச்சார மேன்மையை உலகறிய செய்தமை பாராட்டுக்குரியது.

    வாழ்க வளர்க நமது ஒற்றுமை.

    கோ

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக. மாணவர்களின் அறப்போராட்டம் நமது கலாச்சாரத்தை மீட்டெடுத்துள்ளது.

      Delete
  3. மிகவும் நன்றாக நன்றாக இருக்கிறது

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!