Wednesday, June 20, 2012

வாங்கையா வாங்க!

அண்மையில் எனது Google plus தளத்தில் எனக்கு ரசிக்கக் கிடைத்த 5 புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தப் பதிவின் நோக்கம். அனைத்து புகைப்படங்களுமே இயற்கை சார்ந்தவை. ஏதோ ஒரு வகையில் உங்கள் மனத்தைக் கொள்ளை கொள்ளும் என நம்புகிறேன்.


மேலும் இப் பதிவின் மூலம் வாசகர்களுடன் சில விடயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அழகிய புகைப் படங்களை ரசித்த படியே இவற்றையும் இடைக்கிடை வாசித்துக் கொள்ளுங்கள். நான் இந்த 'சிகரம்' வலைப் பதிவை பல கனவுகளுடன் தொடர்ந்து நடத்தி வருகிறேன். ஆயினும் மனதில் ஒரு சின்ன குறை. நான் வலைப் பதிவை ஆரம்பித்து முதலாவது பதிவை வெளியிட்ட ஓரிரு நிமிடங்களில் வாசகர் ஒருவர் தனது கருத்தினை (Comment) 'சிகரம்' வலைத்தளத்தில் பதிவு செய்தார்.அது எனக்கு மனதில் ஒரு வித உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால் தொடர்ந்து வந்த பதிவுகளுக்கு வாக்குகள் கிடைத்தாலும் கருத்துரைகள் பதிவு செய்யப் படுவது அரிதாகவே நடை பெற்றது. 
எனது பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வாகுகளை வழங்குவதுடன் உங்களை கவர்ந்த பகுதியையும் மறக்காமல் கோடிட்டுக் காட்டிவிட்டுச் செல்லுங்கள். பதிவு பிடிக்க வில்லை என்றால் அதற்கான காரணத்தை குறிப்பிடுங்கள். அது எனது அடுத்த பதிவை இன்னும் சிறப்பாக வடிவமைக்க உதவும்.
இந்த விடயத்தை உங்களிடம் அன்பான வேண்டுகோளாக சமர்ப்பிக்கிறேன். தீர்ப்பை நீங்கள் தான் எழுத வேண்டும். உங்கள் தீர்ப்பை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.


இப்படிக்கு,
பாசத்துடன்,
உங்கள் தோழன்,
சிகரம் பாரதி.

Sunday, June 17, 2012

குடிச்சுப் பாருங்க!

ஒரு தொண்டு நிறுவனம் தொடர் மதுவிலக்கு பிரசாரம் செய்ய முடிவு செய்தது. மதுப் பிரியர்கள் அதிகம் உள்ள பகுதி அது. கூட்டம் ஆரம்பித்தது.

"அன்பானவர்களே... இந்தக் குடிப் பழக்கம் இருக்கிறதே... அதை விட மோசமானது வேறு ஒன்றும் இல்லை... குடி குடியைக் கெடுக்கும்..."

அவ்வளவு தான். கூட்டத்தில் சலசலப்பு.

"யோவ் உக்கார்றியா? மண்டைல போடவா?" என்று ஆளாளுக்கு சத்தம் போட ஆரம்பித்து விட்டார்கள்.


முதலில் பேசியவர் தொங்கிய முகத்துடன் இருக்கையில் அமர்ந்தார். அடுத்தவர் வந்தார். மைக்குக்கு முன்னால் இருந்த சோடா பாட்டிலைப் (Bottle) பார்த்தார்.

"இதை யாரு இங்க வச்சது? யாராவது ஒரு குவாட்டர் பாட்டில் (Bottle) இருந்தா எடுத்து வந்து வைங்களேன்..."

கூட்டம் மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்தது.

"சின்ன வயசுல எங்கப்பா படி, படின்னு எவ்வளவோ சொல்லிப் பாத்தாரு. நான் கேக்கலையே, பத்தாவது பெயிலு... அதுனால என்ன குறைஞ்சா போயிட்டேன்?"

"அப்படிப் போடு!" கூட்டத்தில் ஒரு குரல்.

"என்ன... வேலை கிடைக்கல. போயிட்டுப் போகுது. சொத்தையெல்லாம் வித்துக் குடிச்சேன்...." கூட்டத்தில் அமைதி.

"என் பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டுப் போயிட்டா. போறா கழுதை!"

கவனமாகக் கேட்க ஆரம்பித்தார்கள்.

"இப்போ குடிச்சு குடிச்சு குடல் வெந்து போச்சு. டாக்டர் சீக்கிரமே செத்துப் போயிடுவேன்னு சொல்றாரு. உயிரு தானே, போயிட்டுப் போகுது!"

அந்தப் பகுதியில் மது விலக்குப் பிரசாரம் வெற்றிகரமாக நடந்தது.

நன்றி: உதய சூரியன் வார வெளியீடு (இலங்கை)
              2012.06.14, பக்கம் - 11.

Saturday, June 16, 2012

சாத்தானின் தூதன் - டாக்டர் 7!

                          உங்களில் எத்தனை பேருக்கு தமிழ் காமிக்ஸ் கதைகள் மீது தீராத காதல் இருக்கிறது? காமிக்ஸ் புத்தகங்களை எங்கே வாங்குவது என்று தெரியாமல் தடுமாறுகிறீர்களா? அப்படியானால் நீங்கள் இந்தப் பதிவை கட்டாயம் வாசித்துத் தான் ஆக வேண்டும். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.


                    தமிழ் காமிக்ஸ் கதைகளைப் பொறுத்த வரை எனக்கு நன்கு பரிச்சயமானது 'முகமூடி வீரர் மாயாவி'யின் கதைகள் தான். அது எனக்கு மிகப் பிடித்தமானதும் கூட. மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் தமிழ் காமிக்ஸ் புத்தகம் ஒன்று என் கரம் கிட்டியது. முதன் முதலில் தமிழ் காமிக்ஸ் புத்தகம் ஒன்றை காசு கொடுத்து வாங்கிப் படித்திருக்கிறேன். ஆனால் இம்முறை நான் படித்தது 'முகமூடி வீரர் மாயாவி'யினுடையது அல்ல.

               'ஏஜென்ட் காரிகன்' இன் சாகசக் கதை. பிரபல வலைப் பதிவர்களுள் ஒருவரான லோஷன் அண்ணா அண்மையில் தான் படித்த 'தலை வாங்கிக் குரங்கு' பற்றிய பதிவொன்றினை இட்டிருந்தார். அதைப் படித்ததும் தமிழ் காமிக்ஸ் கதைகள் மீதான எனது ஆர்வம் சற்றே தூண்டப் பட்டது. ஆனால் எங்கே எப்படி வாங்குவது என்று தெரியாததால் தன் பாட்டில் இருந்தேன். அண்மையில் கொழும்பு-12 ஆமர் வீதியில் கிங்ஸ்லி திரையரங்கு செல்லும் வழியிலுள்ள நாற்சந்தியில் அமைந்துள்ள பத்திரிகை விற்கும் கடையொன்றில் தமிழ் காமிக்ஸ் புத்தகங்களை இங்கே பெற்றுக் கொள்ளலாம் என்கிற விளம்பரத்தைப் பார்த்து அது பற்றி கடைக் காரரிடம் விசாரித்தேன். அந்தக் கடையில் 'சாத்தானின் தூதன் - டாக்டர் 7' புத்தகம் மட்டுமே இருந்தது. இலங்கை விலை ரூபா 65 மட்டுமே. புத்தகத்துடன் அறைக்குச் சென்ற நான் ஒரே மூச்சில் அக் கதையை வாசித்து முடித்தேன்.
[Lion%2520Comics%2520Issue%2520No%2520211%2520Issue%2520Dated%2520Apr%25202012%2520Agent%2520X%25209%2520Phil%2520Corrigan%2520Sathanin%2520Thoodhan%2520Dr%25207%2520Story%25201st%2520Page%2520Pg%2520No%252005%255B4%255D.jpg]

                     கதை மிக சுவாரஷ்யமாக இருந்ததுடன் தமிழ் காமிக்ஸ் கதைகள் மீதான ஒரு காதலையும் ஏற்படுத்தி விட்டிருக்கிறது. இந்த புத்தகத்தில் இரண்டு கதைகள் உள்ளன. ஒன்று 'சாத்தானின் தூதன் - டாக்டர் 7'. மற்றையது 'ரிப் கிர்பி துப்பறியும் கன்னித் தீவில் ஒரு காரிகை'. மொத்தம் 108 பக்கங்களுடன் இப் புத்தகம் வந்துள்ளது. 'சாத்தானின் தூதன் - டாக்டர் 7!' கதை 42 பக்கங்களிலும், 'ரிப் கிர்பி துப்பறியும் கன்னித் தீவில் ஒரு காரிகை' கதை 48 பக்கங்களிலும் இடம் பெற்றுள்ளது. மிக மிக விறுவிறுப்பான கதைகள் இவை.


                        இங்கு முக்கியமாக குறிப்பிட்டுக் கூற வேண்டிய விடயம் இனி வரும் காலங்களில் இலங்கையில் தமிழ் காமிக்ஸ் புத்தகங்களைத் தொடர்ந்து பெற்றுக் கொள்ள முடியும் என்பது தான். 'கோகுலம் வாசகர் வட்டம்' இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக அறிய முடிகிறது. இதனை நான் வாசித்த காமிக்ஸ் புத்தகத்தில் அவர்களால் இணைக்கப் பட்டிருந்த துண்டுப் பிரசுரம் மூலம் அறிந்து கொண்டேன். அந்த துண்டுப் பிரசுரம் மாற்றமின்றி உங்களுக்காக இதோ:


                  "இந்தியாவிலிருந்து வெளிவரும் லயன், முத்து, க்ளாஸிக் போன்ற தமிழ் காமிக்ஸ்களின் புதிய வெளியீடுகளை இலங்கையில் பெற்றுக் கொள்ளவும் காமிக்ஸ் வெளியீடுகள் பற்றிய தகவல்களை அறியவும் 'கோகுலம்' வாசகர் வட்டத்தை தொடர்பு கொள்ளுங்கள்.


kogulamrc@gmail.com
http://www.facebook.com/kogulam.rc
http://www.facebook.com/pages/Tamil-Comics-Lion-Muthu-Classics/312096298840069
http://kogulamrc.blogspot.com/


தொ.பே. இல. +94775143907
இப்போது உங்கள் வீடுகளுக்கே காமிக்ஸ் புத்தகங்களை தபாலில் வரவழைத்துக் கொள்ளலாம்."


                    அறிவிப்பைப் படித்தீர்களா? இப்போது உங்களுக்கு மகிழ்ச்சி தானே? மேலும் லயன்-முத்து காமிக்ஸ் வெளியீட்டாளர்களால் வலைப் பதிவு ஒன்றும் தொடங்கப் பட்டுள்ளது. அதன் மூலம் காமிக்ஸ் வெளியீடுகள் பற்றிய புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார்கள். அந்த வலைத் தளம் இதோ:
http://lion-muthucomics.blogspot.com


                  மேலும் காமிக்ஸ் வெளியீடுகள் பற்றிய தகவல்களை பின்வரும் வலைத் தளம் மூலமும் அறிந்து கொள்ளலாம்.
http://tamilcomicsulagam.blogspot.com


           தமிழ் காமிக்ஸ்களுக்கான ஆதரவு என்றுமே இல்லாமல் போகப் போவதில்லை. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருமே தமிழ் காமிக்ஸ்களை விரும்பிப் படிக்கிறவர்களாக இருக்கிறார்கள். இனி நானும் தமிழ் காமிக்ஸ்களின் தொடர் வாசகனாக இருப்பேன் என்பதுடன் அவை பற்றிய தகவல்களையும் வலைத்தளம் மூலம் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளக் காத்திருக்கிறேன். வாழ்க தமிழ் காமிக்ஸ் உலகம்.


Photo: வாங்கிவிட்டீர்களா? நண்பர்களே!

Tuesday, June 12, 2012

பாலியல் பகிடிவதைக்குள் சிக்கித் தவிக்கும் கொழும்புப் பல்கலைக் கழக மாணவிகள்
                         கொழும்புப் பல்கலைக் கழக மாணவிகள் மீது பாலியல் ரீதியான பகிடி வதைகள் மேற்கொள்ளப் படுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக அதிரடித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பகிடி வதைகளுக்கெதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வந்தாலும் அவை இல்லாதொழிக்கப் படவில்லை. மாறாக, அவற்றை மறைமுகமாக மேற் கொள்ளப் பட்டு   வருகின்றன.


                       கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் படி கொழும்புப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவிகள் உயர் கல்வி அமைச்சுக்கு அனுப்பியுள்ள அநாமதேயக் கடிதமொன்றின் மூலமே இவ்விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்விடயம் குறித்த மேலதிகத் தகவல்கள் வருமாறு:

                      மேற்படி பாலியல் பகிடி வதைகளுக்குள்ளாக்கப் படும் மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள இருட்டறை ஒன்றுக்கு வருமாறு பணிக்கப் படுகின்றனர். அந்த மாணவிகள் இருட்டறைக்குள் சென்று சிறிது நேரத்தின் பின்னர் ஆண் மாணவர் குழுவொன்று அவ்வறைக்குள் செல்லும். பின்னர் அந்த மாணவிகள் மாணவர்களுக்கு உடல் மசாஜ் செய்யும்படி உத்தரவு வழங்கப் படும். இச்செயலில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் காண முடியவில்லை என்று உயர் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

                           இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப் படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேவையேற்படின் காவல் துறையினரின் உதவி நாடப் படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இது பல்கலைக் கழகங்களின் நற் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதுடன் மாணவர்களின் கல்வியையும் பாதிக்கும்.

                            பல்கலைக் கழக பகிடி வதைகள் தொடர்பான அனைத்துப் புள்ளி விவரங்களின் படி 15 மாணவர்கள் இறந்துள்ளனர். இருவர் தற்கொலைக்கு தூண்டப் பட்டுள்ளனர். 25 பேர் பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கப் பட்டுள்ளதுடன், 6000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக் கழகங்களில் இருந்து விலகியுள்ளனர்.

                         பகிடி வதை என்னும் மிருகத் தனமான சேட்டை பல்வேறு முறைகளிலும் மாணவர்கள் மீது பிரயோகிக்கப் பட்டு வருகிறது. இலங்கையின் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் இது பரவலாக இடம் பெற்று வருகிறது. உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகும் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர முடியாது சிரமப் படுகின்றனர்.
ஆகவே இது தொடர்பில் உயர் கல்வி அமைச்சு தனது தீவிர கவனத்தைச் செலுத்த வேண்டுமென்பதுடன் இவ்வாறான சம்பவங்கள் உரியவர்களால் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

தகவல் மூலம்: the Sunday times - http://sundaytimes.lk/
தகவல் பக்கங்கள்:[1] http://www.sundaytimes.lk/120610/News/nws_03.html
                                      :[2] http://www.sundaytimes.lk/120610/News/nws_36.html

Wednesday, June 6, 2012

அவசர உலகம் இன்றைய உலகத்தினை நாம் 'அவசர உலகம்' என்று பெயரிட்டு அழைத்துக் கொண்டிருக்கிறோம். அது என்ன அவசர உலகம்? நமது எந்தவொரு வேலையையுமே பொறுமையாக, முழுமையாக செய்து முடிக்க போதுமான நேரம் நமக்குக் கிடைப்பதில்லை. ஏன் இந்த நிலை?   சதா சர்வ நேரமும் எல்லோருமே 'வேலை வேலை' என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். பலருக்கு சுவாசிப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை. அதையும் ஒரு 'சம்பளமற்ற வேலை'யாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ பேர் கடமைக்காக புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

                இப்படி ஒரு வேலையை நாம் செய்துதான் ஆகவேண்டுமா? 'அப்போ  நீயா சோறு போடுவ?' என்று சிலர் கேட்கலாம். எல்லோருமே மூன்று வேலை முழுமையாக உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் தான் உழைக்கின்றனர். ஆனால் அந்த நோக்கத்தை உழைப்பவர்களால் சரிவர நிறைவேற்றிக்கொள்ள முடிவதில்லை.  ஆனால் கடுமையாக உழைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். உணவு, உடை, உறையுள் என்ற மூன்றையும் அடைவதற்காகத் தான் 'உழைப்பு' என்கிற இந்தப் போராட்டமே. இதில் ஜெயித்தவர்கள் எத்தனை பேர்? ".................................". பலருக்கு வெற்றி பெற முடிவதில்லை. அதையும் தாண்டி வெல்பவர்கள் வாழ்க்கையின் அடுத்த இலக்கை நோக்கி நகர்கிறார்கள்.


              'அவசர உலகம்' என்ற பதத்தை இல்லாதொழிக்க முடியாதா? மனிதர்களின் வேலைப் பளுவை குறைப்பதற்கென்று உருவாக்கப் பட்ட இயந்திரங்கள் மனித மனங்களை இயந்திர மயமாக்கி விட்டன. 'அவசர உலகம்' என்ற பதம் உருவாக இது தான் காரணம். கணினி மயமாதலின் காரணமாக வியாபார நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி அதிகரித்துள்ளது. இந்தப் போட்டியினை சமாளிக்க தனி நபர்கள் மிகக் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது.
                     
                                உழைப்பு முக்கியம் தான். ஆனால் உழைப்புக்குள் நமது வாழ்க்கையைத் தொலைத்து விடாமலிருக்க வேண்டும். நிம்மதியாக வாழ்வதற்காகத் தானே எல்லாம்? 'அவசர உலகம்' என்ற சூழலில் இருந்து விடுபடும் வரை நாம் எதிர்பார்க்கும் நிம்மதியான வாழ்க்கையை நம்மால் அமைத்துக் கொள்ள முடியாது. இதிலிருந்து விடுபடுவது எப்படி?


                                                   முதலில் உங்கள் வாழ்க்கைக்கான இலக்கினை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அந்த இலக்கினை அடைவதற்கான பாதையைத் திட்டமிடுங்கள். பின்பு படிப் படியாக நிதானத்துடன் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். ஏனோ தானோ என்று வாழ்பவர்களால் 'அவசர உலகம்' என்ற சூழலில் இருந்து ஒரு போதும் விடு படவே முடியாது. எனவே வாழ்க்கையைத் திட்டமிடுவோம். முன்னேறுவோம்.

Monday, June 4, 2012

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு (04) - ஆய்வரங்கு - சிற்றிதழ்அரங்கு எண்: 04

'எழுத்து' சி.சு.செல்லப்பா அரங்கு
(மண்டபம் 01 - சங்கரப்பிள்ளை மண்டபம்)
03-06-2012 மு.ப 08:40-பி.ப 12:50 மணி 


அரங்கு:

சிற்றிதழ் இணைத் தலைமை: பேராசிரியர் சபா ஜெயராசா, தா.கோபாலகிருஸ்ணன் 
ஆய்வு மதிப்பீட்டாளர்: எஸ்.மோசேஸ், அன்பு மணி
இணைப்பாளர்: அந்தனி ஜீவா 

ஆய்வுக் கட்டுரைகள்:

1. பெண்களும் சஞ்சிகைகளும் - ஒரு நோக்கு - செல்வி செகராச சிங்கம் ஜனதீபா (உளவியல் துறை விரிவுரையாளர்)

2. இதழியலில் இலத்திரனியலின் தாக்கங்கள் - தி.ஞானசேகரன் ('ஞானம்' ஆசிரியர்)

3. ஈழத்துத் தமிழ்ச் சிற்றிதழ்கள் இலக்கிய வளர்ச்சியில் ஏற்படுத்திய தாக்கம் - ஓர் அவதானிப்பு - தம்பு சிவசுப்ரமணியம் ('கற்பகம்' ஆசிரியர்)


4. கிழக்கிலங்கைச் சிற்றிதழ்களின் வகிபாகமும் அதன் இலக்கியப் பங்களிப்பும் - எஸ்.ஆர்.தனபாலசிங்கம் ('நீங்களும் எழுதலாம்' ஆசிரியர்)

5. பன்முகப் பார்வையில் மலையகச் சிற்றிதழ்களின் இயக்கம் - சு.முரளிதரன் (தலைவர், ஹட்டன் தமிழ்ச் சங்கம்)
6. இணைய இதழ்கள் - பார்வையும் பதிவும் - லெனின் மதிவானம் (பிரதி ஆணையாளர், கல்வி வெளியீட்டுத் திணைக்களம்)
7. ஈழத்துச் சஞ்சிகைகளின் எதிர்காலம் - ச.மணிசேகரன் (ஆசிரியர்)
8. சிற்றிதழ்கள் ஆவணப் படுத்தலின் அவசியம் - சிவானந்தமூர்த்தி சேரன் (பிரதம செயற்பாட்டதிகாரி, இணைய நூலக நிறுவனம், இணையம்: http://noolahamfoundation.org/wiki/index.php?title=Main_Page )

ஆய்வரங்குத் தொகுப்பு:

                    இணைப்பாளர் சபா ஜெயராசாவின் தலைமையுரையுடன் ஆய்வரங்கு ஆரம்பமானது. பல்வேறு பழைய, புதிய மற்றும் அழிந்து போன சிற்றிதழ்களின் முகப்பு அட்டைகள் projector மூலமாக 'நூலகம்' நிறுவனத்தினரால் காட்சிப் படுத்தப் பட்டன. 'நூலகம்' நிறுவனம் 'இதழகம்' எனும் பெயரில் தான் ஆவணப் படுத்தியுள்ள 400க்கும் மேற்பட்ட சஞ்சிகைகளின் பெயர்ப் பட்டியலை சிறு நூலாக அச்சிட்டு ஆய்வரங்கிற்கு வருகை தந்திருந்தோருக்கு இலவசமாக வழங்கியது.


                     எல்லா மாற்றங்களுமே ஒரு சிறு புள்ளியில் இருந்தே ஆரம்பித்திருக்கின்றன. அது போல ஆங்கிலத்தில் Little Magazine என்று அழைக்கப் படும் சிற்றிதழ்களும் ஒரு பாரிய மாற்றத்துக்கான சிறு புள்ளியாகவே தமது பயணத்தை ஆரம்பிக்கின்றன. தற்போது ஆங்கிலத்தில் Productive Magazine என்று சிற்றிதழ்கள் அடையாளப்படுத்திக் கூறப் படுகின்றன. அதாவது விளைவை / மாற்றத்தை உண்டு பண்ணக் கூடிய இதழ்கள் என்பது பொருள். தற்காலத்தில் நுகர்ச்சி வாதத்தை அடிப்படையாகக் கொண்ட சிற்றிதழ்களும் வெளிவர ஆரம்பித்துள்ளன. உதாரணமாக சிகையலங்காரம் பற்றிய தகவல்களை வழங்கும் வகையில் வெளிவரக் கூடிய ஒரு சிற்றிதழ் இவ்வகைப் பாட்டுக்குள் அடங்கும்.


                   இந்தியாவில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் முப்பதுக்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் தோற்றம் பெற்றுள்ளன. ஆனால் அவற்றுள் எத்தனை நிலை பெறும் என்பது கேள்விக் குறியே. பொதுவாகவே சிற்றிதழ்களின் ஆயுட்காலம் குறைவு என்று கூறப் படுகிறது. எழுச்சியோடு ஆரம்பிக்கும் அவை எழுச்சியின் தாகம் தணிந்ததும் நின்றுவிடுகின்றன என்ற வாதம் முன்வைக்கப் படுகிறது. சிற்றிதழ்கள் பெரும்பாலும் தனிப்பட்ட ஒருவரின் முயற்சியாக அமைவதால் பல்வேறு சவால்களை எதிர்நோக்க நேரிடுகிறது. சிற்றிதழ்களை ஆரம்பிப்பது தற்கொலைக்கு சமனானது. ஆனால் இந்த சவால்களை தாண்டி வரும்போதே சிற்றிதழ்கள் வெற்றி பெறுகின்றன.


                   சிற்றிதழ்களை நடாத்துவதில் உள்ள சவால்களை பின்வரும் அடிப்படையில் பட்டியலிட முடியும்.


  1. சிறந்த அச்சக வசதி இன்மை 
  2. சிற்றிதழாளரின் பொருளாதார நெருக்கடி
  3. விற்பனை குறைவு 
  4. பிராந்திய ரீதியாக உள்ளடக்கப் படுதல்  
  5.  இதழாசிரியர்களின் தேடல் பண்பு விருத்தி அடையாமை 
  6. வடிவமைப்பில் கவனம் செலுத்தாமை 
  7. இணைய வளர்ச்சியின் தாக்கம்.

                          ஆரம்ப காலங்களில் இந்திய - தமிழக சஞ்சிகைகள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தின. பல்வேறு இலங்கை எழுத்தாளர்களின் ஆக்கங்களை பிரசுரித்து அவர்களை அவை அடையாளம் காட்டின. காலப் போக்கில் இலங்கையிலும் சிற்றிதழ்கள் தோற்றம் பெற்றன. ஆயினும் அவை இந்திய இதழ்களின் ஆதிக்கம் காரணமாக பல சவால்களை எதிர்நோக்கின. பின்னர் நமது இலங்கைச் சிற்றிதழ்கள் நிலை பெற்ற பின்னர் வளர்ந்து வந்த பல்வேறு படைப்பாளிகளை உலகுக்குப் புடம் போட்டுக் காட்ட ஆரம்பித்தன. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் சிற்றிதழ்கள் தோற்றம் பெற ஆரம்பித்தன.

                         சிற்றிதழ்கள்  மாதம் ஒரு முறை, இரு மாதம் ஒரு முறை, காலாண்டுக்கு ஒரு முறை மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை என்னும் கால சுழற்சியின் அடிப்படையில் வெளியாகின்றன.


                       ஆரம்ப காலத்தில் மலையகத்தில் சிற்றிதழ்கள் தோற்றம் பெற்ற போது இந்திய-தமிழக வாசனை வீசும் பெயர்களைத் தாங்கி வெளி வந்தன. தாம் 'இந்திய வம்சா வளியினர்' என்பதை வலியுறுத்தவே அவ்வாறு செய்தனர். பின்வந்த காலங்களில் 'மலையகத்தை தமது தாயகமாக ஏற்றுக் கொண்ட பின்னர்' மலைமுரசு போன்ற 'மலையகம் சார்ந்த' பெயர்களைத் தாங்கி மலையகச் சிற்றிதழ்கள் வெளிவரத் தொடங்கின.

                         சஞ்சிகைகள் பெரும் பாலும் பிரதேச ரீதியானதாகவே வெளிவந்திருந்த காரணத்தால் சஞ்சிகைகளானவை தாம் வெளி வந்த பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை /  மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. தற்காலத்தில் பாரிய ஊடக நிறுவனங்கள் தேசிய ரீதியிலான சிற்றிதழ்களை வெளியிட்டு வருகின்றன. வீரகேசரி - கலைக்கேசரி சஞ்சிகையினையும் குமுதம் - தீராநதி இதழையும் வெளியிட்டு வருவதை உதாரணமாகக் குறிப்பிடலாம். இது சிற்றிதழ்கள் இதழியல் துறையில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதாக அமைகிறது.


                       இங்கு குறிப்பிட வேண்டிய விடயம் சிற்றிதழ் என்பது வணிக நோக்கம் சார்ந்து வெளியிடப்படுபவை அல்ல. சிற்றிதழ்கள் சமூக நோக்கு ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. இந்த வகையில் ஆனந்தவிகடன், குமுதம் போன்றவற்றை பெரும் வணிக இதழ்களாக மட்டுமே அடையாளப்படுத்த முடியும்.

                       இவ்வேளையில் சிற்றிதழ்களின் தோற்றம் - வளர்ச்சி பற்றிய ஓரிரு மேலதிகத் தகவல்களைப் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. ஆரம்பத்தில் செய்திப் பத்திரிகையாக தொடங்கிய இதழ்கள் பின்னர் துறை சார்ந்த இதழ்களாக வெளியாகின. அவ்வாறான இதழ்கள் கால வரிசைப்படி வருமாறு.


1831 - தமிழ்ப்பத்திரிகை - மதராஸ் 
1840 - பாலதீபிகை - நாகர்கோவில் 
1841 - உதய தாரகை - யாழ்ப்பாணம் 
1855 - தின வர்த்தமானி - தமிழகம்.

*ஆய்வரங்கில் பகிரப்பட்ட ஏராளமான கருத்துக்களில் முடியுமானவற்றை இந்தப் பதிவில் உங்களுக்குத் தொகுத்துத் தந்திருக்கிறேன். மீதமாக உள்ள பெண்களும் சஞ்சிகைகளும் பற்றிய பார்வை, இணைய சிற்றிதழ்கள், சிற்றிதழ்களை எண்ணிம ஆவணப்படுத்தல் மற்றும் சிற்றிதழ் உருவாக்க செயற்பாடு பற்றிய பார்வை ஆகிய விடயங்களைத் தாங்கிய பதிவு விரைவில் உங்களைத் தேடி வரும்.தகவல்கள்: உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 இல் இருந்து நேரடியாக - சிகரம் பாரதி.

Sunday, June 3, 2012

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு (03) - ஆய்வரங்கு - கணினியும் தமிழும்.அரங்கு எண்: 01
பேராசிரியர் ஆ.மயில்வாகனம் அரங்கு
(மண்டபம் 01 - சங்கரப்பிள்ளை மண்டபம்)
02-06-2012 பி.ப - 01:45: - 04:45 மணி.

அரங்கு:

கணினியும் தமிழும் 

இணைத் தலைமை: ஞா.பாலச்சந்திரன் (கணினி விரிவுரையாளர்), டாக்டர் எம்.கே.முருகானந்தன் 
ஆய்வு மதிப்பீட்டாளர்: மேமன் கவி 
இணைப்பாளர்: ஆ.குக மூர்த்தி.

ஆய்வுக் கட்டுரைகள்:
1. தொலைக்கல்வியில் கணினியின் பங்கு - இலங்கை மீதான ஒரு கண்ணோட்டம் - ரதிராணி யோகேந்திர ராஜா (யாழ் பல்கலைக் கழகம்)
2. தகவல் தொழில் நுட்பத்தில் தமிழ், சவால்களும் தீர்வுகளும் - ஒரு பார்வை - தங்கராஜா தவரூபன் (தலைமை நிறைவேற்று அலுவலர், இணையத்தள/ மென்பொருள் வடிவமைப்பாளர், யாழ் பல்கலைக் கழகம்)
3. தமிழும் இணையமும் - பேராசிரியர் மு.இளங்கோவன் ( பாரதி தாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுச் சேரி, தமிழ் நாடு. வலைத்தளம்: http://muelangovan.blogspot.com/ )
4. "விழி மொழி" - தமிழ் சைகை மொழி கணினியாக்கம் - சிவஜோதி வஞ்சிக்குமரன் (மென்பொருள் பொறியியலாளர்) - பதிலியாக கட்டுரையை விழாவில் சமர்ப்பித்தவர் - ரமேஷ் குமரேசன்.
5. தமிழ் கணினி - செய்ய வேண்டியவை - கெ.சர்வேஸ்வரன் ( கணினி விரிவுரையாளர், இணையம் : http://k.sarveswaran.lk/ )


ஆய்வரங்குத் தொகுப்பு:
                        'தொலைக் கல்வியில் கணினியின் பங்கு' பற்றிக் குறிப்பிடும் போது கணினி - இணையம் வழிக் கற்பதை மட்டும் 'தொலைக் கல்வி' என்ற பதம் குறிக்க வில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தபால் மூலம் கற்பது கூட தொலைக் கல்வி தான். ஆனால் இன்று தபால் மூலத் தொலைக் கல்வியை விட கணினி - இணைய வழித் தொலைக் கல்வியே அதிக முக்கியத்துவம் - செல்வாக்குப் பெற்று விளங்குகிறது. இலங்கையில் 2003 இல் தொலைக் கல்வியை நவீன மயமாக்கும் திட்டம் - (Distance Education Modernization Project - DEMP) - இன் கீழ் உருவாக்கப் பட்ட NODES - National Online Distance Education Service) - நிறுவகத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


                         ஆய்வுப் பிரச்சினையாக "தொலைக் கல்வியில் கணினியின் பங்கு ஏன் முக்கியத்துவமுடையதாக கருதப் படுகிறது?" எனும் கேள்வி முன் வைக்கப் பட்டது. இதற்கு பதிலாக பின்வரும் விடயங்களைக் கூற முடியும். 1.வயது வேறு பாடு இல்லை. 2.தொழில் புரிந்து கொண்டே கற்கக் கூடிய வசதி. 3.சுய கல்வி வசதி. 4.தொழி நுட்ப அறிவு விருத்தியாகும். இவை மட்டுமின்றி இன்னும் பல காரணிகள் உள்ளன என்பதை கருத்திற் கொள்க.

                         யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் மூலம் இந்த இணைய வழி தொலைக் கல்வியை தமிழில் பெற முடிகிறது. நிற்க, நீங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இணையத் தளம் என்ன எழுத்துரு (font) வைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்டுள்ளது என்பதை அறிவீர்களா? இக் கேள்வி நம்மை அடுத்த ஆய்வுக்குள் அழைத்துச் செல்கிறது.

                          தமிழ் எழுத்துருவில் எழுத, தமிழ் மின் நூல்களை வாசிக்க போன்ற வசதிகளை வழங்கக் கூடிய சில இணையத் தளங்கள் இவ் அரங்கிலே பட்டியலிடப்பட்டன. அவை வருமாறு.
                'இணையம்' என்ற சொல் தமிழுக்கு முதன் முதலில் 1995 இல் பாலாபிள்ளை என்பவரால் அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. இணையத்தை தரவுத் தளம் (Database), இணையத் தளம் (Website), வலைப்பூ (Blog spot), மின் இதழ்கள் (e-magazine), இணையக் குழுக்கள் என வகைப் படுத்தலாம். கணினியில் தமிழில் தட்டச்சு செய்ய தமிழ் 99, பாமினி, முரசு அஞ்சல், இ-கலப்பை, செம்மொழி எழுத்துரு முதலான எழுத்துரு வகைகள் பயன் படுத்தப் படுகின்றன. 1984 இல் 'பெத்தலேகம் கலப்பகம்' எனும் நூல் முதன் முதலில் கணினி வழி அச்சேற்றம் கண்டது. பாமினி எழுத்துருவை மானிப்பாய் என்ற இடத்தைச் சேர்ந்த ராமலிங்கம் முத்தையா என்பவரே உருவாக்கினார். இவரே தமிழ் விசைப் பலகையின் முன்னோடியுமாவார்.


                         இப்போது இலங்கை உள்ளிட்ட 5 நாடுகளில் தாய் மொழியில் இணையத் தள முகவரியைக் கையாளும் வசதி உருவாக்கப் பட்டுள்ளது. http://தளம்.பாராளுமன்றம்.இலங்கை என்பது இலங்கை பாராளுமன்ற இணையத் தளத்துக்கான தமிழ் மொழி மூல முகவரியாக அமைகிறது. ஆனால் இது தமிழகத்தில் இன்னும் பரிசோதனை நிலையிலேயே உள்ளது.


                  கணினியில் அல்லது இணையத்தில் தமிழைப் பயன்படுத்த முனையும் போது அதில் பல சிக்கல்கள் எழுகின்றன. அந்த சிக்கல்களை ஏற்படுத்தும் காரணிகள் அல்லது கணினி / இணையத்தில் தமிழைப் பயன் படுத்துவதில் உள்ள சவால்களை மிகச் சரியாகக் கண்டறிந்து உரிய தரப்பினர் அதற்கான தீர்வுகளை முன்வைக்க வேண்டும். அப்போது 'தமிழ்க் கணினி' என்ற எண்ணக் கரு முழுமை பெறும்.


                       தற்போது உலகிலே வித விதமான சாதனங்கள், மென் பொருட்கள் என நாளுக்கு நாள் ஏதேனும் ஒரு புதுமை படைக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சிவஜோதி வஞ்சிக் குமரன் அவர்களால் உருவாக்கப் பட்டுள்ள புதிய மென் பொருள் தான் "விழி மொழி மென்பொருள்". வாய் பேச முடியாதவர்கள் சைகை மூலம் கணினியைப் பயன் படுத்துவதை சாத்தியமாக்குவதே இம் மென்பொருளின் இலக்காகும். நேரடி சைகை, கைவிரல் சைகை என இரு வகையாக சைகை மொழியினை பிரிக்கலாம். இவர் கை விரல் சைகையினை அடிப்படையாக கொண்டு இம் மென்பொருளை உருவாக்கியுள்ளார். கிட்டத் தட்ட 74% "விழி மொழி மென்பொருள்" வெற்றியளித்துள்ளது.


                       நிறைவாக ஆய்வுக் கட்டுரைகள் மேமன் கவி அவர்களால் தர மதிப்பீடு செய்யப் பட்டன. அவர் "கணினியில் தமிழ் தொழிநுட்பம் பற்றி ஆய்வாளர்கள் பேசினார்கள். ஆனால் கணினியில் தமிழ் இலக்கியத்தின் பங்கு பற்றி பேசப்படவில்லை" என்பதை சுட்டிக் காட்டினார். மேலும் "கணினி மற்றும் இணைய தளங்களின் வருகையின் பின்னர் வாசிப்பு முறைமையில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றி நாம் சிந்தித்துள்ளோமா?" என்கிற முக்கியமான வினாவையும் நம் முன் வைத்தார். இப்போது சுண்டுவிரல் தொடர்பாடல் முறைமை (குறுஞ்செய்தி - SMS அனுப்பல்) பெருகிவிட்டது. எனவே மேற்படி கேள்வி முக்கியமானதே எனவும் சுட்டிக் காட்டினார். ஆய்வரங்கிலே 'Standard' எனும் ஆங்கிலச் சொல்லுக்கு 'செந்தரம்' என்ற கலைச் சொல் தங்கராஜா தவரூபன் அவர்களால் பயன் படுத்தப் பட்டது வரவேற்கத் தக்கது. சான்றிதழ் வழங்கலுடன் ஆய்வரங்கு இனிதே நிறைவு பெற்றது.


தகவல்கள்: உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 இல் இருந்து நேரடியாக - சிகரம் பாரதி.

Saturday, June 2, 2012

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு (02) - தொடக்க விழா

                             உலகத் தமிழ் இலக்கிய விழா கோலாகலமாக கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் துவங்கியிருக்கிறது. காலை 8 மணி முதல் 10 மணி வரை பேராளர்களைப் பதிவு செய்யும் நிகழ்வு இடம் பெற்றது. நான் எனக்கான பதிவை 10 மணிக்கே மேற்கொண்டேன். பேராளர்களாக பதிவு செய்து கொண்டவர்களுக்கு தோல் பை ஒன்று வழங்கப்பட்டது. அதில் கொழும்பு தமிழ்ச் சங்க வெளியீடான 'சங்கத் தமிழ்' இதழ் ஒன்றும் குறிப்பெடுத்துக் கொள்வதற்கான கோவை ஒன்றும் நிகழ்ச்சி நிரலும் க.ஜெயவாணி என்பவரின் 'இப்போது வந்த சொல் எப்போது வந்த கவிதை நீ?' என்னும் கவிதை நூலும் இட்டு வழங்கப்பட்டன. சரியாக 10 மணிக்கு தொடக்க விழா ஆரம்பமானது. "தமிழ் இலக்கியமும் சமூகமும் : இன்றும் நாளையும்" என்ற தொனிப் பொருளில் மாநாடு இடம் பெற உள்ளது.

                               மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து அருணந்தி ஆரூரன் அவர்களின் கணீர் குரலில் தமிழ் வாழ்த்து பாடப்பட்டது. இந்த தொடக்க விழா அரங்கிற்கு 'தமிழ்த் தூது தனி நாயகம் அடிகள் அரங்கு' எனப் பெயரிடப்பட்டிருந்தது. வரவேற்புரையினை தமிழ்ச் சங்க இலக்கியப் பணிக் குழுச் செயலாளர் டாக்டர் தி.ஞானசேகரன் வழங்குவார் என நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆயினும் தமிழ் நாடு புதுச்சேரி பல்கலைக் கழக பேராசிரியர் அறிவு நம்பி அவர்களே வழங்கினார். அவர் தனதுரையில் தமிழகத்தில் தற்போதய தமிழின் நிலை பற்றி விளக்கும் வகையில் இரண்டு புதுக் கவிதைகளைப் பகிர்ந்து கொண்டார். அவற்றை இந்த இடத்தில் வழங்க எண்ணுகிறேன்.

01 . மிஸ்
       தமிழ்த் தாயே
       நமஸ்காரம்.

02 . அம்மா
       வறுமைதான்
       உன்னைக் காத்தது,
       இல்லையென்றால் நீ 
       மம்மியாகியிருப்பாய்.

                                 தொடர்ந்து மாநாட்டு மலர் வெளியீடு இடம் பெற்றது. 'பூவல்' என்ற மகுடத்தில் மாநாட்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.தமிழ்ச் சங்க தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்கள் திரு.காசிம் அகமது அவர்களுக்கு முதற் பிரதியை வழங்கி வெளியிட்டு வைத்தார். வெளியீட்டுரையினை பேராசிரியர் சபா ஜெயராசா நிகழ்த்தினார். அவர் தனதுரையில் ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக் காட்டினார். நம்மிடையே கலைஞர்களை பாராட்டும் ஒரு மரபு இருக்கிறது. எழுத்தாளர்கள், நாட்டிய கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் என பலரையும் பாராட்டுகிறோம். ஆனால் ஓவியக் கலைஞர்களை பாராட்டும் வழக்கம் அரிது. அதை இந்த மாநாட்டு மலர் நிவர்த்தி செய்திருக்கிறது. ஓவியத்திற்கும் இதில் இடம் வழங்கப் பட்டிருக்கும் அதே வேளை ஓவியக் கலைஞர் ஒருவரும் கலைஞர்கள் கௌரவிப்பில் இடம்பெற்றுள்ளார்.

                           மேலும் புதிய கலைச் சொல்லாக்கம் பற்றியும் அவர் குறிப்பிட்டார். ஆங்கில வாசகன் புதிய கலைச் சொற்களை கண்டதும் மகிழ்ச்சி கொள்கிறான். ஆனால் தமிழ் வாசகன் புதிய கலைச் சொற்களை கண்டதும் தன் மீது தேவையில்லாத ஒரு விடயம் திணிக்கப் படுவதாக உணர்கிறான். இது மாற வேண்டும் என குறிப்பிட்டார்.

மாநாட்டு சிறப்பு மலரின் முகப்பு அட்டை 
                                     தொடர்ந்து சிறப்புப் பிரதி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை காவல் துறை போக்குவரத்து பிரிவு அத்தியட்சகர் திரு அரசரத்தினம், திரு.எம்.ஏ நுஹ்மான் மற்றும் திரு.அறிவு நம்பி ஆகியோர் தமிழ்ச் சங்க தலைவரிடமிருந்து சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர். அதனை அடுத்து மாநாட்டை தொடங்கி வைக்கும் ஆதார சுருதி உரை நிகழ்த்தப் பட்டது. அந்த உரையில் சுட்டிக் காட்டப் பட்ட விடயங்கள் வருமாறு.
                                                                           
                                யுத்த காலத்தில் அரச வன்முறைகளை இலக்கியத்தில் பதிவு செய்தவர்கள் விடுதலை இயக்கங்களின் வன்முறைகளைப் பதிவு செய்யத் தவறி விட்டனர். நமது கடந்த கால இலக்கியங்கள் எல்லாமே 'எதிர்ப்பு இலக்கியமாக' அமைந்திருக்கின்றன. அதாவது சாதி, அடக்குமுறை போன்ற பல்வேறு ஒடுக்கு முறைகளுக்கும் எதிரான இலக்கியங்களாக படைக்கப் பட்டிருக்கின்றன. நாளைய இலக்கியம் வர்க்க பாகுபாடுகளற்ற தனி மனித சுதந்திரத்தை அடையாளப் படுத்துகின்ற இலக்கியமாக இருக்க வேண்டும் என எதிர் பார்ப்பதாக குறிப்பிட்டார்.


                            தொடர்ந்து நன்றியுரை இடம் பெற்றது. நன்றியுரை ஆரம்பித்ததும் சிலர் எழுந்து வெளியில் சென்றனர். மேலும் சிலர் தமது சுய உரையாடல்களில் ஈடுபட ஆரம்பித்தனர். இது தவிர்க்கப் பட வேண்டியது என்பது எனது கருத்து. நன்றியுரையினை தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் திரு.ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன் நிகழ்த்தினார். எல்லோருக்கும் நன்றி செலுத்திய அவர் "எமக்கு போதிய விளம்பரம் தந்த வை.கோ வுக்கும் எனது நன்றிகள்" என்றும் குறிப்பிட்டார். சங்க கீதத்துடன் தொடக்க விழா நண்பகல் 12 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.


தகவல்கள்: உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 இல் இருந்து நேரடியாக - சிகரம் பாரதி.

Friday, June 1, 2012

அகவை ஏழில் தடம் பதிக்கும் 'சிகரம்'


2006 - ஜூன் முதலாம் திகதி. என் வாழ்க்கையில் மறக்க முடியாத அற்புதமான ஒரு நாள். இன்று நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் 'சிகரம்' வலைத்தளம் உருவாகவும் அந்த நாள் தான் காரணம். 'அப்படி என்ன இருக்கிறது அந்த நாளில்?' - இப்போது இது தான் உங்கள் கேள்வியாக இருக்கும். சொல்கிறேன்.

2006 இல் நான் க.பொ.த - சாதாரண தரத்தில் (தரம் -11) கல்வி கற்றுக் கொண்டிருந்தேன். சிறு வயதிலிருந்தே எனக்கு ஊடகத் துறையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. எனவே ஒரு கையெழுத்துப் பத்திரிகையை தயாரித்து வெளியிட எண்ணினேன். அதன் படி 2006 ஜனவரி முதல் 'சரஸ்வதி' எனும் நாமத்தில் இலக்கிய சஞ்சிகை ஒன்றைத் தயாரித்து வெளியிட்டேன். ஆனால் அது அதிகளவான மாணவ வாசகர்களைச் சென்றடையவில்லை. எனவே எல்லோரையும் கவரும் வகையில் எனது கையெழுத்து சஞ்சிகை அமைய என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான் இலக்கிய சஞ்சிகையை விடுத்து செய்திச் சஞ்சிகை ஒன்றை ஆரம்பிக்க முடிவு செய்தேன்.
    அந்த முடிவின் பிரகாரம் 2006 ஜூன் முதலாம் திகதியன்று 'உதய சூரியன்' என்ற மகுடத்தில் எனது கையெழுத்து செய்திச் சஞ்சிகையை ஆரம்பித்தேன். 2006 - ஜூன் - 08 முதல் அதாவது இரண்டாவது இதழில் இருந்து ' சிகரம்' என பெயர் மாற்றம் செய்து வெளியிட்டேன். நான்கு வருடங்கள் தொடர்ந்து 'சிகரம்' கையெழுத்து செய்திப் பத்திரிகையை வெளியிட்டேன். சரியாக 100 இதழ்களை வெளியிட்டிருந்தேன். 'சிகரம்' கையெழுத்து சஞ்சிகையை நடத்திய காலப் பகுதியை மனதுக்குள் நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் ஒரு உற்சாகம் தோன்றும்.

'சிகரம்' சஞ்சிகையை ஆரம்பித்த பின்னர் தான் 'சிகரம் பாரதி' எனும் புனை பெயரையும் சூடிக் கொண்டேன். எனக்கு பாடசாலைக் கல்வியை விட ' சிகரம்' கையெழுத்துப் பத்திரிகைக்கான விடயங்களை தேடி எடுத்தல், தயார் படுத்தல், வெளியிடல் போன்றவற்றில் தான் ஆர்வம் மிகுந்திருந்தது. நேர காலம் மறந்து நூலகத்திற்குள்ளேயே கூடு கட்டிக் கொள்வதுமுண்டு. 

க.பொ.த உயர் தரத்திற்கு வந்த பின்னர் ( தரம் - 12) வீரகேசரி, தினக்குரல், தினகரன், சுடர் ஒளி போன்ற பத்திரிகைகளுக்கும் பின்னர் அவற்றோடு ஞானம், மறு பாதி, நீங்களும் எழுதலாம் போன்ற சஞ்சிகைகளுக்கும் கட்டுரைகள் மற்றும் கவிதைகளை எழுதி அனுப்பிக் கொண்டிருந்தேன். நான் மட்டுமின்றி எனது நண்பர்களையும் எழுத வைத்து அவர்களிடமிருந்து ஆக்கத்தினைப் பெற்று நானே தபாலிட்டு பத்திரிகைகளில் பிரசுரமாகும் படி செய்தேன். பாடசாலைக் காலத்தின் பின்பு உரியளவு வாசகர்கள் இல்லாத காரணத்தினால் கையெழுத்து சஞ்சிகையை இடை நிறுத்தினேன். அதன் பின்னரே 'தூறல்கள்' வலைப் பதிவினை ஆரம்பித்தேன். ஆனால் அதனையும் தொடர்ந்து நடத்த முடியாமல் போய்விட்டது. ஆனால் 'சிகரம்' வலைத்தளத்தின் சேவை ஒரு போதும் நிற்காது. எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.


எதிர் காலத்தில் வீரகேசரி, தினக்குரல் போலவோ அல்லது ஆனந்த விகடன் போலவோ ஆலமரமாய் 'சிகரம்' ஒரு மாபெரும் ஊடக நிறுவனமாக மாறி வேர் விட்டு நிற்க வேண்டும் என்பதே என் ஆசை - அவா. மனதுக்குள் ஒரு மாபெரும் கனவைச் சுமந்தபடி பயணித்துக் கொண்டிருக்கிறேன். என்றேனும் ஒரு நாள் எனது இலக்கை அடைந்து விடுவேன் என்கிற உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது. அது வரை என் மூச்சும் என் எழுத்தும் ஒரு போதும் நிற்காது. எனது அடுத்த தரிப்பிடம் 'சிகரம்' இன் அகவை 8 இல் - அதாவது - 2013 - ஜூன் 01 இல் தான். மலர்ந்துள்ள 'சிகரம்' ஆண்டினை  மகிழ்ச்சியுடன் வரவேற்போமாக.

சிகரம்பாரதி 
Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?