சிகரம் பாரதி - 43 / 50 ஊடகத்துறையும் நாமும்!

தி இந்து இதழின் அயலுறவு பிரிவின் ஆசிரியராக உள்ள சுஹாசினி ஹைதர் WORLD MEDIA ASSOCIATION-ஐ சேர்ந்த மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் இது:

ஊடகத்துறையில் பட்டம் பெறப்போகும் உங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தற்போது ஊடகத்துறையில் நிலைமை சரியில்லை என்பதையும், இங்கே வேலை கிடைப்பது குதிரைக் கொம்பான காரியம் என்றும் பலர் சொல்ல கேட்டிருக்கலாம். அவை உண்மையே என நான் அழுத்திச் சொல்வேன்.

நான் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் ஊடகத்துறையில் நுழைய கனவுகளோடு காலடி எடுத்து வைத்தேன். அப்பொழுதும் நிலைமை மோசமாகத் தான் இருந்தது. தொலைக்காட்சியில் வேலை கிடைப்பது கஷ்டம் என்பதைவிட வேலை கிடைப்பது சாத்தியமே இல்லை என்கிற சூழல் நிலவியது.

என்னை ஏழு நிராகரிப்புக் கடிதங்கள் வரவேற்றன. ஒரு நிறுவனம், "அடுத்த வருஷம் பாத்துக்கலாம் மேடம்." என்றார்கள். இன்னொரு நிறுவனமோ, "இனிமே தயவு செய்து அழைக்காதீர்கள்." என்று கறார் காட்டினார்கள். எல்லாம் முடிந்து போனது எனத் தோன்றிய , இறுதியாக ஒரு முயற்சி செய்து பார்த்துவிடலாம் என ஒரு நேர்முகத்துக்குச் சென்றேன். அது செய்தி நிறுவனமில்லை, ஒரு ஆவணப்பட நிறுவனத்தில் விற்பனைத் துறையில் வேலைக்கான நேர்முகம் அது. என்னுடைய சான்றிதழ்களோடு இந்த வேலையாவது கிடைத்து விடாதா என. ஆவலோடு நான் நேர்முகத்துக்குச் சென்றேன்.

என்னுடைய இதழியல் பட்டத்தைப் பாஸ்டன் பல்கலையில் நான் பெற்றிருந்தேன். ஐநாவில், நியூயார்க் நகரில் உள்ள சி.என்.என். நிறுவனத்தில் நான் பணியாற்றி இருந்தேன். சிலகாலம் சி.என்.என். நிறுவனத்தின் டெல்லி தயாரிப்பாளராகப் பணியாற்றிவிட்டு வேலையை விட்டு விலகினேன். இவற்றை எல்லாம் என்னை நேர்முகம் செய்த நபரிடம் பொறுமையாகச் சொன்னேன். அவற்றைக் காதுகொடுத்து கேட்டுவிட்டு அவர் சன்னமான குரலில் என்னை நோக்கி சொன்னார்,

"நீங்கள் இந்த வேலைக்குத் தகுதியானவர் என்று நான் உங்களுக்குச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. நீங்கள் தன்னம்பிக்கையால் மிளிர்கிறீர்கள். இந்தப் பணியிலும் நீங்கள் மின்னுவீர்கள். இந்த வேலையை நேசிக்கவும் நீங்கள் பழகிக்கொள்ளலாம். நீங்கள் நெகிழ்வான தன்மை கொண்டவராகத் தெரிகிறீர்கள். எனினும், உங்கள் இதயத்தின் ஒரு ஓரத்தில் இந்த வேலையை உங்களுக்குக் கொடுத்ததற்காக என்னை வெறுப்பீர்கள். உங்களின் மனமெல்லாம் செய்தி ஊடகத்தின் மீதே உள்ளது. என்னை நீங்கள் வெறுப்பதை நான் விரும்பவில்லை. இந்த வேலையை உங்களுக்கு நான் தரப்போவதில்லை."

என்னைப்போலவே நீங்களும் இப்படிப்பட்ட நிராகரிப்பை சந்திக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். எந்த வேலையின் மீது நம்முடைய மனம் காதல் கொண்டிருக்கிறது என உணர இப்படிப்பட்ட நிராகரிப்புகள் உதவுகின்றன. நீங்கள் விருப்பப்பட்டுச் சேரும் பணியில் அதைவிட்டு விலக ஆயிரம் காரணங்கள் கொட்டிக் கிடக்கும், ஆனால், அதுதான் உங்களின் மனம் விரும்புகிற வேலை என்கிற ஒரே காரணம் உங்களை அந்தப் பணியில் இயங்க வைக்கும்.

நான் பைத்தியக்காரி என்று நீங்கள் உள்ளுக்குள் சபிக்கக்கூடும். பட்டம் பெறுகிற நாளில் உங்களுக்கு வேலை கிடைக்காமல் போகட்டும் என்று நான் விரும்புவதாகச் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சி தரலாம். நான் அதற்குமட்டும் ஆசைப்படவில்லை. 'கேட்டேன், கேட்டேன்' என உங்களுக்காக நான் கேட்கும் வரங்கள் சில உண்டு.

1. உங்களுக்கு மோசமான பாஸ் கிடைக்க வேண்டும். உங்களை அழவைக்கும் ஒருவராக அவர் இருக்க வேண்டும். இது மிகக் கடுமையான பணி என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும். அடித்துப்பிடித்து,முந்திக்கொண்டு செய்தி சேகரிக்க வேண்டிய துறை இது. கலங்காத நெஞ்சம் கொண்டவராக நீங்கள் இருந்தாலே சாதிக்க முடியும். என்னுடைய முதல் இதழியல் பணிக்கால நினைவு என்ன தெரியுமா? நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ஊடக வெள்ளத்தில் ஒரு ஏணியை விட்டு தலைகுப்புற தள்ளப்பட்டது தான். என்னுடைய மைக் என் கையிலிருந்து கீழே விழுந்து, நான் எழ கஷ்டப்பட்டுக்கொண்டு நின்ற கணத்தில் என் கேமிராமேன் துளிகூடக் கருணை காட்டவில்லை. "சீக்கிரம் எழுந்து வந்து வேலையை முடிம்மா!" என்று அவர் கத்தினார்.

அப்பொழுது தான் நான் ஒரு அடிப்படை பாடத்தைக் கற்றுக்கொண்டேன். வேலைக்களத்திலும், அலுவலகத்திலும் உங்களை வெளியே தள்ள முயல்கையில் முண்டியடித்து உங்களுக்கான இடத்துக்காக நீங்கள் போராட வேண்டும். அன்றைய பரபரப்பான நேர்முகத்தைத் தவற விட்டதற்காக உங்களுடைய பாஸ் கண்டமேனிக்கு வசைபாடுவது நிகழ்ந்துவிடுமோ என அஞ்சாதீர்கள். அவர் திட்டுவதைச் செவிமடுங்கள், கழிப்பறைக்குச் சென்று சற்று அழுதுவிட்டு, முகத்தைத் துடைத்துக் கொண்டு அடுத்தப் போராட்டத்துக்குத் தயார் ஆகுங்கள். "பரவாயில்லை, அடுத்தவாட்டி பாத்துக்கலாம்.." என்கிற பாஸ் உங்களுக்குக் கிடைத்தால் நீங்கள் உருப்படவே மாட்டீர்கள்.

2. உச்சி வெய்யிலில் அலைந்து திரியும் அவஸ்தையான நாட்கள் நிறைய உங்களுக்கு வாய்க்கட்டும். இந்த வேலையில் யாரோ ஒருவரின் நடைபாதையிலோ, யாரோ ஒருவரின் வீட்டு முன்னாலோ அவர் வீட்டுக்குள் போவதற்கோ, வெளியே வருவதற்கோ காத்திருக்கும் கணங்கள் பல ஏற்படும். அப்பொழுது வேகாத வெய்யிலில் நிற்க வேண்டிவரும். அப்படி நிற்கிற பொழுது பல நண்பர்கள் கிடைப்பார்கள். கொளுத்தும் வெய்யிலில் செய்ய வேறு வேலையில்லாமல் வியர்த்து கொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் பிறருடன் பேசுவதுதானே ஒரே ஆறுதல்? சமயங்களில் அந்த நாளின் பரபரப்பான ப்ளாஷ் நியூஸ் வெகுநேரம் காத்துக்கொண்டு இருக்கும் நபருக்கே கிட்டும். கடந்த மாதம் ஆங் சான் சூசியின் வீட்டுக்கு அதிகாலையிலேயே சென்று வெளியில் காத்திருந்தேன். எனக்கு ப்ளாஷ் நியூஸ் எதுவும் கிடைக்கவில்லை, மாறாக, வெளியே உலாவ வந்த சூசியின் நாயுடன் நட்பானேன்.

3. மோசமான பல சகாக்கள் உங்களுக்கு வாய்க்கட்டும். இது சாபம் போலத் தோன்றும், ஆனால், அப்படித்தான் மிகச்சிறந்த பல செய்திகள் எனக்குக் கிடைத்தன. அவர்களுக்குத் தரப்படும் பணியைச் சரியாகச் செய்யாமல் போய் அது நம் கைக்கு வரும் பொழுது கச்சிதமாகச் செயலாற்ற வேண்டும். தட்டிக்கழிப்பதல்ல வெற்றி, தகிப்பான சூழலில் தங்கமாக ஒளிர வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் கணத்தில் அடித்து விளையாடுங்கள்.

4. கணினியும், அலைபேசிகளும் வேலை செய்யாத இடங்களில் நீங்கள் பணியாற்ற நேரிடவேண்டும் என விரும்புகிறேன். ஆளரவமற்ற ஒரு கிராமத்துக்கு நீங்கள் செய்தி சேகரிக்கச் செல்லவேண்டும். டெட்லைன் கவலைகள் இல்லாமல், மணிக்கொரு முறை நிலவரத்தை தெரிவிக்க வேண்டிய நிலையில்லாமல், ஒரு செய்திக்காக மூன்று நாட்கள் அலைய வேண்டிய ஆனந்தத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டும். நான் மீனவர்களுக்கு உதவும் கணினி நிரல் ஒன்றைப்பற்றிச் செய்தி சேகரிக்க அதிகாலை மூன்று மணிக்கு கடலுக்குச் சென்றேன். மூன்று மணிநேரம் மீனவர்களுடன் உலாவி, அலைகளின் பேரொலியில் மனம் லயித்து, 
வலை முழுக்க மீன்களுடன் வருவதைக் காண நேரிட்ட அந்தக் கணத்தின் ஆனந்தம் சொல்லில் அடங்காதது. கோரமண்டல கடற்கரையில் தன்னந்தனியாக இயற்கையின் பிரம்மாண்டத்தைக் கண்ணுற்ற அந்தக் கணம் உன்மத்தம்!

5. விசித்திரமான, அதிர்ச்சி தரும் நபர்களோடு நிறைய நேர்முகங்கள் உங்களுக்கு வாய்க்கட்டும். அரசியல் சரித்தன்மை மிக்க, கண்ணியமான, மென்மையான ஆளுமைகள் உங்களுக்கு எப்பொழுதும் வெற்றி பெறுவதற்கான திண்மையைத் தரமாட்டார்கள்.

6. இன்னமும் அபாயகரமான என்னுடைய ஆசைகளை நீட்டிக்கொண்டே போகமுடியும். எனினும், நான் அவ்வளவு மோசமானவள் இல்லை. உங்களைப் புரிந்து கொள்ளும் பெற்றோர்கள் உங்களுக்குக் கிடைக்கட்டும். என்னுடைய முதல் சம்பளம் போக்குவரத்து செலவுக்கே சரியாக இருந்தது. என்னுடைய இரண்டாவது சம்பளம் என்னுடைய அரை வயிற்று சாப்பாட்டுக்கே போதவில்லை. இங்கே கைநிறைய சம்பளத்தை உடனே வாரித்தர மாட்டார்கள். இங்கே வேலை செய்ய ஒரே காரணம், அதன்மீதான காதல் தான். உங்களின் பெற்றோர்கள் உங்களைப் பல வகையில் புரிந்துகொள்ள வேண்டும். 1996 ஜம்மு காஷ்மீர் தேர்தல்கள் என் திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னால் நடைபெற்றன. "நீ வீட்டுக்கு கல்யாணப் புடவை எடுக்க வராவிட்டால் கல்யாணத்தை நிறுத்திவிடுவேன்." என்று அம்மா என்னை அச்சுறுத்தினார். என்னுடைய திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் என்னுடைய பாஸ் ஆப்கானில்அதிபர் நஜிபுல்லா தூக்கிலிடப்பட்ட நிலையில் அங்குச் சென்று பணியாற்ற சொன்னார். நான் அதை ஏற்கவில்லை. உங்களுக்கு வயதாக, வயதாகப் புரிந்துகொள்ளும் கணவன்/மனைவி, குழந்தைகள் கிடைக்கட்டும். சுனாமி தினத்தன்று மதியம் சாப்பாட்டுக்கு வந்துவிடுவதாகக் குழந்தைகளிடம் சொல்லிவிட்டு சென்றேன். மதிய சாப்பாட்டுக்கு பதினான்கு நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்தேன்.

7. ஒருவேளை நீங்கள் விரும்பிய வேலை கிடைக்காமல் போனாலும், உங்களுக்குக் கிடைத்த பணியைப் பேரன்போடு புரிவீர்கள் என விரும்புகிறேன். ஏனெனில், உங்களின் வாழ்க்கையின் மகத்தான பாடங்கள் எதிர்பாராத தருணத்தில், எண்ணமுடியாத மனிதர்களிடம் இருந்து கிட்டும். பர்வேஸ் முஷரப் ராணுவத்தில் தன்னு டைய அன்னையின் ஆசைக்காகச் சேர்ந்தார் என்று அறிந்து கொண்டேன். "ஏன் அப்படி?" என அவரிடம் கேட்டேன். "என் அம்மாவுக்கு ராணுவ சீருடை பிடிக்கும்." என்றார்.

நரேந்திர மோடியின் அம்மா தன் மகன் திருமணம் செய்து கொள்ளவிட்டால் அவருடன் வாழமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். தன்னை மகன் பார்த்துக் கொள்ளாமல் தான் மகனைப் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலைமை வேண்டாம் என அவர் கவலைப்பட்டார். மன்மோகன் சிங் இறுதியாகக் குடும்பத்தோடு சுற்றுலா சென்று நாற்பது வருடங்கள் ஆகிவிட்டது என அவரின் மனைவி தெரிவிக்கிறார். சி.என்.என் நிறுவனத்தை உருவாக்கிய டெட் டர்னர் இன்றுவரை மின்னஞ்சலை பயன்படுவதுவது இல்லை. அதைக் கச்சிதமாகக் கையாளும் காதலியை அவர் பெற்றுள்ளார்.
இதுதான் இறுதி இலக்கு என்று எதுவுமில்லை. இங்கே நிறையப் பணி உயர்வுகள் கிடைக்காது. தெளிவான பாதை என்று எதுவுமில்லை, முன்மாதிரிகள் இல்லை, ஓய்வு வயது என்று ஒன்றில்லை. இவற்றை மனதில் கொண்டு ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள். இந்தப் பயணம் மட்டுமே உங்களுக்கானது. வாழ்த்துகள்

தமிழில் : பூ.கொ. சரவணன்

இந்த உரையில் நான் சேர்க்க விரும்பும் 
ஒரே வரி(லி) :
இந்த துறையில் சாதனைகளென்று எதுவுமில்லை ! பயணிப்பது மட்டுமே இங்குள்ள ஒரே சாதனை !

                                   *************************************

இக்கட்டுரை பேஸ்புக்கில் 'பெருமாள்சாமி சுப்புராஜ்' என்பவரின்  பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். நன்றி தோழரே!

Comments

  1. வணக்கம்
    படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சீரிய பதிவு பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!