Saturday, December 1, 2012

அதிகாலைக் கனவு - சிறுகதை

அமெரிக்காவின் நியுயோர்க் நகரம்.
நேரம் மாலை ஆறு மணி. மின்விளக்குச் சூரியன்கள் தமது ஒளியைப் பரப்ப ஆரம்பித்திருந்த தருணம் அது.

இரட்டைக் கோபுரம் என்று சொல்லக் கூடிய வகையிலான ஒரு அலுவலகக் கட்டிடம். கிட்டத்தட்ட ஐம்பது மாடிகளாவது இருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்களேன். என்னுடைய அறை நாற்பத்து நான்காம் மாடியில் அமைந்திருந்தது. எட்டு எனக்கு ராசியான இலக்கம் என்ற ஒரு எண்ணம் நீண்ட நாட்களாகவே எனக்குள் இருந்து வருகிறது. எனவேதான் எனது அறையை நாற்பத்து நான்காம் மாடியில் மாடி எண் எட்டு வருமாப்போல அமைத்துக் கொண்டேன். நான் யார் என்று கேட்கிறீர்களா? எனது அறையை அமைக்க வேண்டிய இடத்தைத் தீர்மானிக்கும் "வல்லமை"யைப் பெற்றிருப்பதிலிருந்தே தெரிந்து கொண்டிருக்க வேண்டுமே, இந்தப் பாரிய வணிக சாம்ராஜ்யத்தின் தலைவன் நான் தான் என்று.

"டொக்.......டொக்......." - எனது அறைக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கிறது.

"யெஸ்... கம் இன்....." - கதவைத் தட்டியவரை உள்ளே அழைக்கிறேன். எனது பிரத்தியேகச் செயலாளர் டயானா உள்ளே வந்து நின்றாள்.

டயானா மிக அழகானவள். அத்துடன் புத்திக் கூர்மையும் நிறைய உண்டு. அலுவலகத்திலேயே அவள்தான் அழகு என்று சொன்னால் கூட தவறேதுமில்லை. அவளின் அழகுக்காகத்தான் அவளை என் பிரத்தியேகச் செயலாளராக நியமித்திருக்கிறேன் என்ற ஒரு பரவலான பேச்சும் இங்கு உண்டு. அதை நான் மறுக்க விரும்பவில்லை, ஆனால் அதுவே உண்மையும் இல்லை.

"எல்லாம் தயாரா?" - நான் வினவினேன் 
"தயார் சேர். நீங்க வந்தா ஆரம்பிச்சிடலாம்." - அவள் பதிலளித்தாள் 
"ஓகே!"  என்று சொல்லிவிட்டு எனது ஆசனத்திலிருந்து எழுந்து மேசை மேலிருந்த கறுப்புக் கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டு மிடுக்காக நடக்க ஆரம்பித்தேன். என் மேசை மீது கிடந்த மூன்று கோப்புகளை எடுத்துக் கொண்டு டயானா என்னைப் பின்தொடர்ந்தாள். 

எமது அலுவலகத் தொகுதியின் கடைசி மாடிக்கு மின்னுயர்த்தி மூலம் சென்று கூட்டம் நடைபெறும் அறையை நோக்கி நாம் நடந்தோம். சட்டென்று டயானா சற்று முன்னோக்கிச் சென்று அறைக்கதவைத் திறந்துவிட்டாள். நான் கம்பீரமாக உள்ளே நுழைந்தேன். உலகின் பல முக்கிய வர்த்தகப் பிரமுகர்களெல்லாம் எழுந்து நின்று எனக்கு மரியாதை செய்தனர். அனைத்தையும் 'சாதாரணமாக' எடுத்துக்கொண்டு, எனது ஆசனத்தில் அமர்ந்தபின் "தேங்க் யு.. சிற் டவுண்" என்று சொல்லிவிட்டு உரையாற்ற ஆரம்பித்தேன்.


"வெரி..............."
திடீரென்று என்னால் பேச முடியவில்லை. எனக்கு முகத்தில் வேர்த்தது போலிருந்தது. 

"டேய்... எழும்புடா...." என்ற சத்தம் ஒரு பெண்குரலில் எனக்குக் கேட்டது. யாரது? என்னையே மிரட்டுவது? டயானாவா? இல்லையே! வேறு யார்?

கண்களைத் தேய்த்தபடி விழித்துப் பார்த்தேன். அட, அம்மா! 'ச்சே... அத்தனையும் கனவு......!'

"எந்திரிச்சு வந்து மூஞ்சியக் கழுவு." - அம்மா உத்தரவிட்டுச் சென்றாள்.

இந்த அம்மா எப்போதுமே இப்படித்தான். எனது நிறுவனக் கூட்டத்தில் என்னைப் பேச விடுவதேயில்லை. சரியாக பேச வாய்திறக்கும் நேரத்தில் வந்து எழுப்பி கனவைக் கலைத்து விடுவாள். சரி, அதிகாலைக் கனவு என்றாவது பலிக்கும்  என்கிறீர்களா? இது அதிகாலையாய் இருந்தால் தானே கனவு பலிப்பதற்கு..........!?

'என்ன, அதிகாலை இல்லையா? அப்போ கனவு?' என்று கேட்கிறீர்களா?  கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் 'அதிகாலை' பத்தரை மணியை நீங்கள் 'அதிகாலை' என்று ஒப்புக்கொள்ள நீங்கள் தயாரானால் எனது "அதிகாலைக் கனவு"ம் நிச்சயம் பலிக்கும்!

5 comments:

 1. சுவாரஸ்யம்.

  தூங்கி எழும்போது எந்நேரமானாலும் அது அதிகாலைதானே :))))

  கனவுபலிக்க வாழ்த்துகின்றோம்.

  ReplyDelete
 2. கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
 3. கனவு மெய்ப்பட வேண்டும்... :)

  ReplyDelete
 4. நம் தீவிர எண்ணங்களின் வெளிப்பாடுதான் கனவு. எண்ணங்களின் வலிமை நம்மை சாதனைக்கு இட்டுச் செல்லும் வாழ்த்துக்கள்

  ReplyDelete

 5. கிட்டத்தட்ட நாற்பதாயிரம் உயிர்களைப் பலிவாங்கிய அந்த கோபுரத்தில் இருப்பதை விட....
  பாரதி...
  நல்ல வேலை... அம்மா உன்னை எழுப்பினார்கள்...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?