Monday, January 30, 2017

கில்லி முதல் பைரவா வரை...நடிகர் விஜய்யின் ( இளைய தளபதி என்று சொல்ல எந்த அவசியமும் நேரவில்லை இதுவரைக்கும் ) கில்லி திரைப்படம் நேற்று ( 2017.01.29) சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இது 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். இறுதியாக அண்மையில் ( 2017 ஜனவரி ) பைரவா திரைப்படம் வெளியாகியிருந்தது. 2004 கில்லிக்கும் 2017 பைரவாவுக்கும் இடையில் 21 திரைப்படங்கள் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ளன. இவற்றில் கில்லிக்கு அடுத்து மதுர, திருப்பாச்சி, சுக்ரன், சிவகாசி மற்றும் நண்பன் ஆகிய ஐந்து திரைப்படங்கள் மட்டுமே எனது ரசனைக்கான தெரிவு. கில்லியும் இந்த ஐந்து திரைப்படங்களும் கூட மிகைப்படுத்தப்பட்ட கற்பனை, வணிக நோக்கு மற்றும் இன்னபிற அம்சங்கள் கொண்டவையாக இருந்தாலும் நடிகர் விஜய்யின் இயல்பான, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்திழுத்தன என்றே சொல்லலாம். இவை தவிர வேறெந்தத் திரைப்படங்களிலும் நல்ல கதையம்சமோ அல்லது நடிகர் விஜய்யின் குறிப்பிடத்தக்க நடிப்போ இல்லை என்பதே உண்மை. இயக்குனர்களே விஜய்யின் நடிப்புத் திறன் வீழ்ச்சியடைந்தமைக்கு முக்கிய காரணம். தமிழில் வெளிவரும் திரைப்படங்களில் ஒன்றிரண்டு தவிர எல்லாமே வணிக நோக்குள்ள திரைப்படங்கள் தான். ஆகவே இயக்குனர்கள் தங்கள் வணிக நோக்கோடு விஜய்யின் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் திறனுள்ள கதைகளையும் அமைத்தால் ரசிகர்களோடு சேர்ந்து விஜய்யும் மகிழ்ச்சி கொள்வார் என்பதில் ஐயமில்லை. 

Saturday, January 28, 2017

வாட்ஸப் தந்த தமிழ் கூறும் நல்லுலகம்!

வணக்கம் வலைத்தள வாசகர்களே! நலம், நலமறிய ஆவல். வாட்ஸப்! இன்று தொடுதிரைக் கைப்பேசி வைத்திருக்கும் அனைவரும் இணையவழிக் குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகளைப் பரிமாறிக் கொள்வதற்கு பெரும்பாலும் வாட்ஸப்பையே பயன்படுத்துகின்றனர். வைபர், பேஸ்புக் மெசேன்ஜர், இமோ என பலப்பல செயலிகள் இருந்தாலும் அவற்றுள் வாட்ஸப்புக்கு என தனி இடம் உண்டு. எளிமை, வசதி குறைந்த கைப்பேசியிலும் பயன்படுத்தக் கூடியதாக உள்ளமை போன்ற பல காரணிகள் மக்கள் இதனை விரும்பக் காரணமாக அமைகின்றன. குரல் பதிவு, புகைப்படங்கள், ஆவணங்கள், குரல் மற்றும் காணொளி அழைப்பு (Video Call ) மற்றும் குறுஞ்செய்திகள் என அனைத்தையும் இதனூடாக பரிமாறிக் கொள்ள முடிகிறது. வாட்ஸப் ஒரு பொழுதுபோக்கு செயலியாக மட்டுமல்லாமல் சில நேரங்களில் பயனுள்ள விடயங்களைப் பரிமாறிக் கொள்ளவும் உதவுகின்றது. 

'தமிழ் கூறும் நல்லுலகம்' என்னும் வாட்ஸப் குழு தமிழ் விரும்பும் நலன்விரும்பிகளுடன் இணைந்து செயற்படும் ஒரு குழுவாகும். இக்குழு கடந்த ஒரு மாதகாலமளவில் செயற்பட்டு வருகிறது. இக்குழுவில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் பகிரப்படுகின்றன. பல்வேறு துறை சார்ந்தவர்களும் பல விடயங்களில் ஆர்வமும் அறிவும் உள்ளவர்களும் இக்குழுவில் இருப்பதால் பல்வேறு தகவல்களைக் கேட்டு அறிந்துகொள்ள முடிகிறது. இணைய அரட்டைக்குரிய செயலியை பயனுள்ளதாகவும் ஆக்க முடியுமென்பதை இவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். தமிழ் தொடர்பான விவாதங்கள், சங்க இலக்கிய பகிர்வுகள், இலக்கண இலக்கிய கருத்தாடல்கள் என தினமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது இக்குழு. வலைத்தள நண்பர் வெற்றிவேல் அவர்களின் மூலம் குழுவில் இணைந்து இனிய தமிழை சுவாசித்துக் கொண்டிருக்கிறேன். 

தவறுகள் சுட்டிக்காட்டப் படுகின்றன. சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன. வினாக்களுக்கான விடைகள் கிடைக்கின்றன. தேடல்களுக்கான களம் இது. வாட்ஸப் தமிழ்ச்சங்கம் இது என்றாலும் மிகையில்லை. மாற்றுக்கருத்துக்கள் நம் எழுத்துக்களை சீர்ப்படுத்த உதவுகின்றன. இக்குழுவானது சில கட்டுப்பாடுகளுடனேயே இயங்கி வருகிறது. கட்டுப்பாடுகள் மீறப்படும்போது ஏனையோரால் நினைவூட்டப்படுகிறது. இவ்வாறான குழுக்களை சமூக வலைத்தளங்களில் காண்பது மிகவும் அரிது. அப்படியே இருந்தாலும் ஆரம்பித்த நோக்கத்தில் அல்லாமல் வேறு பாதையில் சென்று கொண்டிருக்கும். ஆனால் இக்குழு இன்றுவரை கட்டுக்கோப்புடன் இயங்கிவருவது பாராட்டுக்குரியது. பெரும்பாலானோர் கைப்பேசியிலும் தமிழில் எழுதுவது மகிழ்ச்சியளிக்கிறது. இக்குழுவில் தமிழ் ஆர்வலர்கள் யாரேனும் இணைய விரும்பினால் எனக்கு உங்கள் இலக்கங்களை தனிப்பட்ட முறையில் அனுப்பினால் பரிந்துரைத்து இணைக்க ஆவண செய்வேன். இவ்வாறான குழுக்களும் கலந்துரையாடல்களும் தமிழை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்வதில் முக்கிய பங்காற்றும் என்பதில் ஐயமில்லை. 

Saturday, January 21, 2017

ஏறு தழுவும் உரிமை மீட்க வெகுண்டெழுந்தான் செல்லினத்தமிழன்! - 02

ஏறு தழுவும் உரிமையை மீட்க தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. மாணவர்களின் இப்போராட்டம் ஏறு தழுவும் உரிமை மீட்புக்காக மட்டுமல்லாது காவிரி மேலாண்மை வாரியம், பன்னாட்டு வணிக நிறுவனங்கள் தமிழகத்தின் நீராதாரத்தை சிதைத்தல், சுவாதி படுகொலை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து பன்முகம் கொண்ட போராட்டமாக தொடர வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது. போராட்டக்காரர்கள் மத்தியில் இவை தொடர்பான கருத்துக்கள் பரவலாக இருந்தாலும் ஏறு தழுவும் உரிமையை மீட்டுவிட்டால் போராட்டம் முழுமையடைந்துவிடும் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் இடம்பெற்று வரும் இந்த ஏறு தழுவுதல் உரிமை மீட்புக்காக நடைபெறும் இப்போராட்டத்தில் கூட இளைஞர்களிடையே பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் நிலவி வருகின்றன. அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வாடிவாசல் திறந்து ஏறு தழுவுதல் இடம்பெற்றால் போராட்டம் நிறைவுக்கு வரும் என ஒரு பகுதியினர் கூறுகின்றனர். அவசரச் சட்டம் போதாது, நிரந்தரத் தீர்வு வரும் வரை போராடுவோம் என்கின்றனர் மறு தரப்பினர். இல்லை ஏறு தழுவுதல் உரிமையை மீட்டபின் ஏனைய பிரச்சினைகளுக்காகவும் போராடுவோம் என இன்னொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆக இளைஞர்களின் இலக்கு எது என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. 

ஏறு தழுவுதல் தொடர்பில் அவசரச் சட்டம் பிறப்பிக்கக் கோரி பாரதப் பிரதமரைச் சந்தித்தார் தமிழக முதல்வர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் மத்திய அரசினால் எதுவும் செய்ய முடியாது, மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கும் எனத் தெரிவிக்கிறார் பிரதமர். இதனை அடுத்து சட்ட வல்லுநர்களுடனான ஆலோசனையின் பின்னர் தமிழக முதல்வர் அவசரச் சட்ட வரைவைத் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பினார். தொடர்ந்து மத்திய அரசு திருத்தங்களுடன் ஒப்புதல் அளிக்க உள்துறை அமைச்சகம், சுற்று சூழல் அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்கள் ஒப்புதல் அளிக்கின்றன. மத்திய அரசு மாநில அரசின் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருப்பதால் நீதிமன்றம் ஒருவார காலத்திற்கு தனது தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசு விடுத்த வேண்டுகோளையும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. இன்னும் குடியரசுத் தலைவரும் தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளிக்க வேண்டும். இவர்களின் ஒப்புதல் நாளை அல்லது நாளை மறுநாள் கிடைக்கலாம். ஏறு தழுவுதல் போட்டி வரும் வாரத்தில் நிச்சயம் நடக்கும். அதன் பின்னர் இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம் நிறைவுக்கு வரும். தொடர்ந்து நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிடும். இதுதான் நடந்த, நடக்கப் போகிற நிகழ்வுகளின் மீதான சாராம்சப் பார்வை. அவசரச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நிரந்தரச் சட்டம் உருவாக்கப் படுமா மற்றும் நீதிமன்றம் ஏறு தழுவுதலுக்கு தான் விதித்த தடையை நீக்குமா என்பதெல்லாம் கேள்விக்குறியே. 

நீதிமன்றம் தனது தீர்ப்பை அளிக்காமல் மத்திய அரசு ஒருபோதும் நிரந்தரச் சட்டம் பிறப்பிக்காது. நீதிமன்றம் நினைத்தால் இவ்வழக்கை இன்னும் இரண்டாண்டுகளுக்கு இழுத்தடிக்கலாம். ஆனால் இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம் அதுவரை நீடிக்குமா? ஏறு தழுவுதலுக்கான தடையை மீண்டும் நீதிமன்றம் உறுதி செய்தால் மீண்டும் இவாறான இளைஞர்களின் எழுச்சி நிகழுமா? ஒரு வேளை ஏறு தழுவுதலுக்கு நிரந்தர அனுமதி கிடைத்துவிட்டால் இன்னும் ஒரு மூன்று மாதங்களிலேனும் இந்த இளைஞர்கள் மீண்டும் தன்னெழுச்சியாக காவிரி மேலாண்மை வாரியம், பன்னாட்டு வணிக நிறுவனங்கள் தமிழகத்தின் நீராதாரத்தை சிதைத்தல், சுவாதி படுகொலை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் திரண்டு வருவார்களா? நாள் கணக்கில் மத்திய அரசையும் மாநில அரசையும் அரசியல் சாயமின்றி கேள்வி கேட்பார்களா? இனி வரும் காலங்களில் இளைஞர் ஒன்று கூடல்கள் மாவட்டம் தோறும் நகரம், கிராமங்கள் தோறும் வாராவாரம் அல்லது மாதம் ஒருமுறையேனும் நிகழ வேண்டும். இவ்வொன்று கூடல்கள் மெரீனா கடற்கரை போன்ற பொதுவெளியில் நிகழ வேண்டும். அன்றைய நாளில் தீர்மானங்களை நிறைவேற்றி அவற்றுக்காக குரல் கொடுக்க வேண்டும். அரசியல் வாதிகளையோ நடிகர்களையோ இணைத்துக்கொள்ளாமல் இதே போல் தன்னெழுச்சியான முறையில் குரலெழுப்ப வேண்டும். செய்வீர்களா? செய்வீர்களா? 

Friday, January 20, 2017

ஏறு தழுவும் உரிமை மீட்க வெகுண்டெழுந்தான் செல்லினத்தமிழன்!

ஜல்லிக்கட்டு எனத் தற்போது பரவலாக அழைக்கப்படும் ஏறு தழுவுதல் என்னும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கான தடையை நீக்கக் கோரி செல்லினங்களான கைப்பேசிகளிலேயே தினமும் மூழ்கிக் கிடக்கும் இக்கால இளைஞர்கள் வெகுண்டெழுந்துள்ளனர். மூன்றாவது நாளாகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இளைஞர்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் பெருகிவருகிறது. பெருகிவரும் மக்கள் ஆதரவின் காரணமாக திரைத்துறையினர் , அரசியல் வாதிகள் மற்றும் பலரும் ஏறு தழுவுதலுக்கு சட்டரீதியான அனுமதி கோரி தமது ஆதரவையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இரவு பகல், வெயில் பனி என எதனையும் பொருட்படுத்தாது மக்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. மாணவர்கள், பெண்கள், தாய்மார்கள் , குழந்தைகள், பெரியவர்கள் என அத்தனை மக்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். சிறு தீப்பொறியாக தொடங்கியது இப்போராட்டம். தீப்பொறி என்ன செய்யும் என எண்ணிய அதிகார வர்க்கம் கொழுந்துவிட்டெரியும் சுடரைக் கண்டு மிரண்டு போயிருக்கிறது. 

2004 ஆம் ஆண்டு விலங்குகள் நல தன்னார்வ அமைப்பாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பீட்டா என்னும் அமைப்பினால் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் காரணமாக 2014 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஏறு தழுவும் விளையாட்டை நீதிமன்றம் நிரந்தரமாக தடை செய்தது. இதனால் 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் ஏறு தழுவும் விளையாட்டு இடம்பெறவில்லை. தடையை நீக்கக் கோரி கடந்த இரண்டாண்டுகளாக ஆங்காங்கே சிறிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எவ்விதப் பலனும் இல்லை. இவ்வாண்டு பொங்கலுக்கு நிச்சயம் ஏறு தழுவும் விளையாட்டு நடைபெறும் எனக் காத்திருந்த மக்களுக்கு வழமை போல் ஏமாற்றமே மிஞ்சியது. எனவே இந்தாண்டும் ஆதரவு அறிக்கைகளினாலேயே அரசியல் நடத்திவிடலாம் என எண்ணியிருந்த அரசியல்வாதிகளுக்கு தற்போதைய மக்களின் மாபெரும் எழுச்சி பேரதிர்ச்சியாய் அமைந்துள்ளது. தமக்கு எந்தவொரு அரசியல் வாதியினதோ அல்லது அரசியல் கட்சியினதோ ஆதரவு தேவையில்லை என்று போராட்டக்காரர்கள் அரசியலைப் புறக்கணித்து தமிழன் என்ற உணர்வினால் ஒன்றிணைந்து போராடி வருவது பல்வேறு தரப்பினரையும் மக்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 

உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா வேம்பு இருக்கா என்று மக்களை பன்னாட்டு வணிக நிறுவனங்கள் மக்களை அடிமைப்படுத்தி வரும் நிலையில் தமது வீடுகளுக்கு செல்லாமல் தொடர்ந்து போராட்டக்களத்திலேயே இருக்கும் நண்பர்கள் வேப்பங்குச்சியினால் பல்துலக்கிய காட்சியை தொலைக்காட்சியினூடாக காணக்கிடைத்தபோது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் ஒரு சில இடங்களில் பெப்சி, கோலா போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களை வீதியில் ஊற்றி அவற்றுக்கெதிராகவும் தமது முழக்கங்களை மக்கள் வெளிப்படுத்தினர். ஏறு தழுவும் விளையாட்டுக்கு ஆதரவான மக்கள் போராட்டங்கள் குறித்து பல்வேறு ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்தாலும் News 7 தமிழ் தொலைக்காட்சியின் பங்கு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. காரணம் News 7 தமிழ் இல்  மக்கள் போராட்டம் 24 மணிநேரமும் கடந்த மூன்று நாட்களாக நேரலை செய்யப்பட்டு வருகிறது. எந்தவொரு ஊடகமும் தராத ஆதரவும் நடுநிலைமையும் News 7 தமிழ் தொலைக்காட்சியை மக்கள் மத்தியில் கவனிக்க வைத்துள்ளது. எந்தவொரு அரசியல் பிண்ணனியோ அல்லது பிரபலங்களின் ஆதரவோ இல்லாமல் மாணவர்களும் இளைஞர்களும் மக்களும் சுயமாக முன்னெடுத்துவரும் ஏறு தழுவுதல் தடைக்கெதிரான போராட்டத்தை News 7தமிழ் தொலைக்காட்சி தொடர்ச்சியாக 'மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டம்' என அடையாளப்படுத்தி வருவதும் இங்கே முக்கிய கவனத்துக்குரியதாகும்.

ஏறு தழுவுதல் தடைக்கெதிரான போராட்டம் சமூக வலைத்தளங்களினூடாக ஒன்றிணைந்த இளைஞர்களினாலேயே தமிழ்நாடு முழுவதும் தீயெனப் பரவியுள்ளது. #SAVEAJALLIKATTU #BANPETA #JUSTICEFORJALLIKATTU #SAVEOURCULTUREJALLIKATTU போன்ற குறிச்சொற்களினூடாக சமூக வலைத்தளங்களில் மக்கள் தமது எதிர்ப்பினைப் பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களினூடாக தமது எதிர்ப்பினைப் பதிவு செய்பவர்களில் ஒரு பிரிவினர் முறையற்ற வார்த்தைகளைப் பிரயோகித்து வருகின்றனர். ஏறு தழுவுதலை ஆதரிக்காத நடிகர்கள் மற்றும் அரசியல் வாதிகளுக்கெதிராகவே தகாத வார்த்தைப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது முற்றிலும் தவறான செயலாகும். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பிறரைப் பாதிக்காத வகையில் தனது கருத்தினைப் பதிவு செய்யும் உரிமை உண்டு. அதற்கு மாற்றுக் கருத்தினைப் பதிவு செய்யும் உரிமையும் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. ஆனால் எந்தவொரு தனிநபரையும் இழிவு படுத்தும் வகையிலோ அல்லது அவரது தனி மனித உரிமையைப் பாதிக்கும் வகையிலோ கருத்து வெளியிடும் சுதந்திரம் யாருக்கும் கிடையாது. மேலும் இவ்வாறான செயல்கள் தமிழினத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்துவதாகும். ஆகவே நண்பர்களே எப்போதும் தரக்குறைவாக நடந்துகொள்ளாதீர்கள். கண்ணியமான செயல்களே நம்மையும் நமது இனத்தையும் முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதை மறவாதீர்கள்.

ஏறு தழுவுதல் போட்டிக்காக அவசரச் சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து மாநில அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. விரைவில் ஒரு தற்காலிக தீர்வை எதிர்பார்க்கலாம். இந்தத் தற்காலிக தீர்வு மாணவர்களின் இந்தத் தன்னெழுச்சியான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருமா? நிரந்தரத் தீர்வு வரை தொடருமா? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்ததற்கெதிராகவும் தொடருமா? இப்படிப் பல கேள்விகள் நம் முன்னே உள்ளன. இவற்றுக்கெல்லாம் மாணவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். 

Tuesday, January 17, 2017

சிகரம் பாரதி - 0005 - சில குறிப்புக்கள்!

001. இலங்கையில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓட்டுனரின் விபரங்களை பயணியின் கவனத்திற்கு காட்சிப்படுத்துதல் மற்றும் பயணச்சீட்டு வழங்குதல் ஆகியன இவற்றுள் முக்கியமானவை. 

002. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சியின் இரண்டாவது ஆண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ஆனால் நல்லாட்சி தொடர்வதை மக்களே விரும்பவில்லை என்பதையே சூழ்நிலைகள் உணர்த்தி நிற்கின்றன. இதனை விட சர்வாதிகார ஆட்சியில் நன்றாக இருந்தோம் என மக்களே வாய்விட்டுக் கூறி வருகின்றனர். நல்லாட்சி மக்களாட்சியாகுமா?

003. ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதல் நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திரைத்துறையினர் மற்றும் பல்வேறு அரசியல்வாதிகள் மக்களின் இப்போராட்டத்திற்கு தொடர்ச்சியாக தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

004. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏறு தழுவுதல் நிகழ்ச்சிக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் தமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல மக்களில் ஒரு பிரிவினர் வேறு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெ அண்ணன் மகள் தீபாவின் அரசியல் பிரவேசம் மற்றும் அ.தி.மு.க வின் எம்.ஜி.ஆர் 100வது ஆண்டு விழா என்பவையே அந்த நிகழ்ச்சிகளாகும். 

005. நோக்கியா கைப்பேசிகள் மீண்டும் சந்தைக்கு வந்துள்ளன. 'நோக்கியா 6' என்னும் கைப்பேசி இப்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் உலக அளவிலான பாவனையாளர்களுக்கான நோக்கியா கைப்பேசிகள் சந்தைக்கு வரும் என நம்பலாம். 

Sunday, January 15, 2017

வர்லாம் வா... வர்லாம் வா... பைரவா!

வணக்கம் வலைத்தள நண்பர்களே! நலம், நலமறிய ஆவல். பைரவா பாத்துட்டீங்களா? சிலர் திரையரங்கில் பார்த்திருப்பீர்கள். பலர் இணையத்தில் பார்த்திருப்பீர்கள். நானும் உங்களில் பலரைப் போல் 'தமிழ் ராக்கர்ஸ்' இன் உபயத்தில் இணையத்தினூடே பார்த்து ரசித்தேன். இன்றைய சூழலில் ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே திரைக்கதை இணையத்தில் வெளியாகிவிடுகிறது. ஏன் சில நேரங்களில் திரைப்படமே வெளியாகிவிடுவதுமுண்டு. திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி திரையிடப்பட்டு அத்திரைப்படம் முடிந்து ரசிகர்கள் திரையரங்கை விட்டு வெளியே வருவதற்குள்ளாகவே திரைப்படம் குறித்து தமது கருத்தினை இணையத்தளங்களூடாகவும் சமூக வலைத்தளங்களூடாகவும் வெளிட்டுவிடுகின்றனர். முதல் நாள் முதல் காட்சி முடிந்த சில நிமிடங்களில் இணையத்தில் திரைப்படம் வெளியாகிவிடுகிறது. இந்தச் சூழலில் திரைக்கதையும் படக்குழுவும் சரியான பாதையில் பயணித்தால் மட்டுமே மக்களை திரையரங்கின் பக்கம் ஈர்க்க முடியும். 

பைரவா. பரதனின் கதை-வசனம்-இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் நடித்து விஜயா புரொடக்க்ஷன்ஸ் வெளியிட்டிருக்கும் திரைப்படம். முதல் நாள் விசேட காட்சி ஜன 12 இல் வெளியானது. நடிகர் விஜய்யின் இயல்பான நடிப்பை அண்மைக்காலமாக எந்தத் திரைப்படத்திலும் காண முடியவில்லை. சிறப்பாக நடிக்கிறேன் என்ற பெயரில் அளவுக்கதிகமான நடிப்பை விஜய் வெளிப்படுத்துகிறார். விஜய்யின் நடிப்பில் இயல்பான நகைச்சுவை உண்டு. ஆனால் அவருக்கேற்ற நகைச்சுவை  ஜோடி இப்போதெல்லாம் அமைவதே இல்லை. பைரவா திரைப்படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே திரைக்கதையை நம்மால் யூகித்துவிட முடிகிறது. கீர்த்தி சுரேஷின் முன்கதைச் சுருக்கம் ஈர்க்கவில்லை. சண்டைகள் வழமையான திரைப்பட ரகம். 

சாதாரண வங்கி ஊழியராக இருக்கும் விஜய் வருமான வரித்துறை அதிகாரியாக வருவதெல்லாம் கற்பனையில் கூட நடக்காத கற்பனை. அதிலும் ஆயிரம் கோடிகளில் தொழில் செய்பவர் விஜய்யை அதிகாரி என நம்புவதெல்லாம்.... நடிகர் சதீஷும் தம்பி ராமையாவும் திரைப்படத்தில் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. விஜய்யின் ஆரம்பகாலப் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னரான கில்லி, சிவகாசி போன்ற படங்கள் கூட விஜய்யை ரசிக்க வைத்தன. ஆனால் அண்மைக்காலப் படங்களில் விஜய்க்கு சரியான கதைக்களமோ கதாபாத்திரமோ அல்லது சரியான ஒரு இயக்குனரோ அமையவில்லை என்பது வேதனையே. 

பைரவா பாடல்களிலும் சரி திரைக்கதையில் அல்லது நடிப்பிலும் மக்களை ஈர்க்கவில்லை. விஜய்யின் வெறித்தனமான ரசிகர்களின் கண்மூடித்தனத்தினால் மட்டுமே இப்படம் கொண்டாடப்படுகிறது. வர்லாம் வா... வர்லாம் வா... பைரவா என்று சொல்வதற்குப் பதிலாக வேணாம் போ... வேணாம் போ... பைரவா படம் வேணாம் போ... என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!

Saturday, January 14, 2017

தமிழ்ப் புத்தாண்டு 2048 வருக வருக!

வணக்கம் வலைத்தள நண்பர்களே! தமிழ்ப் புத்தாண்டாம் தைத்திருநாளில் அனைவரும் நலமும் வளமும் பெற்று வாழ்வு சிறக்க மனதார வாழ்த்துகிறேன். வள்ளுவராண்டு 2048 பிறந்துள்ள இந்நன்னாளில் நம் துன்பங்கள் எல்லாம் மறைந்து வாழ்வில் புதிய இன்பங்கள் பிறக்கட்டும். 

உண்மையான தமிழ்ப்புத்தாண்டு தை யா அல்லது சித்திரை யா என்னும் விவாதங்கள் இன்னும் முடிவுறாது தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நம் முன்னோர்களும் அறிஞர்களும் ஆராய்ந்து நமக்குக் கூறிய அடிப்படையில் தைத்திருநாளே நம் புத்தாண்டு எனக்கொண்டு தொடர்ந்திடுமாறு 'சிகரம்' நண்பர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது. நம் புத்தாண்டில் புதிய விடயங்களைத் தொடங்கிடுங்கள். ஆடம்பரங்களைத் தவிர்த்து புத்தாண்டைக் கொண்டாடிடுங்கள். 

புதிய மாற்றங்கள் இப்புத்தாண்டில் நிகழட்டும்! அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Tuesday, January 10, 2017

சிகரம் பாரதி - 0004

வணக்கம் வலைத்தள நண்பர்களே! நலம், நலமறிய ஆவல். நாடும் வீடும் சுகம் தானே? ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஜனநாயக முறையில் தேர்தலில் வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கும் இன்னபிற மக்கள் சபைகளுக்கும் காலம்காலமாக அனுப்பிக் கொண்டிருக்கிறோம். ஜனநாயக முறை எனப்படுகிற தேர்தல் தொடங்கி அத்தனையிலும் இப்போது ஊழல் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இன்று நம்மோடு கூட இருக்கிறவர்களே நாளை மக்கள் பிரதிநிதிகளாய் ஆனபின் ஊழலின் பிரதிநிதிகளாய் ஆகி விடுவதேனோ? எங்கெங்கு காணினும் ஊழலடா என்னும் அளவுக்கு நம் மத்தியில் ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. நாமும் ஊழலைத் திட்டிக் கொண்டே ஊழல் வாதிகளுக்கு தினம் தினம் துணைபோய்க் கொண்டுதானிருக்கிறோம். வரப்போகும் முழுமையான நவீன மின்னணு உலகத்திலேனும் ஊழல் இல்லாது போகுமா? 

பொங்கல் தினத்தன்று காலை சன் தொலைக்காட்சியில் 'பணம் வரமா சாபமா' என்னும் தலைப்பில் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது. இந்திய அரசின் ரூ 500 மற்றும் 1000 நாணயத்தாள்களின் மதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்பு இன்னமும் சீராகாத சூழலில் பொருத்தமான தலைப்பாக உள்ளது. கலைஞர் தொலைக்காட்சியில் திண்டுக்கல் ஐ.லியோனியின் பட்டிமன்றம் இம்முறையும் இடம்பெறும் என நம்பலாம். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரான அ.இ.அ.தி.மு.க வின் நடவடிக்கைகள் அவரால் கிண்டல் செய்யப்படலாம். 

எனக்கு கணினி விளையாட்டுக்களில் மிகவும் பிடித்தது Euro Truck Simulator என்னும் பாரவூர்தி ஓட்டும் விளையாட்டாகும். எனது மச்சான் ஒருவரின் வீட்டில் இருந்து சில வருடங்களுக்கு முன்னால் கிடைத்தது. அதனை எனது மடிக்கணினியில் நிறுவி இரவு பகலாக விளையாடியும் வந்தேன். Windows 7 Copy இல் இருந்து Windows 10 Pro Genuine க்கு எனது கணினி இயங்குதளத்தை மாற்றிய போது இவ்விளையாட்டு அழிந்து போனது. பின்னர் விளையாடுவதில்லை. அண்மைக் காலத்தில் இதன் நினைவு வந்து இறுவட்டைத் தேடி எடுத்து மீண்டும் மடிக்கணினியில் நிறுவ முற்பட்டபோது அதில் பிழை இருப்பதாக மீண்டும் மீண்டும் கணினி சொன்னது. ஆகவே இணையத்தில் இருந்து Euro Truck Simulator மற்றும் Euro Truck Simulator 2 ஆகிய இரு விளையாட்டுகளையும் தரவிறக்கம் செய்தேன். ஆனால் இரண்டுமே தற்காலிக ( Trial ) பதிப்புகளாகும். குறிப்பிட்ட நேரம் மட்டுமே விளையாட இயலும். இதில் இரண்டாவது விளையாட்டை நேற்று அரை மணி நேரம் விளையாடினேன். அருமையாக இருந்தது. நிறைவு செய்ய மனமின்றி விளையாட்டை நிறைவு செய்து உறங்கச் சென்றேன்.

நீண்ட நாட்களுக்குப் பின் இன்று தான் நேரத்தோடு துயில் களைந்திருக்கிறேன். வழமையாக அதிகாலை ஏழு மணிக்கு எழும்புவேன். இன்று அதிகாலை ( ? ) 06.30க்கு எழுந்தேன். எப்புடி? இன்னும் நிறைய உங்களுடன் சுவாரசியமாகப் பேசவேண்டி இருக்கிறது. இன்னும் பேசலாம் நண்பர்களே! உங்கள் கருத்துரைகளுக்கும் இவ்விடத்தில் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்ள நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். மீண்டும் சந்திப்போம்!

Sunday, January 8, 2017

சிகரம் பாரதி - 0003

வணக்கம் வலைத்தள வாசகர்களே! நலம், நலமறிய ஆவல். மீண்டும் ஒரு வாட்ஸப் பதிவுடன் சந்திக்கிறேன். வாட்ஸப் கேலி கிண்டல்களை மட்டுமல்லாது சிந்தனைக்குரிய விடயங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறது. வேறு எந்த செயலியை விடவும் வாட்ஸப் பிரபலமாக இருக்கிறது. காரணம் குறைந்த வசதிகளையுடைய கைப்பேசியில் கூட வாட்ஸப்பை பாவிக்கக் கூடியதாக உள்ளது தான். இதன் எதிர்காலத்தை மிகச் சரியாகக் கவனித்து பேஸ்புக் உரிய காலத்தில் வளைத்துப் போட்டுக்கொண்டது. வாழ்க வாட்ஸப்! வாழ்க பேஸ்புக்!

# இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன..

ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....

மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...

ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை
விளையாடிக் கொண்டிருக்கிறது.

ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் .

அத்தருணத்தில் ரயில் வருகிறது....

தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.....

உங்களுக்கு அருகே ட்ராக் (பாதை) மாற்றும் கருவி இருக்கிறது....

நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....?

இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...
ப்ராக்டிகலாக பதில் சொல்லணும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....

உண்மையாக நாம் என்ன செய்வோம்...?

ஒரு குழந்தை விளையாடும் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்..

ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்....

உண்மை தான் என்றோம்...

இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.

ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது

ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது

இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...

"Fault makers are majority, even they protected in most situations"

இன்றைய நிலை....

"நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்...

தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்"

படித்ததில் பிடித்ததால் பகிர்கிறேன்... #

அத்துடன் இன்று சன் தொலைக்காட்சியில் மாலை 6.30க்கு காஞ்சனா திரைப்படம். திரையரங்கில் பார்த்திருக்கிறேன். தொலைக்காட்சியிலும் அடிக்கடி பார்த்திருக்கிறேன். விறுவிறுப்பான திரைப்படம். விஜய் தொலைக்காட்சியில் மாலை 03.00 மணிக்கு நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் 'டிஜிட்டல் நிறைந்த உலகத்தில் வாழ்கிறேன் என்று சொல்பவர்களும் டிஜிட்டல் நிறைந்த உலகத்தை எதிர்க்கிறேன்' என்று சொல்பவர்களும் பேசினார்கள். அற்புதமாக இருந்தது. இது பற்றி நாமும் விரிவாகப் பேசவேண்டும் என எண்ணுகிறேன். பிறிதொரு நாளில் பேசுவோம். 

மீண்டும் சந்திப்போம். நன்றி.

Saturday, January 7, 2017

சிகரம் பாரதி - 0002

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இந்த வாட்ஸாப்பைக் கண்டுபிடித்தாலும் பிடித்தார்கள் எங்கும் எதிலும் ஒரே கேலியும் கிண்டலும்தான். சில நேரம் ஒரே விடயத்தை பலர் ஒரே நேரத்தில் நமக்கு அனுப்பினால் சிரிப்புக்கு பதில் கோபமே வரும். என்னதான் இருந்தாலும் வாட்ஸாப் சிரிப்புக்கு நிகரேதும் இல்லை. அதில் ஒன்று உங்களுக்காக இங்கே. சிரிப்பு வராவிட்டால் நிறுவனம் பொறுப்பல்ல. 

# இலங்கை அரசின் அடுத்த அதிரடி திட்டம்: அத்தனையும் இலவசம்!

இலவச 4G சிம் – ஜனவரி 15-ம் திகதி முதல் BSNL புது 4G சிம் இலங்கையில் வெளி வர இருக்கின்றது…

சிம் விலை வெறும் 100 ரூபாய் மட்டுமே. அழைப்பு நேரம்  2500 ரூபாய் இலவசம். ஒரு நாளைக்கு 1000 குறுஞ்செய்தி  இலவசமாக வழங்கப்படும்.

ஒரு வருடத்திற்கு வாடிக்கையாளர் அழைப்பு ஒலி  இலவசம். ஆறு மாதம் இணையப் பாவனை இலவசம். கிட்டதட்ட 1200 GB இலவசமாக வழங்கப்படுகிறது.

ரோமிங் கட்டணம் கிடையாது. தேசிய அடையாள அட்டை அவசியம். ஆனால்………………

சமிக்ஞைக் கோபுரம் மட்டும் நீங்கதான் நட்டுக்கணும். கோபப்படாதீங்க. எனக்கும் இப்படித்தான் அனுப்பினாங்க…. #

என்ன வாசகர்களே, சிரிப்பு வருதா இல்ல கோவம் வருதா? எது வந்தாலும் இதை அப்படியே உங்கள் வாட்ஸாப் குழுவில் பகிர்ந்து உங்கள் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கள். 

Tuesday, January 3, 2017

சிகரம் பாரதி - 0001

வணக்கம் வலைத்தள வாசகர்களே! உங்களுடன் இணைந்து நானும் 2017 ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். 

மூன்றாவது முறையாக ஒரு தொடர் பதிவின் மூலம் உங்கள் அனைவரையும் சந்திக்கவுள்ளேன். 2012 இல் உலக அழிவு குறித்துப் பரவலாகப் பேசப்பட்ட நேரத்தில் 46 தொடர் பதிவுகளை இட திட்டமிட்டு இறுதியில் 41 பதிவுகளையே இட முடிந்தது. கடந்த வருடம் ( 2016 ) நீண்ட நாட்களாக கவனிக்கப்படாதிருந்த வலைத்தளத்தை தூசு தட்டி மெருகேற்றவும் எனது எழுத்தை மேம்படுத்திக் கொள்ளவும் 50 தொடர் பதிவுகளை வெளியிடத் தீர்மானித்தேன். வாசகர்கள் அருளால் 50 பதிவுகளையும் குறைவின்றி வெளியிட்டாயிற்று. இம்முறை மூன்றாவது தடவையாக வருடத் தொடக்கத்திலேயே களம் இறங்கியிருக்கிறேன். மனதில் தோன்றும் சிறுசிறு எண்ணங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே இப்பதிவின் நோக்கம். பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்காகவோ அல்லது தரவரிசையை உயர்த்திக் கொள்வதற்காகவோ இத்தொடர் பதிவை எழுத வரவில்லை. மனதின் எண்ணங்களுக்கு எழுத்தால் வடிவம் கொடுப்பது ஒன்றையே நோக்கமாகக் கொண்டு இத்தொடர் பதிவை எழுத விழைகிறேன். ஆனால் இம்முறை 46 அல்லது 50 என்றெல்லாம் இலக்கு நிர்ணயித்துக் கொள்ளவில்லை. எத்தனை காலம் தொடர்ந்து வலைத்தளம் எழுதுகிறேனோ அத்தனை காலத்துக்கும் இப்பதிவு தொடராக வெளிவரும். எண்ணிக்கைகள் எழுத்துச் சுதந்திரத்திற்கு எதிரானவை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஆகவே எழுத்துக்களுக்கு இட்டிருந்த கடிவாளத்தை நீக்கி சுதந்திரமாக உலாவ விட்டிருக்கிறேன். என்றாலும் வாழ்க்கையில் இலக்கு என்ற ஒன்று அவசியம் என்பதால் இவ்வருடம் எனது அனைத்து மொத்தப் பதிவுகளும் சேர்த்து 100 க்குக் குறையாமல் அமைந்திட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். வாங்க பழகலாம்!

அடுத்து எனது நீண்ட நாள் கனவான 'சிகரம்' இணையத்தளம் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தற்போது துவங்கியுள்ளன. ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரியில் உங்கள் பார்வைக்கு 'சிகரம்' இணையத்தளம் சமர்ப்பிக்கப்படும். 'சிகரம்' இணையத்தளத்தினை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வது நண்பர்களாகிய உங்களின் கைகளிலேயே உள்ளது. நண்பர்களாகிய நீங்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வெற்றியில் பங்களிப்பு செய்யவும் முடியும். உங்கள் எண்ணங்களை அது எதுவாக இருந்தாலும் கட்டுரை, கவிதை அல்லது சிறுகதையோ தொடராகவோ எதுவாக இருப்பினும் எமக்கு அனுப்பி வைத்தால் பரிசீலனைக்குப் பின் 'சிகரம்' இணையத்தளத்தில் வெளியிடுவோம். உங்கள் வலைத்தளங்களிலோ அல்லது சமூக ஊடகங்களிலோ உங்களால் ஏற்கனவே பதிப்பிக்கப்பட்ட பதிவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளோம். உங்கள் படைப்புகளை அனுப்பி வைப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரைவில் அறியத் தருவோம். காத்திருங்கள் நண்பர்களே!

புத்தாண்டு துவங்கி விட்டது. முன்னைய வருடங்களில் விட்ட தவறுகளை உடன் சரி செய்து கொள்ளுங்கள். அதுவே உங்கள் முதல் கடமையாக இருக்கட்டும். தொடர்ந்து எதிர்காலத்தை நோக்கிய பாதையைத் தீர்மானித்து அதனை நோக்கி உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள். எதிலும் கால தாமதம் வேண்டாம். வாழும் வரை வாழ்க்கை நமதாக இருக்கட்டும். 2017 வெற்றி ஆண்டாக அனைவருக்கும் அமைய மனதார வாழ்த்துகிறேன். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை நினைவில் கொள்ளுங்கள். முயற்சியுடையார்க்கே இவ்வுலகு என்பது மூத்தோர் வாக்கு. நாம் வாழும் ஒவ்வொரு நிமிடமும் நமது வெற்றியை நோக்கியதாக இருக்க வேண்டும். 2017 நமக்கான ஆண்டாக அமையட்டும். மீண்டும் சந்திப்போம் நண்பர்களே!

Sunday, January 1, 2017

வருக வருக 2017ஆம் ஆண்டே!

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இனிய ஆங்கிலப் புத்தாண்டு 2017 இற்கான வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. ஞாயிறு தினத்தில் , ஒரு விடுமுறை நாளில் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடிவிட்டு களைத்துப் போயிருப்பீர்கள். இன, மத, மொழி, சாதி வேறுபாடின்றி அனைவரும் இந்த ஆங்கிலப் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றிருப்போம். பல சபதங்களையும் உறுதி மொழிகளையும் எடுத்திருப்போம். பல புதிய விடயங்களைத் துவங்கியிருப்போம். நல்லது.

ஆனால் நாம் நமது தமிழர் புத்தாண்டான தைத்திருநாளை இத்தனை கோலாகலத்துடன் வரவேற்போமா? நமது புதிய எண்ணங்களை தைத்திருநாளில் ஆரம்பிக்க எண்ணுவோமா? இல்லை. மற்ற எல்லா நாட்களையும் போல தைத்திருநாளையும் ஒரு சாதாரண நாளாகக் கருதி கடந்து போவோம். ஆங்கிலம் உலகளாவிய தொடர்பு மொழியாக இருக்கலாம். அதனால் நாமும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கலாம். ஆனால் நமது தாய்தமிழ்க் கலாச்சாரத்தை மறப்பது , உதறித்தள்ளுவது நியாயமாகுமா? 

தைத்திருநாளே நமது புத்தாண்டு தினமாகும். அதனை கொண்டாட வேண்டியது நமது கடமை. பணத்தையும் நேரத்தையும் வாரி இறைக்காமல் பயனுள்ள வகையில் தமிழர் புத்தாண்டைக் கொண்டாடி நமது தமிழ்க் கலாச்சாரத்திற்கு பெருமை சேர்ப்போமாக!
Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?